இரு கால்களையும் இழந்த பாலஸ்தீன நபர் சுட்டுக்கொலை : இஸ்ரேல் ராணுவம் அட்டகாசம்!!

 
இரு கால்களையும் இழந்த பாலஸ்தீன போராட்டக்காரர் இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நாளில் இருந்தே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதன் போது இரு கால்களையும் இழந்த Ibrahim Abu என்பவர் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். குண்டடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஷிபா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இதற்கு முன்னரும் கடந்த 2014ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போதே Ibrahim Abu இரு கால்களையும் இழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது மற்றொரு நபரும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி சக்கர நாற்காலியில் Ibrahim Abu இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

டிரம்பின் அறிவிப்புக்கு பின்னர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொலை செய்யப்படும் பாலஸ்தீன நபர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரத்தவெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து கதறிய குழந்தை : மனதை உருக வைக்கும் சம்பவம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தல் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை பார்த்து குழந்தை அழுதுகொண்டிருந்த காட்சி அனைவரையும் உருகவைத்துள்ளது.

பவித்ரன் என்ற பள்ளி மாணவன் தனது அக்கா பிரியாவை தையல் பள்ளியில் கொண்டு சென்றுவிடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார், இவர்களுடன் மற்றொரு அக்கா மகளான 3 வயது குழந்தையையும் அழைத்துசென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் சென்ற ஆலங்கிணறு பாதையில், சின்னத்துரை, சந்திரசேகர் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர், இந்த இரு சக்கர வாகனங்களும் எதிர் எதிரே மோதியதில் அனைவரும் தூக்கிவீசப்பட்டனர்.

இதில் பவித்ரன் மற்றும் சின்னத்துரை ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர், மற்றவர்கள் பலத்த காயத்துடன் விழுந்து கிடந்தனர், இவற்றையெல்லாம் பார்த்த 3 வயது குழந்தை ரத்தகாயத்துடன் அவர்களை பார்த்து அழுதுள்ளது.

அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பவித்ரன் மற்றும் சின்னத்துரை ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர், குழந்தை உட்பட மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (16.12.2017) இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.ஆனந்தசங்கரி , பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் அதிதிகளாக சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் நா.சோனாதிராஜா, வவுனியா இந்து மாமன்ற தலைவர் வை.செ.தேவராசா, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தலைவர் மு.குகதாசன், யாழ் பல்கலைக்கழக அரச அறிவியல் துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், மாவட்ட – பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள், வவுனியா வர்த்தக சங்க தலைவர், உள்ளுர் விலைபொருள் உற்பத்தி சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கணவன்- மனைவி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

தமிழ்நாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவியின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

சேலம் குகை நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், துணி வியாபாரியான இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் தாய்லாந்திலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மூத்த மகன் அருண்பிரகாசுக்கு நடராஜன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகம் இருப்பதால் நடராஜன்- சந்திரகலா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தனர், வீட்டு சாவியும் இருந்துள்ளது.

உடனடியாக உறவினர்களுக்கு போன் செய்த அருண்பிரகாஷ் விவரத்தை கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டியிருந்தது, பொலிசுக்கு தகவல் அளித்த பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். கட்டிலில் கணவன்- மனைவி இருவரும் பிணமாக கிடந்தது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் மேசையின் மீது நடராஜன் எழுதி வைத்திருந்த கடிதம், சிடி மற்றும் 2 பென்ரைவ்களை பொலிசார் கைப்பற்றினர்.

முதற்கட்ட தகவலில், நடராஜன் வீட்டின் முதல் மாடியில் அவருடைய தம்பி வசித்து வருகிறார், ஆனால் வீட்டை நடராஜனின் மகன்கள் பெயருக்கு அவருடைய தந்தை எழுதி தரவே காலி செய்யுமாறு தம்பியிடம் நடராஜன் கூறியதாக தெரிகிறது.

1 கோடி கொடுத்தால் வீட்டை காலி செய்வதாகவும், இல்லையெனில் கொன்று விடுவேன் என தம்பி மிரட்டியுள்ளார்.

அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார், இதுவே இருவரின் தற்கொலை காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வாழ்வளித்த கனடா பாராவூர்தி சாரதிகள்!!

 
வவுனியா தவசிகுளம் கந்தபுரம் கிராமத்தில் தாய் தந்தையினையிழந்து வாழ்ந்து வரும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினால் இன்று (16.12.2017) காலை 9.30 மணியளவில் முப்பது முட்டையிடும் கோழிகள் மற்றும் அவற்றுக்காக உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

தந்தை பிரிந்த நிலையில் தாயின் அரவணைப்பில் 14,18 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் 23, 24 வயதுடைய ஆண் மகனும் வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் கடந்த 24.10.2017 அன்று தயாரும் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார். இதன் காரணமாக 14 வயதுடைய பெண் பிள்ளையின் கல்வி பாதிப்படைந்தது.

தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினருக்கு விடுத்த வேண்டுகோளிக்கிணங்க இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவித்திட்டத்தினை நற்பணி மன்றத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளான பா.கதீஷன், பா.லம்போதரன், வ.பிரதீபன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் : மகன் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்!!

மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைக்குச் சென்ற நிலையில், உயிரிழந்த தனது தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் என உயிரிழந்த பெண்ணின் மகன் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கெக்கிராவ கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த நெல்கா திபானி குமாரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“கடந்த 2011ஆம் ஆண்டு வேலைவாய்ப்பொன்றை பெற்றுக்கொண்டு சவுதிக்குச் சென்ற குறித்த பெண், 2013ஆம் ஆண்டு மீண்டும் நாட்டிற்கு திரும்ப இருந்த நிலையில், ஊதியம் வழங்காது கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அன்று முதல் தனது தாயை தொடர்புகொள்ள முடியாமல் போனது. பின்னர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் 2014ஆம் ஆண்டு தாயை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்.
பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தனது தாய் மூன்று மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனது தாயை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அது பயனளிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி தனது தாய் உயிரிழந்து விட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலமாக தெரியப்படுத்தினார்.
தற்போது தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் கோரிக்கை கடிதம் எழுதி வருவதாக” அவரது மகன் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரை திருப்பியனுப்ப வேண்டாம் : அவுஸ்திரேலிய அரசிடம் ஐநா கோரிக்கை!!

ஏதிலி கோரிக்கையை முன்வைத்து தமது நாட்டுக்கு வந்துள்ள இலங்கை தமிழர் ஒருவரை திருப்பியனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கேட்டுள்ளது.
குறித்த தகவல் தொடர்பில் தெ கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. 10 சுயாதீன மனித உரிமைகள் காப்பு நிபுணர்களை கொண்ட இந்தக்குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை ஒன்றில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேரான் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இலங்கை தமிழரின் ஏதிலிக் கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்படும் நிலையில் அவரை திருப்பியனுப்ப வேண்டாம் என்றும் அந்தக் கோரிக்கைகயில் கேட்கப்பட்டுள்ளது.

வட மாகாண பாடசாலைகளில் ஏற்படவுள்ள நேர மாற்றம்!!

வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2018ஆம் ஆண்டு முதல் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது.

வட மாகாண பாடசாலைகள் 7.30க்கு ஆரம்பிக்கப்படுகின்றமையினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் வடமாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசேடமாக வட மாகாண சபையின் கிராம பிரதேசங்களில் இருந்து நகர பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லை.

இதனால் காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகும் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் காலை உணவை பெற்றுக் கொள்ளாமல் பாடசாலைக்கு வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் மேற்கொள்ள முடியவில்லை என ஆசிரியர்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை கருத்திற் கொண்டு 8 மணிக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் அனுப்பி வைப்பதாகவும், அதற்கு ஆளுநரிடம் அனுமதியை பெற்றுக் கொண்டு தகுதியான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எமனாக மாறிய பூனை : யாழில் நடந்த சோகச் சம்பவம்!!

 

யாழ்ப்பாணத்தில் பூனை ஒன்று கடித்தமையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சங்கானை பகுதியை சேர்ந்த 41 வயதான பசுபதி பத்மநாதன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பத்மநாதன் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது பூனை ஒன்று கடித்துள்ளது. இதனையடித்து உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால், பிரேத பரிசோதனை முடியும் வரை மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

உடலில் விஷம் கலந்துள்ளமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை மேற்கொண்ட வைத்தியர் என்.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

குறித்த பூனையின் உடலில் ஏதோ ஒரு நோய் தன்மை காணப்படுவதாகவும் பூனையை வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு உறவினர்களுக்கு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீனாவின் கின்னஸ் சாதனை எதில் தெரியுமா?

சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த உணவு நிறுவனம் கையால் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் அடி நீண்ட நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

அதன் மொத்த நீளம் 10,100 அடியாகும். 66 கிலோ எடையுள்ள இந்த நூடுல்ஸை தயாரிக்க 40 கிலோ ரொட்டி மாவு, 26 லிட்டர் தண்ணீர் மற்றும் 0.6 கிலோ உப்பு போன்றவை சேர்க்கப்பட்டு, சமையல் நிபுணர்கள் 17 மணி நேரத்தில் செய்து முடித்தனர்.

பின்னர் நூடுல்ஸ் பூண்டு, முட்டை மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி சமைக்கப்பட்டு 400 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பறிமாறப்பட்டது.

நூடுல்ஸ் சீன பாரம்பரிய உணவாகும். நீளமான நூடுல்ஸை அதிக வாழ்நாளின் சின்னமாக சீனர்கள் கருதுகின்றனர். இந்த முயற்சி அனைவரும் நலமாக பல்லாண்டு வாழ்வதற்காக எடுக்கப்பட்டது என உணவு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் ஜப்பானில் ஆயிரத்து எண்ணூறு அடி நீளத்தில் செய்யப்பட்ட நூடுல்ஸின் அளவை முறியடித்து சீனா கின்னஸ் சாதனை படைத்ததாக கின்னஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக மரணம்!!

வெலிகந்த – அசேலபுர வயல்வெளியில் யானையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

15 வயதான குறித்த வயல்வெளியைக் கடந்து சென்ற போது குறுக்காக இருந்த அதிசக்தி வாய்ந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

கிரித்தலே வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் யானையின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று (15.12) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை பிரதேச வாசிகளின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்ததினால் அந்த பெண் கூக்குரலிட்டு அயல் வீட்டார்களின் உதவியை நாடியுள்ளார்.

சந்தேக நபர் களவெடுக்கும் நோக்கில் சென்றாரா அல்லது குறித்த பெண்ணின் வீட்டுக்கு வேறு தேவைகளுக்கு சென்றாரா என்ற நோக்கில் விசாணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவரை தற்போது தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று (16) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள்!!

 
2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் 12 புகைப்படங்கள் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த கண்கவர் புகைப்படங்கள் இவை தான்…

இத்தாலியில் வெரோனாவிலுள்ள இந்த கோபுரத்திலுள்ள மாடிப்பகுதி மற்றும் பெல் ஆகியவற்றின் தனித்துவமான நிலையின் காரணமாக மெக்மெட் யாசாவின் இந்தப் புகைப்படம் “கோபுரத்தின் கண்” என்று அழைக்கப்படுகிறது.

ஹான்சிங் ச்சுவின் இந்தப் புகைப்படம் மலேசியாவின் தேசிய மசூதியில் எடுக்கப்பட்டது. “இந்த கட்டிடத்தின் மீது சூரிய ஒளி வீழ்கின்றபோது, பிரகாசமும் நிழலும் ஒன்றையொன்று சந்தித்து கனவு போன்ற காட்சியை வழங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “இன்செப்ஷன் என்ற திரைப்படத்தை இது எனக்கு நினைவூட்டுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் வட பகுதியில் அவிலஸ் கலாசார மையத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், ஹான்ஸ் விச்மான், மிதிவண்டி ஓட்டிச்செல்லும் ஒருவரை ஆவணப்படுத்தியுள்ளார். “பெரிய மற்றும் சிறிய மக்களுக்கு பழையதொரு தொழில்துறை இடத்தில் ஆஸ்கார் நைமேயரால் கட்டப்பட்ட நவீன கட்டிடங்களின் வெற்றிகரமான ஒன்றிணைப்பு” என்று இந்த அருங்காட்சியகத்தை அவர் அழைக்கிறார்.

பிரான்சிஸ் மெஸ்லெட் இந்தப் புகைப்படத்தில் மேல்நோக்கி பார்த்து படம் பிடிக்க தெரிவு செய்துள்ளார். முதலாம் உலகப்போரின் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் பிரெஞ்சு நினைவகத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

“இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரையரங்கம் ஒருபுறம் மேடை, பல்லடுக்கு மாடிகள், வேறு எல்லாவற்றிலும் பலகணிகள் உள்ளடங்க நீள்வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது” என்று பிரான்ஸில் பார்-லெ-டுவிலுள்ள திரையரங்கத்தை பற்றி புகைப்படக்கலைஞர் லின்டா த வான் ஸ்லோபி குறிப்பிட்டுள்ளார்.

ராபர்ட் காஸ்சவேயின் இந்தப் புகைப்படம் அமெரிக்காவில் மொன்டானாவில் ஃபிரெஸ்நோ பற்றிய பெரியதொரு தொடரின் பகுதியாக “த வேனிஸிங் வெஸ்ட்” என்று அழைக்கப்படுகிறது. ஃபிரெஸ்நோவில் வாழ்ந்த குடும்பங்கள் அவ்விடத்தை விட்டு சென்ற பின்னர், புறக்கணிப்பின் மூலம் சிதைந்துபோக விடப்பட்ட கட்டிடத்தின் மீது காலமும், வானிலையும் காட்டியுள்ள அழிவின் தடங்களை இது காட்டுகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட நவீன கூம்பு வடிவ கட்டிடக்கலை கட்டிடமாக விளங்கும் புனித ஆன்ட்ரூ பேராலயத்தின் கோபுரம். அதனுடைய முற்காலத்தேய வடிவத்தை இன்னும் பாதுகாத்து வருகின்ற இந்தப் பேராலயம் அதனுடைய சுற்றுப்புறங்களோடு கம்பீரமாக நிற்கிறது.

21 ஆம் நூற்றாண்டுக் கல்லறை என்பது ரஷ்யாவின் ரியாசனில் எடுக்கப்பட்ட பெட்ர் ஸ்டாராஃபின் புகைப்படத்தின் தலைப்பாகும். இந்த புகைப்படம் வணிக வளாகம் ஒன்றின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

புவொ ஜி ஹூவா படம் பிடித்துள்ள சீனாவின் குவாங்தொங்கிலுள்ள இத்தகைய சாலைகள் குறுக்கு பாலம் வால்ஸ் என்று பெயர் பெற்றுள்ளது. ஆளில்லா விமானத்தின் மூலம் இது படம் பிடிக்கப்பட்டுள்ளது. “இந்த வேலைப்பாட்டின் குறுக்கு சந்திப்பு, அழகின் சுருக்கமான வரிபோல உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்னொரு புகைப்படக் கலைஞர் டிமிட்ரோ லேவ்சும் மேலே பார்த்து புகைப்படம் எடுக்க முனைந்துள்ளார். துபாயில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் நிறங்கள் மற்றும் வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஈரானிலுள்ள நவீன குடியிருப்பு கட்டிடத்தில் சோதனை முயற்சியாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடக்கலையின் வடிவங்களை ஹூசைன் யோனிசி படம் பிடித்துள்ளார்.

நியூயார்க்கில் ஒரு ரயில் நிலையத்தில் தலைக்கு மேலுள்ள முரட்டுத்தனமான கடின கேபிள் குழாய்கள்,அச்சுறுத்தும் வடிவத்தைக் கொண்டுள்ளது” என்கிறார் கௌதம் கமாத் பாம்போல்கார்.

வவுனியா வேப்பங்குளத்தில் விபத்து : சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா வேப்பங்குளம் 5ம் ஒழுங்கைக்கு அருகே இன்று (16.112.2017) காலை 7 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 67 வயதுடைய முதியவரொருவரும் மோட்டார் சைக்கிலில் பயணித்த 38வயதுடைய பெண்ணும் அவரது 5வயதுடைய மகளும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் : சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு!!

அக்கரப்பத்தனை – வுட்லேகர் தோட்டத்தில் ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 20 – 22 வயதிற்குட்பட்ட இருவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை – வுட்லேகர் தோட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதை சகித்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரும் குறித்த நபரை மண்வெட்டியினால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணின் இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் ருவன் இந்திக டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி : காதலன் ராஜேஷ் கைது!!

காதலனின் உதவியுடன் கணவனைக் கொன்றுவிட்டு நாடகமாடிய வழக்கில், தற்போது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாகர்ரெட்டி. இவருக்கு சுவாதி என்ற மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மனைவி சுவாதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாகவும் மாறியுள்ளது. இந்த காதலுக்கு தனது கணவர் இடையூறாக இருந்ததால், தனது காதலர் ராஜேஷுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சுவாதி.

அதன்படி கடந்த மாதம் 27ஆம் திகதி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுதாகர் ரெட்டிக்கு மயக்க ஊசி போட்டுள்ளனர். பின்னர் இரும்புக் கம்பியால் சுதாகர் ரெட்டியை அடித்து கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சுதாகரின் உடலை அருகே உள்ள வனப்பகுதியில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில், சுதாகர் ரெட்டியும், ராஜேஷும் உருவத்தில் ஒரே மாதிரி இருந்ததால், தெலுங்கு படமான எவடு பாணியில் சுவாதியும், ராஜேஷும் ஒரு திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, ராஜேஷுன் வாயை மட்டும் மூடிவிட்டு, பெட்ரோலைக் கொண்டு ராஜேஷின் முகத்தை மட்டும் எரித்துள்ளார் சுவாதி.

அதன்பிறகு, உறவினர்களிடம், மர்ம கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து, கணவனை தாக்கியதாகவும், அப்போது அவரது முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த தனது காதலர் ராஜேஷை, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய கோரியுள்ளார் சுவாதி.

ஆனால் தீக்காயம் பெரிய அளவில் இல்லை என்பதால், அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர். ஆனால், ராஜேஷ் தனது முகத்தை மூடியவாறு, யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

மேலும், பல சமயங்களில் தூங்குவது போல நடித்துள்ளார். எனினும், சுதாகரின் அடையாளங்கள் ராஜேஷுக்கு பொருந்தவில்லை, இதனால் உறவினர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உடல் நலம் தேற ராஜேஷுக்கு மட்டன் சூப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை சாப்பிட மறுத்த ராஜேஷ், தான் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகம் உறுதியானதால், உறவினர்கள் இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர், ராஜேஷின் கைரேகையை அவருக்கு தெரியாமல் எடுத்த பொலிசார், அதனை சுதாகரின் ஆதார் அட்டையில் உள்ள கைரேகையுடன் பொருத்திப் பார்த்ததில் இரண்டு பொருந்தவில்லை.

இதனைத் தொடர்ந்து, சுவாதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வந்தது. பின்னர், கடந்த 9ஆம் திகதி சுவாதியை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ராஜேஷ் உடல்நலம் தேறியதால் நேற்று காலை அவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.