யானைத் தாக்குதலில் இருவர் படுகாயம்!!

திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், நேற்று (05.12) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ – புபுதுபுர பகுதியைச் சேர்ந்த எச்.எம்.கிரிபண்டா (60 வயது) மற்றும் அவரது மருமகனான கே.அபேரத்ன (32 வயது) என கூறப்பட்டுள்ளது.

இருவரையும் சிகிச்சைக்காக, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், மின்வேலிகளை அமைத்துத் தருமாறு மஹதிவுல்வெவ பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சமூர்த்தி அபிமானி 2017 விற்பனைக் கண்காட்சி!!

 
சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா மாவட்ட மட்டத்திலான விற்பனைக் கண்காட்சி வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (06.12.2017) 9. மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமட்ண விதான பத்திரன தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.திரேஸ்குமார் , உதவி அரசாங்க அதிபர் கே.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் உட்பட வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்க அதிபர் நாடா வெட்டி விற்பனை கண்காட்சி நிலையத்தினை திறந்து வைத்ததுடன் விற்பனை நிலையங்களையும் பார்வையிட்டார்.

விற்பனை கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறுமென சமூர்த்தி வங்கியின் பணிப்பாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் 286வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் இன்றுடன் 286வது நாளாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமற்போன உறவுகளின் தாய்மார்கள் தமது போராட்டத்ததை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக கடந்த 286 நாட்களாக வவுனியா பிராதன வீதி தபாலகத்திற்கு அருகில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மழை, வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினராலும் கைவிடப்பட்ட போராட்டமாக தற்போது காட்சியளிக்கின்றது.

உள்ளுராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியற்கட்சிகள் தமது இருப்பை தக்கவைப்பதற்கான பங்கீடு தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு செயற்பட்டு வருகின்றனவே தவிர இவ்வாறு போராட்டம் மேற்கொண்டு வருபவர்களின் நிலையினை கருத்திற்கொண்டு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஒரு போராட்டமாகவே நகர்ந்துகொண்டு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப்ஸ் செயலியில் மோட்டார் சைக்கிள் மோட் அறிமுகம்!!

இந்தியாவில் கூகுள் மேப்ஸ் செயலியின் அண்ட்ரொய்ட் பதிப்பில் மோட்டார் சைக்கிள் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் (v9.67.1) பதிப்பை பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கார், ஃபூட் மற்றும் ரயில் போன்ற ஒப்ஷன்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை மோட்டார் சைக்கிள் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது.

கூகுள் மேப்ஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோர் பயணம் செய்ய ஏற்ற வழிகளைக் காண்பிக்கும். கூகுள் மேப்ஸ் செயலியின் மோட்டார் சைக்கிள் மோட் முதற்கட்டமாக இந்திய சந்தையில் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்தின் இதர சேவைகள் மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்று வருவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

புதிய மோட்டார் சைக்கிள் மோட் பயனாளிகளுக்கு ஏற்ற வழிகளைப் பரிந்துரைப்பதோடு, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய வழித்தடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் சார்ந்த முழு விபரங்கள் மற்றும் வாகன நிறுத்தம் சார்ந்த விபரங்களையும் வழங்குகிறது.

முன்னதாக இதே அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியின் கார் மோட் வழங்கி வந்தது.

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி இந்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய தேங்காய் ஒன்றிற்கான சில்லரை விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 76 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபா வரை மாத்திரமே விற்பனை செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் : ஆய்வில் தகவல்!!

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery ) செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Cataract எனப்படும் கண்புரை நோய் மனிதர்களின் பார்வையை பறித்து அவர்களின் வாழ்வை இருள்மயமாக்குகிறது. அறுவை சிகிச்சை மூலம் கண்புரை அகற்றப்பட்டு இழந்த பார்வை திரும்ப கிடைக்கிறது.

அவ்வாறு கண் பார்வை கிடைக்க பெற்றவர்கள் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களில் 74,044 பெண்கள் அடங்குவர் அவர்கள் அனைவரும் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 41,735 பெண்கள் 60 சதவீத மரண அபாயத்தில் இருந்து மீண்டனர். அவர்களுக்கு முழுமையான கண்பார்வை கிடைத்தது.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன்பு அவர்களில் பலர் மாரடைப்பு, அல்சர், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். கண்புரை அறுவை சிகிச்சை செய்த பிறகு அவை குணமடைந்து ஆரோக்கியமான உடல் நிலையை அடைந்தனர்.

பொதுவாக கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு பார்வை தெளிவாக தெரிவதால் விபத்துகள் மூலம் ஏற்படும் மரணமும் தவிர்க்கப்படுகிறது. எனவே கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் நீண்டநாள் வாழ முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி இல்லாமல் உயிரைப் பிரிக்கும் தற்கொலை இயந்திரம்!!

ஒரு பட்டனை அழுத்தினாலே சில நிமிடங்களில் வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் ஒன்றை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டொக்டர் பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார்.

பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ள இந்த இயந்திரத்தை நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் வடிவமைத்துள்ளார். இந்த தற்கொலை இயந்திரத்திற்கு “தி சார்கோ கேப்சியூல்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதலாவதாக நம் மன நிலையை சோதிக்கும் விதமான சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தாக வேண்டும்.

அதன் முடிவில் நான்கு இலக்க எண் தரப்படும், அதைப் பயன்படுத்தி இயந்திரத்தின் வகையைப் பதிவிறக்கம் செய்து அதை 3டி பிரிண்டரில் பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம்.

தற்கொலை செய்யப்போகும் ஒருவர் இயந்திரத்தில் அமர்ந்து ஒரு பட்டனை அழுதியதும் நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன் வாயு ஆக்ஸிஜன் அளவை குறைத்து சில நிமிடங்களில் வலி இல்லாமல் மரணத்தை தழுவச் செய்யும்.

இதுகுறித்து டொக்டர் பிலிப், “சார்கோ இயந்திரத்தில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படவில்லை. இதைபயன்படுத்த நிபுணர்கள் யாரும் தேவையில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பவர் யாராக இருந்தாலும் சார்கோ இயந்திரத்தைப்பயன்படுத்தி சட்ட ரீதியாக அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்

இயந்திரத்தின் மேல் பகுதியை தனியாக பிரித்து எடுத்து சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாகவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்!!

இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

அரசாங்கம் இணக்கம் தெரிவித்த தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராக இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக லோகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் கூறியுள்ளது.

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுகின்றது ரெலோ!!

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும், ரெலோவின் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியுடனான சந்திப்பில், ஆசன பங்கீடுகள் தொடர்பில் பங்காளி கட்சிகள் கோரும் குறைந்தளவான ஒதுக்கீடுகளுக்கு தமிழரசு கட்சி உறுதியான பதில் தரவில்லை.

கடந்த 03 ஆம் திகதி மற்றும் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, அதிகமான ஆசன ஒதுக்கீடுகள் ரெலோவிற்கு தருவதாக இருந்தது. கிழக்கில் 3 சபைகளை கோருவதாக ரெலோ தீர்மானித்திருந்தது. மட்டக்களப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் 3 ஆசனங்கள் கொடுக்க முடியாது, இரண்டு ஆசனங்களே தர முடியுமென விடாப்பிடியாக இருந்தார்கள்.

70 வீதம் தமிழரசு கட்சிக்கும் 30 வீதம் ஏனைய கட்சிகளுக்கும் என தெரிவித்தனர். காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மிக விரைவாக முடிவுகள் எட்டப்பட வேண்டும்.

ஆனால், அர்ப்பணிப்புடனும், விட்டுக்கொடுப்புடன் இருந்த சூழ்நிலையில், எடுத்த தீர்மானத்திற்கு தமிழரசு கட்சி விடாப்பிடியாகவும், எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்த நிலையிலும், தமிழரசு கட்சி மீது சந்தேகமும், அதிருப்தியும் கொண்ட தமிழர் விடுதலை இயக்கம் நேற்று வவுனியாவில் கலந்துரையாடிய போது, தமிழர் விடுதலை இயக்கம் தமிழரசு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது.

அத்துடன், தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று மாலை தலைமைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் தமிழர் விடுதலை இயக்கத்தின் அடுத்த செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றார்.

-அத தெரண-

மரண அறிவித்தல் : திருமதி பொன்னுத்துரை இராணி!!

உடுவில் டச்சுறோட்டை பிறப்பிடமாகவும் அளவெட்டியை வதிவிடமாகவும் தற்போது ஆலடி வீதி தோணிக்கல்லில் வசிப்பவருமான பொன்னுத்துரை இராணி 04.12.2017 அன்று காலமானார்.

அன்னார் அம்பாள் பந்தல் சேவை உரிமையாளரான பொன்னுத்துரையின் மனைவியும் காலஞ்சென்ற செல்லையா இராசம்மா தம்பதிகளின் மகளும் சிருச்சினர் சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும் தவமணி, பவாணி , பூபாலசிங்கம் ஸ்ரீரஞ்சன் , வினோதினி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

பத்மவிஜி ( காப்புறுதி ஆலோசகர், வவுனியா) பத்மரெஜி (ஆசிரியர் – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் ) , கல்பனாசோதி (பிரான்ஸ்) , தயாயோகம் (அமேரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும் பாக்கியநாதன், கஜேந்திரராஜ், கஜேந்தினி வாணிவினோதா ஆகியோரின் அன்பு மாமியாரும் அனோஜா, லதுசிகன், சனுஷ்ரன், விமல்ரன் , அஸ்வின் , கஸ்மிதா , அதிசயா, ஆராதனா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடன் 06.12.2017 இன்று 2.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

தகவல்
குடும்பத்தினர்
077 8860889

பத்மவிஜி – 0775383737
பத்மரெஜி – 0770742649
கல்பனா சோதி – 003695138204
தயாயோகம் – 017165415462

வவுனியா பொதுநூலகத்தின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!!

 
வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது நூலகத்தினால் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட சித்திரப்போட்டி, சிறுகதை, கவிதை. கட்டுரை போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று (05.12.2017) வவுனியா கலாச்சார மண்டபத்தில் வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் பரிசளிப்பு விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி குமாரசாமி சிதம்பரநாதன், தமிழ்மணி அகளங்கன் கௌரவ விருந்தினர்களாக க.சத்தியசீலன் வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி பாக்கியநாதன் கமலேஸ்வரி, வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பிரிவு அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் நகரசபையின் வருடந்த நூல் வெளியீடும் இடம்பெற்றது.

நகரசபையில் ஓய்வு பெற்றவர்கள் கௌரவிப்பு இடம்பெற்றதுடன் திறமையாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

வவுனியாவில் வீடு உடைத்து நகை திருட்டு!!

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து அங்கிருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவ் வீட்டின் பின் வேலி வழியாக உள்நுழைந்த நபர்கள் வீட்டுக் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த சங்கிலி, தோடு, மோதிரம் உள்ளிட்ட ஐந்து பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இரவுவேளை வீட்டில் வசிப்பவர்கள் வீட்டிற்குச் சென்ற போதே திருட்டுப் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் : பொது மக்களுக்க எச்சரிக்கை!!

இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் தாழமுக்கமாக விருத்தி அடைந்து வருவதால், இலங்கையில் பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் 100 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் இன்று எச்சரித்துள்ளது.

வடக்கு கிழக்கு கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 8ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அழுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கும் 90 -100 கிலோ மீற்றர் வேகத்தில் வளர்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் விருத்தியடையும் தாழமுக்கம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழகத்தின் ஆந்திரா பகுதி ஊடாக பயணிக்கும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு முஸ்லிம் நாடுகள் மீது பயணத் தடையை விதித்த அமெரிக்கா!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 6 முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த பயணத் தடையை முழுமையாக செயற்படுத்த முடியும் என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

சாட், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் உயர் நீதிமன்றம் அறிவித்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளியிட்ட உத்தரவின் மூன்றாவது பதிப்பிற்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் ஏழு நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை எடுத்துள்ளனர்.

குறுந்தகவல் ஒன்றினால் கணவன் – மனைவிக்கு இடையில் நேர்ந்த விபரீதம்!!

வரக்காப்பொலயில் குறுந்தகவல் ஒன்றினால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் விபரீத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனது கணவரின் தொலைபேசிக்கு பிறிதொரு பெண் ஒருவரினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் குறித்து மனைவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் கணவர் வாகனங்களுக்கு பயன்படுத்தும் பிரேக் எண்ணெயை பருகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வரக்காப்பொல, கோதாபாளுவ கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பிரேக் எண்ணெயை பருகிவிட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறுந்தகவலை அடிப்படையாக கொண்டு மனைவியுடன் ஏற்பட்ட மோதலின் போது கொதிக்கும் எண்ணெயை மனைவியின் காலில் ஊற்றியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, கணவர் தனது கையிலிருந்த பிரேக் எண்ணெய்யை பருகியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மனைவியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியமை இந்தியாவிற்கு வெட்கக்கேடு!!

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி வீரர்கள் காற்று மாசு காரணமாக மாஸ்க் அணிந்து விளையாடினர். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இலங்கை அணி வீரர்கள் மாஸ்க் அணிந்து கிரிக்கெட் விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மேற்கு வங்காளம் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, வெளிநாட்டில் இருந்து வந்து சர்வதேச போட்டியை விளையாடும் வீரர்கள் மாஸ்க் அணிவது சரியானது கிடையாது. காற்று மாசுபாடு ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்காது. மாசுபாட்டை டெல்லி கட்டுப்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

இது குறித்து டெல்லி அரசு அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை நான் வெட்கமாக உணர்கிறேன், இல்லையெனில் இதனை நான் சொல்லியிருக்க மாட்டேன். இது உண்மையான பிரச்சினை என தெரிவித்துள்ளார்.