இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த யோகம் : அரசின் அதிரடி அறிவிப்பு!!

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு வரி இல்லாத பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்பை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்காக அறவிடப்படும் வட் வரியை மீளவும் அவர்களிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு பயணிகளிடம் வரிக்குரிய பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் அடுத்த வருடம் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச வர்த்தக கேந்திர நிலைமையாக மாற்றும் நோக்கத்தில் வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் வட் வரியை மீளவும் வழங்கும் முறை அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமான நிலையத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் குறித்த பொருட்களுக்காக விலைப்பட்டியலை சமர்ப்பித்து அந்த வரிப் பணத்தை மீளவும் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் செயற்படுத்தப்படவுள்ள நிலையில், சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளில் இந்த முறை காணப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மீண்டும் காதல் படத்தில் பிரபுதேவா!!

தமிழ் சினிமாவில் நடிகராக மீள்பிரவேசித்திருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டே தயாரான காதல் படமான `களவாடிய பொழுதுகள்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான கருத்துள்ள படங்களை எதார்த்தமாக இயக்கும் தங்கர் பச்சான் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் `களவாடிய பொழுதுகள்’.

கடந்த 2010 ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்த படம் இந்த மாதம் (டிசம்பர் 2017) வெளியாக இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை இயக்குநர் தங்கர் பச்சானே மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!!

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன வெலிகபொல பிரதேச செயலக பிரிவிலும், அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை அதிகரித்துள்ள நிலையில், மழை தொடருமாயின் மண்சரிவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

இளநரை, வழுக்கைத் தலை உள்ள ஆண்களுக்கு இதய நோய் ஏற்படக்கூடும் : ஆய்வில் தகவல்!!

நாற்பது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் ஏற்பட உடல் பருமனைவிட ஆபத்தான காரணியாக இருப்பது இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் தான் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2000 இளம் ஆண்களை வைத்து ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. தலைமுடி அதிகம் இருப்பவர்களை விட, இளநரை அல்லது வழுக்கைத் தலை விழுந்த ஆண்களுக்கு இதய நோய்கள் அதிகம் வந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏனைய ஆபத்துக் காரணிகளும் முக்கியம் என பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதய நோய் இருந்த நாற்பது வயதிற்குட்பட்ட ஆண்கள் 790 பேரும், அதே வயதிலிருக்கும் நல்ல உடல்நலத்துடன் இருந்த 1,270 ஆண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களின் தலை வழுக்கை அளவின் குறிப்பை வைத்து அவர்களின் மருத்துவ வரலாறுகள் எடுக்கப்பட்டன. பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் தலைமுடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்ற விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டன.

கண்டுபிடிப்புகளை இதய நோய் வர அதிக வாய்ப்புள்ள அறிகுறிகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்தனர்.

பின்னர், இளநரை இருப்பவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

மன்னார் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்த 15 பேரின் சடலங்கள் தோண்டி எடுப்பு!!

மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்த 15 சடலங்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் கத்தோலிக்கச் சபை நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நேற்றையதினம் மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

10 வருடங்களுக்கு முன்னர் மன்னார் கத்தோலிக்க சபையில் கடமையாற்றிய கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 15 பேரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மயானம் முன்னதாக கத்தோலிக்கச் சபைக்கு சொந்தமானதாக இருந்த போதும், பின்னர் அப் பகுதியில் மரணிப்பவர்கள் அனைவரது சடலமும் அங்கு புதைக்கப்பட்டது.

எனவே, குறித்த 15 பேரின் சடலங்களையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, கத்தோலிக்க மயானத்தில் புதைக்க வேண்டும் என்பதாலேயே இவை தோண்டி எடுக்கப்பட்டதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் அவை புதிய மயானத்தில் புதைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு நோய்க்கு எதிராக தடுப்பூசி ஏற்றுவது உயிருக்கு ஆபத்து!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் திட்டம் உடனடியாக கைவிடப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோஃபி என்ற மருந்து நிறுவனம் இந்தத் தடுப்பூசியால் நோய் பாதிக்காத குழந்தைகளும், பெரியவர்களும் வெகுவாக பாதிக்கப்பட‌க் கூடும் என எச்சரித்தது.

ஏற்கனவே சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலை‌யில், இந்த மருந்து பாதுகாப்பானதா என ஆய்வு செய்யாமல் அந்த மருந்துக்கு அனுமதி அளித்தது ஏன்? என்று பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி, ஆதாரங்கள் சிக்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிடம் நாம் வினவிய போது, டெங்கு நோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கம் இல்லை என்று சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டி பிரிவின் விஷேட வைத்தியர் ப்ரசீலா கூறினார்.

இந்த தடுப்பூசியை இலங்கையில் அறிமுகம் செய்வதற்கான கோரிக்கைகள் வந்தபோதும் அதனை சுகாதார அமைச்சு நிராகரித்ததாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் தனிப்பட்ட ரீதியில் வௌிநாடுகளுக்கு சென்று இந்த தடுப்பூசியை ஏற்றுபவர்கள் பற்றிய தகவல்கள் தமக்குத் தெரியாது என்று அவர் மேலும் கூறினார்.

இனி காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும் : பி.சி.சி.ஐ!!

இந்திய – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்து இருந்தது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும்’ என்றார்.

நேற்றும் காற்று மாசு பாதிப்பு இருந்ததாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மத்யூஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

வவுனியாவில் 19 வயது இளைஞர் கைது!!

வவுனியா பல்பொருள் அங்காடிக்கு முன்பாக நேற்று இரவு 19 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து இரண்டு கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தங்கராசா தினேஷ் எனும் 19 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு!

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில்  கடந்த 03.12.2017  ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை  விளக்கீடும்  சொக்கபானை  உற்சவமும்  மிக சிறப்பாக  இடம்பெற்றது .

 

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிங்கள மொழியில் அறிவித்தல் பலகைகள் : தமிழ் புறக்கணிப்பு?

 
இதுவரை காலமும் மாவட்ட செயலகத்தால் அமைக்கப்பட்ட பதாதைகள் அனைத்துமே மும் மொழிகளிலும் அமைந்திருந்தன.

ஆனால் இம்முறை புதிதாக மன்னார் வீதியில் கச்சேரிக்கு முன்பாக (பிரதேச செயலகம் மற்றும் கச்சேரிக்கும் இடையில்) தனி சிங்கள மொழியிலான பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் அதிகம் வாழும் பிரதேசத்தில் தனிச் சிங்கள மொழியிலான பதாதை வைத்திருப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

இதேவேளை மாவட்ட செயலகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோக கட்டிடத்திலும் தனிச் சிங்கள மொழியிலான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

எதுவாக இருப்பினும் மாவட்ட செயலகத்தினூடாக இவை இடம்பெற்றிருப்பதால் உரிய நடவடிக்கையை மேற்கொள்வாரா புதிய அரச அதிபர்?

வவுனியாவிற்கு புதிதாக கடமையேற்று வந்துள்ள அரச அதிபர் பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர் என்பது யாவரும் அறிந்ததே.

வவுனியா கோவிற்குளம் கமநல சேவைகள் நிலையத்தினால் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள்!!

 
பெரியகோமரசங்குளம், கல்வீரன்குளம் கிராம விவசாயிகளை நெல் உரமானியம் வழங்குவதற்கான கையொப்பமிடுவதற்கு இன்று (04.12.2017) காலை கோவிற்குளம் கமநல சேவைகள் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

தங்களது வேலைகளையும் விட்டு கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வருகைதந்த விவசாயிகளிடம் இன்று குறிப்பிட்ட சிலருக்கே சேவை வழங்க முடியும் மற்றவர்களை நாளைமறுதினம் (புதன்கிழமை) வருமாறு தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா கோவிற்குளம் கமநல சேவைகள் உத்தியோகத்தரிடம் கேட்டபோது..

எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சிலர் முருகனூர் பண்ணைக்கு சென்றுள்ளதால். ஒரு சில உத்தியோகத்தர்களே அலுவலகத்தில் கடமை புரிகின்றனர். எனவே எம்மால் 65 நபர்களுக்கு மாத்திரமே சேவையினை வழங்க முடியும் எனவே மற்றைய நபர்களை புதன்கிழமை வருமாறு தெரிவித்ததாக தெரிவித்தனர்.

அன்றாடம் கூலி வேலைக்கு சென்று தங்களது குடும்பங்களின் வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் விவசாயிகளை இவ்வாறு இன்று நாளை என திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பது சரியா என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வெடித்துச் சிதறிய விமான இயந்திரம் : அலறிய விமான பயணிகள்!!

 
கியூபாவில் இருந்து பிரித்தானியா புறப்பட்ட தாமஸ் குக் விமானத்தின் இயந்திரம் வெடித்துச் சிதறியதில் அதில் இருந்த பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

கியூபாவின் Holguin விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தாமஸ் குக் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மெதுவாக கிளம்பி வேகமெடுத்து பறக்கவும், திடீரென்று பயங்கர சத்தத்துடன் விமான இயந்திரம் வெடித்துச் சிதரியுள்ளது.
இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் உடனடியாக கீழிறங்கியதாகவும், அதே நேரத்தில் இயந்திரம் தீப்பற்றி எரிந்ததாகவும் பயணிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயந்திரத்தில் பற்றிய தீயின் பொறி குறித்த விமானத்தின் பின்னிருக்கை வரை பரவியதாகவும் பயணிகள் அச்சமுடன் தெரிவித்துள்ளனர்.
வினாம புறப்படும் முன்னரே பயங்கரமாக குங்குங்கியதாகவும் அதன் பின்னரே பயங்கர சத்தமுடன் விமான இயந்திரம் வெடித்துச் சிதரியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விமானம் கரும்புகையால சூழப்பட்டதாகவும் உள்ளிருந்த பயணிகள் அலறியப்படி காப்பாற்ற கோரி கூச்சலிட்டதாகவும் 64 வயது பயணி ஒருவர் பதற்றம் விலகாமல் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தால் நிலைதடுமாறிய விமானி அந்த விமானத்தை தரையிறக்க மிகவும் சிரமப்பட்டதாகவும், குறித்த விமானத்தில் இருந்த எவரும் உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம் எனவும் 41 வயதான பயணி ஒருவர் கூறியுள்ளார்.
மட்டுமின்றி விபத்துக்கு பின்னரும் தாமஸ் குக் நிர்வாகிகளின் செயல்பாடுகள் தங்களுக்கு திருப்தியாக இல்லை எனவும், மாற்று விமானத்தை ஏற்பாடு செய்ய சுமார் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் பெரும்பாலான பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நவம்பர் 27-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தில் இருந்த 300 பயணிகளுக்கும் தலா 600 யூரோ இழப்பீடாக தாமஸ் குக் நிறுவனம் வழங்கியுள்ளது.

50க்கும் மேற்பட்டோரை பலாத்காரம் செய்த இளைஞர் : தாயிடம் கூறிய உண்மை!!

இரண்டு சிறுவர்களை பலாத்காரம் செய்தததாக தாயிடம் இளைஞர் கூறிய நிலையில் 50க்கும் மேற்பட்ட சிறார்களிடம் இப்படி நடந்துகொண்டுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைட் நகரை சேர்ந்தவர் ஜோசப் ஹைடன் பாஸ்டன் (18). இவர் சில தினங்களுக்கு முன்னர் 8 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு தாய் அதிர்ச்சியடைந்த நிலையில் அவருடனே காவல் நிலையத்துக்கு வந்து ஜோசப் சரணடந்துள்ளார். அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் தனது 10 வயதிலிருந்து 50க்கும் மேற்ப்பட்ட சிறார்களை தான் பாலியல் பலாத்காரம் செய்ததை ஜோசப் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வரும் புதன்கிழமை ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார். அவருக்காக வழக்கறிஞர் வாதாடுவாரா என்ற விபரம் தெரியவில்லை.

ஜோசப்பால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களிடமும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் யாரும் புகார் கொடுக்க இன்னும் முன்வரவில்லை என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விழாவில் நடனமாடிய மாணவி மரணம்!!

வந்தவாசியில், பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடனமாடிய மாணவி, மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி பாலுடையார் தெருவைச் சேர்ந்த ரங்கன், சித்ரா தம்பதியினரின் 10 வயது மகள் அபிநயா. இவர் வந்தவாசியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று வந்தவாசி ஒன்றிய அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில், தமிழக பள்ளிக் கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது.

அதில் குழு நடனத்தில், அபிநயா நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிநயா, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை ரங்கன் பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 300 ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற விஷால்!!

சுமார் 300 ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார் நடிகர் விஷால். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகின்றார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் வெற்றிடமாகவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க, நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

திடீரென அரசியலில் குதித்துள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுமார் 300 ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் சைக்கிளில் தண்டையார் பேட்டை அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி!!

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதைத்துக் கொண்டிருந்த போது, வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது.

அது 4 அங்குல நீளமும் 2.5 அங்குல அகலமும் கொண்டிருந்தது. அதன் மீது அடர்த்தியான ரோமங்கள் படிந்திருந்தன. அது பற்றிய விபரங்களைத் தன் நண்பர்களிடம் அவர் கேட்டுள்ளார்.

அதன்போது, பன்றியின் பித்தப்பையில் உருவாகிய கல் என தெரிய வந்தது. அதை கோரோசனை என்றும் அழைப்பார்கள்.
இது பலவிதமான நோய்களைத் தீர்க்கும் ஒரு மருந்தாகும்.

மேலும், உடலில் சுரக்கும் நச்சுகளை வெளியேற்றும் தன்மையுடையது. எனவே இதை மருந்துகளில் கலக்கின்றார்கள். சீனாவில் இது விலை மதிக்க முடியாதது.

விவசாயிக்கு கிடைத்துள்ள இந்த பன்றி பித்தப்பைக் கல் சுமார் 4500 பவுண்ட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் திடீர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.