பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!!

நாட்டில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வடமேற்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.

வீடொன்றில் நள்ளிரவில் யுவதியால் நடத்தப்பட்ட விருந்து : மயக்க நிலையில் சிக்கிய பலர்!!

கம்பஹா, ராகம பகுதியில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட குழு நடத்திய பேஸ்புக் போதைப்பொருள் விருந்து பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது இளம் பெண் உட்பட 13 பேர் ஐஸ் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனை காரணமாக மிகவும் மயக்கமான மற்றும் சுயநினைவற்ற நிலையில் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் இருந்த 20 வயதுடைய இளம் பெண்ணால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்த விருந்து ராகம பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணையின் போது, அந்த இளம் பெண் ராகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் ஜா-எல, கம்பஹா, கிரிபத்கொட, களனி மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்!!

நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று (19.12.2025) அதிகாலை 12.45 மணிக்கு டுபாயிலிருந்து ஃப்ளை டுபாய் FZ-569 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதனையடுத்து “கிரீன் சேனல்” வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவரிடமிருந்து சுமார் 354,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பப் பெண் கொலை : கழுத்தில் வெட்டுக் காயத்துடன் கணவன் மீட்பு!!

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இன்று (19.12.2025) அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் கருவேப்பன்குளம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரால் இந்தக் பெண் கொலை செய்யப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்த பின்னர் கணவரும் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும், காயங்களுடன் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் : வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து!!

களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் ஒன்டான்செட்ரான் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.

அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை.

பின்னர், நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்தார். பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

சந்தமினி திவ்யாஞ்சலி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மத்திய வித்யாலயா தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவராகும். அவர் உயிரிழக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இறந்த பெண்ணுக்கு நீதி வழங்கவும், இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களால் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிகாரிகளை கடுமையாக வலியுறுத்துகின்றனர்.

கொத்மலை – ரம்பொடவில் மீட்கப்பட்ட மனித கால் : 21 பேர் மாயம்!!

மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17.12.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்தில் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணித்த வேன் மற்றும் லொறி

இந்த நடவடிக்கையானது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, அந்த கால் பகுதி மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண்சரிவில் சிக்கிய 27 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், 21 பேரை இதுவரை காணவில்லை எனவும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி ஒன்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மனைவியைக் கடித்தே கொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு!!

வேலையை விட மறுத்த மனைவியை ஆத்திரத்தில், பெங்களூருவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இத்தனை பயங்கர முடிவுக்கு வந்தது அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது.

மனைவியைக் கொன்ற பிறகு, அந்த ஹோட்டல் உரிமையாளரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை மற்றும் தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

புலம்பெயர முயன்ற இந்திய தம்பதியர் குழந்தையுடன் வெளிநாடொன்றில் கடத்தல்!!

போர்ச்சுகல் நாட்டுக்கு புலம்பெயர முயன்ற ஒரு இந்திய தம்பதியரும், அவர்களுடைய மூன்று வயதுக் குழந்தையும் லிபியா நாட்டில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Mehsana மாவட்டத்தில் அமைந்துள்ள Badalpura கிராமத்தைச் சேர்ந்த கிஸ்மத்சிங் (Kismatsingh Chavda),

அவரது மனைவியான ஹீனாபென் (Heenaben) மற்றும் தம்பதியரின் மகளான தேவன்ஷி என்னும் மூன்று வயது சிறுமி ஆகியோரே கடத்தப்பட்டுள்ளதாக, (Devanshi). Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

லிபியா நாட்டில் அவர்களைக் கடத்தி வைத்துள்ள கும்பல், அவர்களிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிஸ்மத்தின் சகோதரர் போர்ச்சுகல் நாட்டில் வாழும் நிலையில், அங்கு புலம்பெயர கிஸ்மத் குடும்பம் முடிவு செய்துள்ளது.

கிஸ்மத் குடும்பம், நவம்பர் மாதம் 29ஆம் திகதி குஜராத்திலிருந்து துபாய்க்கும், பின் துபாயிலிருந்து லிபியாவுக்கும் சென்ற நிலையில், Benghazi என்னுமிடத்தில் அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.

குஜராத் அரசுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் இந்த கடத்தல் தொடர்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக Mehsana மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய மகன் : மனைவியை பிரிய பணம் வழங்காததால் ஆத்திரம்!!

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரை கொன்று உடலை மகன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் அம்பேஷ் என்ற பொறியாளர் தனது வீட்டை எதிர்த்து மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அம்பேஷ் திருமணத்தை அவரது பெற்றோர்கள் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை, அத்துடன் உடனடியாக அந்த பெண்ணை விவாகரத்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் குடும்ப தகராறு அதிகரித்துள்ளது, இறுதியில் விவாகரத்து சம்மதித்த அந்த பெண் ஜீவனாம்சமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார்.

இந்த பணத்தை திரட்டுவதற்காக அம்பேஷ் தந்தையிடம் உதவி கோரியுள்ளார்.

பெற்றோரை கொன்று ஆற்றில் வீசிய மகன்

ஆனால் ரூ.5 லட்சம் தந்து உதவ தந்தை மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த அரவை கல்லை எடுத்து தாய் பபிதா(60)வை முதலில் தாக்கியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை ஷியாம் பகதூரையும்(62) அதே கல்லால் அடித்து கொன்றுள்ளார். மேலும் தன்னுடைய தவறை மறைக்க வீட்டில் கேரேஜில் இருந்த வாளை(Saw) கொண்டு பெற்றோர் இருவரையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் கட்டில் அதிகாலை நேரத்தில் ஆற்றில் வீசியுள்ளார்.

பின்னர் சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெற்றோர் கோபத்தில் வீட்டை விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சகோதரி வந்தனா பொலிஸாரில் புகார் அளிக்கவே, அம்பேஷிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் இறுதியில் இருவரையும் அடித்து கொன்ற விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

மீட்புப் பணிகளின் போது 30 இலட்சம் பணம் 50 இலட்சம் நகைகள் இராணுவத்தால் மீட்பு!!

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பகுதியில் மீட்பு பணிகளின் போது இராணுவ மீட்பு படையினர் 30 இலட்சம் பணம் மற்றும் 50 இலட்சம் ரூபாபெறுமதியானநகைகளையும் மீட்டுள்ளனர் .

டித்வா ப்ய்ரலால் இலங்கையில் ஏற்பட்ட மணசரிவில் வீடு முற்றாக அழிந்திருந்த நிலையில் இடிபாடுகளை சீரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வீடொன்று மண்ணில் புதைத்து அழிவடைந்த நிலையில் , புதைந்திருந்த புதைந்திருந்த பணம் , நகை மீட்கப்பட்டு பாதுகாப்பாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

யாழில் இளைஞனின் விபரீத முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் இன்று (18.12.2025) இடம்பெற்றுள்ளது.

எனினும் இளைஞன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள நிலையில் இளைஞன் அமரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் வீதியை விட்டு தோட்டத்திற்குள் பாய்ந்த கனரக வாகனம்!!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது.

யாழ் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தின் போது குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் நித்திரை தூக்கத்தால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (18) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,700 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கண்டுபிடிப்பு!!

இத்தாலியிலுள்ள தேசிய பூங்காவில் பழமையான டைனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

210 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த கடைனோசரின் கால்தடங்களை நோக்கும் போது சிறிய தலை, நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது.

தாவர உண்ணி டைனோசர் வகையைச் சேர்ந்தவை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இனம் புரோ-சௌரோபாட் (prosauropods) என்று அழைக்கப்படுகிறது. கால்தடங்கள், விரல் மற்றும் நகத்தின் அடையாளங்கள் தெளிவாக தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டெல்வியோ தேசிய பூங்காவில் (Stelvio national park) உள்ள ஒரு மலைச் சரிவில் இந்த கால்தடங்கள் கடந்த செப்டெம்பரில் அந்தப் பகுதியைப் பார்வையிட்ட ஒரு புகைப்படக் கலைஞரால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுமார் 10 மீட்டர் உடல் நீளம் கொண்ட “ப்ரோ-சௌரோபாட்” (prosauropods) டைனோசர்கள், நீண்ட பயணங்களின் போது சோர்வைப் போக்க தங்கள் பின்னங்கால்களைப் நடக்கவும், மலைகளில் ஓய்வெடுக்கவும் பயன்படுத்தியதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டைனோசர்கள் அழிந்து போவதற்கு முன்பு 160 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.

தந்தையை கொலை செய்து ஆவணங்களை கொள்ளையிட்ட மகன் கைது!!

பலாங்கொட பகுதியில் தந்தையை கொலை செய்து ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  பலாங்கொட, ஹந்தகிரியவை பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதற்கமைய கொல்லப்பட்டவர் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாகவும், வீட்டிலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சகோதரியின் வீட்டிற்கு வந்த நபர், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டிலிருந்து ஆவணங்களைத் திருடியதாகவும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் மகன் எனவும் பெண் ஒருவர் வெலிகெபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 40 வயதான மகனை கைது செய்துள்ளனர்.

சடலம் பலாங்கொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகெபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் ஆபத்து : மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!!

கண்டியின் உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று பதிவாகி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு நிறுவனம் எச்சரித்துள்ளது.

மழை நிலைமை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

அதற்கமைய, கண்டி மாவட்டத்தில் உள்ள தொலுவ, உடுதும்பர, மடதும்பர மற்றும் மினிபே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனே, ஹங்குரன்கெத்த, நில்தண்டஹின்ன மற்றும் மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வசந்த சேனாதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த இடங்கள் நிலச்சரிவு அல்லது இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அந்த இடங்களைத் தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.