நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதேவ் குமார் நேபால் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் விசேட விருந்தினராக கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை வந்திருந்த அவர் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.
இதன்போது உரையாற்றிய அவர் நோபளத்தில் 125இற்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழ்ந்த போதிலும் முரண்பாடுகள் தோற்றம் பெறவில்லை. முரண்பாடுகளுக்கு வன்முறையோ யுத்தமோ தீர்வாகாது.
அனைவரையும் மதித்தும் ஒவ்வொருவருடைய சமய கலாசாரங்களைள மதித்து மனிதாபிமானத்துடன் அனைவரும் நடத்தப்படவேண்டும். இனக்குழுமங்களுக்கிடையில் விரோத தன்மை அற்றதாக உருவாக்கப்படும் போது மனிதாபிமானம் வளரும் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நோபாளத்தில் இடம்பெற்ற அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்து கொண்டிருந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னராக காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த சிலைகளை வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் அரசிடம் எடுத்தியம்பியும் எவ்வித பலனும் இன்றி அரசு மௌனியாக உள்ளது என தெரிவித்ததுடன் இலங்கை அரசியல் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
இச்சந்திப்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், நேபாள முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் உட்பட வவுனியா சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.