எம்மை வாழ விடுங்கள்: 17 இலங்கை அகதிகள் கைது..!

373

அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர்கள் உள்பட 2 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காட்டில் சந்தேகப்படும்படியான சிலர் கடந்த 2 நாள்களாக தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் பொலிஸார் திங்கள்கிழமை இரவு ஊத்துக்காடு சென்று விசாரித்தனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை ஆணையூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சுகந்தகுமார் (33), அவரது மனைவி மேரி சுலோசனா (27), திருநெல்வேலி கோபாலசமுத்திரம் சுப்பிரமணியபுர அகதிகள் முகாமைச் சேர்ந்த ராமசாமி மகன் கர்ணன் (31), அவரது மனைவி சந்திரிகா (29), அவர்களது மகன் சந்தோஷ்குமார் (10), மகள் ரஞ்சன்தேவி (6), சுந்தரலிங்கம் மகன் விமலநாதன் (36), அவரது மனைவி விஜயேந்திரி (33), அவர்களது மகன் சுடர்மணி (7), சந்தியா பிள்ளை மகன் அந்தோனி பிள்ளை (38), தவராஜா மகன் பி.ஏ. பட்டதாரி கரண் (21), குருசாமி மகன் பேச்சிமுத்து (20), மாரிமுத்து மகன் சிவா (27), பொன்னையா மகன் கேதீஸ்வரன் (30), திசநாயகா மகன் ரமேஷ் (38) மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த அந்தோனி மகன் சுரேஷ் (41), அவரது மகன் அந்தோனி சார்லஸ் (16) ஆகிய 17 பேர் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் சென்னை அல்லது கடலூரில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.

ஊத்துக்காட்டைச் சேர்ந்த மீனவர் ஜோதிராஜ் (50) முகவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவருக்கு உதவியாக அதே ஊரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி பிரகாசம் (35) செயல்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிஸார் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள பொலிஸ் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் தவிர மற்ற அகதிகள் மற்றும் முகவர்கள் ஜோதிராஜ், அவருக்கு உதவியாக இருந்த சாரதி பிரகாசம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

இதேவேளை, புதிய வாழ்க்கைத் தேடிச் செல்லும் எங்களை அரசே முன்வந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிடிபட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அகதிகள் கூறியது:

நாங்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. சொந்த நாட்டில் வாழ வழியின்றிதான் இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் இங்கு எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

குறைந்த கூலிக்கு நீண்ட தூரம் பயணம் செய்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மாலை 6 மணிக்குள் முகாமுக்குள் வரவில்லை என்றால், எங்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர். படித்த பட்டதாரிகளுக்கும் நல்ல வேலைவாய்ப்பு இல்லை. படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி அதே கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வாங்கும் கூலிக்கு குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

எங்கள் உறவினர்கள் பலர் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது எங்களைத் தொடர்பு கொண்டு பேசுவர். அங்கு வசதியுடன், சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

6 மாதம் தங்கிவிட்டால் அவுஸ்திரேலியா நாட்டு குடியிரிமை கிடைத்துவிடுகிறது. இந்தியாவில் இருந்து வரும் இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை.

கடந்த 2 தலைமுறையாக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம். இப்போது ஒரு வாழ்க்கையைத் தேடிச் செல்ல நினைக்கிறோம். எனவே அரசு எங்களை அவுஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என்று கண் கலங்கியவாறு தெரிவித்தனர்.