ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது குரோஷியா..!

459

குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்ந்துகொண்டுள்ளதை ஒட்டி, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக குரோஷியா அதிகாரபூர்வமாக சேர்ந்துகொண்ட உள்ளூரின் நள்ளிரவு நேரத்தில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள்.

அதன்பின்னர் உடனடியாக, சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஸ்லோவேனியா மற்றும் ஹங்கேரியின் எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டன.

மற்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளுடனான எல்லைகளில் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

இந்த நாளை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள் என்று குரோஷிய அதிபர் ஈவோ யூசிபோவிச் வர்ணித்தார்.

யூரோ வலய நாடுகளில் ஏற்கனவே நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளாலும் உள்நாட்டு நிதிப் பிரச்சனைகளாலும் குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது அவதானிகளால் பெரிதளவில் வரவேற்கப்படவில்லை.

2007-ம் ஆண்டில் பல்கேரியாவும் ரொமானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டதிலிருந்து குரோஷியா தான் இப்போது புதிய நாடாக சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.