சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன் நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்.

இது சம்பந்தமாக அவருக்கு எதிராக நான் நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். மானநஷ்ட வழக்கு போடுவதற்கான முயற்சியை நான் எனது வழக்கறிஞர்களோடு கலந்துரையாடி வருகின்றேன்.

அந்தவகையிலேயே 150 கோடி நஷ்டஈட்டை அவரிடம் கோருவதற்காக நிச்சயமாக நான் நீதிமன்றம் செய்வேன். நீதிமன்றத்திலேயே அவர் அதனை நிரூபிக்கட்டும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

மஹிந்த ராஜபக்சவை பொருத்தமட்டில் இன்று அவர் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டியவர். ஐ.நா தீர்மானத்தில் அவருடைய பெயரும் இருக்கிறது.

எங்களுடைய மக்கள் அவர் மீண்டும் ஆட்சியை பெறக்கூடாது என்பதில் மிகவும் ஆளுமையோடு செயற்பட்டு புதிய ஜனாதிபதியை கொண்டு வந்திருந்தார்கள். அந்த புதிய ஜனாதிபதி கூட தற்போது மாறுபட்ட கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்.

சமஷ்டி முறையை கொடுக்க முடியாது. வடக்கு கிழக்கை இணைக்க முடியாது. அவ்வாறு கொடுப்பதாக இருந்தால் தனது இறப்புக்குப் பிறகு தான் அதை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட அவர் இவ்வாறு சொல்லியிருக்கின்றார்.

எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் நடுநிலை வகித்தாலும் வாக்களித்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சி அமைப்பதற்கான ஒரு செயலை செய்து எங்களுடைய அழிக்கப்பட்ட மக்களுடைய மற்றும் உரிமைக்காக போராடுகின்ற எங்களுடைய மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்.

அந்த வகையில் இதுவரைக்கும் யாராவது என்மீது விரலை நீட்டி நான் மகிந்த ராஜபக்சவிடமோ ஜனாதிபதியிடமோ ரணில் விக்கிரமசிங்கவிடமோ பணத்தை பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

அதனைவிடுத்து வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப கூடாது. அந்த வகையிலே மனசாட்சிக்கும் மக்களுக்கும் என்னைப் பொறுத்தமட்டில் நான் செயலாற்றி வருகிறேன்.

இந்த விடயத்திலே அரசாங்கத்திற்கு சோரம் போகின்ற என்னுடைய செயற்பாடு ஒரு போதும் இருந்ததில்லை.

இந்தவகையிலே சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு நிச்சயமாக தொடர்வேன். அந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் நான் மஹிந்த ராஜபக்சவிடம் 150 கோடி வேண்டியதாக தெரிவித்ததை.

கூட்டமைப்பை பொறுத்த வரையும் யாரும் அரசாங்கத்திற்கு சோரம் போகவில்லை. வியாழேந்திரன் மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். அவருடைய சுயநலம் காரணமாக அவர் செயல்பட்டிருக்கிறார்.

இந்த விடயத்திலே எங்களைப் பொறுத்தவரைக்கும் மஹிந்த வந்தால் என்ன ரணில் தான் இருந்தாலும் என்ன என்பதை விட ஜனநாயகம் மறுக்கப்பட்டு வருகின்றது. அதனை காப்பதற்கு நாங்கள் செயல்பட்டாக வேண்டும்.

இன்று ஜனாதிபதி தவறான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அந்த வகையில் வியாழேந்திரன் அதனை அனுபவிப்பார். ஏனெனில் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் இருக்கப் போகின்றது.

இன்று இருக்கின்ற நிலவரப்படி பார்க்கின்றபோது ஜனநாயக முறையை தவறாக பயன்படுத்தியதாக அதற்கு எதிராக செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் வியாழேந்திரன் கிழக்கு மாகாண மக்களுக்கு துரோகமான செயலை செய்திருக்கிறார். கட்சி அவருக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் அவர் செயற்பட்டது மிகவும் தவறானது மிக ஆக்ரோசமாக பேசிய ஒரு நபர் இன்று அந்த மக்களை ஏமாற்றியிருக்கின்றார்.

எனவே அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவர இருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையும் இனி வரும் கட்சி மாறி செல்லமாட்டார்கள். வதந்தியை பரப்புபவர்களுக்கு ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் யாரும் மகிந்த ராஜபக்சவின் அணியில் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வியாழேந்திரனை தவிர எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். ஆகவே வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வதந்தியை பரப்புவது அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமையும் என மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இரண்டரை லட்சம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (03.11.2018) மதியம் 2 மணியளவில் இரண்டரை லட்சம் போலி நாணயத்தாள்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த அவர்களின் தலமையில் இடம்பெற்ற திடீர் நடவடிக்கையின் போது 50 ஜயாயிரம் போலி நாணயத்தாள்களை (இரண்டரை லட்சம் ரூபாய்) வைத்திருந்த புத்தளம் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 50 ஐந்தாயிரம் நாணயத்தாள்களும் ஒரே இலக்கங்களுடன் காணப்படுவதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாணைகளை தற்போது முன்னெடுத்துள்ளதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இலக்கத்தினையுடைய 94687245 ஐந்தாயிரம் நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நான் எப்படி துரோகம் செய்துள்ளேன்? தமிழ் மக்களுக்கு புதிய பிரதியமைச்சர் வியாழேந்திரனின் செய்தி!!

நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கிழக்குப் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்றைய தினம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், தமிழ் மக்கள் மீது வைத்துள்ள தூரநோக்குடைய சிந்தனையின் அடிப்படையில் தான் நான் நாடாளுமன்ற பதவியை வைத்துக் கொண்டு அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன்.

மாறாக கதிரையை சூடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்த்து இருக்க முடியாது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களுக்கு பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கும், அமைச்சுப் பதவியை பாரமெடுத்துள்ளேன்.

பல பேர் துரோகம் என்கிறார்களே, நான் எப்படி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது தன்னம்தனியாக குரல் கொடுத்தேன்.

அப்போது இருந்த ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிபட்டே கொண்டிருக்கிறது.

தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை. முறாவோடை காணிகள், பாடசாலை மைதான காணிகள், வாலமன்கேணி, தளவாய், மஞ்சந்தொடுவாய், உள்ளிட்ட காணிகள் துணிச்சலுடன் பிடிக்கப்படுகின்றன.

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின் மூலம் அமைத்த போது தனியாக நின்று நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்?

கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மௌனமானர்கள்? எதிர்கட்சி தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மௌனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே நாடாளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை?

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகவும், இருப்புக்காகவும் ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும் நான் தான் மகஜர் கொடுத்தேன்.

இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

வரும் அரசை எதிர்ப்பார்கள். ஆனால் வரவு செலவு திட்டம், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இது துரோகமில்லையா தமிழ் மக்களே.

நான் அமைச்சு பதவி எடுத்தது எனது குடும்பத்துக்கல்ல. கிழக்கில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

ஒட்டு மொத்தத்தில் எதிர்கட்சி பதவியில் இருப்பதை விட அமைச்சு பதவி எடுத்து வேலைதிட்டங்கள் செய்வது சிறப்பானதாகும். நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதுவித குழப்பமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியை கொலையில் திடீர் திருப்பம் : கணவரும் பிரபல மொடலும் கைது!!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பவான பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட நிலையில், டெல்லி பொலிசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஆசிரியரின் கணவர் 38 வயதான மண்ஜித் மற்றும் அவரது காதலியும் பிரபல மொடலுமான ஏஞ்சல் குப்தா என்பவர்களே கைதானவர்கள்.

டெல்லியில் செயல்பட்டுவரும் பிரபல மொடலான ஏஞ்சல் குப்தாவை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டே மண்ஜித் தமது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி ஏஞ்சலுடன் தமது கணவருக்கு ஏற்பட்டிருந்த உறவுக்கு ஆசிரியை சுனிதா எதிர்ப்பு தெரிவித்ததே இந்த கொலைக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் பகுதியில் துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுனிதா. கடந்த திங்களன்று தமது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

சுனிதாவை யார் கொலை செய்தார்கள் என்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் வாடகை கொலைகாரர்கள் இந்த விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட சுனிதாவை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். சம்பவப்பகுதியில் இருந்து சுனிதாவின் மொபைலும் பணம் இருந்த பை ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே சுனிதா எழுதியதாக கருதப்படும் கடிதம் தொடர்பில் அவரது மகள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மண்ஜித் மற்றும் ஏஞ்சல் தொடர்பான உறவு குறித்து சுனிதாவின் பெற்றோரே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!

தமிழகத்தில் திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கொலை செய்த உறவுக்கார இளைஞர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவிடைமருதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வசந்தபிரியா நேற்று மாலை கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி முடிந்ததும் வசந்தபிரியா ஒருவரது பைக்கில் உட்கார்ந்து போனார் என சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த இளைஞரை ஆசிரியை குடும்பத்தில் காட்டி, இளைஞரை யார் என்று கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞர் உறவினர் தான் என்றும், வசந்தபிரியாவின் அத்தை மகன் நந்தகுமார் என்றும் சொன்னார்கள்.மேலும், நந்தகுமாரும், வசந்தபிரியாவும் காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்போன் சிக்னலை வைத்து நந்தகுமாரை பொலிசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்தோம்.

எனக்கு சரியான வேலை அமையாததால் என்னிடம் பழக கூடாது என அவள் வீட்டில் தடை போட்டார்கள். ஆனாலும், வசந்தபிரியா என்னிடம், நம்மை யாரும் பிரிக்க முடியாது, நாம் கல்யாணம் கண்டிப்பா செய்துக்கலாம் என்றாள்.

அவள் சொன்னது அனைத்தையும் நம்பினேன். ஆனால் கொஞச நாளாகவே என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தாள். என்னால் அதை தாங்கவே முடியவில்லை. இதனிடையே அவளுக்கு வீட்டில் வேறு ஒரு இடத்தில் நிச்சயமும் ஆகிவிட்டதை கேள்விப்பட்டேன்.

அதனால் வசந்த பிரியாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி அவளை தனியாக பைக்கில் அழைத்து சென்றேன். காவிரிக்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

நீ இல்லாமல் இருக்க முடியாது,கல்யாணம் செய்துக்கலாம் என்றேன். அதற்கு அவள் மறுத்துவிட்டாள். அந்த கோபத்தில்தான் கையிலிருந்த கத்தியால் அவளை அறுத்து கொன்றேன் என கூறியுள்ளார்.

மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொன்ற நபர் : 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான உண்மை!!

இந்தியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி சாதனா, தம்பதிக்கு சுபன் என்ற மகனும், நையினா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நையினா கடந்த 2016 ஜூலை மாதம் அங்குள்ள நதி ஓரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார் பிரகாஷ், சாதனா, சுபன் ஆகியோர் மாயமானதை கண்டுப்பிடித்தனர்.

இதைவைத்து நையினாவை மூவரும் சேர்ந்து கெளரவ கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என கருதிய பொலிசார் அதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அந்த குடும்பத்தை சேர்ந்த நால்வரையும் அபிஷேக் என்ற தனி நபர் கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, அபிஷேக்கின் கூட்டாளியான 16 வயது சிறுவன் சமீபத்தில் விபத்தில் இறந்தான். இறப்பதற்கு முன்னர் குடிபோதையில் தன்னுடன் இருந்தவர்களிடம் இது பற்றி அவன் கூறியுள்ளான்.

இதையடுத்து இது பொலிசாருக்கு தெரியவந்தது. இதன் பின்னர் கொலையாளி அபிஷேக்கை பொலிசார் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பொலிசார் கூறுகையில், கடந்த 2015-ல் அபிஷேக் மற்றும் பிரகாஷின் பொது நண்பர் ஒருவருக்கு பிரகாஷ் ரூ.4 லட்சம் கடன் கொடுத்தார், இந்த பணத்துக்கு அபிஷேக் உத்தரவாதம் அளித்து இருந்தார்.

கடன் தொகையின் வட்டி ஏறி ரூ.8 லட்சம் ஆனது. ஆனால் அவரால் அதை திரும்ப தரமுடியவில்லை. இதையடுத்து அபிஷேக் மற்றும் அவர் நண்பரிடம் பிரகாஷ் பணத்தை திரும்பி கேட்டுள்ளார்.

இதையடுத்து அபிஷேக், அந்த நண்பர், மற்றும் அவர்களின் நண்பரான 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து அபிஷேக்கை கொல்ல முடிவெடுத்தனர். அதன்படி காரில் அபிஷேக்கை அழைத்து சென்று சென்று மூவரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

இதை அபிஷேக்கின் மனைவி மற்றும் பிள்ளைகள் பார்த்துவிட்டதால் அவர்களையும் கொன்றுள்ளார்கள். பின்னர் நால்வரின் சடலத்தையும் அங்குள்ள நதியில் போட்டுள்ளார்கள், இதில் நையினாவின் சடலம் மட்டும் கிடைத்துள்ளது. மற்ற மூவரின் சடலங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்

பெற்ற பிள்ளைகளை துடிதுடிக்க கொலை : தாயை தேடும் பொலிசார்!!

தமிழகத்தில் இரண்டு குழந்தைகளில் சாவில் மர்மம் இருப்பதாக கருதும் பொலிசார் அவர்களது தாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூரின் பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு மிதுன்(வயது 4), லட்சன்(8 மாதம்) என இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் லட்சன், அண்டாவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பான விசாரணையில் தன்னுடைய குழந்தை தவறி அண்டாவில் விழுந்து விட்டதாக கதறி அழுதார் ஜெயசித்ரா. இதனை தொடர்ந்து குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள பனங்குப்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மிதுனும் தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தான். மகனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் பொலிசில் புகார் அளித்தார்.

இதற்கிடையே ஜெயசித்ராவும் தலைமறைவாகிவிட பொலிசுக்கு சந்தேகம் வலுத்தது, எனவே தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் ஜெயசித்ராவின் செல்போனை ஆய்வு செய்தும் வருகின்றனர், கண்காணிப்பு கமெராவும் சோதனை செய்து வருவதால் விரைவில் ஜெயசித்ரா சிக்குவார் என நம்பப்படுகிறது.

காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர் : அதிர்ச்சி சம்பவம்!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை ஆசிரியரே அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்நூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சங்கர். இவர் அதே பள்ளியில் படித்த 9ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவி ஆசிரியரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கர் இன்று காலை, மது போதையில் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த மாணவியின் கழுத்தை கத்தியை கொண்டு அறுத்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வேகமாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் அங்கிருந்து தப்ப முயன்ற குற்றவாளி சங்கரை பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டுப்பிரசுர குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் கைது!!

வவுனியா மாவட்டத்தினை தளமாக கொண்டு இயங்கும் தினப்புயல் பத்திரிகையில் அலுவலக செய்தியாளர் இ.தர்சன் என்பவரை வவுனியா பொலிஸார் நேற்றையதினம் (02.11.2018) கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அவரை பார்வையிடச் சென்ற சக ஊடகவியலாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு ஊடகவியலாளர் இ.தர்சன் என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் அங்கு சென்ற போது பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆவா குழு என்ற பெயரில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்கள் தொடர்பாக அவரின் இல்லத்திலும் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை கேள்வியுள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம், இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் தடுப்பு காவலில் உள்ள ஊடகவியலாளரை சந்திப்பதற்கு சந்திப்பதற்கு அனுமதி கோரிய சமயத்தில் பொலிஸாரினால் அனுமதி மறுக்கப்பட்டது.

தடுப்புக்காவலிலுள்ள ஊடகவியலாளரிடம் சம்பவத்தை அறிவதற்கும் அவரது பக்க நியாயத்தை கேட்பதற்கும் ஊடகவியலாளர்கள் பலதடவைகள் முயற்சி செய்தும் முடியாத காரணத்தினால் நள்ளிரவு 1 மணிவரை காத்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்

குறித்த ஊடகவியாளார் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் பணியாற்றும் ஊடகத்தின் பணிப்பாளரிடம் வினவிய போது,

அண்மையில் வவுனியாவில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையில் ஆவா குழு என்ற பெயரில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை செய்திக்காக எடுத்துச் செல்லும் போது தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அவரை பார்வையிடுவதற்கு மறுப்பும் தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.

கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வியாழேந்திரன் : புளொட் இயக்கம் விளக்கம்!!

கடந்த சில தினங்களாக வெளிநாடுகளுக்கு விஐயத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளை கொண்டிருந்த ச.வியாழேந்திரன், நாடு திரும்பியதும் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் எம்மால் புரிந்துகொள்ள முடியாதவையாகவுள்ளன என புளொட் அமைப்பின் நிர்வாகச் செயலாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்துள்ளதோடு, அமைச்சுப் பொறுப்பையும் பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பில் புளொட் அமைப்பின் சார்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், இன்று நடந்த விடயங்கள் யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை எம்மால் நம்பமுடியாமல் உள்ளது.

அண்மைய நாட்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது இன்றைய தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.

வியாழேந்திரன் அவர்கள் எமது கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட போதிலும்கூட, அவரது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் எவற்றிலும் கட்சி இற்றைவரையிலும் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததில்லை. மாறாக அவரை உற்சாகப்படுத்தியும் பூரண சுதந்திரம் வழங்கியுமே வந்திருக்கின்றது.

எமது கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் வியாழேந்திரன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே அவரது இன்றைய நடவடிக்கைகளை நாம் காண்கின்றோம்.

கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டிருக்கும் ச.வியாழேந்திரன்மீது விரைவில் கட்சியின் மத்திய குழுவினூடாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளோம்.

மேலும், எவரும் எதிர்பார்த்திராத வகையில் அமைந்த அவரது செயற்பாடு, கட்சியின் அங்கத்தவர்களும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களும், அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மீது பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் : ஆத்திரத்தில் குடும்பத்தார் செய்த கொடுஞ்செயல்!!

 

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் காதலித்த இளம்பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞரை பெண்ணின் வீட்டார் உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை முயற்சியில் அந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

திருமண வயது எட்டாத இளம்பெண்ணை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறிய அந்த இளைஞரை, திருமணம் குறித்து கலந்தாலோசிக்க பெண்ணின் வீட்டார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனை நம்பி வந்த இளைஞரை பெண்ணின் வீட்டார் உயிருடன் குளுத்தியதாக கூறப்படுகிறது. எத்வா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில் நரேந்திர ஷாக்கியா என்ற இளைஞரையே குறித்த பெண் வீட்டார் கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பெண் வீட்டாரை பொலிசார் கைது செய்து வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 22 வயதான நரேந்திர ஷாக்கியாவும் அவரது காதலியும் மாயமானதாக தெரியவந்தது.
இதனையடுத்து பெண்ணின் வீட்டார் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இருவரும் திரும்பி வந்தால் திருமணம் நடத்துவது தொடர்பில் கலந்தாலோசிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நேற்று மாலை பெண்ணின் குடியிருப்புக்கு நரேந்திரா தனியாக சென்றுள்ளார். ஒருகட்டத்தில் பெண்ணுக்கு திருமண வயது எட்டவில்லை எனவும், உடனையே அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் செய்து தருவதில் உறுதியான முடிவு எட்டும்வரை பெண்ணை திருப்பி அனுப்ப முடியாது என நரேந்திரா அப்போது தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் நரேந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பெண்ணை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என கேட்டு தாக்கிய நிலையில், அவர் அதை வெளிப்படுத்த மறுத்துள்ளார்.
இந்த நிலையில் இளைஞர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனையடுத்து உடல் முழுவதும் தீ எரிய அங்கிருந்து வெளியேறி தெருவில் ஓடிய இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருவருக்கு மரணதண்டனை!!

கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முல்லைத்தீவு பகுதியில் அரசியல்கட்சியின் அலுவலகம் ஒன்றில் ஒரேகட்சியை சேர்ந்தவர்களிற்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் இராசையா சுரேஸ் என்பவரை தாக்கி கொலை செய்தகுற்றத்தில் எதிரிகளாக பார்க்கப்பட்ட இருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றால் மரணதண்டனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் மேலதிகவிசாரணைகளிற்காக 2017ம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஒன்பதாம் திகதி சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் வவுனியாமேல் நீதிமன்றில் எதிரிகளிற்கெதிரான குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல்செய்யபட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வழக்கில் முதலாம் எதிரியாக வள்ளிபுணம் பகுதியை சேர்ந்த காளிமுத்து சிவராசாவும் இரண்டாம் எதிரியாக முனியாண்டி தாயாபரனும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

அவ்விருவரையும் குற்றவாளியாக அவதானித்த நீதிமன்று அவர்களிற்கு மரணதண்டனை வழங்கி தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடுநர்தரப்பில் அரசசட்டவாதி ஜ.எம்.எம் பாகில் வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.

ஏன் உயிரோடு இருக்கின்றாய் செத்துவிடு என்று சொன்னார்கள் : இதயத்தில் ஈரம்பாய்ச்சிய காதல் கதை!!

ஒரு ஆணை இரண்டு ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்து, தற்போது அந்த காதல் கைகூடிய சந்தோஷத்தில் இருக்கிறார் திருநங்கை ஶ்ரீஜா.

மூர்த்தி என்ற பெயருடன் ஆணாக வலம் வந்த எனக்கு, என்னுடைய சின்ன வயசிலேயே உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணரமுடிந்தது. அம்மாதான் கஷ்டப்பட்டு என்னையும் என் தம்பியையும் படிக்கவச்சாங்க. என் நடவடிக்கையைப் பார்த்து எனது பள்ளியில் அனைவரும் என்னை கிண்டல் செய்தார்கள்.

சொந்தக்காரங்க `நீ ஏன் உசுரோடு இருக்கே. செத்துருனு சொன்னாங்க. ஆனால், அந்த நேரத்திலும் என் அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார். என் அம்மாகிட்ட `நான் பொண்ணா மாறணும்மா. என்னைப் புரிஞ்சுக்கோனு சொன்னேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சதும், அம்மாவே எனக்கு அறுவை சிகிச்சைக்கு செய்வதற்கு உதவி செய்தார்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஶ்ரீஜா என எனது பெயரை மாற்றிக்கொண்டேன். ஒரு நாள் குலசை திருவிழாவுக்கு எனது தோழியுடன் சேர்ந்து போயிருந்தேன். அங்கே என்னோடு படிச்ச விஜய், என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசினான். அப்போது, விஜய்யின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவனது நண்பன் அருண், நீங்க பொண்ணு மாதிரி அழகாய் இருக்கீங்க என கூறினார். நான் சிரித்துக்கொண்டே வந்துவிட்டேன்.

அன்று தான் அருணை நான் முதன் முதலாக பார்த்தது. பிறகு, எனது நண்பர் விஜய்யின் கடைதிறப்பு விழாவுக்கு சென்றேன், அப்போது அங்கு அருணும் இருந்தார். மீண்டும் சந்தித்தபோது ஒருவருக்கொருவர் நன்றாக பேசினோம். அன்றிலிருந்து நண்பர்களாக பழகினோம்.

ஒருநாள், `உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார். என்னால் நம்பவே முடியலை. என்னை ஏமாற்றுகிறார் என நினைத்தேன். நீ ஒழுங்காப் படி. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார். நானும் அப்படியே நடந்துக்கிட்டேன். அலைஞ்சு திரிஞ்சு போராடி என் சான்றிதழ்களில் திருநங்கைன்னு மாத்தினோம்.

தற்போது, தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். அருணின் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனக்கு நீதான் முக்கியம். உன்னைவிட்டுப் போகமாட்டேன்னு சொன்னார். என்னாலும் அவர் இல்லாம இருக்க முடியாது. ரெண்டு பேரும் பேசி திருமணம் செஞ்சுக்க முடிவு பண்ணி பல போராட்டங்களுக்கு பிறகு பதிவு திருமணம் செய்துகொண்டோம்.

இனியாவது என் மாமா வீட்டுல எங்களை ஏத்துப்பாங்கன்னு நம்பறேன். எங்களுக்குக் குழந்தை வேணும்னு தோணுச்சுன்னா, மாமாவின் சொந்தத்தில் குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம். இல்லைன்னா, அவருக்கு நான் குழந்தை எனக்கு அவர் குழந்தைன்னு மகிழ்ச்சியாக இருப்போம் என கூறுகிறார் ஶ்ரீஜா.

விமான நிலையத்திலிருந்து யாழ். நோக்கிச் சென்ற வான் மோதி தாய் பலி!!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் லிந்தவெவ பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் மீது வான் மோதியதில் 27 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதாக நொச்சியகம பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்தவெவ பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஸிலா மதுசரனி திஸநாயக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவர்.

தாயும், மகளும் தங்களின் லிந்தவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்களது வீட்டுக்கு முன்னால் முற்றத்தில் இருக்கும்போது அதிக வேகத்தில் வந்த வான் வீதியிலிருந்து விலகி தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வயதும் ஒரு மாதமுமான மகளுடன் தனது மூத்த மகள் பாலர் பாடசலைவிட்டு வரும் மட்டும் வீட்டுக்கு முன்னால் காத்துநின்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக வந்து பாதையிலிருந்து விலகிய வான் வீதியின் அருகிலிருந்த கொங்கிரீட் தூணில் மோதி, தாய் மற்றும் மகள் மீதும் மோதியதுடன் வீட்டின் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமுற்ற ஒன்றரை வயது குழந்தை சுவருக்கு கீழே கிடந்ததாகவும் பிரதேசவாசிகள் அதனை அகற்றி குழந்தையைக் காப்பாற்றி வைத்தியசலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வான் வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதியிரை விமான நிலையத்திலிருந்து ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும், வாகனத்தின் சாரதி மற்றும் தம்பதியினர் சிறு காயத்திற்குள்ளாகி நொச்சியாகமம் வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நொச்சியகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தாய் உயிரிழந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றரை வயதான குழந்தை அனுராதபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சாதிவெறி பிடித்த மாமியார் : டாக்டர் மருமகள் எடுத்த அதிரடி முடிவு!!

ஆந்திராவில் மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் இவரை பெற்றோர்கள் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள். மேலும் சீனாவுக்கு மேற்படிப்புக்காகவும் அனுப்பி வைத்தார்கள். படிக்க போன இடத்தில் கார்த்திக் என்பவரை காதல் செய்து கடந்த 2015ம் ஆண்டும் திருமணம் செய்துக்கொண்டனர்.

ஆசை கணவனுடன் வாழ்ந்து வந்த ஜெயஸ்ரீ, இரு தினங்களுக்கு முன்பு நிறைய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை குறித்து பொலிசார் விசாரணயை தொடர்ந்தனர்.

இது குறித்த அந்த பெண்ணின் தந்தை தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு அளித்த பேட்டியில், அதில், “லவ் பண்றேன்னு வந்து நின்னப்பவோ நாங்க ஒத்துக்கல… வேண்டாம்னு சொன்னோம். ஆனாலும் ஜெயஸ்ரீ பிடிவாதமாகவே இருந்ததால், அவள் ஆசைக்கு விட்டுவிட்டோம். வரதட்சணையாக 25 லட்சம் ரூபாய், 45 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி என அள்ளி கொடுத்தோம்.
போன வருஷம் வரை ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கார்த்திக் திரும்பவும் வரதட்சணை பணம் கேட்டு என்கிட்டே மகளை அனுப்பி வைச்சுட்டே இருப்பார். நானும் முடிந்தவரை கேட்ட பணத்தை கொடுத்திட்டேதான் இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் பணம் தர முடியாமல் நிறுத்திவிடவும் அப்போதான் பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. இதில் மாமியாரும் சேர்ந்து கொண்டுள்ளார்.

வெடிக்கும்போதெல்லாம் சாதி பெயரை சொல்லி மகளை அதிகமாக துன்புறுத்தி இருக்காங்க.. இதுபற்றி பொலிசாரிடம் வரதட்சணை கொடுமை, சாதியக் கொடுமை அடிப்படையில் புகார் அளித்தேன்” என்றார். தந்தை அளித்த புகாரின்பேரில் பொலிசார் உடனடியாக கார்த்திக்கை கைது செய்து இருக்கிறார்கள்.

வவுனியாவில் மழைக்காலத்தில் வீதிகள் புனரமைப்பு : மாணவர்கள் அவதி!!

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் செல்லும் பிரதான வீதி தற்போதைய மழைகாலத்தில் புனரமைப்புப்பணிகள் இடம்பெற்று வருவதால் பாடசாலை மாணவர்களுக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைச்சீருடைகளும் பழுதடையும் நிலையும் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து நாகர்இலுப்பைக்குளம் செல்லும் பிரதான வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் தற்போது மழையுடனான கால நிலையில் புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இதனால் அவ்வீதியூடாக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றதுடன் மாணவர்கள் இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாடசாலைச்சீருடைகள் பழுதடையும் நிலை காணப்படுகின்றதுடன் மழைகாலத்தில் சீருடைகள் மேலும் வீதிக்கு போடப்பட்டுள்ள கிரவல் மண்ணினால் பயன்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்றதுடன் அவ்வீதியால் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் தெற்குப்பிரதேச சபையினரின் பூரண கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள பகுதியில் வீதி அபிவிருத்தித்திணைக்களத்தின் புனரமைப்புப்பணியினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.