நீதிமன்றத்தினால் இணைந்த காதல் ஜோடி : அசம்பாவிதம் தவிர்ப்பு!!

தருமபுரி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார், பிரியங்காவின் காதல் பிரச்சனை, கலவரமாக மாற இருந்த சூழலில் தற்போது நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு கிடைத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணியின் என்பவரின் மகன் ராஜ்குமார். இவர், நல்லாம்பள்ளி வன்னியர் தெருவைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் பிரியங்காவை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இந்த விடயம் அதியமான் கோட்டை காவல்நிலையம் வரை சென்றது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி சனிக்கிழமை அன்று, வெளியில் சென்ற பிரியங்கா வீடு திரும்பாததால், தன் மகளை கடத்திவிட்டதாக முனிராஜ் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாதி ரீதியான பிரச்சனை ஏற்படலாம் என்று கருதிய நல்லாம்பள்ளி கோயில் தெருவைச் சேர்ந்த மக்கள், அதியமான்கோட்டை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி இரவு 7 மணியளவில், நல்லாம்பள்ளி கிராமத்தில் நுழைந்த பிரியங்காவின் சகோதரர், இரண்டு வீடுகளின் மீது தாக்குதல் நடத்தினார். பதிலுக்கு தாக்குதல் நடத்த, அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெட்ரோல் குண்டுகளை தயார் செய்தபோது, பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு கிராமத்திலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், இச்சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை தர்மபுரி மாவட்டம் ஜெ.எம்-1 நீதிமன்றத்தில், காதலர்கள் ராஜ்குமார் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் தோன்றினர்.

விருப்பத்துடன் தான் ராஜ்குமாருடன் சென்றதாக பிரியங்கா ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, பிரியங்காவை காதலர் ராஜ்குமாருடன் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.

இரவில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உடல் கருகி இறந்த பரிதாபம்!!

 

பெங்களூருவில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கைலாஷ் எனும் மதுபான விடுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அச்சமயம் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் இறந்துள்ளார், தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல், உடற்கூறுகள் ஆகியவை ஆய்வுக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுவரை தீப்பற்றியதற்கான காரணம் தெரியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்த சுவிஸ் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

இலங்கைக்கு சுற்றுலா சென்ற சுவிஸ்லாந்து நாட்டு யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக நுவரெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் அமைந்துள்ள சிங்கல்ட்ரீ வனப்பகுதிக்கு தனியாக சென்ற போதே குறித்த யுவதியை நபரொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

வனத்திலிருந்து திரும்பிய சுவிஸ் யுவதி தான் தங்கியிருந்த விடுதியின் முகாமையாளருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 வயதான யுவதி ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், அந்த மலைப் பகுதியிலுள்ள ஸ்காப் தோட்டத்தைச் சுற்றிவளைத்து, சந்தேகத்தின் பேரில் 11 பேரை கைது செய்துள்ளனர்.

மானை இரையாக்க முயன்று காயமடைந்த பாம்பு!!

 

இரையாக்கி கொண்ட மான் ஒன்றை விழுங்க முயற்சித்து படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட மலைப்பாம்பு ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பதவிய, சீயாய பிரதேசத்தில், மலைப்பாம்பு மான் ஒன்றை விழுங்க முயற்சிப்பதை கண்ட ஒருவர் அது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது மானை விழுங்க முயற்சித்த மலைப்பாம்பு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

மலைப்பாம்பு பாதியாக விழுங்கியிருந்த இரையை கக்கியுள்ளது. அப்போது பாம்பின் வாய்ப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்துள்ள மலைப்பாம்பு சிகிச்சைக்கு பின்னர் பதவிய காட்டில் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 27 மந்திரவாதிகள் : நரித்தலைகளுடன் சிக்கிய பெண் சாமியர்கள்!!

 

வட மாகாணத்தில் குறி சொல்வது மற்றும் மந்திரவாத நடவடிக்கையுடன் ஈடுபட்டு வந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, விசா விதிமுறைகளை மீறிய இந்தியர்களை கைது செய்தனர்.

யாழ் குடாநாட்டில் பல இடங்களில் 25 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர் எனவும், இரண்டு பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இந்தியர்களில் 23 பேரில் ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளடங்குகின்றனர். அவர்கள் தென்னிந்திய நகரங்களிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய இந்த இந்தியர்கள் வடக்கில் ஜோதிட செயல்பாடுகளிலும் குறி சொல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவான எதிர்கால பலன்கள் குறித்து கூறுவதற்கு 200 ரூபாய் மாத்திரம் அறவிடும் இந்த குழுவினர் சூனியங்கள், கட்டுகளை அகற்றுவதற்கு 20000 முதல் 30000 வரை அறவிடுவதாக தெரியவந்துள்ளது.

தெய்வங்களின் படங்கள், பூஜை செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் நரி தலைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இந்தியர்கள், 30 நாள் சுற்றுலா விசாவில் வருகைத்தந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ரஜினியின் கட்சி இலட்சினைக்கு வந்த சிக்கல்!!

 

அரசியல் கட்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினி காந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.

2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது பாபா படத்திலேயே பயன்படுத்தி இருந்தார்.

இந்த பாபா முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை தயாரித்து வினியோகித்து வருகின்றனர்.

இந்த முத்திரை, தங்களது நிறுவனத்தின் இலட்சினைப் போல இருப்பதாக கூறி, வாக்ஸ் வெப் எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி வருகிறது.

இது தொடர்பாக ரஜினி காந்துக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

ரஜினி காந்தின் பாபா திரைப்படம் 2002-ம் ஆண்டிலேயே வெளிவந்துள்ள நிலையில், இந்த நிறுவனம் சுமார் 18 மாதங்களுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்!!

மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர். மேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார்.

கமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல, திறமையை’ என அவர் மறைமுகமாக அரசியல் பன்ச் அடித்தார்.

சமீபத்தில் ரஜினி அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மிகப்பெரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது!!

 
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக இராஜகிரிய பகுதியில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வை வழங்கும் வகையில் இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் நிறுவனமொன்றுடன் உள்நாட்டு நிறுவனமொன்றும் இணைந்து 2016 ஆம் ஆண்டு இந்த நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன.

குறித்த மேம்பாலமானது, 4 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு வழிப்பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும்

லண்டனில் குப்பைகளை பணமாக்கிய இலங்கை இளைஞன் : பிரித்தானியாவில் கோடீஸ்வரராக மாற்றம்!!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் குப்பை சேர்த்து கோடீஸ்வரராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஹர்ஷ ரத்நாயக்க என்பவர் கடின உழைப்பின் காரணமாக பிரித்தானியாவின் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவர் தொடர்பாக பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரத்நாயக்க என்பவர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்து கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்கு வந்தார். அங்கு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தானியங்கி பொறியியல் கற்கை நெறியை கற்றவர் Sunderland பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ஒரு வணிக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றார்.

“கழிவுப்பொருட்களை அகற்றும் நிறுவனம் ஒன்றில் பகுதிநேர இயக்க பணிகளுக்காக நான் பணியாற்றியிருக்கிறேன். என் பட்டப்படிப்பைப் படிக்கும்போது வாரம் 20 மணிநேர வேலை செய்வேன்” என 34 வயதான ரத்நாயக்க குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் குப்பைகளை பொறுக்குவது நான் செய்த ஒரே வேலையாக இருந்தது, அதனால் என் படிப்பு முடிந்ததும் தொடர்ந்து அதனை தொடர எனக்கு தோன்றியது. ஆனால் என் முதலாளி வியாபாரத்தை நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு செல்ல முடிவு செய்தார்.

அந்த நிறுவனத்தில் அவருக்கு இருந்த ஒரே சொத்து, 700 பவுண்ட் பெறுமதிய பழைய 3.4 டன் டிப்பர் ட்ரக் வண்டியாகும். என் நிலுவை மாத சம்பளத்திற்குப் பதிலாக அவர் எனக்கு இந்த ட்ரக்கை வழங்கினார், நான் ஏற்றுக்கொண்டேன். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வட லண்டனில் இந்த சம்பங்கள் இடம்பெற்றது.<

ரத்னாயக்கவின் முதல் சவால்களில் ஒன்று ஆங்கிலமாகும். அது தனது முதல் தாய் மொழி இல்லை, அவர் ஆங்கில மொழி பேசாத ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்ட ஒருவராகும். எனவே, அவர் தனது திறம்பட காலத்தில் ஆங்கில மொழியை கற்றார், இணைய உதவி மற்றும் யூடியூப் வீடியோக்களில் தானே தனியாக கற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் Junk Hunters என்ற நிறுவனத்தை ஆரம்பித்தவருக்கு குப்பைகளை சேகரிப்பதற்கு, தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கொடுப்பதற்கு, கடன் அட்டைகளை பயன்படுத்துவதற்கேனும் ஊழியர்கள் இருக்கவில்லை.

ஆனால் வங்கிகளிடமிருந்தும் மற்ற கடன் வழங்குனர்களிடமிருந்தும் எந்த நிதி இல்லாமையையும் சமாளிக்க அவருக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. “வங்கிகள் எனக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை, ஏனெனில் எனக்கு இங்கிலாந்தில் ஒரு கடன் வரலாறு இல்லை, பணப்புழக்கம் எனக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது” என ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகள் எனக்கு உதவவில்லையென்றால், வேறு எங்கு ஆலோசனை பெற வேண்டும் என்று எனக்கு தெரியாது, எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் என் சொந்த சேமிப்பு பணம் மூலம் ஏதாவது செய்யலாம் என திட்டமிட்டேன். அப்போது என்னிடம் 160 பவுண்ட் மட்டுமே காணப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு பகுதி நேர வேலைகளை செய்ய திட்டமிட்டேன். ஒவ்வொரு நாளும் காலை 4.30 மணியளவில் என் காலை வேலைக்குச் சென்றேன் – ஒரு உள்ளூர் செய்திமடலுக்கு காகித வட்டங்கள் செய்து கொடுப்பதே முதல் பணியாகும். காலை 5.30 மணியளவில் வேலை ஆரம்பித்து 7.30 மணியளவில் முடியும்.<

அதன் பின்னர் 8 மணியளவில் வீடு செல்லும் நான் எனது ட்ரக் வண்டியை எடுத்து கொண்டு குப்பை சேகரிக்க செல்வேன். மாலை 5.30 மணியளவில் குப்பை சேரிக்கும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவேன். அதனை தொடர்ந்து 6 மணியளவில் இந்திய உணவகம் ஒன்றில் நள்ளிரவு வரை பணியாற்றுவேன்.

எனது சவால்களை வெற்றி கொள்வதற்கும் என்னை சமாளித்து கொள்வதற்கும் நான் தொடர்ந்து வார இறுதி நாட்கள் உட்பட தினமும் 19 மணித்தியாலங்கள் வேலை செய்து வந்தேன்.

மற்றவர்களின் குப்பைகளை சேகரிப்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என உணர்ந்தார். மேலும் அவர் தனது முதல் வருடத்தில் 70,000 பவுண்ட் இலாபத்தை பெற்றார். ஆனால் சராசரியாக நான்கு மணி நேரம் தூங்கினார்.

Junk Hunters நிறுவனம் முதல் வருடம் முதல், எட்டு வருடங்களுக்கிடையில் புதிய ட்ரக்களை கொள்வனவு செய்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனம் 14 முழுநேர ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் வருடத்திற்கு சுமார் 1.8 மில்லியன் பவுண்ட் வருமானத்தை ஈட்டுகின்றது.

மேலும் எதிர்பார்த்ததனை விடவும் அதிகமான வருமானம் அவருக்கு தொடர்ந்து வருகின்றது. லண்டனில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களில் ஒருவராக அவர் காணப்படுகின்றார். தற்போது அவர் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளின் தந்தையாகியுள்ளார்.

வாழ்க்கையில் தகுதியான தொழிலை முதலில் தெரிவு செய்து படிப்படியாக முன்னேறினால் சிறப்பான ஒரு இடத்திற்கு செல்ல முடியும் என ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல் சுற்றுச் சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம்!!

எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளாகி இரண்டு நாட்களாகியும் எண்ணெய் கசிவு தொடர்வதால், கிழக்கு சீன கடலில் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பலில் பற்றிய தீ இன்னமும் எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காணாமல் போன 32 பேரில் 30 பேர் ஈரானியர்கள், இருவர் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என, பிபிசி செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டு கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு, உதவி செய்ய அமெரிக்க கடற்படை இராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது.

எண்ணெயை விட லேசான படிமத்தை கொண்டிருக்கக் கூடிய ஆவி மாதிரியான இந்த திரவம், கடல்பரப்பில் கலக்கும்போது, சுற்றுச்சூழலுக்கு கச்சா எண்ணெயை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

“இந்த திரவம் நீராவியாகி, தண்ணீரில் கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என ஜே டீ டி எரிசக்தி சேவையின் ஜான் ட்ரிஸ்கோல் பிபிசியிடம் தெரிவித்தார்.

“நிறமோ அல்லது நறுமணமோ இந்த திரவத்திற்கு இல்லை என்பதால், இதனை கடலில் கண்டுபிடித்து சுத்தப்படுத்துவது மிக சிரமமானது” எனவும் அவர் கூறினார்.

1,.36,000 டன் அளவிலான ஈரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பல் ஷாங்காயிலிருந்து 160 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் பாதிக்கப்பட்ட சீன சரக்கு கப்பலில் இருந்த 21 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை மேற்கொள்ள, பல கப்பல்களை சீனா அனுப்பியுள்ள நிலையில், தென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றை இதற்காக அனுப்பியுள்ளது.

தனிமையில் இருந்த பெண் மர்மமான முறையில் மரணம்!!

பதுளை – நெலுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் பதுளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்தே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

75 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர், தலவத்துகொட பிரதேசத்தில் வீடொன்றில் தொழில் புரிந்து வரும் நிலையில் குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பாவாக மாறிய கொழும்பு : விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் தற்போது காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு வறட்சியான காலநிலையே காரணம் எனவும், பெப்ரவரி மாத இறுதி வரை இதே கடுங்குளிர் நிலவும் என்றும் வானிலை அவதான நிலையத்தின் இயக்குனர் எஸ்.பிரேமலால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

எதிர்வரும் பத்தாம் திகதியின் பின் நாட்டில் பெய்யவிருக்கும் மழையை அடுத்து, இந்தக் குளிரான காலநிலை குறைவடையும். கடந்த சில தினங்களாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலை காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன், ஒருவித மர்மக் காய்ச்சல் இலங்கையில் பல பாகங்களிலும் பலருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காய்ச்சலுக்கான காரணங்கள் பலவாறாக கூறப்பட்டுள்ள போதிலும், கடும் வறட்சியான காலநிலையும், கடுமையான குளிரான காலநிலையுமே இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழில் பட்டம் விட்டு விளையாடிய சிறுவன் கிணற்றில் விழுந்து பலி!!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் 11 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர் காத்தாடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், வெகுநேரம் சிறுவனைக் காணாது தேடிய வேளை அவர் கிணற்றில் விழுந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி விவசாயி பலி!!

ஏறாவூர்ப்பற்று – வெள்ளைக்கல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைத் தாக்குதலில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் முத்துலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 51) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் மாடுகளைப் பராமரித்துக் கொண்டு வாடியில் இருந்தபோது காடுகளுக்குள் இருந்து வந்த யானைகளில் ஒன்று அவரை தாக்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த நபர் தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் அயல் வாடிகளில் இருந்தவர்களுக்கு தெரியவந்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கைத் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை!!

போட்டி ஒன்றின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 2017ஆம் ஆண்டு ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கை தமிழன் லூசியன் புஸ்பராஜ் மறுத்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற ஆணழகன் போட்டி ஒன்றின் போது இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இது தமது கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக அமைந்துள்ளதாக புஸ்பராஜ் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் தாம் பங்கேற்பதை தடுக்கும் நோக்கமே இந்த விடயத்தின் பின்னால் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எனினும் தாம் அமரிக்காவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் நோக்கை கைவிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற நடைபெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் என்ற இளைஞன் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றிருந்தார்.

இதிலிருந்து, ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பனிப்பிரதேசமாக மாறியுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி!!

 

அமெரிக்காவில் உள்ள உலகின் உயரமான நயாகரா நீர்வீழ்ச்சி கடும் குளிர் உறைந்து போயிருப்பதை சுற்றுலாப்பயணிகள் பிரமிப்புடன் பார்த்து செல்கின்றனர்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனி நிறைந்துள்ளது.

கொட்டும் பனியால் சாலைகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் வெள்ளைத்துணி போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவி வருகிறது. கடுமையான குளிர் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் பனியில் உறைந்து காணப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சியும் அமெரிக்காவில் பனி பொழியும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திற்கும் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.

இந்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியும் கடும் குளிரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இந்த நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போய்யுள்ளது.

ஆர்பரித்து கொட்டும் நீரால் பல மீட்டர் தொலைவிற்கு எங்கும் தண்ணீர் சிதறும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதி தற்போது உறைந்து போயுள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறையவில்லை. ஆனால் தண்ணீர் கொட்டும் பகுதியை தவிர சுற்றியுள்ள பகுதிகள் பனிப்பிரதேசங்களை போல் காட்சி அளிக்கின்றன. முற்றிலும் உறையாவிட்டாலும் சிறிய அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.

நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள மரங்களும் வெள்ளை நிறத்தில் பொம்மை மரங்களைப் போல் உறைந்துள்ளது. பனிக்கட்டியாய் உறைந்து போயுள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர்.

நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவுக்கு கடுமையான குளிரும் நிலவி வருகின்றது.