இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து : பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்!!

கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. அன்னையர் தினமான நேற்று பிள்ளையை உயிரை காப்பாற்ற குறித்த தாய் போராடியமை குறித்து அதிகளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் தாய் – தந்தை உயிரிழந்த நிலையில் 3 பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மீரியபெத்த பகுதியில் இருந்து கொஸ்லந்த பிரதேசத்தில் உள்ள பெண்ணின் சகோதரனின் வீட்டிற்கு சென்ற மீண்டும் கண்டி செல்வதற்காக இந்த பேருந்தில் குறித்த குடும்பத்தினர் ஏறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் 3 பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பிள்ளைகள் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்திருந்த கணவனும் உயிரிழந்துள்ளார். 16 மற்றும் 10 வயதுடைய பிள்ளைகளும் 9 மாத குழந்தையுமே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் 9 மாத பெண் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு பல மணி நேரம் போராடிய பெண் நேற்று மாலை உயிரிழந்தார்.

நேற்று நடந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கோர விபத்தில் நடந்தது என்ன : நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சித் தகவல்!!

கொத்மலையில் நேற்று சம்பவித்த கோர விபத்தில் 22 உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில், அது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய விபத்தாக மாறியுள்ளது.

இந்நிலையில் விபத்தின் போது உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு பலரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சம்பவத்தின் போது அங்கிருந்த மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மற்றும் அம்புலன்ஸ் சேவைக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும், பல மணி நேரம் கடந்த நிலையிலேயே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்படும் காட்சிகள், விபத்து ஏற்பட்டு பலர் பேருந்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர் கூடிய மக்கள் கூட்டமாகும்.

இறுதிக்கட்டத்திலேயே பொலிஸார் உட்பட பலர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தகவல் கொடுத்த உடன் விரைந்து செயற்பட்டிருந்தால் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியும்.

அதிகாலை வேளையில் பேருந்து கவிழ்ந்து வீழ்வதை கண்ட சிலர் அபாய குரல் எழுப்பிய நிலையில், அந்தப் பகுதியிலுள்ள மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் பகுதி இளைஞர்கள் விரைந்து செயற்பட்டு குழந்தைகளை முதலில் காப்பாற்றியுள்ளனர். இதன்போது காயப்பட்ட நபர்களும் இரத்தம் தோய்ந்த நிலையிலும் பலரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பேருந்தில் 70இற்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலர் முழுமையாக மீட்பு பணி நிறைவடையும் வரை அங்கிருந்து தமது கடமைகளை செய்துள்ளனர். பல இளைஞர்கள், உணவு மற்றும் தண்ணீர் கூட அருந்தவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில உடல்கள் சிறதறுண்ட நிலையில் அவற்றினை பலர் கைகளால் அள்ளி செல்லும் காட்சிகள் கடும் வேதனையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இறுதிக்கட்டத்தில் பலர் அங்கு கூடிய நிலையில் பிரபலம் தேடிக்கொள்ளும் வகையில் செயற்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கிராம மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளளனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் இல்லை. அவசரத்திற்கு பனடோல் கூட அங்கு பெற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான நிலையில் உயிருக்கு ஆபத்தானவர்களை எப்படி அங்கு அனுப்புவது என்பது பெரும் நெருக்கடி நிலையாக இருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோடீஸ்வரரின் வீட்டில் கைவரிசை : தங்க பிஸ்கட்டுக்காக 22 கோடியை இழந்த சோகம்!!

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, கண்டி குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம், கோடீஸ்வரர் வர்த்தகரின் வீட்டுக்குள் வைத்து, மே 8 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இந்த தொழிலதிபருக்கு இருபத்தி நான்கு காரட் தங்க பிஸ்கட்டை கொடுத்து அதன் தரத்தை சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, தொழிலதிபர் அதை ஆய்வு செய்தபோது, ​​அது உண்மையான இருபத்தி நான்கு கேரட் தங்கம் என்பது தெரியவந்தது.

பின்னர் சந்தேக நபர்கள் தங்களிடம் இதுபோன்ற 15 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுகள் இருப்பதாகவும், அவற்றுக்கு 220 மில்லியன் ரூபாய் (22 கோடி) தேவைப்படுவதாகவும் தொழிலதிபரிடம் தெரிவித்தனர்.

அதன்படி, தொழிலதிபர் தனது மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜீப்பையும், வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் நகைகளையும் அடமானம் வைத்து, மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இருபத்தி இரண்டு மில்லியன் ரூபாய்களை கடன் வாங்கியுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபடி, 8 ஆம் திகதி, 8 நபர்கள் ஒரு வேனில் வந்து, தொழிலதிபரின் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களை கவனமாக வேறொரு வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, தொழிலதிபரிடம் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த கண்டி குற்ற விசாரணைப் பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு : பளை பகுதியில் சம்பவம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை (12.05) காலை 7.30 மணியளவில் பளை பகுதியில் இடம்பெற்றது.

யாழில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வந்த புகையிரதம், பளை சந்தியில் ஓர் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம்!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற ஒரு குழுவினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துக்கு வழிவிட முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு நல்லிணக்கத்தை வலியுறுத்தி தன்சல்!!

வெசாக் தினத்தை முன்னிட்டு வுவனியாவில் நல்லிணக்தை வலியுறுத்தி இன்று(12) தன்சல் வழங்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் மூன்றுமுறிப்பு பிள்ளையார் ஆலயம் அருகாமையில் வைத்து இந்து மதகுருமார்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து இதனை வழங்கியிருந்தனர்.

தென்பகுதியில் இருந்து வடக்கிற்கு வரும் பௌத்த சகோதர, சகோதரிகளுக்கு இதன்போது குளிர்பானம், பிஸ்கட் என்பவற்றை வழங்கி தமது நலலிணக்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

தமிழர் பகுதியில் 25 வயது இளம்பெண் கைது : பொலிஸார் வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடு ஒன்றை நேற்று (11) இரவு முற்றுகையிட்ட போது 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை சம்பவ தினமான நேற்று இரவு பொலிஸார் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.

இதன் போது போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியான பெண்ணிடம் இருந்து 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் என்று நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அவரது உறவினர்கள் 4 பேர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில்

ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் உறவை முறித்த காதலி : மகளின் காதலனுக்கு தந்தை செய்த கொடூரம்!!

பதுளை – மஹியங்கனை, யல்வெல பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (11.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பதுளை , ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய காதலனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலைசெய்யப்பட்டவர் சந்தேக நபரின் மகளுடன் நீண்ட நாட்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட சந்தேக நபரான தந்தை தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேக நபரின் மகள் தனது காதல் உறவை முறித்துக்கொண்டு வேலை நிமித்தம் கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த காதலன் நேற்று சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று சந்தேக நபரை பொல்லால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சந்தேக நபரான தந்தை, மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து 57 வயதுடைய சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விடை கொடுத்தார் விராட் கோலி!!

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கட்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.

“இதிலிருந்து நான் விலகுவது எளிதானது அல்ல – ஆனால் அது சரியான முடிவாக உணர்கிறது. நான் அதற்காக என்னிடம் இருந்த அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன்,

மேலும் நான் எதிர்பார்த்ததை விட இது எனக்கு மிக அதிகமாகவே திருப்பித் தந்துள்ளது,” என்று கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

“விளையாட்டுக்காகவும், நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காகவும், என்னைப் முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு நபருக்காகவும் – நான் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் புறப்படுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (டிசம்பரில்) மற்றும் ரோஹித் சர்மா (கடந்த வாரம்) ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து விராட்டின் ஓய்வு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறுவதைத் காட்டுகிறது.

ஒன்றுடன் ஒன்று மோதிய இரு பேருந்துகள் : நான்கு பேர் படுகாயம்!!

காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (11.05.2025) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரம்பொடையில் இடம்பெற்ற கோர விபத்து : பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!!

ரம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள், நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் : ஆசிரியை பகுதியை விட்டு தப்பியோட்டம்!!

நீர்கொழும்பில் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியை ஒருவரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியை நடத்திய தாக்குதலால் அந்த இளைஞனின் அந்தரங்க உறுப்பு சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலை நடத்திய சந்தேகத்திற்குரிய புலமைப்பரிசில் ஆசிரியை அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அவரது கணவரும் மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவரும் மேலாளரும் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரான ஆசிரியையை கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞன் கட்டான பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞனின் சகோதரி அனுப்பிய வட்ஸ்அப் செய்தியால் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்ட இளைஞன் சந்தேகத்திற்குரிய புலமைப்பரிசில் ஆசிரியையை கீழ் பணிபுரிந்த ஊழியர் என்று தெரிவிக்கப்பட்டது.

குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை தெரியுமா?

சுப கிரகமான குரு 2025 மே மாதம் 14 ஆம் திகதி பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் சில ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து நாம் இங்கு பார்ப்போம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார் குரு. இந்தப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தருவார்

ரிஷபம் : குருவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும். பதவியும் கௌரவமும் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.

சிம்மம் : குருவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு குரு நன்மை செய்வார். வேலையில் இருப்பவர்களுக்கு வேலை அழுத்தம் குறையும்.

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி மங்களகரமான பலனைத் தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கலாம். நிதி ஆதாயம் ஏற்படும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு : குருவின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நிம்மதியை தரும். நிதி ஆதாயம் ஏற்படும். முதலீட்டில் லாபம் தரும். ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும்.

வேன் – முச்சக்கரவண்டி மோதி விபத்து – ஒருவர் காயம்!!

அநுராதபுரம் – ரம்பேவ வீதியில் பரசங்கஸ்வெவ பிரதேசத்தில் 9 வது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (9.05.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

ரம்பேவையில் இருந்து பயணித்த வேன் ஒன்று, கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் காரை செலுத்தியதால் விபத்து : சாரதி பலி!!

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியில் பலுகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (09.05) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 மீற்றர் தூரத்துக்கு இலுத்திச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீடொன்றின் இரும்பு நுழைவாயில் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி பின்னர் மற்றுமொரு வீட்டின் கிணற்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு : நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்!!

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை 2025.05.01 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதில், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு,

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவதற்கான உச்ச வரம்பு எல்லையை தற்போதுள்ள 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.