தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர திடீரென உயிரிழந்துள்ளார்.
திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழக்கும் போது அவருக்கு 38 வயதாகும்.
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முவதொர உயன தொடர்மாடி குடியிருப்பில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் இன்று (05.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸ், முவதொர உயன பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று சந்தேக நபரான கணவருக்கும் கொலை செய்யப்பட்ட மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த இளைஞன் ஒருவன் தகராறை சமரசம் செய்ய முயன்றுள்ளார். பின்னர் சந்தேக நபரான கணவன் தனது மனைவியையும் சமரசம் செய்த முயன்ற இளைஞனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி பலமாக காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கம்போடியா நாட்டில் கண்ணிவெடிகளை அடையாளம் காண பயன்படுத்தப்படும் எலி ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட குண்டுகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
ரொனின் என அழைக்கப்படும் இந்த இராட்சத ஆபிரிக்க எலியானது, 2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கம்போடியாவின் வடக்கு பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அப்போதிலிருந்து குறித்த எலி, 109 கண்ணிவெடிகள் மற்றும் 15 போர் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தையும் ரொனின் வென்றுள்ளது.
இதற்கு முன்னர், ‘ஹீரோ’ என அழைக்கப்படும் எலி 71 கண்ணிவெடிகள் மற்றும் 38 வெடிக்காத குண்டுகளை கண்டுபிடித்தமையே உலக சாதனையாக இருந்தது.
இராட்சத ஆபிரிக்க எலிகள் பொதுவாக பாரம் குறைந்த உயிரினம் என்பதால் அவை கன்னி வெடிகளை வெடிக்க வைக்க தூண்டாது.
அவற்றுக்கு இயற்கையாகவே அமையப்பெற்ற மோப்ப சக்தி மற்றும் பயிற்சி ஆகியவை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வாகனங்களைக் கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக கட்டாய சுங்க நடைமுறைகளுக்கு உட்படாமல் பதிவு செய்யப்பட்டதற்காக.இந்த வாகனங்கள் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் ஒரு ஜீப், ஆறு மிட்சுபிஷி மோன்டெரோ ஜீப்கள், மூன்று டொயோட்டா ஜீப்கள், ஒரு லேண்ட் குரூசர் பிராடோ ஜீப் மற்றும் ஒரு நிசான் டபுள் கேப் ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைக் கண்டறியவும், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பிடவும் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி விசாரணை நடத்தப்படுகிறது என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு ரூ.597,189,323 இழப்பை ஏற்படுத்திய 15 வாகனங்களும் காவலில் எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆணையகம் தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட GSP+ சலுகைகளை அனுபவிக்கும் அனைத்து நாடுகளும் அதனை இழக்கும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய கட்டணக் கொள்கையினால் இந்த அபாயம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். உலகில் அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள 5 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா விதித்த கட்டணங்கள் குறித்து அரசாங்கம் அவசரமாக விவாதிக்க வேண்டும் என இலங்கை பொருட்கள் மற்றும் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் இனாம் கபூர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள கட்டணக் கொள்கை குறித்து விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஒரு அரசாங்கக் குழு அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினரும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறப்பர் தொழிலாளர்கள் பாரியளவு பாதிப்பை எதிர்நோக்கக் கூடும் என அந்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில், சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பரை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா குருமன்காடு பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த பேருந்து நிலையம் நகரசபையால் இன்று (05.04) அகற்றப்பட்டது. பழமையான குறித்த பேருந்துத்தரிப்பிடம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
குறித்த பேருந்துத்தரிப்பிடத்தை அகற்றுமாறு நகரசபைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து இன்றையதினம் நகரசபையால் குறித்த தரிப்பிடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இதேவேளை அகற்றப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அண்மையில் தேவையான புதிய பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைக்க உள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் தெரிவித்திருந்தார்.
அந்தமான் தீவில் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதியில் அத்துமீறியதாக அமெரிக்க இளைஞர் ஒருவர் கைதாகியுள்ள நிலையில், இன்னொரு இளைஞரும் அத்துமீறி நுழைந்து சென்டினல் மக்களால் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க யூடியூபரான 24 வயது Mykhailo Viktorovych Polyakov என்பவர் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறியதாக கூறி இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மூன்று முதல் 5 ஆண்டுகள் வரை தற்போது சிறை தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார்.
வெளியாட்களிடம் கொடூரமாகவும் வன்முறையாகவும் நடந்து கொள்வதில் பெயர் பெற்ற சென்டினல் பூர்வகுடி மக்கள் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி வசித்து வருவதால் இந்திய அதிகாரிகள் உட்பட யாரும் தீவுக்குச் செல்வதில்லை.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாலிகோவுக்கு முன்பு, சென்டினல் தீவுக்குள் நுழைந்ததாக அறியப்பட்ட கடைசி நபர் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ மத போதகர் என்றே கூறப்படுகிறது.
கடந்த 2018ல் இச்சம்பவம் நடந்துள்ளது. ஜான் ஆலன் சாவ் என்ற 27 வயது நபர் தீவுக்கு அருகே நெருங்கியதும் சென்டினல் மக்களால் கொல்லப்பட்டுள்ளார். அவர்கள் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தியே ஆலன் சாவ்வை கொன்றுள்ளனர்.
சென்டினல் பூர்வக்குடி மக்கள் தங்கள் தீவை மிகவும் பாதுகாத்து வருகின்றனர், வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல், வெளியாட்களால் தங்கள் தீவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே நம்பியுள்ளனர்.
பூர்வகுடி குழுக்களின் உரிமைகளுக்கான ஆர்வலரான டெனிஸ் கில்ஸ் தெரிவிக்கையில், சாவ் சிறிது காலமாக வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டு வந்துள்ளதாகக் கூறினார்.
அவர் உள்ளூர் மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களின் படகில் சென்டினல் தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
மீனவர்கள் அவரை ஒரு சிறிய படகில் தீவுக்கு அருகில் அழைத்துச் சென்றனர். எஞ்சியுள்ள தூரத்தை கடக்க சாவ் ஒரு கயாக்கைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், ஒருவழியாக தீவில் தரையிறங்கினார் என்றும் கூறப்படுகிறது.
சாவ் தீவுக்குள் நுழைந்ததும் பூர்வகுடி மக்களில் ஒருவர் சாவ் மீது அம்பால் தாக்கியதாக, அவருக்கு உதவிய மீனவர்கள் கண்டதாக டெனிஸ் கில்ஸ் பதிவு செய்துள்ளார்.
பின்னர் சாவ் உடலை அந்த மக்கள் தீவுக்குள் இழுத்துச் சென்றதாகவும், அவர்கள் சாவ் உடலை தீவுக்குள் புதைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். 2006ல் இதுபோன்று இந்திய மீனவர்கள் இருவர் சென்டினல் தீவுக்கு அருகே தங்கள் படகை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர்.
அவர்களும் பூர்வகுடி மக்களால் தாக்குதலுக்கு இலக்கானதுடன், அந்த மீனவர்களின் சடலங்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.
மிக சமீபத்தில் அமெரிக்க யூடியூபரான பாலிகோவ் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சுமார் ஒருமணி நேரம் அந்த தீவில் அவர் தங்கியுள்ளதும், ஆனால் சென்டினல் மக்களை இவரால் சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே.
இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், மைசூர் மாவட்டத்தில் உள்ள பெட்டடபுரா காவல் நிலைய எல்லையில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கிடைத்தது.
அது காணாமல் போன மல்லிகேவின் உடலாக இருக்குமா என்று பொலிஸார் சந்தேகித்தனர். பின்னர், உடலை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் சுரேஷை வலியுறுத்தினர்.
ஆனால், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சுரேஷ் சிறையில் இருந்தார்.
இதையடுத்து, டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மல்லிகேவின் உடல் என்று நிரூபிக்கப்படாததால் அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஒரு உணவகத்தில் மல்லிகே அவரது ஆண் நண்பருடன் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார். பின்னர், பொலிஸாரால் மல்லிகே கைது செய்யப்பட்டார். காதலனுடன் மல்லிகே வாழ்ந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக நிதி கிருஷ்ணா தினந்தோறும் கற்றாலை சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில் பாட்டிலில் குளிர்பான பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்ததை கற்றாலை சாறு என நினைத்து எடுத்து குடித்துள்ளார்.
இதனால் சிறுமி நிதி கிருஷ்ணாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிட்டி மார்க்கெட் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமிநிதி கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பூச்சி கொல்லி மருந்து உட்கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி தினமும் அருந்தி வரும் கற்றாழைச்சாறு பாட்டில் காலியாக இருந்துள்ளது. அதில் செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி மருந்தை நிறப்பி வைத்தது தெரியவந்தது.இதனை அறியாத சிறுமி நிதி கிருஷ்ணா கற்றாலை சாறு என நினைத்து குடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய இதய முடுக்கி (Pacemaker) எனப்படும் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை விட சிறியது எனவும், இது உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனைக்குள் சென்றுவிடக் கூடியது எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை மார்பு பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்துவதாகவும், இது ஈய கம்பிகள் மூலம் இதயத்துக்குத் தொடர்ந்து மின் தூண்டல்களை வழங்கி, அது சீராகத் துடிப்பதை உறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கற்ற அல்லது மெதுவான இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கு முக்கியமாகக் கருதப்படும் இந்தக் கருவி, குறைவான இதயத்துடிப்பு, இதய அடைப்பு உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தப் பயன்படும் கருவியே உலகில் மிகச் சிறியது எனக் கூறுகின்றனர்.
இந்த சிறிய கருவியைத் தற்காலிகமாக இதயத் துடிப்பு தேவைப்படுபவர்களுக்குப் பொருத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியை உருவாக்கும் குழுவின் தலைவரான உயிரி மின்னணுவியலின் (bioelectronics) முன்னோடி ஜான் ஏ ரோஜர், இது இதய பிரச்சினைகளுடன் பிறக்கும் 1% குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
7 நாட்களில் குழந்தைகளின் இதயம் தானாகச் சரியாகிவிடும் எனத் தெரிவித்த அவர், அதுவரை இதனைப் பொருத்திக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கு இதய சிகிச்சைகளின்போதும் இதைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதயத்தில் மட்டுமல்லாமல் நரம்பு, எலும்பு மற்றும் வலியைக் குணப்படுத்துவதிலும் இதைப் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதேசத்தில் இன்று (05.04) மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது. ஓட்டமாவடி – மீராவோடை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
இந்த இளைஞன் மாத்தளை நோக்கி பயணிப்பதற்காக தியாவட்டவான் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் நிரப்பும் போதே குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சைகாக வந்த இளம் பெண்ணை, சம்பந்தப்பட்ட மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாருக்கு புகார் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மருத்துவ சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி, தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறியுள்ளார்.
அதன்படி தற்போதுள்ள தங்கத்தின் விலையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு விலை குறைய வாய்ப்பு என்பதால் இந்த கணிப்பு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய மாதங்களில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை உயர்வு , நகைகளை வாங்கும் நுகர்வோருக்கு ஒரு சுமையாக உள்ளது.
இந்நிலையில் சந்தை ஆய்வாளர்கள் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படக்கூடும் என்றும், இது வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
சில கணிப்புகள் தங்கத்தின் விலையில் வியத்தகு 38% வீழ்ச்சியை கணிக்கின்றன, இது உலகளவில் முதலீட்டு உத்திகளை மறுவடிவமைக்கக்கூடிய ஒரு மாற்றமாகும்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனமான மார்னிங்ஸ்டாரின் சந்தை மூலோபாய நிபுணர் ஜான் மில்ஸ், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $1,820 ஆகக் குறையக்கூடும் என்று கணித்துள்ளார்.
இது அதன் தற்போதைய அவுன்ஸ் ஒன்றுக்கு $3,080 விலைக்கு முற்றிலும் மாறுபட்டது. இது கிட்டத்தட்ட 38% குறைப்புக்கு சமமாக இருக்கும், இது தங்க சந்தையை வியத்தகு முறையில் மாற்றக்கூடிய ஒரு சூழ்நிலையாகும்.
தங்கத்தின் சமீபத்திய உயர்வு புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார உறுதியற்ற தன்மை மற்றும் பணவீக்க கவலைகள் ஆகியவற்றின் கலவையால் உந்தப்பட்டது.
அமெரிக்க பொருளாதாரம் மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்ற இறக்கங்களுக்கு அஞ்சி முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக நோக்கி படையெடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே பதவி வகித்தபோது தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வர்த்தக பதட்டங்கள் இந்த கவலைகளை அதிகப்படுத்தி, தங்கத்திற்கான தேவையை மேலும் அதிகரித்தன.
தற்போதைய ஏற்ற இறக்க போக்கு இருந்தபோதிலும், மில்ஸ் மற்றும் பிற ஆய்வாளர்கள் காரணிகளின் கலவையானது தங்க விலையில் கூர்மையான சரிவைத் தூண்டக்கூடும் என கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பாஸ் தர்க்ஷன் நேற்றையதினம் (04.04) சென்னையில் கைது செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறால் , பிக்பாஸ் தர்க்ஷன் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தர்க்ஷன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. இது தொடர்பில் நடிகை சனம் செட்டி பதிவில்,
என் நண்பர்கள் அனைவரும் தர்ஷன் கைது என்ற செய்தியை எனக்கு ஷேர் செய்தார்கள் . அதை பார்த்ததும், சத்தியமாக எனக்கு மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஏனென்றால் பல துரோகங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.
இதனால், இந்த செய்தியை கேட்டு நான் ஒரு தடவை மகிழ்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் நானும் ஒரு சாதாரண பெண் தானே. ஆனால், இன்னொருத்தருக்கு நடக்கும் அநியாயத்தில், என்னுடைய நியாயத்தை நான் தேட முடியாது.
இதனால், எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டேன். தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவருக்காக நான் கூட குரல் கொடுத்து இருப்பேனா? இல்லையா? என்று. நிச்சயமாக நான் குரல் கொடுத்திருப்பேன்.
ஒரு பார்க்கிங் சண்டை இவ்ளோ பெரிய அளவில் பூதாகரமாக ஆக்கப்பட்டு, அதே நாளில் தர்ஷன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவ்வளவு வேகமாக சட்டம் தன் கடமையை செய்யுமா?
அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து இருக்கிறார்கள். ஒரு வழக்கை விசாரித்துவிட்டுத்தான் அரெஸ்ட் பண்ணுவாங்க. ஆனால், இந்த கேசில் எதிர் மனுதாரர் உயர்நீதிமன்ற நீதிபதியோட மகன் என்பதால், இவ்வளவு அவசரமா?
சண்டை நடந்த போது இருந்த சிசிடிவி ஆதாரம் எங்கே? இந்த பிரச்சனைக்கு பின் இருக்கும் உண்மை வெளிவர வேண்டும்.
தவறு செய்யாதவர்கள் தண்டனை அனுபவித்தால், அது மிகப்பெரிய குற்றம். அதை பண்ண நாங்க விடமாட்டோம் என நடிகை சனம் ஷெட்டி, கைதான தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் நடிகர் தர்க்ஷன், சனம் செட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும், அதன்பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நடிகை சனம் செட்டி பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பானது பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பு ஒரே நாளில் வெகுவாக சரிந்துள்ளததாக கூறப்படுகிறது.
பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த பில்லினர்களின் செல்வத்தில் நேற்று ஒரே நாளில் 208 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது 13 ஆண்டுகளில் நான்காவது பெரிய ஒரு நாள் சரிவாகும். மேலும் கோவிட் தொற்று காலகட்டத்துக்கு பிறகு இது மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.
பில்லியனர்களில் குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 17.9 பில்லியன் டொலர்களையும், ஜெஃப் பெசோஸ் 15.9 பில்லியன் டொலர்களையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளனர்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் ட்ரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
அதன்படி, இலங்கை பொருட்கள் மீது 44 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.