தந்தைக்கும் மகனுக்குமிடையே வாக்குவாதம் : தீ வைத்து எரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி!!

தந்தை மகனுக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் முச்சக்கர வண்டியொன்று எரிந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (0704) இரவு மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் அதீத வேகத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்!!

 மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மந்திகை, மடத்தடிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியது. இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.

அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டியில் உள்ள அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகள் இதற்காகப் பயன்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நான்கு நாள் விடுமுறை வழங்கப்படும், மேலும் நிகழ்வின் போது சாலை போக்குவரத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவறவிட்ட பாடசாலை நாட்களை ஈடுசெய்ய, பாதிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் ஏப்ரல் 28ஆம் திகதி முதல் ஐந்து வாரங்களுக்குள் ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வகுப்புகளை நடத்தும்.

கல்வி நடவடிக்கைகள் தொடர்வதை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாகாண வலயக் கல்வி இயக்குநருக்குத் தெரிவிக்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

மீரிகம – பஸ்யால வீதியில் இதிபரபே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, ஞாயிற்றுக்கிழமை (06.04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், பொகலகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

தங்காலை – மாத்தறை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.

பஸ் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் பஸ் தரிப்பிடத்தில் வைத்து குறித்த பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட வேளையில் பஸ் மோதி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திக்வெல்லவில் இருந்து தங்காலை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் மோதியே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

14 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்த சவுதி அரேபியா!!

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா (Saudi Arabia) தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இது அகற்றப்படலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, மொராக்கோ மற்றும் யெமன் ஆகியவை உள்ளடங்குகின்றன.

இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களையும் சவூதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.

சிலர் சவூதி அரேபியாவிற்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பின்னர் ஹஜ் பருவகாலம் வரை சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

இதன் விளைவாக கடுமையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக கட்டுப்பாடுகளுக்குக் காரணம்

இந்த தற்காலிக கட்டுப்பாடுகளுக்குக் காரணம் வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்வது, விசா நிபந்தனைகளை மீறுவது மற்றும் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை ஏற்படுத்துவது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஹஜ் பருவத்தில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதோடு, அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் சில பகுதிகளில் திடீரென மாயமான மனிதர்களின் நிழல்கள்!!

 

இலங்கையில் ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களில் சூரியன், இன்று (07) பிற்பகல் 12:12க்கு உச்சம் கொடுத்தது. இதனால், மனிதர்களின் நிழல், சில நிமிடங்களுக்கு மறைந்துவிட்டது.

அத்துடன், அந்த பிரதேசங்களில் அதிக வெப்பமாக காலநிலை நிலவுகின்றது. அதேவேளை கொழும்பில் இன்று பிற்பகல் வேளையில் மக்களின் நிழல்கள் மறைந்து விடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிழல்கள் இன்று (07.04.2025) மதியம் 12.12 மணிக்கு ஒரு கணம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் ஒரே நேரத்தில் கொழும்பிற்கு மேலான வான்பரப்பில் உச்சம் கொடுப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்து கொன்ற கணவன் கூறிய காரணம்!!

இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவரது மனைவி அஸ்மா கான் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், நசருல்லா வேலை தேடி வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியபோது, நசருல்லா சுத்தியல் ஒன்றை எடுத்து மனைவியை தலையில் தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அஸ்மா கான், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அஸ்மா கான் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் நசருல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில்,மனைவியின் நடத்தையில் நசருல்லாவுக்கு சந்தேகம் இருந்ததால் இந்த கொலை அரங்கேறியது தெரிய வந்தது.

பேபி நீங்கள் வரவில்லை, உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்!!

விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது.

இந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் இருந்த இரண்டு விமானிகள் வெளியேற முடிவு செய்தனர்.

இதில் ஒரு பைலட் பாராசூட் மூலம் தரையிறங்கி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், மற்றொரு பைலட் சித்தார்த் யாதவ் வெளியேற முடியாமல் இருந்தார்.

பின்னர், விமானமானது ஜாம்நகர் அருகேயுள்ள வயலில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் சித்தார்த் யாதவ் உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது உடல் ராணுவ மரியாதையுடன் ஹரியானா மாநிலத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட சானியா என்பவர் சித்தார்த் யாதவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவில் அந்த பெண், “கடைசியாக ஒரு முறை நான் பார்த்துக் கொள்கிறேன். பேபி நீங்கள் என்னை அழைத்துச் செல்ல வரவில்லை. எனக்கு நீங்கள் சத்தியம் செய்தீர்கள்” என்று கூறி கதறி அழுதுள்ளார். இது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்த உண்மை தெரிந்தால் இனி சாப்பிட்ட உடனே உறக்கத்திற்கு செல்ல மாட்டீர்கள்!!

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்க 3-4 மணிநேரம் ஆகும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது, அது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

சாப்பிட்ட உடனே தூங்குவதால் உடலில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என நாம் இங்கு பார்ப்போம். அஜீரண கோளாறு கொலஸ்ட்ரால் லெவலை உயர செய்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட உடனே தூங்குவது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும்.

மேலும் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே படுப்பது அல்லது தூங்குவதால் உணவு குடலில் தங்கி ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

இது அசிடிட்டியை அதிகரித்து சளி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். மேலும் தூக்கத்தின் போது உடல் செயல்பாடு குறைகிறது.

இதன்படி பார்த்தால் சாப்பிட்ட உடனேயே தூங்க சென்றால், உடல் குறைவான கலோரிகளையே எரிக்கிறது, இதன் விளைவாக எடை அதிகரிக்கும். இது நாளடைவில் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

அதே போல உணவிற்கு பிறகு உடனே தூங்குவது உடலில் சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்தும் செயல்முறையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது வளர்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் அளவை பாதிக்கிறது. இதன் விளைவாக நீரிழிவு நிலை வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

குறிப்பாக அசதி மற்றும் சோர்வு காரணமாக பலரும் சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

தொலைபேசி அழைப்பால் பறிபோன ஆசிரியரின் பெரும் தொகை பணம்!!

பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் இவ்வாறான பணமோசடி சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பரிசளிப்புக்கு குறித்த ஆசிரியை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த உண்மையென நம்பி தனது வங்கி கணக்கிலக்கத்தையும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் அந்த ஆசிரியர் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலை வழங்கிய சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் மீளப் பெறப்பட்டதாக தொலைபேசி குறுந்தகவல் அவருக்கு வந்துள்ளது.

பதுளை பகுதியில் ஆசிரியர்களை இலக்கு வைத்து இவ்வாறு பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பண்டிகை காலத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.

வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார், ஆனால் திடீரென்று அவரது முகம் வெளிறிப்போய், மயக்கமுற்று மேடையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர் வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். வர்ஷா மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, வர்ஷாவுக்கு எட்டு வயதில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருப்பினும், கடந்த 12 ஆண்டுகளாக அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தார் என்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாட்டின் சில பகுதிகளில் உச்சம் கொடுக்கும் சூரியன்!!

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (07.04) நண்பகல் 12.12 அளவில் கொழும்பு, அவிசாவளை, தலவாக்கலை, திம்புள்ள, கலக்கும்புர மற்றும் தம்பகல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை!!

நாட்டில் கடந்த சில தினங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் (07.04) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 901,939 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 31,820 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 254,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 29,170 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 233,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 27,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 222,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பில் நடந்த பயங்கரம் : சிறுவர்கள் மீது மோதிய கார் : சிறுமி பலி!!

கொழும்பு, மஹாபாகே பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பி சென்ற சாரதி பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.

இந்த விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் சாரதியை கைது செய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து கடந்த 5 ஆம் திகதி மாலை 4.20 மணியளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் தகவலுக்கமைய, காரை ஓட்டிய ஓட்டுநர், மோட்டார் சைக்கிள் ஒன்றை துரத்தி வந்துள்ளார்.

பின்னர் வீட்டின் முன் விளையாடிய சிறுவர்கள் மீது மோதியுள்ளார். கார் சுவர் மீது மோதி நின்ற நிலையில், சாரதி வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த ராகம, வெலிசறை பகுதியை சேர்ந்த 5 வயதான எலிசா ஜஸ்டின் ஹேமன் என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த சிறுவர்களாக 6 வயதுடைய டினோன் சித்மா பெர்னாண்டோ மற்றும் 3 வயதுடைய அனுகி ரிசித்மா பெர்னாண்டோ ஆகியோர் சிகிச்சைக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய காரின் ஓட்டுநரை அடையாளம் கண்டுள்ள நிலையில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அயல் வீட்டு நபருடன் நீண்ட காலம் ஏற்பட்ட மோதலையடுத்து அவரை கொலை செய்யும் முயற்சியில் அதிக வேகத்தில் குறித்த காரை ஓட்டி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற அயல் வீட்டு நபரை கொலை செய்வேன் கூறி அவரை காரில் துரத்தி சென்றுள்ளார். இதன் போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இன்று ஏற்படவுள்ள மாய நிகழ்வு!!

கொழும்பில் இன்று பிற்பகல் வேளையில் மக்களின் நிழல்கள் மறைந்து விடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிழல்கள் இன்று (07.04.2025) மதியம் 12.12 மணிக்கு ஒரு கணம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் ஒரே நேரத்தில் கொழும்பிற்கு மேலான வான்பரப்பில் உச்சம் கொடுப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை சூரியன் இலக்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கிறது.

அதன்படி, கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர் பகுதி மக்கள் இன்று முதல் அடுத்துவரும் 7 நாட்களில் பிற்பகலில் இதை மாய நிகழ்வை உணர முடியும் என்றும் வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.