தமிழ் தேசிய ஒற்றுமைக்காக செயற்படும் எம்மை, அரசியல் ஏமாளிகள் என நினைத்தால், அதனால் ஏற்படும் முழுமையான விளைவுகளிற்கும் அவர்களே பொறுப்பு என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அக் கட்சியின் தலைமைக் குழு கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் தமிழ் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளோடு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றோம். தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பரந்துபட்ட ஆதரவுக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். ஆனால், எம்மை அரசியல் ஏமாளிகள் என நினைத்தால் அதனால் ஏற்படும் விளைவுக்களுக்கு அவர்களே பொறுப்பு.
இன்று நாம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி தமிழீழ விடுதலை கழகம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகியோருடன் பேசியுள்ளோம். நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியோடு பேசவுள்ளோம்.
எமது நீண்டகால அரசியல் பயணத்தில் இது ஒரு சாதாரண விடயமாகும். ஆனால் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் தேசியத்தின் ஒற்றுமை என்பது விளையாட்டு பந்தாக மாற்றமடைந்து விட கூடாது என்பதை கூறிக் கொள்கின்றோம்.
இந்த நொடி வரை இதுவே எமது நிலைப்பாடு. ஆனால் எதிர்காலம் குறித்து ஆரூடம் கூற முடியாது என குறிப்பிட்டார்.
ரயில் இயந்திர பிரிவு ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறை மற்றும் அரச சேவையாளர்களுக்கான சுற்றரிக்கைக்கு அப்பால் சென்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நேற்று மாலை மற்றும் இரவு வேளைகளில் ஆரம்பிக்கப்பட்ட ரயில் போக்குவரத்துகள் அனைத்தும் நிறைவிடம் வரை முன்னெடுக்கப்படும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
நிறைவிடம் சென்றதன் பின்னர் குறித்த ரயில்களின் சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று இரவு சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
டெல்லியில் இன்று இரவு கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலியை மையமாகக் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.
அம்மாநிலத்தின் ஹரித்துவார், ருத்பிரயாக் உள்ளிட்ட பல இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் எதிரொலியாகவே டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நில அதிர்வால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை இலங்கை அணி சமநிலை செய்துள்ளது. இதன்மூலமாக இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டியில் டெல்லியில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ஒட்டங்கள் குவித்து போட்டியை இடைநிறுத்திக்கொண்டது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அணித்தலைவர் கோஹ்லி 243 ஒட்டங்களும், முரளி விஜய் 155 ஒட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சந்தகன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 373 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 164 ஒட்டங்களும், மத்யூஸ் 111 ஒட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் அஸ்வின், இஷாந்த சர்மா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். 163 ஒட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 246 ஒட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
தவான் 67 ஒட்டங்களும், கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா தலா 50 ஒட்டங்களும் எடுத்தனர். இதன்மூலமாக இலங்கை அணிக்கு 410 ஒட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், இலக்கை துரத்த களமிறங்கிய இலங்கை, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ஒட்டங்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டத்தினை தொடங்கிய இலங்கை அணியில் மத்யூஸ் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை 4 விக்கட்டுகளை இழந்து 35 ஒட்டங்கள் எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் தினேஷ் சந்திமல் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். தனஞ்ஜெய டி சில்வா – சண்டிமல் கூட்டணி 112 ஒட்டங்கள் சேர்த்தது.
இந்நிலையில் சந்திமால் 36 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரோஷன் சில்வா களம் இறங்கினார். 119 ஒட்டங்கள் எடுத்திருந்த தனஞ்ஜெய, Retire Hurt முறையில் வெளியேறினார்.அவருக்கு பதிலாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல நிலைத்து நின்று ஆடினார். ரோஷன் மற்றும் டிக்வெல இணை 94 ஒட்டங்கள் சேர்த்ததுடன், ஆட்டமிழக்காமல் இருந்ததால் கடைசி டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிந்தது.
இலங்கை அணி 103 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ஒட்டங்கள் எடுத்தது. ரோஷன் டி சில்வா 74 ஒட்டங்களுடனும், டிக்வெல 44 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கட்டுகளையும், ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்மூலம், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தது. தற்போது 9வது தொடரையும் வென்றுள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்
வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளின் உலக சாதனை சமன் செய்துள்ளது இந்திய அணி.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் முறையே தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளன.
யாழ். மீசாலையில் சற்றுமுன்னர் நடந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியிலிருந்து மீசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளே விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றின் கதவு திறக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதிகள் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதையடுத்து பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் மீது ஏறியுள்ளது.
இதனால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மீசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி அரிய உலக சாதனை ஒன்றை தவறவிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் அதிகமான ஓட்டங்களை குவித்தவரான குமார் சங்ககாராவின் சாதனையே அதுவாகும்.
இலங்கையின் சங்ககாரா 2014 ம் ஆண்டு அனைத்துவகையான போட்டிகளிலும் 2868 ஓட்டங்களைக் குவித்துள்ளமையே இதுவரைக்குமான உலக சாதனையாகும்.
இலங்கையுடனான போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் கோஹ்லி சதமடித்திருப்பாராயின் புதிய சாதனை படைத்திருக்கலாம், ஆனால் நேற்றைய போட்டியில் கோஹ்லி 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்த காரணத்தால் சங்ககாராவின் சாதனையை முறியடிக்க முடியாதுபோயுள்ளது.
இந்தாண்டில் இந்தியாவுக்கு இன்னும் 3 ஒருநாள் போட்டிகளும், 3 T20 போட்டிகள் இருந்தாலும் அவற்றில் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 75.64 எனும் சாராரியில் 5 சதம் அடங்கலாக 1059 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 76.84 எனும் சராமாரியில் 6 சதம் அடங்கலாக 1460 ஓட்டங்களையும்
T20 போட்டிகளில் 299 ஓட்டங்களையும் குவித்துள்ள கோஹ்லி மொத்தமாக்க இந்தாண்டில் 2818 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
பொலிவுட் நடிகர் சசி கபூர் இறந்துவிட்டதாக செய்தி ஒளிபரப்பிய பிபிபி ஊடகம், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மற்றவர்களின் புகைப்படத்தை ஒளிபரப்பிய தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளது.
பொலிவுட் நடிகர் சசிகபூர்(79) உடல்நலக்குறைவு காரணமாக 4 ஆம் திகதி உயிரிழந்தார். இவரது இறந்துவிட்டதாக செய்தி ஒளிபரப்பிய பிபிசி ஊடகம், இவரது புகைப்படத்திற்கு பதிலாக, இவரது உறவினர் ரிஷி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகிய இருவரின் புகைப்படத்தை ஒளிபரப்பியுள்ளது.
இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த தவறுக்காக பிபிசி ஊடகம் மன்னிப்பு கோரியுள்ளது. நிரல் ஆசிரியல் (programme’s editor) Paul Royall கூறியதாவது, தவறான புகைப்படம் ஒளிபரப்பியதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், சமூகவலைதளங்களில் வெளியான பல்வேறு புகைப்படங்களால் சிறிது குழப்பம் ஏற்பட்டு இந்த தவறு நடந்துவிட்டது. இதனால் மக்களிடையே ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகிறோம் என கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழங்கத்தை பராம்பரியமாக பின்பற்ற வருகின்றனர்.
இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot (30) என்ற பெண் கூறியதாவது, நான் எனது தாய் Mittamoni மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான Noten- ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.
எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு கணவர் கிடைத்ததால் எனது தாய் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.
என்னை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் எனது வளர்ப்பு தந்தை போன்றே இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தது உண்டு. ஆனால் நான் பருவம் அடைந்தபோது எனது காதில் விழந்த அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வளர்ப்பு தந்தையுடன், எனக்கு 3 வயது இருக்கும்போதே எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என தாய் என்னிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது. ஆனால், எனது தாய் இதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எனது தாய்க்கு 21 வயதாகிவிட்டது என கூறுகிறார்.
இந்த திருமணம் குறித்து Mittamoni கூறியதாவது, எங்கள் இனத்தின் பராம்பரிய முறைப்படி திருமணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவர் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளவேண்டும்.
அப்படி திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த விதவை பெண்ணிற்கு மகள் இருந்தால் அவளையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். எனது மகளுக்கு திருமணம் ஆகும்போது அவளுக்கு 3 வயது. தற்போது அவன் Noten-ஐ ஒரு கணவராகத்தான் கருத வேண்டும்.
இது எங்கள் பராம்பரியமான பழக்கம், இதனை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.
மலாவி நாட்டில் பேத்தி வயதுள்ள பெண்ணை முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலாவியின் தயோலோ நகரை சேர்ந்தவர் ரியூபின்சன் சிந்துலி (82) இவர் பொலிஸ் அதிகாரியாக வேலை செய்து கடந்த 1970ல் பணி ஓய்வு பெற்றவர்.
இவர் டோவா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தது. பின்னர் மனைவி இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை சிந்துலி மணந்தார். அவரை பிரிந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில் சிந்துலி வீட்டுக்கு ஜியோன் குவடானி (25) என்ற இளம் பெண் வீட்டு வேலைக்கு வந்துள்ளார். ஜியோனிக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழக பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். பேத்தி வயது பெண்ணை சிந்துலி காதலிப்பதற்கு ஊர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஜியோன் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவரை தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்ய சிந்துலி முடிவெடுத்தார்.
ஆனால் இதற்கு தேவாலய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து சிந்துலி கூறுகையில், சட்டபூர்வமாக இருவரும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு பல தடைகள் வந்தபோதும் அதை எதிர்த்து இணைந்துள்ளோம். அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஜியோன் உள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர், தனது பெண் குழந்தையை கொன்று, சலவை இயந்திரத்தில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் தனது மூன்று மாத பெண் குழந்தையை யாரோ கடத்திவிட்டனர் என பொலிசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அவர் மீது சந்தேகமடைந்த பொலிஸார், ஆர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் தான் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் டோமர் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அவரின் விருப்பம் ஆண் குழந்தையாக இருந்ததால் மிகவும் விரக்தியடைந்துள்ளார்.
மேலும், அந்த குழந்தையின் மீது ஏற்பட்ட கோபத்தினால், தலையணை மூலமாக குழந்தையைக் கொலை செய்துள்ளார். பின்னர், சலவை இயந்திரத்தில் குழந்தையின் உடலை அடைத்துள்ளார்.
தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, எங்களிடம் குழந்தையை யாரோ கடத்திவிட்டதாக புகார் அளித்தார். ஆனால், நாங்கள் நடத்திய தீவிர விசாரணையில் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும் பெண்ணின் குடும்பத்தார் எவரும் ஆண் குழந்தை வேண்டும் என ஆர்த்தியை வற்புறுத்தவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது’ என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி படிப்பை முடித்து சில ஆண்டுகள் ஆன பின்னரும், தங்கள் காதலுக்கு அடையாளம் கொடுத்த அதே இடத்துக்கு சென்று காதலர்கள் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் நகரில் மகாராஜா கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அமர்நாத் (24) மற்றும் சப்னா (23) ஆகியோர் கடந்த 2011லிருந்து 2015ம் ஆண்டு வரை படித்தனர்.
இருவரும் ஒரே கல்லூரி என்றாலும் வேறு வேறு பாடப்பிரிவில் படித்துள்ளனர். அப்போது இஸ்லாமிய பெண்ணான சப்னாவுக்கும், ஹிந்துவான அமர்நாத்துக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கல்லூரி படிப்பு முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தங்கள் காதலை வளர்த்த கல்லூரி வளாகத்திலேயே காதலர்கள் கடந்த 2ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
சப்னா கழுத்தில் அமர்நாத் தங்க செயின் அணிவித்தார். இதில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பு காதலர்கள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டார்கள். அமர்நாத் கூறுகையில், என் நண்பர் விளையாட்டாக கல்லூரியில் திருமணம் செய்ய சொன்னார், எங்கள் காதலை எங்களுக்கு உணர்த்திய இடமான கல்லூரியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என நான் யோசித்து அதையே செயல்படுத்தினோம்.
மகாராஜா கல்லூரி பல காதல் நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் திகதி நாடக போட்டியில் எங்கள் கல்லூரி தான் ஜெயித்தது. நண்பர்களுடன் நானும், சாப்னாவும் கல்லூரியில் தான் அன்று தங்கினோம். அங்குள்ள குளம் அருகில் அதிகாலை 2 மணி வரை இருவரும் உட்கார்ந்து பேசியது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என கூறியுள்ளார்.
இவர்கள் திருமண செய்திக்கு நல்ல வரவேற்பு உள்ள போதிலும், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் சமூகவலைதளங்களில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பெங்காலின் அருகே உள்ள சைரைபூர் எனும் பகுதியில் வசிக்கும் சபித்திரி எனும் பெண் சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் வாயில் சூலத்தை குத்தி தினமும் ரத்தம் குடித்து வந்துள்ளது பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபித்திரியின் கணவர் திடீர் மரணம் அடைந்து விட்டதால், ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் பல குற்றச்சாட்டுக்களை எழுப்பி பொலிஸில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவர் அபிஜித்தின் நாக்கில் திரிசூலத்தை குத்தி அவரது வாயில் இருந்து வரும் ரத்தத்தை குடிப்பதை ஒருவிதமான சடங்கு போல பின்பற்றி வந்தார் என்பதை அபித்திரியின் மாமியார் பொலிஸிடம் கூறியுள்ளார்.
சபித்திரியின் வீட்டருகே வசித்து வந்தவர்கள், கூட இவர் எப்போதுமே சற்று விசித்திரமாக தான் நடந்துக் கொள்வார். அவரது ஒவ்வொரு செயலையும் காண்பதற்கு வித்தியாசமாக தான் இருக்கும். நாங்கள் அவரை சூனியக்காரி என்று கருதினோம். அதனால் சபித்திரியின் கணவர் திடீர் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருந்ததாக கூறியுள்ளார்கள்.
மேலும் இது குறித்த விசாரணையில், சபித்திரியின் இந்த விசித்திர பழக்கத்தால், அவரது கணவரின் உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
சிறுமி ஹாசினியை எரித்து கொன்றுவிட்டு பெற்ற தாயையும் கொன்ற தஷ்வந்த் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள குன்றத்தூரை சேர்ந்த சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழங்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் (24) பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டான்.
வெளியில் வந்த அவனுக்காக பெற்றோர் இருப்பிடத்தை மாற்றி வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்து கொண்டு தஷ்வந்த் தப்பியோடிவிட்டான்.
இதையடுத்து பொலிசார் தஷ்வந்தின் தொலைபேசி இலக்கத்தை ஆராய்ந்த போது அவனுடன் சிறையில் இருந்தவர்களிடம் அதிகம் பேசியது தெரியவந்தது.
தஷ்வந்த் தப்பி சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவன் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெள்ளவத்தை கடற்கரையிலும் அதிகளவான மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழமையை விடவும் நேற்றையதினம் பெருந்தொகையான மீன்கள் வெள்ளவத்தை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.
அண்மைக்காலமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள கடற்கரைகளில் மீன்கள் பெருமளவில் ஒதுங்கி வரும் நிலையில், வெள்ளவத்தையிலும் ஒதுங்கியுள்ளமை அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் கடல் பகுதியில் அதிகமான மீன்கள் வந்துள்ளமை தொடர்பில் விசேட ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் வெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றம், அமிலத்தன்மை மாற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெனரால் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையில் மீன்கள் ஒதுங்கியமை குறித்து நாரா நிறுவனத்தின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். கடற்கரையில் வழமையை விடவும் அதிகளவான மீன்கள் ஒதுங்குவதால் சுனாமி அனர்த்தம் ஏற்படும் என்று கூற முடியாது. அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
சுனாமி பேரலைகள் ஏற்படுவது என்றால் கடலுக்குள் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்படும் பட்சத்தில் அது சாத்தியமாகும் என நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அனில் பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழ்கடலில் 10 – 20 கிலோ மீற்றர் தூரத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி ஏற்படும். அவ்வாறு இல்லை என்றால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதுவரை அப்படியான பூமியதிர்ச்சிகள் ஒன்றும் பதிவாகவில்லை. இது குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இன்று அல்லது நாளை பூமியதிர்ச்சி ஏற்படும் என்பதனை எங்களால் முன்கூட்டியே கூற முடியாது.
அதிக பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் கூட இதனை முன்கூட்டியே கூறமுடியாத நிலை காணப்படுவதாக தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனர்த்தம் தொடர்பில் தகவல் அறிந்து கொள்வதற்காக 117 என்ற இலக்கம் 24 மணித்தியாலமும் செயற்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதி கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்த குற்றத்துக்காக குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது-25) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு மீதான விளக்கம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்றைய வழக்குத் தீர்ப்பின் போது “வழக்கின் எதிரி கொலை செய்யும் பொது நோக்கத்தோடு திட்டமிட்டு அவரது மனைவி மீது தீப்பற்றவைத்தார் என்பது வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டவில்லை. எதிரி கைமோசக் கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்ற முடிவுக்கு இந்த மன்று வருகிறது.
அந்தக் குற்றத்துக்காக எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், குற்றவாளி 5 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகி வந்தார்.
மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (06.12) காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் மூத்த அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ. ஆனந்தசங்கரியுடன் சந்தித்து கலந்துரையாடினர்.
அந்த சந்திப்பின் பின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய ஒரு கூட்டணி அமைத்து அந்த கூட்டணியின் ஊடாக தேர்தலை எதிர்கொள்வதற்குரிய பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்.
அந்த பேச்சுவார்த்தையின் போது, தற்போதைய சூழ்நிலையில் புதிய மாற்று அணி ஒன்று தேவை என்பதன் அடிப்படையில் புதிய கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
அந்த கூட்டணியில், ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்), புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள், சமூக சமத்துவத்தினை ஊக்குவிக்கும் பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளன.
தற்போதைய மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து இப்புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறும் புதிய கூட்டணியினர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பொதுச் சின்னமாக உதயசூரியன்
தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழினத் தலைவர் தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியாலும் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸாலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமானஉதயசூரியன் சின்னத்தையே இப்புதிய கூட்டமைப்பு தனது பொதுவான தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்த போது உதயசூரியன் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக இடைப்பட்ட காலத்தில் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாக இருந்ததுடன், மீண்டும் ஒற்றுமையின் சின்னமாக, தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தும் சின்னமாக, தமிழ் மக்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும் சின்னமாக உதய சூரியனை பொதுச் சின்னமாக தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாக புதிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எமது முன்னாள் தலைவர்களால் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு என்பது தமிழர்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரித்தான சுய நிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்பட்டு ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கான சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும்.
அதுவே அவர்களின் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரே வழி என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கையாகவும், நோக்கமாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்படுகின்றது.
இந்த அடிப்படையிலேயே எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதெனவும் இக்கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
எமது கொள்கைகள் மற்றும் நோக்கங்களை ஏற்றுக்கொண்ட சகலஅரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் சிவில் அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பணி புரிய வருமாறும் புதிய கூட்டணியினர் மேலும் அழைப்பு விடுத்துள்ளனர்.