பொதுநலவாய மாநாட்டிற்கு மன்மோகன் சிங் வருவார் – பீரிஸ்..!

358

perisகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாகவும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பி தரும் பேச்சுக்கே இடமில்லைஎன அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை அழைப்பதற்காக புதுடில்லி சென்றுள்ள பேராசிரியர் ஜீஎல் பீரீஸ், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த போதே இதைத் தெரிவித்தார்.

ஆசியாவில் 24 ஆண்டுகளுக்கு பிறகு பொதுநலவாய மாநாடு ஒன்று நடைபெறும் சூழலில், அந்த அமைப்பிலேயே அதிகமான மக்கட்தொகை கொண்ட நாடு என்கிற வகையிலும் இந்தியா அதில் கலந்து கொள்வதற்கான காரணங்கள் உள்ளன என்றும் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான இருதரப்பு உறவுகள் வலுவாக உள்ளதையும் அவர் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

பொதுநலவாய அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் 53 நாடுகளில் இதுவரை யாரும் கொழும்பு மாநாட்டுக்கு வரப் போவதில்லை என்று கூறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

கனடா கூட அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் என்று பொதுநலவாய அமைப்புக்கான கனடாவின் சிறப்புத் தூதர் ஹ்யூ சீகல் தெரிவித்துள்ளதையும் பேராசிரியர் பீரீஸ் சுட்டிக்காட்டினார்.

நவநீதம்பிள்ளை வருகை

ஒருவார கால பயணமாக இலங்கைக்கு வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையின் விஜயம் ஆக்கபூர்வமாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னரே அவரை இலங்கைக்கு வருமாறு அரசு அழைத்தது என்றும், இந்தப் பயணம் அவருக்கு இலங்கை குறித்த ஒரு யதார்தமான, ஆக்கபூர்வமான புரிதலோடு ஒரு நிலைப்பாட்டை எடுக்க உதவும் என்றும் தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சதீவை திருப்பி ஒப்படைக்க முடியாது!- பீரிஸ் திட்டவட்டம்

கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரீஸ் தெரிவித்தார்.

கச்சதீவு ஒப்பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்சினை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம்.

கச்சதீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திதான் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி, சர்வதேச எல்லைக்குள்பட்ட கச்சதீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும், ஒப்பந்தத்தில் இலங்கை மீனவர்களுக்கும் இலங்கைக்கும் கச்சத்தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது.

எனவே, கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்கள் பேச்சு நடத்த வேண்டும்:

இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அளவுக்குத் தமிழக மீனவர்கள் வந்து மீன்பிடிக்கின்றனர்.

போருக்குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகுதிக்குத் தமிழக மீனவர்கள் வருவதால், தங்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எங்கள் நாட்டு மீனவர்கள் கருதுகின்றனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷயத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண்டும் என்றார் பீரீஸ்.