வவுனியா பாராதிபுரத்தில் இருந்து மக்களை வெளியேறுமாறு வன இலாகா அறிவுறுத்தல்

671

vavuniya

வவுனியா, பாராதிபுரம் பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கடந்த 40 வருடங்களாக வசித்து வரும் மக்களை வன இலாகா திணைக்களம் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதற்கு அப்பிரதேச மக்கள் தமது எதிர்பபை தெரிவித்துள்ளனர்.

பாரதிபுரம் கிராம பிரதேசத்தில் வசித்து வரும் இம் மக்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்னதாக மலையகத்திலிருந்து சென்று இங்கு குடியேறியவர்கள்.

இவ்வாறாக 240 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்கள் குடியேறியுள்ள பிரதேசம் வன இலாக்காவுக்குரியது என குறிப்பிட்டு அம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரதிபுர பிரதேசத்தில் 200 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு புத்தளத்தைச் சேர்ந்த 400 குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினதும் அமைச்சர் றிசாட் பதியூதீனதும் திட்டத்திற்கு அமைய இந்த பக்கச்சார்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஒற்றுமையாக வாழும் இருசமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அவர்களை முட்டி மோத வைக்கும் முகமாக அரசாங்கமும் அமைச்சரும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.