வவுனியா கூமாங்குளத்தை சொந்த இடமாகக்கொண்ட கே.நவநீதன் சர்வதேச ரீதியில் கடந்த 20.02.2016 அன்று தாய்லாந்தில் நடைபெற்ற 100 கிலோமீற்றர் தூர மரதன் ஓட்டப்போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
மிகுந்த சிரமத்தின் மத்தியில் தனது சொந்த முயற்சியில் தாய்லாந்து சென்ற இவர் இரண்டாம் இடத்தைப் பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், வவுனியாவில் சாதிக்கத் துடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கின்றார்.
வெள்ளிப் பதக்கத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் நேற்று முன்தினம் (23.02.2016) இவர் வவுனியாவிற்கு திரும்பினார். மேலும் தான் சர்வதேச போட்டிக்கு செல்ல உதவியவர்களை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் தனது வெற்றியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இவருக்கு விளையாட்டத்துறை அமைச்சின் வவுனியா இணைப்பாளர் தனுராஜ், உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன், மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தனது வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த நவநீதன், எனது இந்த வெற்றியை விளையாட்டின் முதல்படியாக நினைக்கிறேன். எனது இந்த வெற்றிக்கு எனது பயிற்சியாளரே காரணம். அவரின் அனுபவத்தினூடாகவே எனக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
வவுனியாவைச் சேர்ந்த வர்த்தசங்கம் மற்றும் தனிப்பட்ட ரீதியில் உதவி செய்தவர்களையும் நினைவு கூறுகிறேன் என தெரிவித்தார். அத்துடன் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் 100 கிலோமீற்றர் மரதன் போட்டியில் ஓடுவதே எனது இலக்கு அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
100 கிலோமீற்றர் மரதன் ஓட்டத்தை ஏழரை மணிநேரத்தில் ஓடி முடித்தால்தான் சர்வதேச போட்டிக்கு தெரிவாக முடியும் அந்தவகையில் ஒரு நாளைக்கு 40 கிலோமீற்றர் ஓடி பயிற்சி செய்ய வேண்டும் அதற்கான வசதிகள் தேவை என தெரிவித்தார்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியா நவநீதன் சர்வதேச மரதன் போட்டியில் 2ம் இடத்தைப்பெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை!!







