பேருந்தில் பொதிகளை தவறவிட்ட வெளிநாட்டுபயணிக்கு உதவிய பொலிஸார்!!

தனியார் பேருந்தில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் பொதிகளை கண்டுபிடித்த அனுராதபுரம் பொலிஸார், அதனை சுற்றுலாப் பயணி ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை (14) ஒரு பேருந்தில் இருந்து தனது பொதிகளை இறக்க மறந்துவிட்டதாக , சுற்றுலாப் பயணி அனுராதபுரம் பொலிஸ் சுற்றுலாப் பிரிவில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு-கோட்டையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த சுற்றுலாப் பயணி, அனுராதபுரம் நகரில் இறங்கும் போது தனது பொதிகளை எடுக்க மறந்துள்ளார்.

அது தொடர்பில், அனுராதபுரம் பொலிஸார் கோட்டை பேருந்து நிலையத்தில் நடத்திய விசாரணையில், தொலைந்து போன பொருட்களை வவுனியாவுக்குச் செல்லும் பேருந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சுற்றுலாப் பயணியை மீட்ட அனுராதபுர பொலிஸ் சுற்றுலாப் பிரிவின் அதிகாரிகள், வெளிநாட்டு பயணியின் பொதிகளை (15) அவரிடமே திருப்பி ஒப்படைத்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்!!

இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாதியர்களின் பதவி உயர்வில் இழக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று பகல் 10 மணி முதல் 1 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன் 12.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாகவும் தாதியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாதியர்கள் எங்களது ஓ.ரி 1/80 என்று கூறிய மதவத்த எங்கே?, அமைச்சரே 2027 ஆண்டு சம்பளத்தில் கணக்கிடுவதென்று பொய் சொல்ல வேண்டாம், பழைய முறையில் பதவி உயர்வு என்றால் வரவு செலவு திட்டத்தில் போட்டது ஏன்,

அரசே தாதியருக்கு வரவு செலவு திட்டத்தில் சரியான நீதியை பெற்றுக்கொடு, வரவு செலவு திட்டத்தினை கொண்டு வந்தது சுகாதார ஊழியர்களை தாக்கவா? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தாதியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்கள் பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர நோயாளர் பிரிவு , விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட தாதியர்கள் சேவைகளில் ஈடுபட்டிருந்தமையுடன் ஏனைய சேவைகளிலிருந்து 3மணிநேரம் தாதியர்கள் விலகியிருந்தனர்.

வவுனியாவில் வயல்வெளியில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!!

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று(17.03.2025) காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் சடலம் காணப்பட்ட பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு, குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலத்தை இன்று காலை அவதானித்த ஊரவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதோடு, மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 40 பரீட்சை நிலையங்கள், 4396 மாணவர்கள் : க.பொ.த.சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம்!!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 26ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள இரு வலயங்களில் இருந்தும் இம்முறை 4396 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 2405 பேரும்,தனியார் பரீட்சார்த்திகள் 1991 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவுத்துள்ளது.

இம்முறை பரீட்சைக்காக வவுனியாவில் 40 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் குறித்த பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி….!!

வாரியபொல – புத்தளம் வீதியின் பலாபத்வல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாரியபொலவில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியொன்று வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்ட போது, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறிக்கு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 44 வயதுடைய வீதிகுளிய பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

43 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்கா!!

சுமார் 43 நாடுகளின் குடிமக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா, பயணத் தடையை விதிப்பது தொடர்பில், பரிசீலித்து வருகிறது. இதில் 11 நாடுகள் “சிவப்பு பட்டியலில்” உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான், பூட்டான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளே அவையாகும்.

சுற்றுலா விசாக்களில் பயணிப்பவர்கள்

பயணக்கட்டுப்பாடு, ஆனால் துண்டிக்கப்படாத 10 நாடுகளின் “செம்மஞ்சள்” பட்டியலில் அடக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளின், பணக்கார வணிகப் பயணிகள், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் புலம்பெயர்ந்தோர் அல்லது சுற்றுலா விசாக்களில் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அந்தப் பட்டியலில் உள்ள குடிமக்களும் விசா பெறுவதற்கு கட்டாய நேரில் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதில் பெலாரஸ், ​​எரித்திரியா, ஹெய்ட்டி, லாவோஸ், மியான்மார், பாகிஸ்தான், ரஷ்யா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை அடங்கும்.

இதனை தவிர திட்டத்தில் 22 நாடுகளின் வரைவு “மஞ்சள்” பட்டியலில் அடங்கப்பட்டுள்ளன.

அந்தப் பட்டியலில், அங்கோலா, என்டிகுவா, பார்புடா, பெனின், புர்கினா பாசோ, கம்போடியா, கெமரூன், கேப் வெர்டே, சாட், கொங்கோ குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, டொமினிகா,

எக்குவடோரியல் கினியா, காம்பியா, லைபீரியா, மலாவி, மாலி, மவுரித்தேனியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, சாவோ டோம் மற்றும் பிரின்சிப், வனுவாட்டு மற்றும் சிம்பாப்வே ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டில் திடீரென சுருண்டு விழுந்து 14 வயது மாணவி மாரடைப்பால் மரணம்!!

தனது வீட்டில், டிவியில் இந்திய அணி, சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்ததை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த 14 வயது மாணவி,

திடீரென மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் சிறுமிக்கு வேறு எந்த உடல்நலக் கோளாறுகளும் இதுவரை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா 3வது முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த போட்டியை உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரயன்ஷி என்ற 14 வயது சிறுமி டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

விராட் கோஹ்லி இந்த மேட்சில் விளையாடிய போது அவுட் ஆனதை பார்த்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் வேகமாக செய்தி பரவியது.

இந்நிலையில் இது குறித்து அவரின் தந்தை அஜய் “எனது பெண் உயிரிழந்த நேரத்தில் கோஹ்லி பேட்டிங் செய்ய களத்தில் கூட இறங்கவில்லை. என் மகள் இறந்தது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்டது தான்” என விளக்கம் அளித்துள்ளார்.

எந்தவிதமான நோய் தாக்குதலுக்கும் உள்ளாகாத தங்களது மகள், வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம், பெற்றோர்களை நிலைகுலைய செய்துள்ளது.

சமீப காலங்களாக, குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு இளைஞர்கள் பெருமளவில் மாரடைப்பால் மரணமடையும் போக்கு அதிகரித்து வருவது கவலைக்குள்ளாகுகிறது.

கல்லூரி மாணவியைக் கொன்று வீசிய கொடூரம் நண்பர்களுடன் சேர்ந்து காதலன் வெறிச்செயல்!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் துங்கபத்ரா நதியில் கடந்த மார்ச் 6ம் தேதி இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத மரணம் எனக் கருதப்பட்டது.

இதன் பிறகு பிரேத பரிசோதனையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தினர்.

சில நாட்கள் கழித்து, மரணமடைந்த பெண் 22 வயதான சுவாதி என்ற மாணவி. அவர் ஹாவேரி மாவட்டத்தின் ரட்டிஹள்ளி தாலுகா மசூருவைச் சேர்ந்த ரமேஷ் ப்யாடாகியின் மகள் எனவும் அடையாளம் காணப்பட்டார்.

சுவாதி கடந்த மார்ச் 3ம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மார்ச் 7 அன்று ஹிரேகேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையின் போது, 28 வயதான நயாஸ் என்பவரை போலீசார் மார்ச் 13 ம் தேதி கைது செய்தனர். சுவாதியை ரணிபென்னூர் நகரில் உள்ள சுவர்ணா பூங்காவுக்கு அழைத்துச் சென்ற பின்னர்,

ரட்டிஹள்ளியில் இருக்கும் ஒரு காலியாக இருந்த பள்ளிக்கூடத்திற்கு கொண்டு சென்று, புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடலை இரவு 11 மணிக்கு வினாயக்கின் காரில் கொண்டு சென்று துங்கபத்ரா நதியில் எறிந்ததாக தெரிவித்துள்ளார். சுவாதியின் தாய் தனது மகளை இழந்ததில் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார். “அவள் வெளியில் சென்று வருகிறேன் என்றாள்.

ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் காணவில்லை, அதன் பிறகே புகார் செய்தோம். என்னுடைய மகளை யார் கொன்றாலும், நண்பராக இருந்தாலோ வேறு யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்று வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது” எனக் கூறி, போலீசாரை முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். போலீசாரின் விசாரணையில் நயாஸ், வினாயக் மற்றும் துர்கா சாரி பதிகர் என்று மூன்று சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது.

அதன் பின்னர் தொடர் விசாரணையில் கடந்த மார்ச் 3ம் தேதியன்று, அவர்கள் சுவாதியை அழைத்துச் சென்று கொலை செய்து, சுவாதியின் உடலை நதியில் வீசி சென்றுள்ளனர்.

நயாஸ் கைதான நிலையில் மற்ற இருவர் தலைமறைவாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் நிகழ்ந்ததற்கான காரணங்களைப் பற்றிய விரிவான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இதில் சுவாதியை நயாஸ் காதலித்து வந்ததும், காளை போட்டிகளை காண்பதில் அதிக ஆர்வம் கொண்ட சுவாதி நயாஸைக் காதலித்து இருவரும் சுற்றி வந்த நிலையில்,

தனது மதத்தைச் சேர்ந்த பெண்ணை நயாஸ் திருமணம் செய்ய முயன்றதில் சுவாதி சண்டையிட்டுள்ளார். இதனால் தனது நண்பர்களுடன் திட்டம் போட்டு, காரில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து 3 பேரும் சுவாதியை கொலைச் செய்து நதியில் வீசியுள்ளது தெரிய வந்துள்ளது.

வாயில் துணியை வைத்து இரட்டைக் குழந்தைகளைக் கொன்ற தாய்!!

அத்தனை அழகாய் இருக்கிறார்கள். எப்படித் தான் கொல்ல மனசு வந்ததோ? தனது இரட்டைக் குழந்தைகளை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி வாயில் துணியைத் திணித்து கொலைச் செய்திருக்கிறார் பெற்ற தாய்.

உத்திரகான்ட் மாநிலம் ஹரித்துவார், ஜ்வாலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர், திருமணம் முடித்து கணவர், 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இரட்டை குழந்தைகளான இருவரும் ஆறு மாத கைக்குழந்தைகள்.

இந்த பெண்மணியின் கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திடீரென 2 கைக்குழந்தைகளும் மர்மமான முறையில் மயங்கி இருந்தன. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த குழந்தைகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, பெண்மணி தான் வெளியே கடைக்கு சென்றதாகவும், பின் மீண்டும் வரும்போது குழந்தைகள் மயங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

கணவரும் அப்போது வீட்டில் இல்லை என முன்னுக்கு பின் முரணான பதிலளித்துள்ளார். இதனையடுத்து சந்தேகப்பட்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, குழந்தைகளின் இளம் தாய் 2 குழந்தைகளையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தினமும் குழந்தைகள் இரவு நேரத்தில் அழுதுகொண்டு இருப்பதை தொடர்கதையாக இருந்துள்ளது.

குழந்தையின் அழுகையை நிறுத்தவும் முடியவில்லை. இது ஒருகட்டத்தில் குழந்தைகள் மீதான அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இதனால் குழந்தை வாயில் துணியை அழுத்தி இருக்கிறார். இதனால் மூச்சுத்திணறிய குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

முல்லைத்தீவு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்துளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிற்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்றிரவு இளைஞன் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த மதுசன் குணசிங்கம் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்றகோர விபத்து : இளைஞன் பரிதாபமாக பலி!!

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (14.03.2025) நள்ளிரவு11.50 மணியலவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும் கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதின் காரணமாக சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ். இளைஞன் பலி!!

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.

சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14.03) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஒற்றை தந்தத்துடன் தப்பியோடிய யானை கண்டுபிடிக்கபட்டது!!

ஹபரணை-மரதன்கடவல வீதியில் கலபிட்டகல பகுதியில் லொறியுடன் மோதி காயமடைந்து ஒற்றை தந்தம் உடைந்த நிலையில் காணாமல் போயிருந்த யானை,

நேற்று (14) காலை திரப்பனை பிரதேச செயலகப் பிரிவின் லபுனொருவ பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு அருகில் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹபரணை – மரதன்கடவல வீதியில் உள்ள கலபிடகல பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (07) அதிகாலை லொறியுடன் மோதி வலது தந்தத்தை இழந்த யானைத் தேடுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் பல குழுக்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி லபுனோருவ பகுதியில் உள்ள ஒரு ஏரியின் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த யானை நேற்று காலை வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை தற்போது கூட்டத்துடன் இருப்பதாகவும், யானைக்குத் தேவையான சிகிச்சையை பந்துலகம வனவிலங்கு மருத்துவக் குழு மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதம் முதல்!!

வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதி,

திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க யோசனைகளை முன்வைத்தார்.

இந்த மாதம் 21 ஆம் திகதி வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில், மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கான திட்டம் அடங்கிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட உள்ளது.

சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 15750 ரூபாயால் அதிகரிக்கவும் தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கான 6,000 ரூபா வவுச்சர் : அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!!

பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருள் வாங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் 6,000 ரூபா மதிப்புள்ள வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சர்கள், இன்று (15.03) காலாவதியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அவற்றின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

டுபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​

மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் கைப்பைகளில் இருந்து கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் திருடப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்தப் பணம் FitsAir விமானத்தின் பயண பெட்டியில் இருந்தபோது தொலைந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன மொத்த தொகை 15,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 6,000 திர்ஹாம்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸரிடமும் கொழும்பு 03 இல் அமைந்துள்ள FitsAir கிளையிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்களைத் தவிர, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அதே விமானத்தில் பயணம் செய்திருப்பதும்,

விமானம் செல்ல வேண்டிய இடமான டுபாயில் அவர்களின் பொருட்களை சோதனை செய்தபோது இந்தப் பணம் காணாமல் போனதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.