கணித பாடம் தொடர்பான அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!!

கணித பாடம் தொடர்பிலான அச்சத்தினால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தெஹியத்தகண்டிய அரலகங்கவில கெக்குலுவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன், கணித பாடத்திற்கு உரிய முறையில் பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்.

17 வயதான இசார ஜனித் சந்திரசிறி என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

கணித பாட பரீட்சைக்குத் தோற்றி வீடு திரும்பிய மாணவன், தாம் சரியாக பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நேற்று முன்தினம் நஞ்சு அருந்தியுள்ளார்.

உடனடியாக உறவினர்கள் நஞ்சு அருந்திய மாணவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளில் அதி சிறந்த விளங்கும் இந்த மாணவன் தவணைப் பரீட்சைகளில் வகுப்பில் முதல் நிலையை எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 600 யாசகர்கள் : ஜனவரி முதல் யாசகத்தில் ஈடுபட தடை!!

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாசகத்தில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரம் கருதி, அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக அம்பலாந்தோட்டை – ரிதிகமயில் 80 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு நிலையமொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

யாசகத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறு முதலில் அவர்களிடம் கருணை அடிப்படையில் கோருவதாகவும், அதன்படி அவர்கள் செயற்படா விட்டால், மாநகர சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை!!

இலங்கையில் வட,கிழக்கு பருவமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடை மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சையில் மோசடி செய்த மாணவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியான முறையில் கணிதப்பாடத்திற்கு விடையெழுதியதாக கூறப்படும் மாணவரின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மாணவர் எஞ்சியுள்ள ஏனைய பாடங்களை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய பாடங்களின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுராதபுர வெலிசிங்க ஹரிஸ்சந்திர வித்தியாலய மாணவர் ஒருவரே இந்த நிலைக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வௌியீட்டுக்கு தயாராகும் இமைக்கா நொடிகள்!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மறுபுறத்தில் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!!

நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் நேற்று கூடிய வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடியது.

இதன்போது நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அதிகளவில் நுகர்வு செய்யப்படும் நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!!

நடிகர்களின் காதல் விவகாரம் பற்றிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் தீயாக பரவிவிடுகிறது. அதுவும் அதில் எதாவது சர்ச்சையான விஷயம் என்றால் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து விடுவார்கள்.

அந்த வகையில் 52 வயதாகும் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 23 வயதாகும் Ankita Kowarஐ காதலித்து வருவது பற்றி முன்பே விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். மிலிந்த் சோமன் சமீபத்தில் Ankita Kowarன் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதால் அடுத்த வருடம் திருமணம் நடைபெறவுள்ளது.

DD எடுத்த அதிர்ச்சி முடிவு!!

தொகுப்பாளர்களில் மிகவும் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் ஒரு சில நாட்களாக தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.

இதை உண்மை என்று நிரூபிக்கும் பொருட்டு பவர் பாண்டி படத்தில் ‘செல்வி’ திவ்யதர்ஷினி என்று தான் இவர் பெயர் திரையிடப்பட்டது.

தற்போது இவர் தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சில செய்தி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர்.

வெளிவந்தது ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ : தமிழகத்தில் பரபரப்பு!!

அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி உயிரிழந்தார்.

இவரது இறப்பில் பல மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போதும் அவர் வைத்தியசாலையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

20 நொடிகள் உள்ள அந்த காட்சியில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் என்பவர் வெளியிட்டுள்ளார், நாளை ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணொருவர் தொடர்ந்து அவமதித்ததால் தற்கொலை செய்த இளைஞன்!!

நீர்கொழும்பில் பெண் ஒருவரால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். கட்டான, கிம்புலாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட 25000 ரூபா கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஏற்பட்ட அவமானத்தால் அவர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
கடன் வழங்கிய பெண் குறித்த இளைஞனின் வீட்டுக்கு சென்று அவமதித்துள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த இளைஞன் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த இளைஞர் அந்த பிரதேச பட்டாசு தொழிற்சாலையில் சேவை செய்துள்ள நிலையில் அதன் உரிமையாளரான பெண் ஒருவரிடம் கடன் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த இளைஞர் அந்த பெண்ணிடம் வட்டிக்கே 25000 ரூபாய் பணம் பெற்றுள்ளார் என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இடையில் அவரால் ஒழுங்கான முறையில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர் அவரை அவமதிக்கவும் அங்கிருந்து விலக்க தீர்மானித்துள்ளார்.
எனினும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பார்க்கும் இடம் எல்லாம் அந்த பெண்ணால் அவர் அவமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மரவிரக்தியடைந்தவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு!!

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

இதற்கமைய வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகளும் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

அதன் பின்னர் ஒன்றறை மணித்தியாலங்கள் ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதோடு, பிற்பகல் 01.30க்கு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வேட்புமனு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடையுடைத்து திருட்டு!!

 
வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தினை நேற்றிரவு (19.12.2017) உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு வழமை போன்று இரவு 9.20 மணியளவில் வர்த்தக நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை 7.20 மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறக்கச் சென்ற சமயத்தில் வர்த்தக நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்து பணம், பொருட்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தில் உரிமையாளர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டேரியாக மாறும் ஹன்சிகா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா, தற்போது படவாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில் அவர் அடுத்ததாக காட்டேரியாக அவதாரம் எடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா சமீபத்தில் பட வாய்ப்பின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகியது.

தனது நண்பர்களிடம் பட வாய்ப்பு கேட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானார். அதர்வா போலீசாக நடிக்கும் இந்த படத்தில் ஹன்சிகாவுக்கும் அழுத்தமான கதபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், `யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் `காட்டேரி’ படத்தில் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுந்தர்.சி. இயக்கத்தில் `அரண்மனை’ படத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டேரி படத்தில் வைபவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் காமெடி கலந்த த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

ஹன்சிகா நடிப்பில் குலேபகாவலி படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.

வவுனியாவில் மக்கள் வரவேற்பை பெற்ற இளைஞர்களின் சமூகத்திற்கான முயற்சி!!

 
வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான வெள்ளப்பாதிப்பை குறைக்கும் முகமான பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கிராமங்கள் நோக்கிய கல்வி வளர்ச்சி” எனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான புளொட் அமைப்பின் இளைஞரணியின் செயற்றிட்டத்தின் ஊடான ஒருபகுதி அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற்றிட்டத்தினை புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) பிரதம அதிதியாக கலந்து கொண்டு மக்களுக்கு கையளித்தார்

இந் நிகழ்வில் வவுனியா வடக்கு கல்வி வலய ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு ரகுபதி, வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், ஐயனார் விளையாட்டுக்கழக தலைவர் பே.அனோஜன், நிஸ்கோ இணைப்பாளர் ரி.அமுதராஜ், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி ந.சோதிமதி, சிவில் பாதுகாப்பு குழு செயலாளர் திரு.சோதிநாதன், நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு.கணேஷ், திருநாவற்குள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா திருநாவற்குளத்தில் பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

 
வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் திருநாவற்குளத்தில் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்களுக்கான பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

“கிராமங்கள் நோக்கிய கல்வி வளர்ச்சி” எனும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயற்றிட்டத்தின் ஊடான கழக உறுப்பினர்களின் நிதி அன்பளிப்பில் இவ் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா வடக்கு கல்வி வலய ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு ரகுபதி, வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், ஐயனார் விளையாட்டுக்கழக தலைவர் பே.அனோஜன், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி ந.சோதிமதி, வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன், சிவில் பாதுகாப்பு குழு செயலாளர் சோதிநாதன், நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையின் தலைவர் கணேஷ், திருநாவற்குள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்டால் வியாபார நிலையங்களுக்குப் பாதிப்பு!!

 
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் 25ஆம் திகதியிலிருந்து பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிகின்றோம். இதனால் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பல ஊழியர்கள் வேலை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பேருந்து நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. 25ஆம் திகதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொண்டால் இங்கிருக்கும் வியாபார நிலையங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல ஊழியர்கள் வேலைவாய்ப்பினை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் என பலரிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும். இப்பிரச்சினைக்கு தொடர்புபட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி வர்த்தகர் சங்கத் தலைவரிடம் வியாபார நிலைய உரிமையாளர்கள் இன்று மாலை மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இது தொடர்பாக வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவிக்கையில், வர்த்தக சங்க மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்கள் தமக்கு சாதகமான பதிலினைப் பெற்றுத்தருமாறு தெரிவித்ததுடன் சாதகமான நிலை ஏற்படாவிட்டால் தமது வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.