அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவனின், காதல் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.
கடிதம் ஒன்றை எழுதி வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. அதன்படி, இன்றைய தினம் (22.04) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,035,976 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,550 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 292,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 33,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 268,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,990 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 255,850 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 277,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 255,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை, மக்களின் உடல்நலத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ,மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் தீவின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான சூரிய ஒளி காரணமாக தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் விளையாடுபவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், போதுமான அளவு சுத்தமான தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு திரவத்தை குடிப்பது முக்கியம்.
அத்தோடு, இந்த நாட்களில் சில பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
மேலும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவுவதற்கு இது ஒரு காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவை – கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது. இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவையிலிருந்து கிரிந்திவெல நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது, பஸ் சாரதியும் அதில் பயணித்த 21 இராணுவ சிப்பாய்களும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமனார் அடித்தே கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர் ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத மஹமுதன்நாயக்க முதியன்சலாகே சஜீத் திவங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி என்றும், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு கடத்தலில் ஈடுபடுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் கடைக்கு முன்னால் நடத்தப்பட்ட சூதாட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த கொலை இடம்பெற்றமை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகள் சிலரின் கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி, கண்களுக்கு பின் உள்ள ‘கோன்’ எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த ஒளியை பார்க்க முடியும்.
இயற்கையில் இப்படியான ஒளியை பார்க்கவே முடியாது. லேசர் உதவி மூலம் இந்த ஒளியை பார்த்தவர்கள், நீலம்-பச்சை கலந்த நிறத்தில் அந்த ஒளி இருந்ததாக கூறுகின்றனர்.
ஆனால் வழக்கமான நீலம் பச்சை நிறத்தை போல் அல்லாமல் இது வித்தியாசமாக இருந்திருக்கிறது என கூறியிருக்கிறார்கள்.
மனிதர்கள் பார்க்காத நிறத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் மூளை அதை எப்படி புரிந்துக்கொள்ளும் என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது. இதற்கு நாங்கள் ஓலோ (olo) என பெயரிட்டிருக்கிறோம். இந்த நிறம் தனிச்சிறப்புமிக்கது.
இதனை மொபைல் டிஸ்பிளேவில், கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்க்க முடியாது. லேசர் மூலம் மட்முமே உணர முடியும். மனித கண்கள் ஒரு பொருளை பார்த்து அது இந்த நிறத்தில்தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க
L (Long wavelength) – சிவப்பு
M (Medium wavelength) – பச்சை
S (Short wavelength) – நீலம்
எனும் அமைப்பை பயன்படுத்துகிறது. சூரிய ஒளியோ, அல்லது லைட் வெளிச்சமோ ஒரு பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும்போதுதான் அது எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்கிறோம்.
நாங்கள் எங்கள் ஆய்வில் கண்ணின் M அமைப்பை மட்டுமே செயல்படுத்தினோம். இதன் மூலம் புதிய ஒளி உருவாகியுள்ளது.
தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தெஹிஅத்தகண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கணவனும் 28 வயதுடைய மனைவியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த தம்பதியரின் மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலேவெலவிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும்போது நாய் ஒன்றுடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் கலேவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியர் உயிரிழந்ததாகவும், தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, அகலவத்தை பிரதேசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அகலவத்தையை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது காதலன் மோட்டார் சைக்கிளில் தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிழந்தவர் அகலவத்தை, மேர்வின் சமரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய விவாகரத்து பெற்ற மதுஷானி என்ற பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் விவாகரத்தின் பின்னர் அகலவத்தை பகுதியில் வசிக்கும் இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் கடந்த 18ஆம் திகதி தனது காதலனை சந்தித்துள்ளார். இருவரும் தென்னந்தோப்பு உள்ள பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து இளம்பெண்ணை கொலை செய்துள்ளார்.
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த பெண்ணின் உடலை கண்ட உள்ளூர்வாசிகள் மத்துகம பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் காதலன் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், சந்தேக நபரைக் கைது செய்ய 3 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,013,779 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,760 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 286,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 262,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,290 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 250,350 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 264,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 243,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளையில் சம்பவித்த கோர விபத்தில் இளம் தம்பதி உயிரிழந்த நிலையில், மகன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய கணவன், மனைவி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குடும்பமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில், குறுக்காக வந்த நாயில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி தம்பதி உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த மகன் மேலதிகச் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கியில் (CRB) கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் திருடப்பட்டுள்ளது.
இதன்போது, I phone கையடக்க தொலைபேசி ஒன்றும், 52,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது. குறித்த வங்கி நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து வங்கயில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியின் உதவியுடன், திருடப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரின் முகநூலில் போடப்பட்ட தொலைபேசி பதிவினையும் அடிதளமாக கொண்டு நேற்றையதினம் (20.04.2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்காெண்டு வருகிறார்கள்.
கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திருக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “கடந்த வியாழக்கிழமை(17) எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார்.
இதன்போது கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவர்களுடன் இருந்துள்ளார். அந்த கேணியில் யாரும் குளிப்பதில்லை. அது கோவில் கேணி. தாமரை கொடி சிக்கி உயிரிழந்ததாக கூறியது பொய்.
அந்த கேணியில் தாமரை கொடியே இல்லை. மரண விசாரணை அதிகாரி, பொலிஸார், சட்டத்தரணி உள்ளிட்ட பலர் நேற்றையதினம் அந்த பகுதிக்கு வந்தனர். இரண்டுபேரை அந்த குளத்தில் இறக்கி குளத்தை பரிசோதித்து பார்த்தனர். ஆனால் இருவரும் எந்தவிதமான பாதிப்புமின்றி வெளியே வந்தனர்.
உயிரிழந்த மகனின் ஆடையும், செருப்பும் குளத்தின் கரையில் இருந்தது. கேணியின் அருகே 3 ரின்கள் இருந்தன. ஆனால் உடற்கூற்று பரிசோதனைகளில் இவர் மதுபானத்தை பாவித்ததாக அறிக்கையில் கூறப்படவில்லை.
தண்ணீர் சுவாசப் பையின் உள்ளே சென்று அடைத்ததால் தான் மரணம் சம்பவித்ததாக அறிக்கையில் கூறப்படுகிறது.
தோளில் பிடித்து அழுத்திய கண்டல் காயம் உள்ளது. அவரது சடலம் தாண்டு இருந்த இடத்தில் ஒரு நீளமான மீற்றர் கட்டை ஒன்று குற்றப்பட்டு இருந்தது. அப்படி அவர் தாழ்ந்திருந்தால் அத்த கட்டையில் பிடித்து ஏறியிருப்பார்.
மந்திகை வைத்தியசாலையில் எங்களது பிள்ளையின் சடலம் இருப்பதாக கேள்வியுற்று நாங்கள் அங்கே சென்றவேளை, அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவர்கள் இருவர் பொய்யான பெயர் கொடுத்துள்ளனர் என்ற விடயம் தெரியவந்தது.
ஏன் பொய்யான பெயர் கொடுக்க வேண்டும்? அன்றையதினம் அவர் யாருடன் பேசினாரோ அவ்வளவு விபரங்களும் கைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்தது.
எங்களுடைய தம்பி ஒருவர் கைபேசியை வாங்கும் போது அங்கிருந்த ஒருவர் கைபேசியை பறித்தார், ஒரு மணத்தியாலம் அந்த கைப்பேசியை வழங்கவில்லை.
சடலம் இருந்த இடத்தை நீதிவானுக்கு காட்டிய பொலிஸார் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிறகு அவர்கள் வரவில்லை. எங்களிடம் விசாரணைகளுக்கு வந்த பொலிஸார், நீதிமன்றத்தில் நீங்கள் சட்டத்தரணி வைக்க வேண்டாம், நாங்கள் உங்களுக்காக வாதாடுகின்றோம் என்றனர்.
அவரது உடலை தொட்டவேளை உடலில் சூடு இருந்தது. ஆகையால் சடலத்தை பிரேத அறையில் போடவேண்டாம் என நாங்கள் கூறியவேளை,
அவரது நண்பர்கள் சடலத்தை பிரேத அறையில் போடுமாறு விடாப்பிடியாக கூறினார்கள். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் உறவினர்கள் வைத்தியசாலையில் இல்லை. சிவரூபன் என்ற பெயரிலேயே கையொப்பமிட்டு அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
ஆனால் அந்த சிவரூபன் யார் என இதுவரை எமக்கு தெரியவில்லை. உடனிருந்த நண்பர்கள் யாரும் இதுவரை சடலத்தை பார்ப்பதற்கு வீட்டுக்கு வரவில்லை.
கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தான் கொடிகாமம் பொலிஸ் இல்லை பருத்தித்துறை நிலைய பொலிஸ் என்று மந்திகை வைத்தியசாலையில் வைத்து கூறியுள்ளார்.
ஆனால் அவர் கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். அவர் ஏன் பொய் கூற வேண்டும்? இந்த சதியில் ஈடுபட்ட 4 பேரை எமக்கு தெரியும்.
ஆனால் இதில் பலர் தொடர்புபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிலர் காணொளியும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே அந்த காணொளி யாரிடம் உள்ளது என்று தேடி பிடிப்பதோடு, நாங்கள் கூறுகின்ற நான்கு பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்டால் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முடியும்” என தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தான் கொடிகாமம் பொலிஸ் இல்லை பருத்தித்துறை நிலைய பொலிஸ் என்று மந்திகை வைத்தியசாலையில் வைத்து கூறியுள்ளார்.
ஆனால் அவர் கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். அவர் ஏன் பொய் கூற வேண்டும்? இந்த சதியில் ஈடுபட்ட 4 பேரை எமக்கு தெரியும்.
ஆனால் இதில் பலர் தொடர்புபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிலர் காணொளியும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே அந்த காணொளி யாரிடம் உள்ளது என்று தேடி பிடிப்பதோடு, நாங்கள் கூறுகின்ற நான்கு பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்டால் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முடியும்” என தெரிவித்துள்ளனர்.
பண்டைய இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டுவை அல்லது களறி என்ற கலையை தமது 82 வயதிலும் கற்பிக்கும் பெண்மணி ஒருவர், தாம் இந்தக் கலையில் இருந்து ஓய்வுப் பெறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
தாம் இறக்கும் வரை களரி பயிற்சி செய்யப்போவதாக என்று மீனாட்சி ராகவன் என்ற இந்த பெண்மணி கூறியுள்ளார்.
இதன்படி, இந்த கலை வடிவத்தை பயிற்சி செய்யும் மற்றும் கற்பிக்கும் உலகின் மிக வயதான பெண் என்று மீனாட்சி ராகவன் கருதப்படுகிறார். களரிபயட்டு – களரி என்றால் போர்க்களம் என்றும் பயட்டு என்றால் சண்டை என்றும் பொருள்படும்.
குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர்,தென் மாநிலமான கேரளாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் இது இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையாகக் கருதப்படுகிறது.
அதேவேளை விஸ்ணு தெய்வத்தின் 6வது அவதாரமான பரசுராமன் இந்தக்கலையை சிவனிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன.
இந்த கலை சண்டைக்காக மட்டும் பயிற்சி செய்யப்படவில்லை. இது ஒழுக்கத்தை வளர்க்கவும், வலிமையை வளர்க்கவும், தற்காப்புத் திறன்களை வளர்க்கவும் உதவுகிறது.
அத்துடன் குங் ஃபூ என்ற தற்கால கலையின் சுவாச நுட்பங்கள் மற்றும் மர்மசாஸ்திரம் என்ற ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்த முக்கிய புள்ளிகளைத் தூண்டுதல் போன்ற கொள்கைகள், களறி பயிற்சியில் இருந்தே தழுவப்பட்டன என்று நம்பப்படுகிறது.
மீனாட்சி ராகவன், கேரளத்தின் வடகராவில் வசிக்கிறார். மீனாட்சி அம்மா என்று அழைக்கப்படுகிறார். மீனாட்சி அம்மா எப்போதாவது ஏனைய நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார், அதேநேரம், 1950 ஆம் ஆண்டு தனது கணவரால் நிறுவப்பட்ட தனது சொந்த களரி பாடசாலையை நடத்துகிறார்.
களரிபயட்டு நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது, மேலும் கலை வடிவத்தைக் கற்றுக்கொள்ள பொறுமை தேவை. மெய்ப்பாடு – எண்ணெய் தேய்தல்; அதைத் தொடர்ந்து உடலை சீரமைக்கும் பயிற்சிகள் மூலம் பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாணவர்கள் கோல்தாரி (குச்சி சண்டை), பின்னர் அங்கதாரி (ஆயுத சண்டை), இறுதியாக வெரும்கை – ஆயுதம் ஏந்தாத சண்டையை உள்ளடக்கிய மிக உயர்ந்த நிலை வரை கற்றுக்கொள்கிறார்கள் களரிபயட்டில் தேர்ச்சி பெற பொதுவாக ஐந்து ஆண்டுகள் வரை கற்றலில் ஈடுபடவேண்டியிருக்கும்.
6 ஆம் நூற்றாண்டில், இந்திய புத்த துறவி போதிதர்மர் இந்த நுட்பங்களை துறவிகளுக்கு அறிமுகப்படுத்தினார், இது மிகவும் பிரபலமான சீன தற்காப்புக் கலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் புராணக்கதைகள் கூறுகின்றன.
மீனாட்சி அம்மா 75 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த கலை பயிற்சியில் ஈடுபட்டதை நினைவுப்படுத்துகிறார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி சேர்ந்ததாக வத்திக்கான் செய்தி அறிவித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் காலமானார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
அண்மையில், கடுமையான நிமோனியா பாதிப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று கேமர்லெங்கோ கார்டினல் ஃபெரெல், “அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமது பரிசுத்த தந்தை பிரான்சிஸின் மரணத்தை நான் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்க வேண்டும்.
இன்று காலை 7:35 மணிக்கு ரோம் பாப்பரசர் பிரான்சிஸ், எமது தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்.” என்று வத்திக்கானின் தொலைக்காட்சி காணொளியில் அறிவித்தார்.
பாப்பரசர் பிரான்சிஸ் தனது பதவிக் காலத்தின் பெரும்பகுதியை அமைதிக்காக வேண்டுகோள் விடுப்பதற்காக அர்ப்பணித்துள்ளார்.
நேற்றைய தினம், உலகளாவிய ரீதியில், உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வத்திக்கானில் இடம்பெற்ற ஆராதனைகளிலும் பங்கேற்றுள்ளார்.
இதன்போது, அவர் தனது செய்தியை வெளியிடும் போது காசா முதல் சஹேல் வரை அனைத்து வன்முறைகளும் முடிவுக்கு வர உர்பி எட் ஓர்பியில் பிரார்த்தனை செய்தார்.
மேலும், அவரின் செய்தியில், “என் நம்பிக்கையான கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்” என்று அறிவித்த போப் பிரான்சிஸ், விசுவாசிகள் தங்கள் பார்வையை காலியான கல்லறையின் பக்கம் திருப்புமாறு அழைப்பு விடுத்தார்.
உயிர்த்தெழுதலை ஒரு சுருக்கமான யோசனையாக அல்ல, மாறாக ஒரு உயிருள்ள சக்தியாக – சவால் செய்யும், குணப்படுத்தும் மற்றும் அதிகாரம் அளிக்கும் ஒன்றாக அவர் பேசினார்.
“நம்மை ஒடுக்கும் அனைத்து தீமைகளையும் அவர் தானே எடுத்துக்கொண்டு அதை உருமாற்றுகிறார்.” “அன்பு வெறுப்பை வென்றுள்ளது, ஒளி இருளை வென்றுள்ளது, உண்மை பொய்யை வென்றுள்ளது.
மன்னிப்பு பழிவாங்கலை வென்றுள்ளது,” என்று அவர் கூறினார். “வரலாற்றிலிருந்து தீமை மறைந்துவிடவில்லை; அது இறுதிவரை இருக்கும், ஆனால் அது இனி மேலோங்கவில்லை இந்த நாளின் அருளை ஏற்றுக்கொள்பவர்கள் மீது அதற்கு இனி அதிகாரம் இல்லை.”
ஆனால் அவரது வார்த்தைகள் வெறும் விசுவாசப் பிரகடனமாக மட்டும் இருக்கவில்லை – அவை மனிதகுலத்திற்கு, மனிதகுலத்திற்காக ஒரு கூக்குரலாக இருந்தன. இந்த மகிழ்ச்சியான தருணத்திலும் கூட, போப்பின் பார்வை துன்பத்திலிருந்து விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்றைய தினம், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸினையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (18.04.2025) இடம்பெற்றுள்ளது. விபத்தில் சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் காயமடைந்துள்ளனர். மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.