வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பாடசாலைகள் மட்ட உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி : பெண்கள் பிரிவில் நெளுக்குளம் வெற்றி!!

வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயமும் பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலமும் வெற்றிவாகை சூடியது.

கடந்த இரு தினங்களாக இடம்பெற்றுவந்த சுற்றுப் போட்டி இறுதிநாள் நிகழ்வு வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (18.04) மாலை இடம்பெற்றிருந்தது.

பரபரப்பான இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயமும், பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலயமும் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றின. வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கேடயங்கள விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

குடும்பச் சண்டையால் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்!!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (17.04.2025) மாலை கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.

அத்தோடு, இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!!

உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்ட புதிய கோள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

K2-18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது
பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம் கிரகத்தின் வளிமண்டலத்தில் உயிர்களுடன் தொடர்புடைய இரசாயனங்கள் கண்டறியப்பட்டது.

இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

K2-18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது மற்றும் நம்மிடமிருந்து 700 டிரில்லியன் மைல்கள் அல்லது 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. எந்தவொரு மனிதனும் ஒரு வாழ்நாளில் பயணிக்கக்கூடிய தூரத்தை விட மிக இது அதிகம்.

JWST மிகவும் சக்தி வாய்ந்தது, அது சுற்றும் சிறிய சிவப்பு சூரியனில் இருந்து வரும் ஒளியைக் கொண்டு கிரகத்தின் வளிமண்டலத்தின் வேதியியல் கலவையை பகுப்பாய்வு செய்ய முடியும்.

கேம்பிரிட்ஜ் குழு வளிமண்டலத்தில் உயிர்களுடன் தொடர்புடைய இரண்டு மூலக்கூறுகளில் குறைந்தது ஒன்றின் வேதியியல் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. டைமெத்தில் சல்பைடு (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்பைடு (DMDS).

பூமியில், இந்த வாயுக்கள் கடல் பைட்டோபிளாங்க்டன் மற்றும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. வளிமண்டலத்தில் இந்த வாயுவின் அளவை நாம் மதிப்பிடுவது பூமியில் உள்ளதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாக உள்ளது.

வெலிக்கடை இளைஞன் விவகாரம்.. விசாரணைகளின் அடுத்த கட்ட நகர்வு!!

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த நிமேஷ் சத்சாரா என்ற இளைஞனின் உடலை இம்மாதம் 23 ஆம் திகதி தோண்டி எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை விசாரணைப் பிரிவுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரி இந்த மாதம் 23ஆம் திகதி இளைஞனின் உடலை தோண்டி எடுக்க உத்தரவிடுமாறு கோரியதால், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கூடுதல் நீதவான் கெமிந்த பெரேரா கடந்த 9 ஆம் திகதி கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு பிறப்பித்த உத்தரவின் பேரில் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அந்த உத்தரவின்படி கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவின் பெயர்கள் நேற்று சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

தலைமை தடயவியல் மருத்துவர் பிரியந்த அமரரத்ன, மூத்த சிறப்பு தடயவியல் மருத்துவர் பி.ஆர். ருவன்புர மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் நிபுணர் வைத்தியர் முதித விதானபத்திரன ஆகியோர் நிபுணர் தடயவியல் மருத்துவ குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞனின் மரணம் தொடர்பாக நீதித்துறை மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனை திருப்திகரமாக இல்லாததால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் மருத்துவ குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு உள்ளிட்ட முந்தைய விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதவான் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவால் நடத்தப்பட்டன, ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இளைஞனின் உடல் பாகங்களை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

இந்நிலையில், இளைஞனைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, அந்த இளைஞனின் பணப்பை மற்றும் அவரது கையடக்க தொலைபேசி ஆகியவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், உயிரிழந்த இளைஞனின் உடல் பதுளை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், உடல் தோண்டி எடுக்கப்படும் போது அதன் பாதுகாப்பிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் உதவி வழங்குமாறும் நீதவான் பதுளை நீதவானுக்கு அறிவித்தார்.

வவுனியா உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞரே சடலமாக மீட்பு!!

வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்த கறை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து புதன்கிழமை (16.04) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தது.

குறித்த இளைஞன் புதுவருட தினத்தன்று (14.04) காலை வீட்டில் இருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின் காலையில் சூடுவெந்தபுலவு வீதியில் நின்றதாகவும் தமது கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற போது,

மரணமடைந்த இளைஞர் தன்னை சிலர் தாக்குவதாகவும், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போறேன். பொலிஸ் நிலையத்தில இறக்கி விடும் படியும் கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞரை உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டதாகவும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் அவரை தேடியும் கிடைக்காத நிலையில் இரண்டு தினங்களின் பின் கடந்த புதன் கிழமையே (16.04) சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள உறவினர்கள் இக் கொலைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறவினர்கள் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

யாழில் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு : தவறான முடிவெடுத்து யுவதி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம்- வரணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது இன்று (18.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த யுவதியின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இந்தநிலையில், யுவதியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே உயிரிழந்தார்.

நண்பர்களுடன் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்டு, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.

அதன்படி வடக்கு வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா, ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு 39 – 45 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே நாட்டில் நிலவும் வெப்பமான நிலை தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிகப்பெரிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!!

இலங்கையின் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

தங்கம் விற்பனை செய்யும் முக்கிய வணிக வளாகங்கள் அமைந்துள்ள செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 24 கரட் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 270,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை 240,000 ரூபாயை கூட கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாரான மாணவன் பரிதாபமாக மரணம்!!

எல்பிட்டிய பகுதியில் இன்று (17.04.2025) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, ​​அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றில் புத்தாண்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து விழுந்த பாடசாலை மாணவன் எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவன் என்பதுடன் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி, முடிவுகளுக்காகக் காத்திருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்படும் : ஜனநாயக தேசியக் கூட்டணி முதன்மை வேட்பாளர் கார்த்தீபன்!

நாங்கள் வெற்றி பெற்றால் வவுனியா நகரப் பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகர சபை முதன்மை வேட்பாளர் ப.கார்த்தீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

வவுனியா நகரப் பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபார நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நடைபாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிரதான வீதிகளில் இறங்கியே பயணம் செய்கின்றனர். இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன், போக்குவரத்து நெருக்கடி நிலையும் ஏற்ப்படுகின்றது.

வவுனியாவை பொறுத்த வரை இலுப்பையடிப்பகுதி, நகரபள்ளி வாசலுக்கு முன்பாகவுள்ள வீதி, வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் நடைபாதைகளை ஆக்கிரமிக்கப்பட்டு வியாபாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இதற்கு மாற்றுத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்று மாநகரசபையின் அதிகாரம் எமது கைகளுக்கு வழங்கப்பட்டால் நகரிலுள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் நிச்சயமாக அகற்றுவோம்.

அதற்கு மாற்றீடாக பொருத்தமான இடம் ஒன்றை தெரிவுசெய்து அங்கு குறித்த வியாபார நிலையங்களை அமைப்பதற்கான முறைமை ஒன்றையும் உருவாக்குவோம்.

வடக்கில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நகரமாக வவுனியா இருக்கின்ற போதும் உரியதிட்டமிடல் இன்மையால் நகரில் நெருக்கடி நிலமை ஏற்ப்பட்டுவருகின்றது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குளக்கரையில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் மீட்பு!!

வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிசார் நேற்று (16.04.2025) மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக உலுக்குளம் பொலிசாருக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் வயது 33 என பொலிசார் தெரிவித்தனர்.

அவர் கடந்த 14ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ள நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நுவரெலியா கிரகரி வாவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!!

நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதில் கிரகரி வாவிக்கு தினமும் உள்ளூர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.

குறிப்பாக கிரகரி வாவி கரையோரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நுவரெலியா மாநகர சபை ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனா். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற சகல வசதிகளுடன் கூடிய ஏராளமான ஹோட்டல்களும் இப்பகுதிகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து உயர்வடையும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 977,664 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,490 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 275,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,620 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 252,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 241,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் கிட்டத்தட்ட 50 பாடசாலைகளுக்கு 05 நாட்கள் விடுமுறை!!

கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த தாதுவின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு கண்டி நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கண்டி வலய அலுவலகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 21ஆம் முதல் 25 வரை, 05 நாட்களுக்கு இந்த விடுமுறையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த தாதுவின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு கண்டி பகுதியில் உள்ள பல பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கண்டியில் உள்ள 37 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மூடப்படும் என்று அவர குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல்லின் சிறப்பு கண்காட்சி 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு 2025 ஏப்ரல் 18 முதல் 27 வரை, 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியை வீதியோரமாக நிறுத்தி நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்றவரை மோதி தள்ளியது.

அதில் குறித்த நபரும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் ஆக மூவரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (14) சிகிச்சை பலனின்றி இரவீந்திரன் உயிரிழந்துள்ளார்.

பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ள புதிய வேக கமரா : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

இலங்கை காவல்துறை வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய புதிய வேக கமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சாதனங்களில் இரட்டை கமராக்கள் மற்றும் இரவு பார்வை தொழில்நுட்பம் உள்ளன.

அவை சாரதியின் புகைப்படம், வாகன எண் மற்றும் வேகத்தை நிகழ்நேரத்தில் படம்பிடிக்கின்றன. வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை மேம்பட்ட வேக கமராக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனங்கள், இரவில் கூட 1.2 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிய முடியும். பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரமாகச் செயல்படும்.

இதனால் பொலிசார் போக்குவரத்து மீறல்களுக்கான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியும். நாடு முழுவதும் இந்த சாதனங்களில் 30 ஐ பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஒவ்வொன்றும் ரூ. 3.3 மில்லியன் பெறுமதியானவை. கூடுதலாக 15 அலகுகள் உத்தரவிடப்பட்டுள்ளன. இது 45 பொலிஸ் பிரிவுகளுக்குள் பயன்படுத்தப்படவுள்ளன.