கற்குகையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!!

மொனராகலையில் தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து நேற்று (04) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொம்பகஹவெல, நுககஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன பெண்ணின் சடலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலமானது சியம்பலான்டுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை : வைரலாகும் விளம்பரம்!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை என வெளியான விளப்ரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

அவ்வாரும் தம் பிள்ளைகளுக்கு வரன்களை தேடி அலையும் பெற்றோர்களின் சுமையை குறைக்க இன்றைய காலக்கட்டத்தில் மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது.

தடுப்பூசி போடாத மணமகள் தேவை

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விளாம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியையின் உடல் ஒப்படைப்பு!!

வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை சுவர்ணலதாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்படுள்ளது.

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெர்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

நயினாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார். தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருந்ததாக விசரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியை கர்ப்பமாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பில் கணவனை கைது செய்த புளியங்குளம் பொலிஸ், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்..

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவர் : விசாரணையில் அதிர்ச்சி!! 
வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன் : நடந்தது என்ன?
வவுனியாவில் கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்!!

 

புதிய ஏர் பஸ்ஸை காண காலி முகத்திடலில் கூடிய மக்கள்!!

இந்த விமானம் இன்று (04.06.2025) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330-200 ஜூன் 4 ஆம் தேதி காலை 8:15 மணி முதல் 9:30 மணி வரை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து பாணந்துறை வரை வானத்தில் தாழ்வாகப் பறந்தது,

இதேவேளை, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பு கடற்கரையோரமாக மிகவும் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம்!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்பு கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருந்து A330-200 wide-body என்ற ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது.

குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி – பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது. எனினும் பலரும் எதிர்பார்த்தளவுக்கு பாரியளவிலான விமானத்தை பார்வையிட முடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு வழிகாட்டி அந்தோனியார் : இலங்கையில் இப்படி ஒரு ஆலயமா? கடலென குவிந்த பக்தர்கள்!!

மன்னார் – சிற்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது செவ்வாய்க்கிழமை (3) சிறப்பாக நடைபெற்றது.

மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது வழமை.

அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (3) திருவிழா என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அநீதோனியாரை தரிசித்து சென்றனர்.

பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் முகமாக உணவுப் பொருட்களை தானம் செய்வதையும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு தமது வேண்டுதல்கள் எழுதிய கடதாசிகளை மரங்களில் கட்டுவதையும், பிள்ளைப்பேறு வேண்டி தொட்டில்களை கட்டுகின்றனர்.

பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வேண்டியவர்களின் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறியபடியால் இந்த ஆலயமானது பிரசித்தி பெற்றுள்ளது.

இதன் காரணமாக பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி பல்வேறு மதத்தவர்ளும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகன் மாம்பழம் : வாங்கியது யார் தெரியுமா?

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர். இதனால் மாம்பழத்தின் விலை பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4,60,000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் மாம்பழத்துடன் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்தது.

சடலத்தை காண ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றவர் மரணம்!!

ஆற்றில் மிதந்த சடலத்தை காண ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாரியபொல ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த சடலத்தையே அவர் பார்வையிட அவர் நீந்திச் சென்றமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாரியபொல-களுகமுவ வீதியில் வாரியபொல நகருக்கு அருகிலுள்ள விலக்கட்டுபொத ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய நபர் அங்கு இருந்த பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இரு சடங்களும் புத்தளம் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலக மக்கள் தொகைக்கு பேரழிவு : அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சித் தகவல்!!

உலக மக்கள் தொகை 2300ஆம் ஆண்டில் 10 கோடியாக குறையக்கூடும் அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் 2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 கோடியாக குறையக்கூடும் என்று அமெரிக்காவை சேர்ந்த கணினி அறிவியல் பேராசிரியர் சுபாஷ் காக் தெரிவித்தார்.

டெர்மினேட்டர் பாணி அணு ஆயுதப் போரினால் அல்ல, மாறாக மனிதனின் வேலைகளை ஏஐ-க்கு மாற்றுவதன் மூலம் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் என்றார்.

வேலை வாய்ப்பு இழப்பு குறிப்பிடத்தக்க பிறப்பு விகித சரிவுக்கு வழிவகுக்கும் என்றும், ஐரோப்பா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதையும் சுபாஷ் காக் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை வேலை இல்லாதவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தயங்குவார்கள் என்பதால், பிறப்பு விகிதம் வீழ்ச்சியடையும் என்றும், இதனால் உலக மக்கள் தொகைக்கு பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

 

கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞன் – விசாரணையில் வெளியான தகவல்!!

கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி வணிக வளாகத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையின் சுவருக்கு அடியில் கையடக்க தொலைபேசி வைத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸார் கடைக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான ஜெரோன் நித்தியானந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.

உடை மாற்றும் அறையில் இருந்தவரை நோக்கி அந்த கையடக்க தொலைபேசி காணப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொழிலதிபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 55 கிலோகிராம் தங்கம்!!

களுத்துறை- ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோகிராம் தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றின் மதிப்பு ஒரு பில்லியன் ரூபாயை நெருங்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொழிலதிபர் தங்கமானது, நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருக்கும் இருப்பு என்று கூறியுள்ளார்.

எனினும், அத்தகைய இருப்பு எவ்வாறு என்பது என்பது குறித்த தகவலை அவரால் வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.

கொவிட் பரவல் காரணமாக எடுக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல்!!

நாட்டிற்குள் நுழைந்துள்ள புதிய கோவிட் திரிபு மேலும் பரவாமல் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் கோவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 24 பிராந்தியங்களில் கோவிட் பரவியுள்ளது. இந்நிலையில் இலங்கை சுகாதார பிரிவின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொற்று பரவி வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் நிலைமை தொடர்பில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பதிவாகும் கோவிட் நோயாளிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் இன்று நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். நாட்டை முடக்குவதா கட்டுப்பாடுகள் விதிப்பதா என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் நோய் பரவுவதை தொடர்ந்து கண்காணித்து வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில், இளைஞர்கள் மத்தியில், மாரடைப்புஅதிகரித்து வருவது தொடர்பில், முக்கிய விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் 40 வயதுக்குட்பட்டவர்களில் அரிதாக இருந்த மாரடைப்பு, இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும், 20 மற்றும் 30 வயதுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை தாம் சந்திப்பதாக கூறும் அவர், அதில் பலர் உடல் பருமன் அல்லது குடும்ப வரலாறு போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாமல், மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளதை காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இந்த நிலைமைக்கு, நவீன வாழ்க்கை முறை உள்ளது. குறிப்பாக, மோசமான உணவு, உடல் செயலற்ற தன்மை, நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை என்பன மாரடைப்புக்கான முக்கியம் மூல காரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வாரத்துக்கு குறைந்தது ஐந்து நாட்கள் 40 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதற்கு ஜிம் தேவையில்லை. நடைபயிற்சி என்பது உங்கள் இதயத்தைப் பாதுகாக்க எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பழக்கமாகும்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற பிற செயல்பாடுகளும் சிறந்தவை என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

தூக்கமின்மை ஒரு முக்கிய இருதய ஆபத்து காரணி என்பதை பலர் உணரவில்லை. மோசமான தூக்கம் மன அழுத்த ஹோர்மோன் அளவை (கார்டிசோல் போன்றவை) அதிகரிக்கிறது.

குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் தமனிகளை சேதப்படுத்துகிறது ஆகவே ஒரு இரவுக்கு குறைந்தது 7 மணிநேரம் தரமான தூங்குங்கள். இது ஒரு மருத்துவத் தேவையாகும் என்று மருத்துவர் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும். விதை எண்ணெய்களைத் தவிர்த்து, தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை உட்கொள்ளவும்.

உங்கள் உணவில் இருந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கவும். இந்த நிலையில், அசாதாரண சோர்வு, படபடப்பு அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டால், அவற்றை புறக்கணிக்காதீர்கள் என்றும் இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

வவுனியா ஓமந்தையில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது!!

வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலை இன்று (04.06.2025) திறந்துவைக்கப்பட்டது.

கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் சிலையை திறந்துவைத்தார்.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலஷண்குகன், தெற்கு பிரதேசசபையின் செயலாளர் சு.தெர்ஜனா, அதிபர், பாடசாலை மாணவர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவர் : விசாரணையில் அதிர்ச்சி!!

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்பப் பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்றையதினம் (03.06.2025) இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவர்ணலதா என்ற 32 வயதான ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில்,

கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர்,

இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் அவரை கொலை செய்ததாகவும் வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04.06.2025) மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (03.06) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.