புகைப்பிடிக்காதீர்கள் : புகைப்பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள் : உலக புகைத்தல் எதிர்ப்புநாள்!!

1


Smoking Vavuniya

இன்றைய உலகில் பாரிய சாவல்களில் ஒன்றாக புகைத்தல் மற்றும் போதைப் பொருட்பாவனை காணப்படுகிறது. சிறியவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமின்றியும் படித்தவர், படிக்காதவர், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இன்றியும் எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை நாம் தினமும் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் இன்றைய மாணவர் சமுதாயத்தையும் இளைஞர்களையும் இலக்குவைத்தே போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றது.


உலக சனத்தொகையில் 100 கோடிப் பேர் புகைப்பழக்கத்திற்கு பழக்கப்பட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 30% மக்களும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 50% மக்களும் இதற்கு அடிமையாகின்றனர். இதன் அடிப்படையில் உலகில் ஆண்டு தோறும் 55 இலட்சம் மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி மாண்டுபோகின்றனர்.

1987இல் உலக சுகாதார நிறுவனம் மே 31ம் நாளை உலக புகைத்தல் எதிர்ப்பு தினமாக அறிவித்தது. இத்தினம் அறிவித்து 29 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இன்றுவரை புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை குறைவடையவில்லை மாறாக அதிகரித்தே செல்லுகின்றது. மே 31 என்னும் நாள் புகைத்தலுக்கெதிரான நாளாக, கண்துடைப்புகாக கடமைக்கு கடைப்பிடிக்கும் நாள் போன்று இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.புகைத்தலுக்கெதிராக காத்திரமான நடவடிக்கைகளில் அரச மற்றும் சமூக அமைப்புக்கள் செயற்படவில்லை என்பதற்கு இலங்கையில் புகைப்பிடிப்பவர்களில் நாளொன்றுக்கு சராசரி 60 பேர் இறக்கின்றனர். (ஆண்டுக்கு 20000 பேர் இறக்கின்றனர்.) நாளொன்றுக்கு 80 க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் இளைஞர்கள் புதிதாக புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகின்றனர் என்ற அறிக்கைளே இதற்கு ஆதாரமாகும்.

­உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. காரணம் சிகரெட்டில் 4000 இற்கும் மேற்ப்பட்ட இரசாயன பொருள்கள் அடங்கியுள்ளது. அது புகைக்கப்படும் போது மேலும் அதிகரித்து உடலுக்கு தீங்கான இரசாயனங்களை தருகிறது. அதிலும் 69 இரசாயனங்கள் குறிப்பாக புற்றுநோய்க்கு காரணமாகும்.


அது புகையிலையை எந்த முறையில் பயன்படுத்தினாலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. அதிக சக்தியை பெறுவதாகவும், மனஅழுத்தத்துக்கு மாற்றாகவும், உற்சாகத்தை தருவாதகவும் எண்ணி இதை பழகுகிறார்கள். அந்த சிறிய துன்பத்திற்காக பெரிய துன்பத்தில் தஞ்சமடையும் செயலான புகைப்பழக்கம் அழிவு நோக்கிய பயணமே.

இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலத்தின் தூண்கள் என்கின்றோம். ஆனால் நாம் எதிர்காலத்தூண்கள் என்ற எமது இளைஞர்களை இன்று புகைத்தலுக்கும், மாவா போதைப்பாக்கு, மது போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை அழித்து ஒரு நலிவுற்ற இளைஞர் சமூதாயமாக, உறுதியற்ற தூண்களாக மாற்றப்படுகின்றார்கள்.


எனவே நாம் மனித சமூகத்தை பாழாக்கும் இக் கொடிய போதைப்பொருட்களுக்கு எதிராக போராடத் தவறினால் எமது பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் எம் முன்னே சீரழிந்து அழிந்து போவதை பார்த்துக் கொண்டிருக்க நேரும். அது மட்டுமல்லாமல் மனிதத்தை மதிக்காத மிருகங்கள் வாழும் சமூதாயத்தில் நாம் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படும்.

எனவே உங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரண்டு போதை பாவனைக்கு எதிராக போராடுவோம்.

ஊடக அறிக்கை

30.05.2016

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு
வவுனியா மாவட்டம்.
077 5141478
077 4409313
076 7437835
077 6288923

புகைப்பிடிக்காதீர்கள்! புகைப்பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள்!!