தென்னிலங்கையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்!!

தென்னிலங்கையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 30 பேர் காயமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையிலும்,

பெலியத்த ஹத்போதிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் வெளிநாட்டு நாணயத்துடன் சிக்கிய தமிழ் யுவதி!!

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரங்கள் இரண்டு மற்றும் 500 ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றை திருடிச் சென்று மறைந்திருந்த பெண் குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த சிவசுந்தரம் சிவரஞ்சனி என்ற 23 வயது பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இளம் பெண் வீட்டிற்கு வேலைக்கு வந்து 4 மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 9 ஆம் திகதி விடுமுறையில் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தொழிலதிபரின் 2 பிள்ளைகள் 20 நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளனர்.

இதன் போது தந்தை தனது பிள்ளைகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த 2 மதிப்புமிக்க கைக்கடிகாரங்களை தேடியபோது, ​​அவை காணாமல் போனதைக் கண்டு, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

4 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த இளம் பெண் விடுப்பில் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்பவில்லை எனவும் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபர் காணாமல் போன கைக்கடிகாரம் மற்றும் பணத்தை திருடிவிட்டதாக தெரியவந்தது. இந்த நிலையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

250 ரூபாவை நெருங்கும் தேங்காயின் விலை!!

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாட்களில் 180 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட தேங்காயின் விலை மீண்டும் 220 ரூபா மற்றும் 240 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தையில் தேங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி : அதிவேக வீதியில் சம்பவம்!!

தெற்கு அதிவேக வீதியில் கஹத்துடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5.5 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் நேற்று (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த கார், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காருக்கு அருகில் சாரதி நின்றுக்கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த மற்றொரு கார் அவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர் தும்மோதரை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய காரின் சாரதி மற்றும் காரில் பயணித்த இருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வாகன விபத்துக் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு : மீரிகமவில் சம்பவம்!!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை அதிபர் உயிரிழப்பு!!

கந்தேகெதர – அலுகொல்ல வீதியில் சார்ணியா தோட்ட கொல்லுமண்டி பிரிவில் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் வியலுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 59 வயதுடைய அதிபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பாடசாலை அதிபர் உயிரிழந்துள்ளார். இவர் பதுளையில் இருந்து பாடசாலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பல மாணவர்கள் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி!!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை நகரில் அமைந்துள்ள கே/தெஹி/புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தப் பாடசாலையில் 4 மாணவர்கள் 3 பாடங்களிலும் ‘ஏ ‘ சித்திகளைப் பெற்று அசத்தியுள்ளனர்.

கலைப் பிரிவில் ஜெயக்குமார் ஜெரோன் மற்றும் நாகராஜா கிஷாந்தனி ஆகிய மாணவர்கள் 3 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் சிவராஜா காயத்திரி மற்றும் மஹேந்திரன் கோகிலா ஆகிய மாணவர்கள் 3 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்ற சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது,

கணிதப் பிரிவில் அன்ரன் தேவராஜன் தேனுஜன் ஏ 2பி, வரதராசா தர்சிகன் ஏபிசி, உதயகுமாரன் தினேஷ் 2பி சி, வடிவேல் விக்னேஷ் பி 2சி, கிருஷ்ணதேவன் ரவிந் பிசி எஸ், சிறிரங்கநாதன் தனுசன் 3சி சித்தியை பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் சிவபாலன் நந்தசுந்தரன் 3சி சித்தியை பெற்றுள்ளார்.

வணிகப் பிரிவுவில் அபிநயா செந்தில்வேல் 3ஏ, கிஷானி ரங்கநாதன் பி 2சி, சோபிகா இலங்கேஷ்வரன் பி 2சி, ஜருணா விஜயசிறி 3சி சித்திகளை பெற்றுள்ளனர்.

கலைப் பிரிவுவில் தனுஷா முருகையா 3ஏ, நாகைமதி தினேஷ்குமார் 2ஏ சி, சிவனியா சிறிதரன் 3பி, சந்தியா கண்ணதாசன் ஏபிசி, சிறி அருளானந்தராசா கண்ணதாசன் 2பி சி, கிஷானி யோகேந்திரன் ஏபி எஸ், ஞானேஷ்வரன் யதுசிகன் பி 2சி, சிவகாமி சிவகுமார் பி 2சி சித்திகளை பெற்றுள்ளனர்.

மேலும், பொதுப் பிரிவில் புவிதா மகேந்திரராஜா பி 2எஸ் சித்தியையும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் பவித்திரா பரிபூரணா ஆனந்தம் 2பி சி, குயின்சியா மகேஷ்வரன் 2பி சி, கஷ்வினி சுதர்சன் பி 2சி,

ஜோன் ஒலிவர் ஜெனிபா பிசி எஸ், குகனேசன் விமலன் 2சி எஸ், விஜிந்தா தேவகுமார் 3சி, அபிநயா குலேந்திரன் சி 2எஸ்சித்திகளை பெற்றுள்ளனர். பொறியியல் தொழில்நுட்ப பிரிவு அல்பேர்ட் குணசூரியர் டிலக்சன் அருள்ராஜ் ஏபிசி சித்தியை பெற்றுள்ளார்.

வவுனியா

உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி

பயிலும் சந்திரசேகரன் ருக்சிகா என்ற மாணவி 2ஏபி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அத்துடன், உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையை வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த உபைதுல்லா பாத்திமா ஹப்ஸா என்ற மாணவி 2ஏபி சித்திகளைப்

பெற்று இரண்டாம் நிலையும், சைவப்பிரகாச மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஜதுசனா என்ற மாணவி 2ஏபி சித்திகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வீட்டில் வளர்த்த நாயால் பறிபோன உயிர் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர் 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டி, மாணவனின் முகத்தில் கீறிய நிலையில், தரையில் வீழ்ந்தமையால் ஏற்பட்ட காயம் என பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

எனினும் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர், 24 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முறையாகப் போடுவதும், விலங்கு கடித்தாலோ அல்லது கீறப்பட்டாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம்!!

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதன் பின் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், கணிசமான விலை அதிகரிப்பு காரணமாக வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ளதாக பிரதான வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன இறக்குமதி துவங்கியவுடன் அதிக தேவை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவ்வாறான தேவை உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், இறக்குமதியாளர்கள் அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இறக்குமதியாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும், சில சமயங்களில் இறக்குமதி உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். எனவே, வாங்குபவர் முன்பதிவு செய்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்யத் தொடங்குவார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், வாங்குபவர் வாகனத்தை முன்பதிவு செய்த பின் வாகனத்தை விநியோகம் செய்ய சுமார் ஐந்து மாதங்கள் ஆகும்.

எனினும் புதிய வாகனங்களின் விலை உயர்வால், வாகனங்கள் வாங்குவதையோ, பயன்படுத்திய வாகனத்தை வாங்குவதையோ மக்கள் கைவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.

பாரிய மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மாலை வேளையில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இனி யாழ்ப்பாணத்தில்!!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்கும் பாரிய எதிர்பார்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முதலாம் தவணைக் காலம் பூர்த்தியாகும் முன்னதாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என்பது தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

எமது தலைமுறையினர் போர் புரிந்ததாகவும் அடுத்த தலைமுறையினருக்கு போர் இல்லாத ஓர் நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் தராதரம் பாராது குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த மாணவனின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

“நானும் என் இரண்டு மகள்களும் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தோம். என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை, நாட்டுக்கு வருமாறு தொலைபேசி அழைப்பு வந்தது.

இவ்வளவு அவசர செய்தி எனக்கு ஒருபோதும் கிடைக்காததால், பதற்றத்துடன் 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தேன். நான் வந்தபோது, ​​என் மகன் குருநாகல் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

என் மகனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை” என உயிரிழந்த மாணவன் திலின விராஜின் தாயார் கோவிந்தன் புஷ்பராணி கண்களில் கண்ணீருடன் கூறினார்.

என் மகன் கடைசியாக 14 ஆம் திகதி இறுதியாக கதைத்தார். வெளிநாட்டில் இருந்து வரும் போது சில ஆடைகளை கொண்டு வருமாறு கேட்டிருந்தார்.

அதன் பிறகு, அந்த மகனுடன் ஒரு வார்த்தை கூட பேச கிடைக்கவில்லை. என் மகனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து என் மகனை ஏன் இப்படித் தாக்கினார்கள் என்பதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனது ஒரே மகன், அவரது நண்பர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு தாய் எப்படி இவ்வளவு துயரத்தை தாங்கிக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

A/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம் : பிரதமர் வெளியிட்ட தகவல்!!

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும் இல்லை என்றாலும்,

தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழல் மற்றும் குற்றங்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.

அதனால் பலர் விரோத ஊழல் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், பயந்து குழப்பமடைந்த அரச மற்றும் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், அரசியல் ஆசீர்வாதத்துடன் இவை அனைத்தையும் தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

மருமகனுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன் : கொழும்பில் பயங்கரம்!!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் இரண்டவது கணவரும் மருமகனும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மகளுக்கு வந்த சந்தேகம்

நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இந்நிலையில் தனது தாயாரை , சிறிய தந்தையும் மருமகனும் இணைந்து அவரை கொலை செய்திருக்கலாம் என காணாமல்போன பெண்ணின் மகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போன பெண்ணின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில், வீட்டினுள் அங்கங்கே இரத்தம் சிதறி காணப்பட்டுள்ள நிலையில் அங்கு மறைத்து வைத்திருந்த கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவை பொலிஸார் சோதனையிட்டுள்ளார்.

இதன்போது, காணாமல்போன பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் வீட்டிலிருந்து மூன்று உரைப் பைகளை வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் இருவரும் காணாமல்போன பெண்ணை கொலை செய்து அவரது சடலத்தை துண்டுகளாக வெட்டி உரைப் பைகளில் போட்டு நவகம்புர பிரதேசத்தில் உள்ள குப்பை ஆற்றில் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியுடன் சென்ற மேலாளர் நையப்புடைப்பு!!

நடுவீதியில் வைத்து தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தமை தொடர்பில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கிரிபத்கொடை நகரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாகொல மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைனஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நடுவீதியில் இளைஞர்கள் இருவர் இணைந்து நபரொருவரை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிரிபத்கொடை நகரத்தில் அந்த சம்பவம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளில், தாக்குதலுக்குள்ளானவர் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் என தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான தனியார் நிறுவன உரிமையாளர் வேலை நிமித்தம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் தனது காரில் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பெண்ணின் காதலனுக்கும் தனியார் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பெண்ணின் காதலன் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளரை கிரிபத்கொடை நகரத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (26) பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான காதலனும் இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய் : தாதி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!!

பிரித்தானியாவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் தாயார் ஒருவரின் மரணத்திற்கு காரணமான தாதி ஒருவருக்கு 9 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியாவின் வீட்ஸ் பகுதியில் நடந்துள்ளது. 27 வயது ரோமீசா அஹமட் என்ற தாதி, தனது இரவுப்பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இந்தியாவை சேர்ந்த 28 வயது ஆதிரா அனில்குமார் என்பவரே உயிரிழந்தார். குழந்தை ஒன்றின் தாயான ஆதிரா அனில்குமார், இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்த சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ரோமீசா அஹமட், மணிக்கு 40 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய வீதியில் 60 மைல் வேகத்தில் பயணித்ததோடு வாகனம் செலுத்தும் போது தனது அலைபேசியையும் பாவித்துள்ளார்.

இதேவேளை, ஆதிரா அனில்குமார் Leeds-Beckett பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காக இணைய முடிவெடுத்திருந்த நிலையில் இந்த துரதிஷ்டவசமாக சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.