இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்!!

உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது..

அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது.

குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பன்றிகளின் உடல் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொறுத்தும் ஆய்வில் சாதனை!!

பன்றிகளின் உடல் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பாக நடந்த தொடர் ஆய்வில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வாளர்கள் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளனர்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உடல் உறுப்புக்கள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பலனாக பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்ற நிலை இருந்தது.

எனவே பன்றியின் உடல் உறுப்புக்களில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் இருக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர், தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

ஹாவர்ட; பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணர்கள் ஜார்ஜ் சர்ச் மற்றும் லுகான் யங் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளனர். இதுவரை 37 பன்றி உறுப்புக்களில் பெர்வ் வைரஸ் தொற்றுகள் அகற்றப்பட்டுள்ளன.

இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது, எதிர்காலத்தில் இத்தகைய தொடர் ஆய்வுகளின் மூலம் பன்றிகளின் உடல் உறுப்புக்களை உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1667 பேர் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,667 பேர் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் 402 பேரும், காலியில் 210 பேரும், களுத்துறையில் 189 பேரும் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதமே வருடத்தில் அதிகளவான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எலிக்காயச்சல் காரணமாக சிறுநீரகம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதால் அது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க, குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் தங்களின் வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதனூடாக எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால், உடனடியாக வைத்தியரை நாடி தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் டொக்டர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் மிக வயதான மனிதர் 114 வயதில் மரணம்!!

உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டல் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

114 வயதான இவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர். இவர் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

இவர் கடந்த 1903-ம் ஆண்டு போலந்தில் உள்ள ஷார்நவ் என்ற நகரில் பிறந்தார். யூத மதத்தை சேர்ந்த இவர் தனது வாழ் நாளில் 2 உலகப் போர்களை கண்டவர்.

முதல் உலகப் போரின் போது தனது பெற்றோரை இழந்து அனாதையாக ஆனார். பின்னர் வாழ்க்கையில் கடும் சோதனைகளை சந்தித்தார். இவருக்கு முதல் மனைவி மூலம் குழந்தைகள் பிறந்தனர்.

போலந்தில் ஹாலோ காஸ்ட்டில் ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களை கொன்று குவித்தனர்.

அதில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து இஸ்ரேல் வந்த அவர் வர்த்தகர் ஆனார். இவருக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மூலம் பல பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர்.

ஆப்கான் வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி!!

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் சமீப காலமாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அபு சயீத், கடந்த மாதம் குணார் மாகாணத்தில் நடந்த வான்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், அந்த இயக்கத்தின் மத்திய ஆசிய பிரிவை சேர்ந்த தளபதிகள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் பலியாகி உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

இது பற்றி அவர்கள் கூறுகையில், “10-ந் தேதி கிழக்கு குணார் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அப்துல் ரகுமான் கொல்லப்பட்டார். அவருடன் அந்த இயக்கத்தின் மூத்த தளபதிகள் 3 பேரும் உயிரிழந்தனர்” என்றனர்.

இது பற்றி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மூத்த தளபதி ஜான் நிக்கல்சன் கூறுகையில்,

“அமெரிக்க வான் தாக்குதலில் அப்துல் ரகுமான் கொல்லப்பட்டிருப்பது, ஐ.எஸ். இயக்கத்துக்கு விழுந்த பலத்த அடியாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும், நங்கர்ஹார் மாகாணத்தில், அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 சிவிலியன்கள் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது கல்வீச்சு!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது நேற்று மாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பளைப்பகுதியில் வைத்து தனியார் பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்பட வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

12 வயது சிறுவனுக்கு சாபம் : 12 அங்குலமுள்ள பெரிய கைகள் : ஒதுக்கும் கிராம மக்கள்!!

 
இந்தியாவில் 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோயினால் அவனது கை 12 அங்குலம் அளவிற்கு பெரியதாகியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இது சிறுவனுக்கு ஏற்பட்ட சாபம் என ஒதுக்கியுள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் தாரிக். 12 வயதாகும் இச்சிறுவனுக்கு பிறக்கும் போதே அரியவகை நோயின் பாதிப்பினால் அவனது கைகள் சாதரணமாக மனிதனுக்கு இருப்பதை விட பெரிய கைகளாக இருந்துள்ளது.

இதனால் தாரிக் இது தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது தந்தை இறந்ததால் பணப்பிரச்சனை காரணமாக தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அவரது கைகள் தற்போது 12 அங்குலத்திற்கு பெரிய கைகளாக மாறியுள்ளது.

இதனால் அவர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார். இது குறித்து Tarik கூறுகையில், தன்னுடைய கைகள் பெரிய கைகளாக இருப்பதால், பள்ளிகளில் தான் மறுக்கப்படுவதாகவும், மாணவர்களிடையே ஒதுக்கிவைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

நான் ஒருபோதும் இதை குணப்படுத்த முடியாது என்று நம்பவில்லை, இந்த நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனவும், தன்னுடைய கைகள் பெரிய கைகளாக இருப்பதால், இது தனக்கு வந்த சாபம் எனவும், ஒரு சிலர் தன்னை பேய் என்று கூறுகின்றனர்.

உள்ளூர் கிராம வாசிகள் தன்னுடன் பேசுவதற்கு பயப்படுகின்றனர். ஒதுக்கி வைக்கின்றனர். நான் இந்த நிலைமையை அகற்ற விரும்புகிறேன்.

நான் ஒவ்வொரு நாட்களும் பள்ளிக்குச் சென்று சாதாரண குழந்தைகளைப் போல விளையாட வேண்டும் என்றும் குழந்தைகளைப் போலவே இருக்க வேண்டும் எனவும் தனக்கும் சாதாரண கைகள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டாரிக் பிரச்சனை உண்மையில் எங்களுக்கு ஒரு மர்மம். இதற்கு முன்னர் இது போன்ற நோயாளியை இதுவரை பார்த்ததில்லை.

ஒரு சில சந்தர்ப்பங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் அவர்கள் யானைக் கால் நோயைக் கொண்டிருந்தார்கள், அவனுடைய நிலைக்கு இது ஒத்ததாக இருக்கிறது.

ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு, எதுவும் சாத்தியமில்லை. விஞ்ஞானத்தின் வயதில், ஏராளமான ஆராய்ச்சிகள் உள்ளன, எனவே எதுவும் சாத்தியமற்றது என கூறியுள்ளனர்.

தாரிக் நிலைமை குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், அவனது தந்தை உயிருடன் இருக்கும் வரை அவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது, அவரது தந்தை இறப்புக்கு பின்னர், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை, உள்ளூர் மருத்துவர்கள் இதை சரி செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.

அதற்கு நன்கு வசதிகள் நிறைந்த மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்கு தங்களிடம் போதுமான பண வசதி இல்லாததால், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார்.

வவுனியா மாணவர்கள் இருவர் தேசியமட்ட தமிழ்த் தினப் போட்டியில் சாதனை!!

தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு சேனநாயக்க வித்தியாலத்தில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றியே செட்டிகுளம் மாணவர்கள் இருவரும் சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ம.ஆர்த்தனா பிரிவு 5 இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும், வவுனியா, வவுனியா, மாணிக்கவாசகர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் அ.அனுசாந்த் பிரிவு 4 இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று தக்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் கோட்டத்தில் தேசிய ரீதியில் தனி ஆக்கத்தில் குறித்த நிகழ்வில் தங்கப்பதக்கம் பெறப்பட்டமை இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இலவச சமையல் பயிற்சி!!

 
வவுனியா  சிந்தாமணி ஆலய மண்டபத்தில் நேற்று (12.08.2017) காலை 10.30 மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா காரியாலயம் ஏற்பாடு செய்த பொலிசார் பொதுமக்கள் நல்லுறவைக்கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்களுக்கான இலவச சமையல் பயிற்சிகள் இடம்பெற்றது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிராந்திய பொலிஸ் அதிகாரி, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஸோர், மற்றும் பொதுமக்கள் பெருமளவான பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்விற்கு பிரபல்யமான சமையல் கலை நிபுனர்கள் கலந்து கொண்டு சமையல் பயிற்சியினை வழங்கியிருந்ததுடன், அவர்களுக்கான நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஓவியாவை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் அழைப்பு!!

நடிகை ஓவியா தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணைக்கு பொலிசார் அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் பேச்சும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. நடிகை காயத்திரி ரகுராம், “சேரி பிகேவியர்”, “மயிர்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது பிரச்சினையானது.

இதில் எப்போதும் கலகலப்புடனும், சுறுசுறுப்படனும் இருந்த நடிகை ஓவியா திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளரான ஆரவ் உடன் காதல் வயப்பட்டு அது தோல்வி அடைந்ததால் இந்த நிலைக்கு மாறியதாக ஓவியா தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஒருநாள் மழையில் திறந்த வெளியில் தூங்கினார். இதை ஆரவ் கண்டுபிடித்து அவரை மீட்டு அழைத்துச் சென்றார். அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா குதித்தார்.

அப்போதும் அவரை ஆரவ் காப்பாற்றினார். ஓவியாவின் இந்த செயலால் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுவிட்டார்.

அங்கு அவர் மனநல சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களும் தொடர்ந்து ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பூந்தமல்லி நசரத்பேட்டை பொலிசில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தவித வெளிதொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் அனுமதியுடன் மட்டுமே அவர்கள் வெளியே வர முடியும். கடந்த 4ம் திகதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காட்சி இடம்பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தங்களின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்கவே தயாரிப்பாளர்கள் தூண்டுதலின் பேரில் மற்றவர்கள் நடிகை ஓவியாவை இந்த நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர். எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

நசரத்பேட்டை பொலிஸாருக்கு ஏற்கனவே இதுபற்றி புகார் வந்தது. அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தி திரும்பினார்.

தற்போது சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் அதனை பதிவு செய்து கொண்டார். விசாரணை நடத்துவதற்காக நடிகை ஓவியாவுக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடிகை ஓவியாவின் உதவியாளருடன் அவர் தொடர்பு கொண்டு பேசினார். உதவியாளர் கூறும்போது, “ஓவியா தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை” என்று மறுத்ததாகவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

தனது இறுதிப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார் உசைன் போல்ட்!!

 

உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் ஆடவருக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் நடப்பு சம்பியனான ஜமைக்க அணி தோல்வியடைந்தது.

உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தசைப்பிடிப்பு காரணமாக தனது இறுதிப் போட்டியை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றார். 16 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைப்பெற்றுவருகிறது.

இதில் ஜமைக்கா ஜாம்பவான் உசைன் போல்ட், தனது கடைசி போட்டியான 4×100 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியின் தகுதி சுற்றில் தங்கள் அணிக்காக 3 ஆவது வீரராக ஓடினார்.

அப்போது அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக மைதானத்தில் சரிந்து வீழ்ந்தார் இதனால் ஜமைக்கா அணியால் போட்டியை நிறைவு செய்ய‌முடியவில்லை.‌ இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது‌. அமெரிக்கா இரண்டாவது இடமும், ஜப்பான் மூன்றாவது இடமும் பிடித்தன.

கடமையில் இருக்கும் போதே உயிரை விட்ட பெண் காவலர் : நடந்தது என்ன?

பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போதே பெண் காவலர் மரணமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மதுரவாயலை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (39) பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

ஸ்ரீதேவி நேற்று அலுவலகத்தின் 6வது மாடியில் இருந்தார். அப்போது திடீரென மயக்கம் வருவது போல உள்ளது என சக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவி தனது நாற்காலியில் அமர்ந்தவாறே மரணம் அடைந்தார்.

இதனால் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீதேவிக்கு சுவாச பிரச்சினை கோளாறு இருந்த நிலையில் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளதாக சக பொலிசார் கூறியுள்ளனர்.

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் அனைத்தும் போலி : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வடகொரியா வைத்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் சக்தி வாய்ந்தவைகள் கிடையாது எனவும் அனைத்தும் போலிகளாக இருக்க வாய்ப்புண்டு எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அசாதாரண சூழல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை கொண்டு தாக்குவோம் என வட கொரியா அறிவித்த நிலையில், அமெரிக்காவின் மோசமான தாக்குதல்களை வட கொரியா சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்தார்.

இப்படி அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை கிம் ஜாங்கின் வட கொரியா அரசு பயமுறுத்தி வரும் நிலையில் அந்நாடு வைத்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் எல்லாம் அதிக சக்தியில்லாத போலியானவை என தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை நிபுணர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

North Korea’s Not Quite ICBM Can’t Hit the Lower 48 States என்ற தலைப்பில் Ted Postol, Markus Schiller மற்றும் Robert Schmucker ஆகிய மூன்று நிபுணர்களும் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர்.

அதில் வட கொரியாவிடம் உள்ள ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகள் கிடையாது. உலகின் பயங்கர ஏவுகணையான ICBM ஐ தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர்கள் கூறுவது ஏமாற்று வேலை. அது போலியானதாக இருக்கவே வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

வட கொரியா ஏவுகணை அமெரிக்கவை தாக்கினால் குறைந்தது 493 000 பேர் உயிரிழப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் வட கொரியா ஏமாற்று வேலை செய்வதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மற்றும் குழந்தைகளின் கண்ணெதிரே பலியான கணவன் : மனதை உருக்கும் சம்பவம்!!

தமிழகத்தின் கோவை அருகே காரில் தீ பற்றிய சம்பவத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் எதிரில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த திலீப்குமார், ராக்கி பண்டிகையை கொண்டாடுவதற்காக கர்நாடகாவிலிருந்து கேரளாவில் உள்ள மனைவி ஆஷாவின் உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது கோவை மதுக்கரை சுங்கசாவடி அருகே கார் செல்லும் போது காரின் முன்பகுதியில் புகையுடன் தீ எரிய துவங்கி உள்ளது.

இதையடுத்து உடனடியாக காரை நிறுத்திய திலீப்குமார், மனைவி ஆஷா மற்றும் குழந்தைகளை காரில் இருந்து இறங்குமாறு கூறி உள்ளார்,

ஆனால் திலீப் இறங்குவதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய துவங்கி உள்ளது, இதனால் ஷீட் பெல்ட்டை அகற்ற முடியாமல் திலீப் உள்ளேயே மாட்டிக்கொண்டார்.

சுங்கசாவடி பணியாளர்கள் வந்து தீயை அணைக்க போராடியும் முடியாததால் கார் முழுமையாக எரிந்தது.

இந்த விபத்தில் காரில் சிக்கிய திலீப்குமார் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மனைவி, குழந்தைகள் கண்முன்னே திலீப்குமார் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் : துடித்து போன பெற்றோர்!!

சிறுவனுக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் நோய் பாதிப்பு அதிகமாகி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Wigan நகரை சேர்ந்தவர் Thomas (38), இவர் மனைவி Joanne (34), இவர்களின் மகன் Connor Horridge (6). Connor-க்கு திடீரென கடுமையான காது வலியும், உடல்நலக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் Connor-ஐ தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இது வைரஸ் தொற்று தான், இதுகுறித்து பெரிதாக நீங்கள் கவலையடைய தேவையில்லை என கூறியுள்ளனர்.

சில மாத்திரைகளையும் எழுதி கொடுத்து, அதை தொடர்ந்து சாப்பிட சொல்லியுள்ளனர், இது போலவே இரண்டாம் பரிசோதனையின் போதும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து Connor திடீரென அம்மா என கத்தி கொண்டே வீட்டு வாசலில் மயங்கி விழுந்துள்ளான்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் Connor பரிதாபமாக கடந்த டிசம்பரில் உயிரிந்துள்ளான்.

காதில் அதிகளவில் புண் ஏற்பட்டு அது சீழ்ப்பிடிப்பாக மாறி அதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக Connor உயிரிழந்தது தெரியவந்தது.

Connor-ன் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகனை ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் சரியாக ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்திருந்தால் இது நடக்காமல் இருந்திருக்க வாய்ப்புண்டு என கூறியுள்ளனர்.

Connor உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறுகையில், ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த தொற்று இப்படி திடீரென பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

 

அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை!!

வடகொரியா மீது போர் தொடுக்க தயாராகி வரும் அமெரிக்காவிற்கு சீனா அதிபர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு மத்தியில் போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் விடுமுறையை கழித்து வரும் டொனால்டு டிரம்ப் அண்மையில் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமெரிக்காவிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியா மீது எந்த நேரத்திலும் போர் தொடுப்போம்.

அமெரிக்க ராணுவம் தயாராகவே உள்ளது, வடகொரியா தனது செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் உலகம் இதுவரை சந்திக்காத அழிவை வட கொரியா சந்திக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்டு டிரம்பின் இந்த பதிலடிக்கு சீனா அதிபரான ஸீ ஜின்பிங் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

‘வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் வலிறுத்தலை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் டொனால்டு டிரம்ப் தனது வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும். இச்சூழல் தொடர்ந்து கொரியா தீபகற்பத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ என ஸீ ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஏற்பட்டால் அது மூன்றாம் உலக போரை தொடங்கி வைக்கும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.