வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (19.08.2018) ஞாயிறு இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவில்குளம்6 ஆம் ஒழுங்கை பகுதியில் உள்ள தனது வீட்டில் இளைஞர் ஒருவர் ஞாயிறு இரவு 12 மணியளவில் தனது அறையினுள் போர்வையைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உறவினர் களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னமே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் க.கதிர்செல்வன் (வயது 30) என்ற இளைஞனே மரணமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், அவர்களின் 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொண்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பெண்ணை எதிர்வரும் 23ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – குடத்தனை பகுதியில் வீடு கட்டுவதற்காக தம்பதியினர், பெண் ஒருவரிடம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 இலட்சம் ரூபாயை கடனாக பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவர்கள் 32,000 ரூபா வட்டி கட்டி வந்துள்ளதுடன், ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாமல் போய்விட்ட நிலையில் இவர்களுடைய 11 வயது மகள் மீது குறித்த பெண் தாக்குதல் நடத்தியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் பெற்றோர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தாக்குதல் மேற்கொண்ட பெண் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகர் பிரதேசத்தில் சிறிய லொறி ஒன்றில் வந்த நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்தார்.
அதே பகுதியை சேர்ந்த 54 வயதான நடராஜா தேவராஜா என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
காரைநகர் வீதியில் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அதற்கு எதிர்பக்கத்தில் இருந்து வந்த சிறிய லொறியில் பயணித்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் மின்விளக்கு வெளிச்சத்தை குறைத்து ஓட்டுமாறு திட்டியுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியில் இருந்தவர்களையும் திட்டியவாறு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனால் லொறியில் பயணித்தவர்கள் கோபமடைந்த நிலையில், மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்று அவரை மிக கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
சம்பவத்தை அவதானித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உறவினர் மோதலை தடுப்பதற்கு முயற்சித்துள்ளார். தடுக்க வந்தவரையும் லொறியில் வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
தாக்குதலினால் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மோதலை தடுக்க தலையிட்டவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரைநகரை சேர்ந்த 54 வயதான நடராஜா தேவராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். சுப்ரமனியம் ஜீவனந்தன் என்பவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகல மாவட்டத்தில் தமணவில – செவனகல பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய இரு இளைஞர்களை நேற்று இரவு செவனகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த இளைஞர்கள் அங்கு சென்று சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர் வீட்டிற்கு வந்த பிறகு சிறுமி தனக்கு நேர்ந்த விபரீதத்தை கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் செவனகல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், 18 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக செவனகல பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கொக்குப்படையான், சிலாபத்துறை கிராமத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மனைவி காணாமல்போயுள்ளதாக தெரிவித்து கணவர் கடந்த 6ஆம் திகதி இரவு சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஏ.லூர்து சுறாங்கனி (வயது 33) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே காணாமல்போயுள்ளதாக கணவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொக்குப்படையான் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து முருங்கன் வைத்தியசாலைக்கு குறித்த பெண் சென்றுள்ளார்.
எனினும் இதன் பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் கணவர் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் காணாமல்போயுள்ள தனது மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 077 6353945 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கணவர் அன்ரனி ஜெயராஜ் கோரியுள்ளார்.
வவுனியா நெடுங்கேணியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பிறாடோ வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களின்றி உயிர்தப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு கொழும்பிலிருந்து வைத்தியர் ஒருவரை முல்லைத்தீவில் இறக்கிவிட்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பும்போது நெடுங்கேணி சன்னாசிப்பரந்தன் பாலத்தில் பிறாடோ வாகனம் வீதியைவிட்டு விலகி பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துள்குள்ளாகியுள்ளது. இதன்போது எவ்வித காயங்களும் இன்றி சாரதி அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.
நித்திரை கலக்கமே இவ்விபத்திற்குக்காரணமாக இருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thomas Beatie (44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநம்பியானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை முதலான உள்ளுறுப்புகளை அவர் அகற்றவில்லை.
இதனால் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கருவுற்ற அவர் இது வரை மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளதோடு, தற்போது நான்காவது முறையாக கருவுற்றிருக்கிறார்.
முன் தள்ளிய வயிற்றுடன் அவர் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
என்ன, பிரசவம் மட்டும் அறுவை சிகிச்சை முறையில்தான் நடக்கும், என் உடலை நானே சேதப்படுத்த விரும்பவில்லை என்று வேடிக்கையாகக் கூறுகிறார் Thomas Beatie.
இரண்டு வயது குழந்தையை வாஷிங் மிஷினில் அடைத்து வைக்கப்பட்டதால், அந்த குழந்தையை கதவை திறக்கும் படி கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலாந்தைச் சேர்ந்தவர் Zaneta D(21) இவரது கணவர் அங்கிருக்கும் Radom பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் Kacper என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் நபர், வாஷிங் மிஷினுள் அடைத்து வைத்து துன்பப்படுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தை திறக்கும் படி கூறி, வாஷிங் மிஷினின் கண்ணாடியை கையை வைத்து அழுத்தியுள்ளார்.
இது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலானதால், இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த Mateusz S என்ற 19 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண் இருப்பது போன்று வெளியான புகைப்படம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா அரசு சார்பில் ஆகஸ்ட் 15-ம் திகதி செய்தித்தாள்களில் வெளியான விளம்பரத்தில் விவசாயக் காப்பீடு மற்றும் கண் ஆய்வு நிகழ்ச்சி திட்டங்கள் குறித்து விளம்பரம் வந்தது.
அந்த விளம்பரத்தில், பத்மா என்ற பெண் அவரின் குழந்தை மற்றும் கணவருடன் இருப்பதுபோன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில், பத்மாவின் கணவர் நாயாகுலா நாகராஜூக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பத்மாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பேசிய பத்மா, குடும்பத்துடன் விளம்பரத்துக்குப் புகைப்படம் கொடுத்தால், லோன் வாங்கித் தருவதாக சிலர் எங்களைத் தொடர்புகொண்டனர். திடீரென்று, நாளிதழ்களில் எங்களுடைய குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதுபோல விளம்பரங்கள் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
எங்களிடம் சொந்தமாக நிலம் கிடையாது. நாங்கள் எப்படி, விவசாயக் காப்பீடு பெற முடியும். என்னுடைய கணவரைப் போல, வேறு ஒருத்தரின் புகைப்படத்தைப் போட்டது மிகவும் மோசமான ஒன்று.
அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், எங்கள் குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய தெலுங்கானா மக்கள் தொடர்பு அதிகாரி, விவகாரம் தொடர்பாக விளம்பர நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டில் காணாத மழை காரணமாக கடவுளின் தேசம் இன்று கண்ணீரில் மிதக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துபாய், கட்டார் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. கேரளாவில் அதிக பாதிப்பை சந்தித்திருக்கும் திருச்சூர் மாவட்டத்தின் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த கிரேஸி, வெள்ளத்திலிருந்து தப்பித்த `திக் திக்’ தருணங்களைப் பகிர்கிறார்.
அவர் கூறியதாவது, எங்கள் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு, பூரான் என விஷ ஜந்துகள் வந்துவிட்டன.
வெள்ளம் பெருமளவில் ஊரைச் சூழ்ந்துவிட்டது. விடிய விடிய மொட்டை மாடியில் மழையில் நனைந்தவாறே நின்றிருந்தோம்.
குளிரில் என் குழந்தைகள் நடுங்கினர். மழைநீரே குடிநீரானது. என்னுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு நாப்கின் இல்லாததால், நீருடன் உதிரமும் சென்றுகொண்டிருந்தது. வலியில் அந்தப் பெண் துடித்த நிகழ்வை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை,
கயிற்றில் தொங்கியபடி ஒரு வீரர் எங்களை நெருங்கி வந்து மீட்டார். சிறிது நேரத்தில் எங்களை அருகிலுள்ள ஒரு தேவாலயத்தில் இறக்கிவிட்டார்கள். முதலில் கழிவறைக்கு ஓடி சிறுநீர் கழித்தோம். அப்போதுதான் வயிற்று வலியே குறைந்தது. பிறகுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டோம் என கூறியுள்ளார்.
பிரபல மலையாள திரைப்பட நடிகரான ராஜீவ் பிள்ளை, தன்னுடைய திருமண வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு, மீட்பு பணியில் இறங்கியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாளப் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருபவர் ராஜீவ் பிள்ளை. இவர் தமிழில் விஜய நடிப்பில் உருவான தலைவா, விஷால் நடிப்பில் உருவான ஆம்பள போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவரது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கேரளாவை பெருமழை வெள்ளம் புரட்டிப்போட, தற்போது திருமண வேலைகளை நிறுத்தி மீட்பு பணிகளில் இறங்கியுள்ளார்.
இவர் தன் வீடு இருக்கும் பகுதியில் தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு, அருகிலிருக்கும் நிவாரண முகாம்களில் சேர்க்கும் பணியை கடந்த மூன்று தினங்களாக செய்து வருகிறார்.
மழை ஆரம்பித்த சமயத்தில் தனது திருமணத்தை எளிமையாக நடத்திவிட வேண்டும் என நினைத்தாராம். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் வெறும் பத்து பேர் முன்னைலையில் தாலிகட்டும் சடங்கை மட்டும் நடத்தி, திருமணத்தை இன்னும் எளிமையாக நடத்த ராஜீவ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சான்றிதழ்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா தற்போது தொடர் மழையால் பெருகிய கடும் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பெருமளவிலான சேதத்தை சந்தித்திருக்கிறது. 370-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த இயற்கை சீற்றத்திற்கு பலியாகி இருக்கின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் இந்த வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வெள்ளத்தின் போது கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கைலாஷ்(19) என்ற மாணவனும், அவரது குடும்பத்தினரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது வெள்ளம் வடிந்ததை அடுத்து கைலாஷ் தனது வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அங்கு அவரது 12-ஆம் வகுப்பு சான்றிதழை தேடிய அவருக்கு அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவரம் தெரிந்திருக்கிறது.
கஷ்டப்பட்டு படித்து வாங்கிய சான்றிதழ் பறிபோனதை அறிந்து விரக்தியின் உச்சத்துக்கே சென்ற கைலாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
வெளியில் சென்றிருந்த கைலாஷின் பெற்றோர் வீடு திரும்பிய போது தங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்ததை அறிந்து துடி துடித்து போயிருக்கின்றனர்.
கூலித்தொழிலாளியான கைலாஷின் அப்பா கைலாஷ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் .கைலாஷின் இந்த நடவடிக்கை யாரும் எதிர்பாராத ஒன்று என்பதால் அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகை சுஜாதா குமார் புற்றுநோய் தாக்கத்தால் உயிரிழந்தார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.
இந்நிலையில் நோய் முற்றியதால், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அனைத்து உடல் உறுப்புகளும் செயல் இழந்து விட்டதால் உயிரிழந்தார்.
மறைந்த சுஜாதா குமாருக்கு ஏராளமான திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித் துள்ளனர். இவர், ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அவரது சகோதரியாக நடித்திருந்தார், மற்றும் விளம்பரங்கள், தொலைக்காட்சிகள் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எம்மை பாரம்பரியத்தை பாதுகாக்க ஒன்றிணையுமாறு வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலய செயலாளர் து.தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வவுனியா வடக்கு ஒலுமடு வெடுங்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தின் செயலாளர் து. தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் தமிழர் தொன்மையின் அடையாளமான வெடுங்குநாறி மலை மற்றும் ஆதிசிவன் ஆலய மீட்பு போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தமிழர்கள் தனித்துவமான கலை கலாசார பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.
யுத்தம் மற்றும் இதன் தாக்கத்தில் இருந்தும் மீள தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது காலாசாhர பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப்பாதுகாத்து வருகின்ற நிலையில் பேரினவாத சக்திகளின் எதேச்சதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இவ் வகையிலேயே 200 வருடங்களுக்கும் மேலாக எமது பிரதேசத்து மக்களால் வழிபாடுகளில் ஈடுபட்டுவரப்படும் வெடுங்குநாறிமலையில் உள்ள ஆசி சிவன் ஆலயத்திற்கும் ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
வெடுங்குநாறிமலை என்பது நாகர் காலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க கூடிய ஒரு விடயமாகவும் அதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதனையும் தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் அப்பகுதி மக்களால் இவ் ஆலயப்பகுதி தெய்வீக பிரதேசமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந் நிலையில் ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இப் பிரதேசத்தில் உள்ளவர்களால் இங்குள்ள ஆதி விக்கிரகங்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஆதி சிவனுக்கும் உமை அம்மைக்கும் பயபக்தியுடனும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சென்று வழிபாடுகளை 5 தலைமுறைகள் கடந்தும் பல்லாண்டு காலமாக செய்துவரும் நிலையில் இன்று அதனை தொல்லியலுக்குரிய இடமாக ஆக்கிரமித்துக்கொள்ள இலங்கை தொல்லியல் திணைக்களம் முனைப்புக்காட்டி வருகின்றது.
தமிழர்களது மரபுசார்ந்த பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி அதனை பாதுகாப்பதாக தெரிவித்து பௌத்த மேலாதிக்க சிந்தனைகொண்டு பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளதனை கிழக்கில் கன்னியா வென்னீரூறிலும் தமிழர் வழிபாட்டு இடமான கதிர்காமத்திலும் நாம் கண்டு வருகின்றோம்.
இந் நிலை வடக்கில் உள்ள வெடுங்குநாறி மலைக்கு ஏற்படக்கூடாது என்பதில் வடபுலத்து தமிழர்கள் உணர்ந்து தலைப்பட வேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே நாளை செவ்வாய்க்கிழமை (21.08.2018) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு இடம்பெறும் தமிழர் அடையாளமான வெடுங்குநாறி மலை மற்றும் ஆதி சிவன் ஆலய மீட்பு போராட்டத்தில் கட்சி பேதமின்றியும் மத பேதங்களை களைந்தும் தமிழர்களின் அடையாளத்தினை மீட்க ஒன்றிணைந்து வாருங்கள் என அனைவரையும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் கோரி நிற்கின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொது கூட்டம் நேற்று (19.08) மாலை 3 மணியளவில் ஆலய முன்றலில் தர்மகத்தா அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் தலைமையில் பிரதேச செயலாளர் கா.உதயராசா , கிராம சேவகர், வவுனியா வர்த்தக சங்க தலைவர் ச.சுஜன், மற்றும் பொது சபை உறுப்பினர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் பொற்கோவில் ஆரம்பிக்கப்பட்ட முக்கிய நோக்கங்களில் முதன்மையானதான வறிய மக்களின் கல்வி தரத்தை உயர்த்துதல் மற்றும் வறிய மக்களின் மருத்துவ உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளிற்கான அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.
இவ் அறக்கட்டளையானது அரசர்பதி பொற்கோவில் அறக்கட்டளை எனப் பெயரிடப்பட்டு வறிய மக்களின் கல்வியை தொடர்வதற்காகவும், அனைவருக்கும் கல்வி என்ற தொனிப்பொருளுடன் இயங்கும் எனவும் வறிய மக்களிற்கான மருத்துவ உதவிகளை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கைகளையும் இவ் அறக்கட்டளையினூடாக மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அரசர்பதி பொற்கோவில் அறக்கட்டளையின் தலைவர் அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் தெரிவித்தார்.
இவ் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக வி.குணரட்ணம் (தர்மகத்தா பொற்கோவில்), கா.உதயராசா (வவுனியா பிரதேச செயலாளர்), ச.சுஜன் (வர்த்தக சங்க தலைவர்), கே.சிதம்பரநாதன் (முன்னாள் கல்வியியல் கல்லூரி பீடாதிபதி) , தயாபரன் (சட்டத்தரணி), மதுரகன் (வைத்தியர்), ஏ.அம்பிகைபாகன் (வர்த்தக சங்க செயலாளர்), எஸ்.ஜனார்த்தனன் (ஐ.எஸ்.டி), ஆர்.சிவாநந்தன் (வூஸ்க்), எம்.விஜயகாந்தன் (கீதா ஸ்டிகர்) ஆகியோரும் மற்றும் பிரித்தானியாவிலிருந்து பி.ஸ்ரீராஜன், எம்.குருநாதன் (குரு) டைமன் சீ பூட்), விஷ்ணுஜீனோ (வைத்தியர்), பிரான்சிலிருந்து எஸ்.கோபாலகிருஸ்ணன் (வெஷ்கோ கொம்பனி), ஜேர்மன் வி.குகநீதன் (றைவ் & ஸ்ரைல்), கனடாவிலிருந்து `யோசப் ஜெயராஜ் (ஆரத்தி நகையகம்) ஆகியோரும் அந்தந்த நாடுகளில் இருந்து செயற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை காலமும் அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவிலூடாக இடம்பெற்ற சமூக சேவைகள் தொடர்ந்தும் அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவிலூடாக இடம்பெற்ற சமூக சேவைகள் தொடர்ந்தும் அரசர்பதி பொற்கோவில் அறக்கட்டளையினூடாக கண்ணகை அம்மனின் அருளோடு மேலும் சிறப்பாக இடம்பெறும் என கோவிலின் அறக்கட்டளையின் தலைவர் அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (20.08.2018) மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியூடாக மோட்டார் சைக்கிலில் சென்ற இரு பெண் அரச உத்தியோகத்தர்கள் வைரவப்புளியங்குளம் 8ம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் அதே வேகமாக வந்த மோட்டார் சைக்கில் அரச உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து இடம்பெற்ற சமயத்தில் அங்கிருந்த நபரொருவர் போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய சமயத்தில் மோட்டார் சைக்கில் விபத்துக்கு காரணமாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிலை எடுத்துச் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிலின் இலக்கத்தினை வைத்து விபத்துக்கு காரணமான இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீதியில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதுடன் பல தடவைகள் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் இப் பகுதியில் பொலிஸ் காவலரணை அமைக்குமாறு தெரிவித்தும் பொலிஸார் அசமந்த போக்காகவே செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.