வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றை மரநாய் கடித்து சாப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிலாபம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் இவ்வாறு மரநாயினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலமே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தின் முகம் உட்பட பல பகுதிகள் மரநாயினால் கடித்து சாப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவத்தினால் உயிரிழந்த நபரின் உறவினர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் சிலாபம் வைத்தியசாலையின் வைத்தியர் சிராஜிடம் வினவிய போது, சடலத்தை பொறுப்பேற்கும் போது சடலத்தை பரிசோதித்தே பெற்றிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது வைத்தியசாலையின் பிணவறையில் இடம்பெற்றிருந்தால், உறவினர்கள் அல்லது வேறு இடத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்வதாக வைத்தியர் சிராஜ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.
இங்கிலாந்திலுள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த கச்சி சுல்லிவான் பெண்ணாக பிறந்து வளர்ந்தவள். ஒரு ஆணுடன் இவருக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் ஹோர்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதையடுத்து, ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் வாழ்ந்த அவர் கடந்த பெப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிரசவ வலி ஏற்பட்டவுடன் அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் ஆகவில்லை. எனவே, ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இவர் வர்த்தகவியல் பட்டம் படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு நியாய விலையில் தேங்காயை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தால் தேங்காய் விலையில் திடீர் மாற்றம் ஏற்படவுள்ளது.
சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என்று தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
தேங்காய்க்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தேங்காயின் விலையை அதிகரித்துள்ளதாகவும், இதுவே தேங்காய் விலை அதிகரிப்பிற்குக் காரணம் என்றும் தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவல கூறியுள்ளார்.
இதேவேளை, அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்தின் முன் நிறுத்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
நடுக் கடலில் மீன்பிடிக்க வந்த நிலையில், அலையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இலங்கை மீனவரை இராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் மரியதா என்பவர் அண்டனுடன் இணைந்து இணைந்து பைபர் படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் இலங்கைக் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இராட்சத அலை ஒன்று அவர்களின் படகைத் தாக்கியதில், படகு கவிழ்ந்து இருவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.
இந்தநிலையில், இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி அடிமை என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வர மீனவர்கள், இந்திய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மரியதாஸை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர் என, நக்கீரன் செய்திகள் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், மண்டபம் மீனவ குழும பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மரியதாஸ் நடந்ததை விவரித்துள்ளார். மேலும், நீரில் மூழ்கிய அண்டன் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துவிட்டதாகவும் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.
இடதுகை பழக்கம் கொண்ட நான்கு வயது சிறுமிக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக பென்சில் ஷார்ப்னரை முன்னணி பென்சில் நிறுவனம் தயாரித்து அனுப்பியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த இஷா சிங் (4) என்ற சிறுமி இடதுகை பழக்கம் கொண்டவராவார். இதன் காரணமாக வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டிருக்கும் பென்சிலை இஷாவால் சீவ முடியவில்லை.
இந்நிலையில், இஷாவின் பிரச்சனை குறித்து அவர் தாய் ஸ்வேதா பிரபல பென்சில் நிறுவனமான ஹிந்துஸ்தானுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் இடதுகை பழக்க்ம் கொண்ட தனது மகளை போல உள்ளவர்களுக்கு பிரத்யேகமாக பென்சில் ஷார்ப்னர் தயாரிக்கலாமே என ஆலோசனை கூறியிருந்தார்.
அவரின் வேண்டுகோளை மதித்து ஹிந்துஸ்தான் நிறுவனம் இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தும் வகையிலான ஐந்து ஷார்பனர்களை தயாரித்து இஷாவுக்கு அனுப்பியுள்ளது.
இதோடு, உங்கள் மகள் இனி எளிதில் பென்சில் சீவிக்கொள்வார் என தாங்கள் நம்புவதாகவும், இதை தொடர்ந்து நீடிக்க முயற்சிப்பதாகவும் கடிதம் எழுதியுள்ளது.
இந்த கடிதத்தை ஸ்வேதா பேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியுள்ளது.
வவுனியா, திருநாவற்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றை துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த மோட்டார் குண்டு செயலிழந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும், இதற்கு முன்னர் இந்த வீட்டினை விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்களும், அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பயன்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்கள், எடுத்ததாக கூறப்படும் நிர்வாணமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பௌத்த கடும்கோட்பாட்டை கொண்டுள்ள இலங்கையில் குறித்த புகைப்படங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்று டெய்லி ஸ்டார் என்ற சஞ்சிகை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், குரோசியா, ரஸ்யா போன்ற நாடுகளின் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெண்ணின் படத்தை 15ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
இதேவேளை, ரஸ்யாவின் ஒஷ்சி கேர்ள் ‘Russian Aussie girl’ என்ற அலியா தோமஸ் என்ற பெண் மாத்திரம் சுமார் 700 படங்களை பிரசுரித்துள்ளதாக டெய்லி ஸ்டார் சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓடிசா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அருகாமையில் உள்ள கால்வாய்க்குள் அமர்ந்து கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கோராபட் பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்வதற்காக சென்றுள்ளார்.
ஆனால் அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதையடுத்து அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலை அருகே இருந்த கால்வாயினுள் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக சென்று அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
பொது மக்களுக்கு நியாய விலையில் தேங்காயை விநியோகிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப வைபவம் அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில், பத்தரமுல்லை தெங்கு உற்பத்தி சபையின் கட்டிட வளவில் நடத்தப்படவுள்ளது. தேங்காய்க்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என்று தெங்கு உற்பத்தி சபையின் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென்று நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்த விலையில் தேங்காய் தற்போது 40 ரூபாவுக்கும் 45 ரூபாவுக்கும் இடையில் காணப்படுகிறது.
வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தேங்காயின் விலையை அதிகரித்துள்ளனர்.
இதுவே தேங்காய் விலைக்கு அதிகரிப்பிற்குக் காரணம் என்று தெங்கு உற்பத்தி சபையின் கபில யகந்தாவல மேலும் தெரிவித்துள்ளார் என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
தேங்காய்க்கான தட்டுப்பாடு நீங்கம் வரையில் தெங்குத் தொழிலுக்காக மாத்திரம் கொப்பராவை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேங்காய் பால் தயாரிப்பாளர்களுக்கும் இதனுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்கும் இறக்குமதி வரி இன்றி அவற்றை இறக்குமதி செய்து கொள்ள முடியும்.
கொப்பராவை உடனடியாக துறைமுகத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் வகையில் தேவையான அனுமதியை வழங்கவும் ஆலோசனை சுங்கப்பகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவச சீருடைகளும் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறான அதிபர்கள் உரிய முறையில் இனம் காணப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஒரு சில மலையக பாடசாலைகளில் இருந்து மேற்படி விடயங்கள் தொடர்பாக எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அது மாத்திரமன்றி கல்வி அமைச்சின் மூலமாக மிக விரைவில் சுற்று நிருபம் ஒன்றையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை அபிவிருத்தி செய்கின்ற நோக்கத்துடன் பாடசாலை வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக பணம் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில அதிபர்கள் இந்த பணம் கிடைத்தவுடன் பாடசாலைகளில் வாசிகசாலைகளுக்கு பொறுப்பாக இருந்த ஆசிரியர்களை உடனடியாக நீக்கிவிட்டு அந்த பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதன் மூலம் அதிபர்கள் ஏதோ ஒரு விடயத்தை திட்டமிடுவது தெளிவாக தெரிகின்றது. ஆனால், அதற்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் சீருடைகள் தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளது. அதிபர்கள் சிலர் தற்பொழுது துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதனை கல்வி அமைச்சு எந்த வகையிலும் அனுமதிக்காது. அரசாங்கம் மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த பணத்தை பிழையான முறையில் கையாள முடியாது. பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் அவர்கள் உரிய முறையில் புத்தகங்களை கொள்வனவு செய்து அவற்றை முறையாக பட்டியலிட்டு அதனை வாசிகசாலைக்கு பொறுப்பான ஆசிரியர் கையொப்பமிட்டு, பின் அதிபர் உறுதிப்படுத்தி கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரசாங்கம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு வளங்களை வழங்கி வருகின்றது. அதனை எமது பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நான் பல சிரமங்களுக்கு மத்தியில் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதனை ஒரு சில அதிபர்கள் தவறாக பயன்படுத்தினால் அவர்களை எந்த காரணம் கொண்டும் மண்ணிக்க முடியாது.
இது தொடர்பாக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் ஆகியோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக எந்தவித தயவு தாட்சன்யமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் அண்மையில் காணாமல் போன சிறுவன் வெலிகந்தை கட்டுவன்வில பிரதேசத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் வேலை செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர், கலைமகள் வித்தியாலய வீதி, ஹிதாயத் நகரைச் சேர்ந்த 15 வயதுடைய அப்துல் கரீம் ஹியாஸ் அப்துல் ஷாலிஹ் என்ற சிறுவன் கடந்த 13ஆம் திகதி இரவில் இருந்து காணாமல் போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனின் பெற்றோர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காணாமல்போன சிறுவனின் தந்தை குறிப்பிடுகையில், ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் வருட இறுதித் தவணை விடுமுறை கிடைத்ததும் நண்பர்களின் தூண்டுதலின்பேரில் வீட்டாருக்குத் தெரியாமல் தலைமறைவாகியிருந்தார் என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, தாம் தேடுதலிலும் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் இவர் கட்டுவன்வில பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்வதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று அவரை மீட்டெடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களை தமது கண்காணிப்பில் இருந்து மறையாத வண்ணம் அவதானத்துடன் இருக்குமாறு பெற்றோர்களுக்கு இதன்போது பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கனடாவில் யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு சென்ற வேளையில், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கனடாவின் ரொறண்டோவில் வசித்து வரும் பாலமுரளி, Brock பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.12.2017) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்கு சொந்தமான வாகனம் இன்று அதிகாலை ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது
இவ் விபத்தில் வீதியில் நடந்து சென்ற 46 வயதுடைய நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் சமயத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் சிறந்த பொலிஸாருக்காக கௌரவிப்பு நேற்று முன்தினம் (15.12.2017) காலை 10 மணியளவில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தேன்னக்கோன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசரி பேனந்தோ வுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஏ.மகிந்த உட்பட பலர் கலந்து கொண்டு வவுனியா மாவட்டத்தில் சிறந்த 43 பொலிஸார்களுக்கு கௌரவிப்பு செய்தனர்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்தால் பலர் தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும் என வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
வடகொரியாவின் நடவடிக்கைகள் மூன்றாவது உலக யுத்தத்தை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்தாலும், அணு ஆயுத திட்டங்களால் உலகின் சக்தி வாய்ந்த நாடாக உருவாகும் வரை தங்களின் நடவடிக்கைகள் தொடரும் என வடகொரியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை போர் நீடித்து வருகிறது.
மட்டுமின்றி வடகொரியாவின் கொட்டத்தை அடக்க, தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு தக்க பதிலடி தரும் வகையில், தங்கள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்காவின் போக்கு கண்டிக்கத்தக்கது என கடிந்துள்ள வடகொரியா, இதுபோன்ற நடவடிக்கைகள் பலரது தூக்கத்தை தொலைக்க காரணமாகும் என மறைமுகமாக போர் மூளும் அபாயம் குறித்து அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
இதனிடையே வடகொரியாவுக்கு எதிரான நிலை மேற்கொள்ள ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆனால் ஏற்கெனவே வடகொரியா மீது அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ரஷ்யா, அமெரிக்காவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வடகொரியாவை எதிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.