தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்திய சிறுவன்.. 1000க்கும் மேற்பட்டோர் உயிரை காத்த சமயோசிதம்!!

1401

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவர் முர்சலீன். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அப்போது ​​ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து பெரிய ஓட்டை இருப்பதை கண்டார். தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருப்பதை பார்த்து சிறுவன் அதிர்ந்தான். சிறுவன் முர்சலீன், தான் அணிந்திருந்த சிவப்பு நிற டி-ஷர்ட்டை உடனடியாக கழற்றி ரயிலுக்கு முன்பு காட்டியபடியே ஓடி வந்தான்.

சிறுவன் ஓடி வருவதை பார்த்த ரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தினார். ரயில் ஓட்டுநர் இறங்கி கீழே வந்த போது, சிறுவன் முர்சலீன் அவரிடம் தண்டவாளத்தில் பெரிய பள்ளம் இருப்பதைக் கூறினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் முர்சலீனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இதுகுறித்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பள்ளத்தை மண் வைத்து நிரப்பினர்.

அதன்பின்னர் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் பயணிகளில் பலர் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பலரும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.