மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் : துடித்து போன பெற்றோர்!!

சிறுவனுக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் நோய் பாதிப்பு அதிகமாகி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Wigan நகரை சேர்ந்தவர் Thomas (38), இவர் மனைவி Joanne (34), இவர்களின் மகன் Connor Horridge (6). Connor-க்கு திடீரென கடுமையான காது வலியும், உடல்நலக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் Connor-ஐ தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இது வைரஸ் தொற்று தான், இதுகுறித்து பெரிதாக நீங்கள் கவலையடைய தேவையில்லை என கூறியுள்ளனர்.

சில மாத்திரைகளையும் எழுதி கொடுத்து, அதை தொடர்ந்து சாப்பிட சொல்லியுள்ளனர், இது போலவே இரண்டாம் பரிசோதனையின் போதும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து Connor திடீரென அம்மா என கத்தி கொண்டே வீட்டு வாசலில் மயங்கி விழுந்துள்ளான்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் Connor பரிதாபமாக கடந்த டிசம்பரில் உயிரிந்துள்ளான்.

காதில் அதிகளவில் புண் ஏற்பட்டு அது சீழ்ப்பிடிப்பாக மாறி அதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக Connor உயிரிழந்தது தெரியவந்தது.

Connor-ன் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகனை ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் சரியாக ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்திருந்தால் இது நடக்காமல் இருந்திருக்க வாய்ப்புண்டு என கூறியுள்ளனர்.

Connor உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறுகையில், ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த தொற்று இப்படி திடீரென பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

 

அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை!!

வடகொரியா மீது போர் தொடுக்க தயாராகி வரும் அமெரிக்காவிற்கு சீனா அதிபர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு மத்தியில் போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் விடுமுறையை கழித்து வரும் டொனால்டு டிரம்ப் அண்மையில் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமெரிக்காவிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியா மீது எந்த நேரத்திலும் போர் தொடுப்போம்.

அமெரிக்க ராணுவம் தயாராகவே உள்ளது, வடகொரியா தனது செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் உலகம் இதுவரை சந்திக்காத அழிவை வட கொரியா சந்திக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்டு டிரம்பின் இந்த பதிலடிக்கு சீனா அதிபரான ஸீ ஜின்பிங் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

‘வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் வலிறுத்தலை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் டொனால்டு டிரம்ப் தனது வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும். இச்சூழல் தொடர்ந்து கொரியா தீபகற்பத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ என ஸீ ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஏற்பட்டால் அது மூன்றாம் உலக போரை தொடங்கி வைக்கும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த நேரமும் போர் வெடிக்கக்கூடிய பதற்றம் : தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்!!

ஒரு புறம் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா அமெரிக்காவை மிரட்டினால், மறுபுறம் பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது.

வட கொரியா – அமெரிக்கா இடையே மூண்டுள்ள வார்த்தை போர் எந்த நேரமும் போராக வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடையக் கூடிய வடகொரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு 385 வடகொரியர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். அதுவே இந்த ஆண்டு ஜூன் மாத வரையில் மட்டும் 535 வடகொரியார்கள் தாய்லாந்தை வந்தடைந்துள்ளனர். சராசரியாக ஒரு வாரத்திற்கு 20 முதல் 30 வடகொரியர்கள் வருவதாக கூறப்படுகின்றது.

இவர்கள் ஆட்கடத்தல் காரர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களைக் கொடுத்து தாய்லாந்தை அடைய முயற்சிக்கின்றனர். ஆட்கடத்தல்காரர்கள் கிறிஸ்தவ மதத்தொடர்புகளை கொண்டு கடத்துவதாகவும் சொல்லப்படுகின்றது.

தாய்லாந்தை அடைவதற்கு சீனா முழுவதும் அவர்கள் தலைமறைவாக பயணித்தாக வேண்டும். இதுவே அண்டர்கிரவுண்ட் ரயில்பாதை எனப்படுகின்றது. ஒரு வேளை சீனாவில் வடகொரியர்கள் சிக்கினால் வட கொரியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

தாய்லாந்தை அடைந்துவிட்டால் வடகொரியர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள். தென்கொரியாவில் கொரியர்கள் அனைவருமே அனுமதிக்கப்படுவதால் வடகொரியர்களுக்கும் அங்கு வாழ்வதற்கான இடமளிக்கப்படுகின்றது.

வடகொரியாவிலிருந்து தப்பிக்கும் வடகொரியர்கள் அந்நாட்டிற்கே நாடு கடத்தப்பட்டால் அங்கு அவர்கள் கடுமையான தண்டனைக்கோ தூக்குத் தண்டைக்கோ உட்பட நேரிடும் எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

எல்லையிலிருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் : அடம்பிடிக்கும் சீனா!!

சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லையில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு புதிதாக சாலை அமைக்கவும் முயற்சி செய்தது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சீன அரசு கூறிய போது, சர்ச்சைக்குரிய பகுதி சீனா- பூட்டான் சம்பந்தப்பட்டது, இதில் இந்தியா தலையிடுவதை ஏற்க முடியாது. டோக்லாம் எல்லையில் இருந்து இந்திய படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அப்போது டோக்லாம் எல்லையில் இருந்து சீன ராணுவம் 250 மீட்டர் பின்வாங்க வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை சீனா ஏற்றுக்கொண்டு முதல்கட்டமாக 100 மீட்டர் பின்வாங்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது..

டோக்லாம் எல்லையில் ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இந்தியாவின் வாதம், கோரிக்கை ஏற்கக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியின் கருத்து கடுமையாக உள்ளது. சீனா – இந்தியா இடையே இராணுவ மோதல் ஏற்படும் என்பதை அவரது பேச்சு சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவின் டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் வரும் செப்டம்பரில் சீனாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறையாக உள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காலியில் திடீரென உள்நோக்கி போன கடல் : சுனாமி ஆபத்தா?

காலி கோட்டைக்கு அருகில் உள்ள கடல் நீரானது உள்நோக்கிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் நீரானது உள்வாங்கியுள்ளதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது கைத் தொலைபேசியில் காணொளியெடுத்து. சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த நபர் குறிப்பிடும் பொழுது, சுமத்திரா தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லை எனவும், கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அடுத்து தான் அதனை படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் சிறிது நேரத்திற்குப் பின்னர், இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தது.

சுனாமி நிச்சயமாக ஏற்படும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடகர் உன்னிக்கிருஸ்ணனுக்கு யாழில் எதிர்ப்பு : இசை நிகழ்ச்சி ரத்து!!

பிரபல தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரின் இசை நிகழ்ச்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு எதிராக அங்கு சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமையை அடுத்து அந்த இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னிக்கிருஸ்ணன் எங்கள் மண்ணில் இன்னிசை பாட முடியாது என அந்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், அதில், உன்னிக்கிருஸ்ணன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டியில் உன்னிக்கு எதிர்ப்பு. யாழ். மக்கள் என்று போடப்பட்டுள்ளது.

உன்னிக்கிருஸ்ணனும், உத்ரா உன்னிக்கிருஸ்ணனும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.
எனினும் இந்த எதிர்ப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டதை அடுத்து குறித்த இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மதியத்திலிருந்து கடும் காற்றுடன் மழை பெய்க் கூடும் என்றும், எனவே மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை அல்லது புயல் காற்று வீசும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக் கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக இன்று காலை இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஏற்படுவற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன்.

எனினும், சுனாமி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு என்ற வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்ததுடன், மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், தற்பொழுது, சீரற்ற காலநிலை ஏற்படுவது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்த சிவாஜிலிங்கம்!!

 
வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை இன்று (12.08.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும், அதற்கான போராட்டம் தொடர்பாகவும் அவர்களிடம் கேட்டறிந்தார். இதன் போது காணாமல் போன உறவுகள் தாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினருக்கு எடுத்து கூறியுள்ளனர்.

காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர் சுமார் 170 ஆவது நாளாக இங்கு சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

வவுனியா பண்டாரிக்குளத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி!!

 
வவுனியா பண்டாரிக்குளத்தில் பிரஜைகள் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இன்று (12.08.2017) காலை 8.30 மணிக்கு தொடக்கம் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எனவே எங்கள் கிராமத்தையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு சுற்றாடலில் நீர் தேங்கி நிற்காதவண்ணம் சுத்தம் செய்வதோடு வீட்டில் தேங்கி கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி வேறுவேறான பிரித்து இன்றைய தினமும் நாளைய தினமும் பண்டாரிக்குளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள டெங்கு ஒழிப்பு சிரமான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களை ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

இன் நடவடிக்கை சுகாதாரபரிசோதகர்களின் பங்குபற்றலுடன், நகரசபை ஊழியர்கள், கிராம மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

புவி வெப்பம், காற்று மாசு: உலக பருவநிலை அறிக்கையின் எச்சரிக்கை!!

கடந்த 2016ஆம் ஆண்டு இதுவரையில்லாத அளவு சுற்றுசூழல் விடயத்தில் மிக மோசமாக இருந்துள்ளதாக உலக பருவநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பருவநிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புவிவெப்பம், கடல்நீர் மட்டம், காற்றில் மாசு, வெப்பவாயு வெளியேற்றம் ஆகியவை கடந்த வருடம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் மெக்சிகோவில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

எரிபொருள்களை அதிகம் உபயோகப்படுத்துவதால் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வெப்ப வாயுக்களின் வெளியேற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளது.

வளிமண்டலத்தில் இதுவரையில்லாத அளவு கரியமிலவாயுவின் அடைவு மில்லியனுக்கு 402.9 பகுதிகளாக தற்போது உயர்ந்துள்ளது.

பனிச்சிகரத்திலிருந்து பனி உருகுதல், பனிப்பாறைகள் அழிந்து பனி உருகுதல் ஆகியவற்றால் கடந்த ஆண்டில் கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவில் 3.25 அங்குலங்களாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1900ஆம் ஆண்டை ஒப்பிடும் போது துருவங்களில் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக சூறாவளிகள் கடந்த ஆண்டு உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக சுமார் 330 மில்லியன் மக்கள் குடிநீரின்றி தவித்ததோடு 300 பேர் வெப்பத்தால் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மீது நடவடிக்கைக்கு தயார் : டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!

வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான இலக்கை முழு ஆயுத பலத்துடன் குறிவைத்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரிய இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், அந்நாட்டின் மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இதற்கு வடகொரியா எங்கள் இறையாண்மைக்கு எதிரானது.
அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா இராணுவ பயிற்சி மேற்கொண்டது.

அமெரிக்கா இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது.

அதன் பின வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் உள்ள கிம் ஈ சுங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

வெண்ணிற சட்டைகளை அணிந்திருந்த அவர்கள் அனைவரும் வடகொரியா அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், டொனால்டு டிரம்ப்பை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, இன்னும் ஒருசில நாட்களில் குவாம் தீவின் அருகில் உள்ள இலக்குகளை குறிவைத்து நான்கைந்து ராக்கெட்டுகள் ஏவப்படும் என வடகொரியா நாட்டின் ராக்கெட் தொழில்நுட்ப தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், வடகொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழு ஆயுத பலத்துடன் தயார் நிலையில் இருக்கிறோம்.

வடகொரியா அறிவீனமாக நடந்து கொள்ள முயற்சித்தால் அதற்கான மாற்றுப் பாதையைவட கொரிய தேட நேர்ந்துவிடும் என்று பதிவேற்றம் செய்துள்ளார்

150 அகதிகளைக் கடலில் தூக்கி வீசிய கொடூரம் : தொடரும் அகதிளின் துயரம்!!

எதியோப்பியாவிலிருந்து யெமன் நோக்கிச் சென்ற 160 அகதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களால் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

எதியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடுமையான பஞ்சத்தின் காரணமாக அந்த நாட்டு மக்கள் யெமன் உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாகக் குடியேறிவருகின்றனர்.

அவர்கள் படகுகள் மூலம் பாதுகாப்பில்லாத ஆபத்தான பயண முறையில்தான் யெமன் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர்.

கடந்த புதன்கிழமை எதியோப்பியாவிலிருந்து 160 அகதிகள் படகுகள் மூலம் ஏமன் சென்றுள்ளனர். அவர்களைப் படகில் கூட்டிச் சென்ற போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கரை வருவதற்கு முன்னரே அவர்கள் அனைவரையும் வலுக்கட்டயாகக் கடலில் தூக்கி வீசியுள்ளனர்.

கடற்படை படகு வருவதை அறிந்து போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அவர்களைக் கடலில் தூக்கி வீசியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதேபோன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது என்று ஐ.நாவின் புலம்பெயர்பவர்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

லடாக் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழக மாணவி!!

தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் லடாக் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் காவியா. இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். என்சிசி மாணவியான இவருடன் நாடு முழுவதிலும் இருந்து 18 மாணவிகள், லடாக் சிகரத்தில் ஏற தேர்வு செய்யப்பட்டனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாதம் மலையேற்ற பயிற்சி பெற்ற பின்னர், ஜூன் 19-ஆம் திகதி, பனி படர்ந்த கடுமையான வானிலை கொண்ட லடாக் மலையில் ஏற முயற்சி மேற்கொண்டனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் சிகரத்தில் ஏறி 18 மாணவிகளும் சாதனை படைத்தனர்.

48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி : நெஞ்சை அதிரச் செய்யும் சம்பவம்!!

உத்தரபிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையிலேயே இத்துயர சம்பவம் நடந்துள்ளது.

இங்கு மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் செயல்பாடு பிரச்னை காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டை உலுக்கிய இச்சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை பெருமளவு குறைத்துள்ளதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள் : 13 வயதுச் சிறுவன் சாதனை!!

இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ரொபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், அங்கு மற்றொரு கிளப் அணிக்கு எதிரானப் போட்டி ஒன்றில், ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ரொபின்சன்.

குறிப்பாக, ஆறு விக்கெட்டுகளுமே க்ளீன் போல்ட். ரொபின்சனின் அதிரடி பந்து வீச்சால் அவரது அணி போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது.

ரொபின்சனின் இந்த சாதனையை அவரது குடும்பத்தினர் அனைவரும் நேரில் பார்த்துள்ளது கூடுதல் சிறப்பு. அதாவது, ரொபின்சன் எடுத்து ஆறு விக்கெட்களையும் போட்டியின் நடுவராக மைதானத்திற்குள் இருந்து பார்த்தவர் அவரது தந்தை ஸ்டீபன்.

ரொபின்சனின் தாய் ஹெலன்தான் அந்தப் போட்டியின் ஓட்ட எண்ணிக்கைகளை குறித்து வைத்துக் கொண்டிருந்தார். இதனால், ரொபின்சன் நிகழ்த்திய சாதனையை குறித்து வைத்தது அவரது தாய்தான்.

நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் தந்தையின் ஏழ்மை : இந்திய ஊடகம் பாராட்டு!!

நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரை பயன்படுத்தாமல் வாழ்க்கையில் உயர்ந்த சின்னசாமி முத்தையா தொடர்பில் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் லக்கி லேன்ட் பிஸ்கட் தொழிற்சாலையின் உரிமையாளர். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனின் தந்தை சின்னசாமி முரளிதரன் கண்டியில் மிகவும் பிரபலமானவர்.

73 வயதான அவர் ஏனைய பிரபல வீரர்களின் தந்தையை போன்று மகனின் பிரபல தன்மையை பயன்படுத்தி சவாரி செய்ய விரும்பாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய பிஸ்கட் தொழிற்சாலையின் நிர்வாக பங்குதாரராகவும் இருக்கிறார். அங்கு 200 ஊழியர்கள் தொழில் செய்கின்றனர். அவரால் இலகுவாக முரளியின் முகத்தை அந்த பிஸ்கட் பக்கட் அட்டைகளுக்கு பயன்படுத்தி விற்பனை செய்ய முடியும்.

எனினும் முரளியின் தந்தையான சின்னசாமி எந்தவொரு இடத்திலும் மகனின் முகத்தை பயன்படுத்தவில்லை. 5,000 சதுர அடி தொழிற்சாலையில் பிஸ்கட் உற்பத்தி செய்யும் அவர் ஒரு பிஸ்கட் பக்கட்டிலேனும் மகனின் புகைப்படத்தை பதியவில்லை.

“எனது மகன் சன்ரிட்ஜ்ஸ் ‘பிஸ்கட் பிராண்டிற்கு ஒப்புதல் அளித்து வருகிறார், எனவே எனது பிஸ்கட்களை ஊக்குவிக்க அவரது முகத்தை நான் பயன்படுத்த முடியாது,” என எளிய மனிதர் சின்னசாமி முத்தையா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மட்டுமே உரையாட விரும்புவதோடு, விலை மதிப்புடனான ஆடைகளை அணியாமல் சாதாரண லுங்கிகளை அணியவே அவர் விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

73 வயதான அவர் தனது மகனைப் பற்றி பேசுகையில், தனது தொழிற்சாலைக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய, சிமென்ட் இடத்தைக் காட்டி, ‘முரளி’ சிறு வயதில் தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடனான தினசரி அங்கு தான் கிரிக்கெட் விளையாடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவும் மகனும் கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் பேசுவது அவரது பேச்சில் தெரிந்துள்ளதென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.