வவுனியாவில் வறட்சியால் பல மக்கள் பாதிப்புக்குள்ளான இச் சந்தர்பத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கல்விச் சுற்றுலாவில் : பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் கண்டனம்!!

853

Pirasath

இலங்கையின் பல பகுதிகளில் என்றும் இல்லாதவாறு கடும் வறட்சி தலைவிரித்தாடுகின்றது. அதிலும் வவுனியா உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பல கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றாக அழிவடைந்துள்ளது. கால்நடைகள் தண்ணீர் இன்றி தொடர்ச்சியாக இறந்து வருகின்றன.

வடக்கின் பல பாகங்களிலும் நிவாரணப் பணிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபைகள், பிரதேச சபைகளினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச் சந்தர்ப்பத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்களும் ஊழியர்களும் 2 நாள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு மட்டக்களப்பு சென்றுள்ளனர். இதனை தான் கண்டிப்பதாக வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் வவுனியா நெற்றை தொடர்புகொண்டு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக தொடந்து தெரிவித்த அவர், வவுனியாவின் பல பகுதிகள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரங்களும் அழிவடைந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்டையில் இம் மக்களின் பிரச்னையை எம்மால் முடிந்தவரை தீர்க்கவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் ஊழியர்களும் மேற்கொண்டுள்ள கல்விச் சுற்றுலாவை தாம் புறக்கணிப்பதாகவும், தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்த அவர்,

எனது பிரதேசத்தில் வீதி மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு கனரக வாகனங்களை கோரியிருந்தபோதும், வாகனத்திற்கு தேவையான எரிபொருளுக்கான நிதி இல்லை என தெரிவித்து இதுவரையில் தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, ஆனால் மக்கள் தொடர்ந்து என்னிடம் புனரமைப்பு சம்பந்தமாக வேண்டுகோள்களை முன்வைத்து வருகின்றனர்.

இன் நிலையில் பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவை மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் தாம் கண்டிப்பதாக தெரிவித்தார்.