வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழா.(படங்கள்)

335


ஆகஸ்ட் மாதம் 2ம், 3ம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழாவில் யாழ் மாவட்டம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் இரண்டாம் இடத்தை வவுனியா மாவட்டம் பெற்றுக்கொண்டது.

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்து வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட இம்முறைக்கான விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளில் 15 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த லேகாஜினி 400 மீற்றர் தடை தாண்டி ஓடல் (புதிய சாதனை 1:07.4 செக்கன்), 400 மீற்றர் (புதிய சாதனை 1:00.1 செக்கன்), 200 மீற்றர் (புதிய சாதனை 26.7 செக்கன்) போன்ற போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றதுடன் மாகாண மட்டத்தில் புதிய சாதனையையும் பதிவு செய்தார். இதன் மூலம் இந்த விளையாட்டு விழாவின் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாகவும் கே.லேகாஜினி தெரிவு செய்யப்பட்டார்.

மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.நேர்மதி 2:28.6 செக்கன்களில் நிறைவு செய்து மாகாண மட்டத்தில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்தார்.ஆடவர் பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்று சிறந்த மெய்வல்லுனர் வீரராக தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.சதீஸ்குமார் 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 1:59.3 செக்கன்களில் நிறைவு செய்து புதிய சாதனையை பதிவு செய்தார்.1,500 மீற்றர் (5:16.7 செக்கன்கள்), 5,000 மீற்றர் (19:37.4 செக்கன்கள்), 10,000 மீற்றர் (40:55.6 செக்கன்கள்), மரதன் (4:09.41 நிமிடங்கள்), ஊர் சுற்றுவட்டம் (33:57.20), போன்ற போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றதுடன் புதிய சாதனைகளையும் பதிவு செய்தார் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஷாலினி.


ஈட்டி எறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த டபிள்யு. சீ. என்.லிவிங்ஸ்டன் புதிய மாகாண மட்ட சாதனையையும் பதிவு செய்தார்.

உயரம் பாய்தல் போட்டியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். கிருஷ்ணா புதிய மாகாண மட்ட சாதனையை பதிவு செய்தார்.


ஆடவருக்கான மரதன் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. டீ.திசாநாயக்க (2:45.35) வெற்றி பெற்று மாகாண மட்டத்தில் புதிய சாதனையை பதிவு செய்தார்.

இதேவேளை, 100 மீற்றர் மகளிர் ஓட்டப் போட்டியில் 13:4 செக்கன்களில் நிறைவு செய்த யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கமலினி முதலிடத்தை பெற்று புதிய சாதனையை பதிவு செய்தார்.

நடையோட்டத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கோகிலவாணி முதலிடம் பெற்று புதிய சாதனையை (1:00.5) பதிவு செய்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.யாழினி 10.30 புள்ளிகளுடன் புதிய சாதனையை பதிவு செய்ததுடன் உயரம் பாய்தலில் முதலிடத்தையும் பெற்றார்.


v1 v2 v3