இலங்கையில் வீழ்ச்சியடையும் தேங்காய் விலை : மக்கள் மகிழ்ச்சி!!

நாடளாவிய உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய் ரூபா. 220க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது, ரூபா.100 முதல் ரூபா.170 வரை தேங்காய்கள் விற்கப்படுகின்றன.

சில வியாபாரிகள், அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் தங்கள் வருமானமும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் குறைவடையும் என்றும், தற்போது சந்தையில் ஏனைய தேவையை விட தேங்காய் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை : நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்!!

தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர், வாதுவ பகுதியில் நடைபெற்ற தனது மகளின் திருமண விழாவின் இறுதியில் நடனமாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்காசிய உதைபந்தாட்ட போட்டி : யாழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் 3 வீராங்கனைகள்!!

தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.

J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர். இப்போட்டி பங்களாதேஸில் ஜூலை 11 தொடக்கம் 21 வரை நடைபெறவுள்ளது. இந்த வீராங்கனைகளை பலரும் வாழ்த்திப் பாராட்டுகின்றனர்

மேலும் இந்த வீராங்கனைகளை தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய பாடசாலைப் பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமாருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

தமிழர் பகுதியில் சோகம் : ஒரே நாளில் நான்கு சிறுவர்கள் பரிதாப மரணம்!!

மட்டக்களப்பு- வாகரை, பனிச்சங்கேணி வாவியில் நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (06.07.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு- வாகரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்று வந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வாகரை,கறுவாச்சேனை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று திரும்பிய நிலையில் குளத்தில் மூழ்கியே உயிரிழந்துள்ளனர்.

குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிய நிலையிலேயே சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேபோன்று மட்டக்களப்பு-கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்து மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

செங்கலடியிலிருந்து உறுகாமத்திற்கு சென்று பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முனைந்தபோது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையில் வசித்து வருபவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா மேரி (26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார்.

இவரும், இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் பிஇ முடித்துள்ள நிதின் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் மேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கொடுத்ததில் அதில் ஜெமலா மேரியும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர்.

நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 4ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு ஜெமலா மேரி பெற்றோரை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,

அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

உடனே ஜெமலா மேரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறி துடித்து மருத்துவமனை சென்றனர்.

தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. உறவினர்கள் கதறி அழுதபடி திடீரென உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடலை வாங்கிக்கொண்டு உறவினர்கள் சென்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஜெமலா மேரியின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.

அதில், நான் சுய நினைவுடன் எழுதுவது. என் சாவிற்கு என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல.

நான் சுயமாக முடிவெடுத்தது. என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி அவரது உள்ளாடையில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த பெண்ணை கொன்று தாலி கட்டிய காதலன்.. சடலத்துடன் எடுத்த புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம்!!

கர்நாடக மாநிலம் கேதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான அபிஷேக். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்,

40 வயதாகியும் விவசாயம் செய்வதால் அபிஷேக்குக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.

அப்போது தான் அபிஷேக் பக்கத்து ஊரை சேர்ந்த 36 வயதான பூர்ணிமாவை பற்றி அறிந்துள்ளார். 36 வயதான பூர்ணிமா அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

36 வயதாகியும் பூர்ணிமாவுக்கும் திருமணமாகாத நிலையில் அவரது வீட்டில் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர்.

எனவே அபிஷேக் பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து பூர்ணிமாவை பள்ளிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்துள்ளார்,

இதனை அறிந்த பூர்ணிமா அபிஷேக்கிடம் தன்னை பின் தொடர வேண்டாம் என கூறியுள்ளார்.

அதற்கு அபிஷேக் பூர்ணிமாவை காதலிப்பதாக அவரிடம் கூற இதனை மறுத்த பூர்ணிமா தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

பூர்ணிமா கூறியதை கேட்ட அபிஷேக் அவரிடம் “நீங்கள் என்னை காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை நல்ல நண்பர்களாக இருக்கலாம்” என கூறியுள்ளார்,

பின்னர் பூர்ணிமாவும் அபிஷேக்குடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத அபிஷேக் தன்னுடைய காதலை மீண்டும் பூர்ணிமாவிடம் தெரிவித்துள்ளார்.

எனவே பூர்ணிமா அபிஷேக்குடன் பழகுவதை முற்றிலுமாக தவிர்த்து இதை பற்றி தனது பெற்றோர்களிடமும் தெரிவித்துள்ளார்.

அபிஷேக்கை அழைத்து பேசிய பூர்ணிமாவின் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைந்துள்ளதாக கூறி அவரை விட்டு விலகி விடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் தனக்கு கிடைக்காத பூர்ணிமா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி பூர்ணிமாவுக்கு போன் செய்த அபிஷேக் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி பூர்ணிமாவும் அபிஷேக் வீட்டிற்கு வெளியில் சென்று அவரை சந்தித்துள்ளார்.

பூர்ணிமாவை அபிஷேக் வீட்டிற்குள் அழைத்துள்ளார், அதற்கு மறுத்த நிலையில் அவரை ரோட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் சடலத்தை வீட்டிற்குள் எடுத்து சென்று அதற்கு தாலி காட்டியுள்ளார். பின்னர் அந்த சடலத்துடன் போட்டோ எடுத்த அபிஷேக் அதனை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

பின்னர் அவ்வழியே சென்ற மக்கள் வீட்டு வாசலில் இருந்த ரத்தத்தை பார்த்து சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பூர்ணிமா சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தனது மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூர்ணிமாவின் பெற்றோர்கள் நடத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பூர்ணிமாவின் பெற்றோர்கள் அளித்த தகவலின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆதாரங்களை வைத்து அபிஷேக் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து, தப்பி சென்ற அபிஷேக்கை தேடி வருகின்றனர்.

இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகையிரதத்தில் கொழும்பு – யாழ்ப்பாணம் பயணிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!!

இன்று(07) முதல் கொழும்பு – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவைநாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

“நான் சுயநினைவுடன் எழுதுவது”.. இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்.. சிக்கிய கடிதம்!!

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கடிதம் மூலம் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னியகுமாரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா மேரி (26) தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெமலா மேரியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையில், பொலிஸாருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜெமலாவின் உடலை வாங்கிக் கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஜெமலா மேரியின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது ஜெமலா இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது.

அதில், “நான் சுய நினைவுடன் எழுவது; என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல. நான் சுயமாக முடிவெடுத்தது.

என்னை யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டவில்லை” என எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி அப்பெண்ணின் உள்ளாடையிலும் அதே வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலையில் வீழ்ச்சி : மக்கள் மகிழ்ச்சி!!

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய் ரூபா. 220க்கு விற்கப்பட்டது, தற்போது, ரூபா.100 முதல் ரூபா.170 வரை பல்வேறு விலைகளில் தேங்காய்கள் விற்கப்படுகின்றன.

சில வியாபாரிகள், அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் தங்கள் வருமானமும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் குறைவடையும் என்றும், தற்போது சந்தையில் ஏனைய தேவையை விட தேங்காய் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மரணம் : இறப்பில் சந்தேகம் என தாய் புகார்!!

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் திருமணமான 6 மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியகுமாரியின் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஜெமலா. பட்டதாரியான இவர் சின்னத்துறையைச் சேர்ந்த நிதின் ராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரின் குடும்பத்தாரிடம் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் பெண் வீட்டார் சார்பில் புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு தம்பதியர் குடியேறினர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் ஜெமலா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக நிதினின் உறவினர்கள் ஜெமலாவின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மேலும், தனியார் மருத்துவமனையில் மகளின் உடல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பெற்ற ஜெமலாவின் பெற்றோர் அங்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து கருங்கல் பொலிஸார் ஜெமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நிதினுக்கு சரியான வேலை இல்லாததாலும், அவர் வெளிநாடு செல்வதாக கூறி வந்ததாலும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜெமலாவின் தாயார் தன் ‘மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக’ பொலிசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!!

ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன், தொண்டையில் விதை சிக்கி மூச்சு திணறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை, மேலப்பாளையத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நிஜாம் (35). வெளிநாட்டில் வேலைப் பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ரியாஸ் என்ற மகனும் இருந்தனர்.

சிறுவன் ரியாஸ், அருகே உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இரவில் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்காக ரம்புட்டான் பழங்களை வாங்கி உள்ளனர்.

அதில் ஒரு பழத்தை ரியாஸ் எடுத்து சாப்பிட்டான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பழத்தின் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற பழங்கள் வழுவழுப்பாக இருப்பதால் தொண்டையில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குழந்தைகள், முதியவர்கள் ரம்புட்டான் பழத்தை கவனமுடன் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செம்மணியில் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் மூன்று என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன் போது சிறுவர்களின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் மூன்று என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை 37 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று 10ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ஞா. ரனித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர்.

நேற்று வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தினரின் சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன் உட்பட இருவர் அகழ்வுப் பணியின்போது முன்னிலையாகி இருந்தனர்.

கணவனை அடித்துகொன்ற மனைவி : பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த 73 வயதுடைய கணவன் அடி காயங்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (4) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி ஊன்றுகோலால் தாக்கியதில் கணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சகோதரியின் இறுதிச் சடங்கிற்கு சென்றவர் கொடூர கொலை : துயரத்தில் தவிக்கும் குடும்பம்!!

மஹியங்கனை குருமட பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில், 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் 20 வயதுடைய மற்றொரு நபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுமியின் ஆடை!!

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் இருந்து நேற்று சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடையின் சில பகுதிகள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள்,

ரோன் கமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புதிய பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பமாகின.

இந்நிலையில் நேற்று முன்தின அகழ்வின்போது ஆடை ஒன்றின் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அந்த இடத்தில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

பாரிய தொடருந்து விபத்துக்கள் நிகழலாம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கையின் தொடருந்து பாதை வலையமைப்பில் சில தொடருந்து நிலையங்களில் காணப்படும் சமிக்ஞை தொகுதிகளில் உள்ள கோளாறு காரணமாக எதிர்வரும் காலங்களில் பெரும் தொடருந்து விபத்துகள் ஏற்படலாம் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (04.07.2025) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்சென்ற தொடருந்து, ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் கட்டுப்பாட்டு சமிக்ஞை கோளாறு காரணமாக பெரும் சிக்கலை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடருந்து சமிக்ஞை கோளாறுகளை நிவர்த்திக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொடருந்து விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் செயல்பாட்டில் உள்ள தொடருந்து ஒளி வர்ண சமிக்ஞை அமைப்பு 1962 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மிகவும் எளிமையான முறை மூலம் இயக்கப்படுகிறது.

இந்த வர்ண சமிக்ஞை அமைப்புகள் அனைத்தும் மருதானை தொடருந்து நிலையத்தில் அமைந்துள்ள மத்திய தொடருந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படுகின்றன.

அத்தோடு கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள தொடருந்து வர்ண சமிக்ஞைகள் கண்டி, நவலப்பிட்டி மற்றும் அனுராதபுரம் துணை தொடருந்து அலுவலகங்களால் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில், இதுபோன்ற நிலைமைகளின் கீழ் தொடருந்துகளை இயக்குவது மிகவும் ஆபத்தானது என்று தொடருந்து தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.