உயிரிழந்த 70 வயதான மூதாட்டி ஒருவரிடன் சடலத்தை நாய்யொன்று பாதுகாத்து வந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதுளை – நெலும்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அந்த வீட்டில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரின் சடலத்திற்கு அருகில் நாயொன்று காவல் காத்து வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மூதாட்டி உயிரிழந்து சில நாட்கள் கடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பதுளை நீதவான் ஆனந்த மொரகொடவின் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றதுடன், சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனையிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் 9 வயதான மாணவன் ஒருவரை அடித்து காயங்களுக்குள்ளாக்கிய ஆசிரியர் ஒருவருக்கு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர், நேற்று முன்தினம் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 25 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் ஐந்தில் கல்வி கற்கும் இந்த மாணவர், குறித்த ஆசிரியரினால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
போலித் தகவல்களை வழங்கி வெளிநாடு செல்ல முயற்சித்த 18 வயதான யுவதி ஒருவர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த யுவதி 15 வயதில் தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில், ஒரு வருடம் அங்கு அவர் பணியாற்றியுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த இந்த யுவதிக்காக வேறு ஒருவரின் பிறப்பு சான்றிதழை பயன்படுத்தி போலி கடவுச்சீட்டு தயாரித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டு பணியகத்தின் பன்னிப்பிட்டிய பயிற்சி மத்திய நிலையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இதற்போது அங்கு அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியின் போது உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து மீண்டும் இலங்கை வந்தவர் திருமணம் முடித்துள்ளார். எனினும் குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டிற்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக யுவதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போலி கடவுச்சீட்டை தயாரிக்க உதவியவர்களை தேடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் உள்ள வீடு ஒன்றில் 35 பவுண் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த திருட்டுச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை வீட்டில் உள்ள இரு பெண்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளேச் சென்ற திருடன் குறித்த நகைகளை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 01 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நெளுக்குளம் சந்திக்கருகாமையில் உழுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த பட்டா வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கிள் தீபற்றியும் எரிந்துள்ளது
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வந்த பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான நெய்மர், பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறினார்.
இதற்காக பிஎஸ்ஜி அணி பார்சிலோனாவிற்கு இடமாற்றக் கட்டணமாக 222 மில்லியன் யூரோ வழங்கியது. இதுவே கால்பந்து வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.
நெய்மர் சென்றதால் அவருக்கு மாற்றாக முன்னணி வீரர் ஒருவரை பார்சிலோனா அணி தேடிவந்த நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் லிவர்பூல் அணியின் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிலிப் கவுட்டினோ தேர்வாகியுள்ளார்.
25 வயதான இவரை கடந்த 2013-ல் இண்டர் மிலன் அணியில் இருந்து 8.5 மில்லியன் பவுண்ஸிற்கு லிவர்பூல் அணி வாங்கியது.
இவர் கடந்த சீசனில் லிவர்பூல் அணிக்காக 14 கோல்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஜனவரி மாதம் லிவர்பூல், கவுட்டினோவுடனான ஒப்பந்தத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தது.
இந்நிலையில் நெய்மருக்குப் பதிலாக கவுட்டினோவை வாங்க பார்சிலோனா விரும்பியது. கடந்த ஆகஸ்ட் மாத்தில் இருந்தே பார்சிலோனா அவரை தன்வசம் இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
ஆனால் லிவர்பூல் நிர்வாகம் கவுட்டினோவை விட விரும்பவில்லை. கவுட்டினோ பார்சிலோனா செல்வதை வெளிப்படையாக தெரிவித்த போதிலும் லிவர்பூல் விடாப்பிடியாக இருந்தது.
இந்நிலையில் தற்போது மிட் சீசனில் நடைபெறும் டிரான்ஸ்பரில் பார்சிலோனா அணிக்குச் செல்ல கவுட்டினோ முயற்சி செய்தார். இனிமேல் இவரை வைத்தால் வேலைக்கு ஆகாது என லிவர்பூல் அணி நினைத்ததால் கவுட்டினோவை வெளியிட தீர்மானித்தது.
இதுகுறித்து பார்சிலேனா அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பார்சிலேனா 160 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 1218 கோடி ரூபாய்) கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த தொகை கால்பந்து வரலாற்றில் நெய்மருக்கு அடுத்தப்படியாக வழங்கப்படும் மிகப்பெரிய தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு கிளப்புகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் கவுட்டினோ பார்சிலோனா சென்றுள்ளார். பார்சிலோனா ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பார்சிலோனா ஓஸ்மான் டெம்பெல்-ஐ 105 மில்லியன் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் 2ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி – அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 6 வயதுச் சிறுமியும், முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவரும் உயிரிழந்திருந்தனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, உயிரிழந்த சிறுமியின் தாத்தாவான 65 வயதுடைய துரைசிங்கம் என்பவரும் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற ஹயஸ் வாகனமானது முன்னால் சென்ற வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்ட போது, பருத்தித்துறையில் இருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதித் தள்ளியது.
இதில் வடமராட்சி, கற்கோவளம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயதான ராஜ்குமார் டனிஸ்ரா மற்றும் 57 வயது நிரம்பிய சிங்காரவேலு பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
ராஜ்குமார் டனிஸ்ரா என்ற சிறுமி முதன்முறையாக பாடசாலைக்கு சென்ற போதே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பேத்தியை பிரிந்த தாத்தாவும் ஒரு வாரத்திற்குப் பின் இன்று உயிரிழந்துள்ளார்.
விபத்தில், ஹயஸ் ரக வாகனத்தின் சாரதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உணவு பொதியிட பயன்படுத்தப்படும் 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உணவு பொருட்களை பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீனின் (லஞ்சீட்) விலை அதிகரித்துள்ளதால் உணவு பொதிகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒரு உணவுப் பொதியினை 10 ரூபாவால் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (09.01.2017) காலை 10 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வம் புஸ்பராணி என்பவர் அவரது மகளின் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந் நிலையில் வவுனியா நெடுங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பியசேனகே எதிரிசிங்க என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் மாலை இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு இருவரும் முரண்பட்டுள்ளனர்.
பின்னர் குறித்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதுடன் குறித்த நபரும் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த குறித்த பெண்ணின் பேத்தி அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அயலவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தடவியல் பொலிஸாருடன் இணைந்து மகாறம்பைக்குளம் காவலரண் பொலிஸார் வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக அஞ்சலோ மத்யூஸ் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அணித்தலைவர் மத்யூஸ் உபாதை காரணமாக தற்காலிகமாக அணியிலிருந்து நீங்கியிருந்ததுடன் அவருக்கு பதிலாக தினேஷ் சந்திமால், உபுல் தரங்க, லசித் மலிங்க, திசர பெரேரா ஆகியோர் 3 தடவைகள் அணியை வழி நடாத்தியிருந்தனர்.
30 வயதுடைய அஞ்சலோ மத்யூஸ் எதிர்வரும் இலங்கை சிம்பாப்வே பங்களாதேஷ் முக்கோண ஒருநாள் தொடரை வழி நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா – நெளுக்குளம், ஈசன்கோட்டம் பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 19 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான நிலையில் சூழலை வைத்திருந்த 14 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தினால் 33,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இந்த பகுதிகளில் சுமார் 525 வீடுகள் பார்வையிடப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன – என்று வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வைப் பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..
நெளுக்குளம், ஈசன்கோட்டம் பகுதிகளில் 19 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நெளுக்குளம் மற்றும் ஈசன்கோட்டம் பகுதிகள் தொடர்ந்தும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வீடுகள் பார்வையிடப்பட்டு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் தமது பகுதிகளைச் சுத்தப்படுத்தி டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.எமது சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடும்போது, டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் இனங்கானப்பட்டால் சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
கடந்த 2012ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அத்துடன் 45 ஆயிரம் ரூபா நஷ்டஈடும், 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அவற்றை கட்டத்தவிறின் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
குறித்த வழக்கானது சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த எதிரியான தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் உள்ள கணவன் கைவிட்டுச்சென்ற நிலையில் கூலித்தொழில் செய்து பிழைக்கும் திருமதி சுரேஸ்குமார் சுகந்தினியின் குடும்பத்தில் உள்ள நன்றாக கற்கக்கூடிய 3 பிள்ளைகள் கற்றல் உபகரணங்கள் இல்லாமை மற்றும் பிள்ளைகளின் சீருடை தைத்து எடுப்பதற்கு பணம் இல்லாத நிலையில் பாடசாலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில் தாயார் மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டபோது லண்டன் V3 அமைப்பினர் ஊடாக நேற்று 08.01.2018 திங்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இது பற்றி கருத்து வெளியிட்ட பாடசாலை அதிபர் இப்பாடசாலையில் இவ்வாறான வறுமைப்பட்ட பிள்ளைகள் பலர் கற்று வருவதால் எதிர்காலத்தில் பல உதவிகளை மாணவர்கள் வேண்டி நிற்பதாக குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அஜீஸ் அன்சாரிக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டு தோறும் சிறந்த திரைப்படங்கள், தொலைக் காட்சி தொடர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டிற்கான கோல் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி லொஸ் ஏஞ்சல் நகரில் உள்ள பேவெர்லி ஹில்டன் என்ற நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் ஹொலிவுட் பிரபலங்கள், இயக்குனர்கள், தொலைக்காட்சி தொடர் நடசத்திரங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்தாண்டிற்கான சிறந்த திரைப்படமாக Lady bird அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த அனிமேஷனுக்கான படமாக Coco அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல பிரபலங்கள் விருது வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட நடிகர் அஜீஸ் அன்சாரிக்கு, சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் Master of none என்ற தொலைக்காட்சித் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த 17 வயது பெண்மணியான நாட்டியா பிறப்பிலேயே Ambras Syndrome- ஆல் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், இவரது முகம் முழுவதும் முடிகள் வளர்ந்து மிகவும் இருட்டாக இருக்கும்.
2010 ஆம் ஆண்டில் உலகிலேயே முடியாலான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். இளம் வயதிலேயே லேசர் அறுவை சிகிச்சை செய்தும் அது பலனளிக்கவில்லை, மருத்துவர்களாலும் இவரது முகத்தில் வளரும் முடியை கட்டுப்படுத்த இயலவில்லை. தற்போது 17 வயதை எட்டியுள்ள நாட்டியாவுக்கு காதலன் கிடைத்துள்ளார்.
தனது காதல் வாழ்க்கையால் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டியா கூறியதாவது, பள்ளிப்பருவத்தில் என்னை சிலர் குரங்கு என்று அழைப்பார்கள், ஆனால் அதற்கு ஒருபோதும் நான் வருந்தியது கிடையாது. ஏனெனில் எனக்கு அதிக நண்பர்களும் இருக்கின்றனர்.
தற்போது எனது நிலையை புரிந்துகொண்ட காதலன் கிடைத்துள்ளார், அவரால் எனது வாழ்வில் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது.
நாட்டியா தனது முகத்தை கிளின் ஷேவ் செய்து கொண்டு தனது காதலனோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆசையாக தத்தெடுத்து வளர்த்த மகனே சொத்துக்காக தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு மாதிரிமேடு மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாயகி(85), இவருக்கு கிருஷ்ணவேணி என்ற சகோதரி உள்ளார், அவரும் அதே பகுதியில் தான் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரங்காநாயகியின் குடும்பத்தினர் சமீபத்தில் வெளியூர் சென்றுள்ளனர், இதனால் அவருக்கு துணையாக கிருஷ்ணவேணி உடன் இருந்துள்ளார். அதன்பின் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், அவரது உறவினர்கள் கதவை திறந்து பார்த்த போது, உள்ளே இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.
ஆனால் அவர்களிடமிருந்த நகைகள் போன்றவைகள் காணாமல் போயிருந்ததுடன், கொலையாளி சிக்காமல் இருப்பதற்காக அங்கு மசால் மற்றும் மஞ்சள் பொடிகளை தூவிவிட்டு சென்றுள்ளான்.
இது நகைக்காகத் தான் நடந்திருக்கும் என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த கொலையை செய்தது ரங்கநாயகியின் வளர்ப்பு மகனான பாலகிருஷ்ணன் தான் என்பது தெரியவந்துள்ளது.
அதன்பின் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, ரங்கநாயகி-மாரி தம்பதிக்கு நீண்ட காலமாக வாரிசு இல்லாத காரணத்தினால் பாலகிருஷ்ணனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏழுமலை பிறந்தாலும், இருவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சொத்து விவகாரத்தில் ரங்கநாயகி, சொந்த மகனுக்கே சாதகமாக இருந்துள்ளார், இதனால் பாலகிருஷ்ணன் மற்றும் ரங்கநாய்கிக்கு இடையே தொடர்ந்து சண்டை வந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது, இருப்பினும் கோபத்தில் இருந்த பாலகிருஷ்ணன், சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து இருவரையும் கழுத்தறு கொலை செய்துவிட்டு கொலையை, நகைக்காக நடந்தது போல திசை திருப்ப முயன்றுள்ளார்.
பொலிசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின்னாக பதிலளித்ததால் சிக்கியுள்ளார்.