பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள் : விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு!!

புதிய இணைப்பு : மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு உதவ, மார்ச் 08, 2026 அன்று கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே கூடுதல் விமானத்தை இயக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி, UL1205 என்ற எண்ணைக் கொண்ட கூடுதல் விமானம் மார்ச் 8, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 06.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 01.10 மணிக்கு லண்டனை வந்தடையும்.

அதன் பின்னர் UL1206 விமானம் அதே நாளில் பிற்பகல் 03.05 மணிக்கு லண்டனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 06.55 மணிக்கு கொழும்பு வந்தடையும்.

மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு, 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 11 777 1979 (சர்வதேசம்) அல்லது WhatsApp (+94 74 444 1979) (செய்திகளுக்கு மட்டும்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் தகவலுக்கு உங்கள் பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடலாம் என அறிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது முக்கிய விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 2026 மார்ச் 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களிலும் கொழும்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து கொழும்பு வரும் 12 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கின் துபாய், ரியாத், டோஹா, தம்மாம் மற்றும் குவைத் ஆகிய இடங்களுக்கான சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக அதன் வான்வெளியை திறந்ததன் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் பல விமான நிறுவனங்களால் பல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.

இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விமானங்கள்

கொழும்பு – டுபாய்: இன்று பயணிக்கவிருந்த UL 225 வானூர்தி சேவை.

டுபாய் – கொழும்பு: டுபாயிலிருந்து நாடு திரும்பவிருந்த UL 226 வானூர்தி சேவை.

கொழும்பு – ரியாத்: ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 மற்றும் அங்கிருந்து வரவிருந்த UL 266 ஆகிய வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகளுக்கான அறிவுறுத்தல்

இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று (04) விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 04 விமானங்கள் இயக்கப்பட்டதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், மஸ்கட்டிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானம் 3.Z.- 7648 சரக்கு சுமையுடன் ஓமானின் மஸ்கட்டிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8.D.- 822 ஆகியவை 133 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அதிகாலை 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இதற்கு கூடுதலாக, துபாயிலிருந்து ஃப்ளை துபாய் விமானம் F.Z.- 569 மற்றும் எமிரேட்ஸ் விமானம் EK- 654 முறையே மாலை 4.50 மணிக்கும் 6.45 மணிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி உட்பட 4 பேர் பலி!!

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

வெஸ்ட் சிக்ஸ்த் ஸ்டீரித் பகுதியில் கடந்த மார்ச் 1 அதிகாலை மர்ம நபர் ஒருவர் திறந்தவெளியில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் University of Texasயில் முதுகலை பட்டம் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி சவிதா சன்முகசுந்தரம் (21) உயிரிழந்தார்.

மேலும் ரைடர் ஹாரிங்டன் (19) உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். அமெரிக்க அதிகாரிகள் இரு பேரின் அடையாளங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் செனீகல் நாட்டில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற நிடியாகா டியாக்னே (53) என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சம்பவ இடத்திலும் அவரது இல்லத்திலும் இருந்து ஈரான் நாட்டுக் கொடி மற்றும் தீவிரவாத குறிப்புகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இது அரசியல் நோக்கத்துடன் நடைபெற்ற தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சற்று முன்னர் வெளியான தகவல் இலங்கை கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல் – தகவல்கள் பிழையென கடற்படை தெரிவிப்பு!!

இலங்கை கடற்பரப்பில், ஈரான் கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் குறித்த முந்தைய அறிக்கையில் சில திருத்தங்கள் இருப்பதாக இலங்கை கடற்படை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை கூறியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னர் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவத்தில் காயமடைந்த 32 பேர் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு நாங்கள் சென்றிருந்த போது, கப்பல் மூழ்கியிருந்ததாகவும் அதன்போது நீரிற்குள் தேடலில் ஈடுபட தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போதே நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த பகுதியில் இருந்து 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சில சடலங்களும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மீட்கப்பட்ட சடலங்கள், ஈரானிய போர்க்கப்பலில் பயணித்தவர்களாக இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த கொடூரம் : மனைவியை விரட்டி விரட்டி கொலை செய்த கணவன்!!

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலிய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட செவிலியருக்கும், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 33 வயதுடைய மனோஜ் பெத்தும் அகலங்க என்ற நபருக்கும் இடையே நீண்டகாலமாக தொடர்பு இருந்துள்ளது.

கடந்த முதலாம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியருக்கும், சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில், முன்னாள் மனைவி வீதியில் சென்ற வந்தபோது, அவரைத் துரத்திச் சென்ற சந்தேக நபர் கத்தியால் அவரது மார்பில் குத்தியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அவரைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அரநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, சந்தேக நபர் ஏற்கனவே திருமணமாகி சட்ட ரீதியாக பிரிந்தவர் என்பதும், செவிலியருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலையை செய்ததும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவனெல்லை நீதவான் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : 3.3 மில்லியன் ரூபாவை இழந்த பெண்!!

காலி, தொடந்துவ பகுதியில் பெண்ணிடம் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பரிசு வென்றதாகக் கூறி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 3.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்த சந்தேக நபரைக் கைது செய்ய காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தப் பெண்ணை தொலைபேசியில் அழைத்த ஒருவர், தொலைபேசி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தொலைபேசி நிறுவனத்திடமிருந்து 257,000 ரூபாய் பரிசை வென்றதாகவும் கூறியுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் அவருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் பரிசுப் பணத்தை வரவு வைக்க அவருடைய வங்கிக் கணக்கு எண், அவருடைய ஏடிஎம் அட்டையின் புகைப்படம் மற்றும் அதன் பின் எண்ணைக் வழங்குமாறு கோரியுள்ளார்.

அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, கணக்கு எண், ஏடிஎம் அட்டையின் புகைப்படம் மற்றும் அதன் பின் எண்ணை அந்த நபரின் தொலைபேசிக்கு அனுப்பினார்.

மறுநாள், அவர் கணக்கு வைத்திருந்த தனியார் வங்கிக்குச் சென்றபோது, ​​அவருடைய கணக்கிலிருந்து 3.3 மில்லியன் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

பின்னர், வங்கியில் இது குறித்து விசாரித்தபோது, ​​தொலைபேசி அழைப்பு வந்த அதே நாளில் பணம் எடுக்கப்பட்டதை அறிந்தார்.

பணத்தை வைப்பு செய்த பிறகு அல்லது எடுத்த பிறகு, கணக்கு வைத்திருப்பவரின் கையடக்க தொலைபேசிக்கு வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

ஆனால் அவரது தொலைபேசிக்கு வந்த செய்தியும் மறைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் இது குறித்து காலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு எடுக்கப்பட்ட 3.3 மில்லியன் ரூபாய் சில நிமிடங்களில் எட்டு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு அழைப்பு விடுத்த தொலைபேசியும் இயங்கவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண்ணை காணவில்லை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

மட்டக்களப்பில் வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு- போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம்(வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேரந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை(28.02.2026) அன்று குறித்த பெண் பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் பழுகாமத்திலிருக்கின்ற வங்கி ஒன்றுக்கும் சென்றுவிட்டு அன்றையதினம் முற்பல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீடு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அன்றயதினம் 11 மணிவரைக்கும் பெண்ணின் பைபேசி தொடர்பிலிருந்துள்ளது. 11 மணிக்குப் பின்னர் அவரது தொலைபேசி இயங்கவில்லை, எனவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது மகளுக்கு என்ன நடந்தது எவ்வாறு காணாமல் போனார் என்பது தமக்குத் தெரியாதுள்ளது. எனவே எனது மகளைக் கண்டு பிடித்துத் தருமாறு காணாமல் போயுள்ள பெண்ணிய் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமது அம்மாவிற்கு என்ன நடந்தது என நாம் தவித்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அம்மாவை நாம் தேடி அலைந்து திரிகின்றோம், அம்மாவைக் கண்டு பிடித்து தாருங்கள் என அப்பெண்ணின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பெண் காணாமல் போனபோது சாம்பல் நிற சாறி அணிந்திருந்துள்ளார்.

பெண்ணைக் கண்டால் 075 694 0655, 077 384 8385, 074 157 7381 ஆகிய கைபேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!!

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின் வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 12ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

அதன்படி, முதல் கட்டம் மார்ச் 12 முதல் 23 ஆம் திகதி வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறும். நடைமுறைத் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்த செயல்முறை முடிந்தவுடன், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான திகதி குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை : இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு!!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (04.03.2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்படுவதால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது.

இலங்கை தற்போது எரிபொருள் இறக்குமதிக்கு ஹோர்முஸ் நீரினையைப் பயன்படுத்துவதில்லை. ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக, இலங்கை தற்போது ஆப்பிரிக்க நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்லும் கடல் வழித்தடங்களையே எரிபொருள் இறக்குமதிக்குப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நீரிணை மூடப்படுவது உலகளாவிய எரிபொருள் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

என்றாலும், இலங்கைக்கு அது ஒரு பிரதான தடையாக அமையாது. ஏற்கனவே மாற்று வழிகள் மூலமே எரிபொருள் கொண்டு வரப்படுவதால், இந்த நெருக்கடி நிலை இலங்கையைப் பாதிக்காது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் : இளம் யுவதி கழுத்தறுத்து கொலை!!

கொழும்பு – கஹதுடுவ ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் யுவதியொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புளத்சிங்கள, கோவின்ன, நாரகல வெடகே வட்டத்தில் வசித்து வந்த பணிபுரிந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆடைத்தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றியதாக கூறப்படும் சந்தேகநபர், கொலைக்கு பிறகு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளம் பெண் கடந்த ஆண்டு ஆடைத்தொழிற்சாலையில் பணிக்கு வந்த நிலையில், சந்தேகநபர் 2024 ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார்.

பதுளை, கெப்பெட்டிபொலவை சேர்ந்த சந்தேகநபர், திருமணமானவர் எனவும், கொலை செய்யப்பட்ட யுவதியும், சந்தேகநபரும் சுமார் ஒரு வருடமாக காதல் உறவில் இருந்து வந்துள்ளனர்.

இதன்போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையினால் இளம் பெண் பல நாட்களாக சந்தேக நபரிடம் பேசாமல் தவிர்த்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை, ஆடைத்தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலில் இளம் யுவதிக்கும், சந்தேகநபருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கழுத்தறுக்கு கொலையை செய்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளில், இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த பிறகு, சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று துணிப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளம் யுவதி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இளம் பெண்ணின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தங்க விலையில் திடீர் மாற்றம் : இலங்கையில் நகை வாங்க காத்திருந்தோருக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 407000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 376500 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் (03.03.2026) கொழும்பு செட்டியார்தெருவின் தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 425000 ரூபாவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.63 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலைக் குறைவு காரணமாக இன்று இலங்கையிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

 

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்ற இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கராசா அமல்ராஜ் (வயது 44), செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு கடற்றொழிலாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கடற்றொழிலாளர்களது உறவுகள் கருத்து தெரிவிக்கையில், அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள்.

கடற்படையினர் நடவடிக்கை

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை. அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (03) இந்திய கடற்றொழிலாளர்கள் கடலில் கண்டதாகவும், அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தாகவும் கூறினர்.

இந்திய எல்லையில் நின்றால் இந்திய கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்றும், ஆகையால் கரையோரமாக செல்வதாகவும் அவர்கள் தங்களுக்கு கூறிவிட்டு சென்றதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாங்கள் கடற்படையினர், பொலிஸார் என அனைவருக்கும் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.

தேடுதல் நடவடிக்கை

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை உலங்குவானூர்தி மூலம் மீட்டனர். அதுபோல இவர்களையும் ஏன் காப்பாற்ற கூடாது? இதுவரை கடற்படை எந்தவொரு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

இதுவரை 3500 லீட்டர்கள் எரிபொருளை பயன்படுத்தி நாங்களே தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டோம். எல்லை தாண்டி சென்று தேடவும் முடியாது.

நாங்கள் தேடி சென்றவேளை இந்திய கடற்படையினர் எங்களை விரட்டினர். எனவே அவர்களை உயிருடன் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் : நூற்றுக்கணக்கானோரை தேடி தொடரும் மீட்புப் பணி!!

புதிய இணைப்பு : இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சி.டி.ஆர் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கப்பலில் 180 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகளில் கடற்படை சுழியோடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏனையோருக்கு என்ன நடந்தது என்பது பற்றி கடற்படை ஆராய்ந்து வருவதுடன், இன்று (04) மாலை 3 மணியளவில் அது தொடர்பில் அவசர ஊடக சந்திபொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு : இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘ஐரிஸ் தேனா’ என்ற ஈரானிய கப்பலில் இருந்த 180 பேரில் சுமார் 30 பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டிருந்து.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டின் ‘சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு’ (International Convention on Maritime Search and Rescue) உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் படி, கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு : காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

குறித்த கப்பலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பின்னர் அபாய சமிக்ஞையை (Distress call) வெளியிட்டதாகவும், இதனையடுத்து மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5:08 மணியளவில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அவசர செய்தி கிடைத்ததினையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை, காலை 6:00 மற்றும் 7:00 மணியளவில் மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது.

கடலில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும், மீட்பு பணிகள் முப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மனைவி, 3 மகள்களையும் கழுத்தறுத்துக் கொன்று விட்டு தப்பியோடிய கணவன்!!

சூதாட்டப் பழக்கத்தால் கடன் சுமை அதிகரித்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் காய்கறி வியாபாரி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளையும் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அசாத்பூர் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் முன்ஜன் கேவாட். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததால் பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது.

சூதாட்டத்தில் பணத்தை இழந்த கேவாட்டிற்கு, கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். கடன் சுமை அதிகரித்ததால், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள அவர் முடிவெடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று, தனது மனைவி அனிதா (27) மற்றும் 5, 4, 3 வயதுடைய மூன்று பெண் குழந்தைகளை அவர் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.

குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்ளத் துணிவில்லாமல் கேவாட் அங்கிருந்து தப்பி ஓடினார். ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று தலைமறைவானார்.

அனிதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய கொலையாளி கேவாட்டைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியுடன் அவர் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

கைதான கேவாட் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் காரணமாகவே இந்தத் தீவிர முடிவை எடுத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டப் பழக்கங்களால் சமீபகாலமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. கடன் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை அல்லது இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, முறையான ஆலோசனைகளை நாட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் 2 பேர் குட்டையில் மூழ்கி பலியான சோகம்!!

பள்ளி விடுமுறை நாளில் குளிக்க சென்ற மாணவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அனந்தகிரி அமுதன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தரணிஷ் (11) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (8) 2ம் வகுப்பு மாணவர். கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விளையாடச் சென்றனர். இரவு ஆகிவிட்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.

இதையடுத்து, அவிநாசி காவல் நிலையத்தில் சிறுவர்கள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் நம்பியம்பாளையம் அனந்தகிரி குட்டையில் இரண்டு உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்கள் தரணிஷ் மற்றும் ஹரிஹரன் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இரு சிறுவர்களின் உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரே பகுதியில் இரு சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நாட்டில் 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு : எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான தகவல்!!

நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட தேவையற்ற பதற்றம் மற்றும் அளவுக்கு அதிகமான எரிபொருள் சேமிப்பு காரணமாகவே நேற்று காலை சில நிலையங்களில் தற்காலிகமாகக் கையிருப்பு தீர்ந்திருந்த போதிலும், நேற்று அதிகாலை முதல் விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று காலை 6 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட விநியோகப் பணிகள் ஊடாக, சாதாரண ஒரு நாளை விட 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 842,810 லீட்டர் ஒட்டோ டீசல், 95,700 லீட்டர் 92 ரக பெட்ரோல், 5,97,000 லீட்டர் 95 ரக பெட்ரோல் மற்றும் 184,800 லீட்டர் சுப்பர் டீசல் ஆகியவை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, கொழும்பின் முக்கிய பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் எதுவும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், விநியோக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக சில இடங்களில் சிறிய தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதே தவிர, தட்டுப்பாடு ஏற்பட வேறு எவ்வித காரணமும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடையாமல் தங்களுக்குத் தேவையான அளவு எரிபொருளை மட்டும் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் இவ்வாறு இயல்பாகச் செயற்படும் பட்சத்தில், நாளை காலைக்குள் எரிபொருள் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

மின்னேரியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் படுகாயம்!!

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த ஏழு பேர் உட்பட 10 பேர் காயமடைந்து ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.