வவுனியாவில் அவசரமாகக் கூடியது டெலோவின் தலைமைக்குழு!!

வட மாகாண போக்குவரத்து அமைச்சிற்கு புதிய உறுப்பினரொருவரை நியமிப்பது மற்றும் தற்போதைய அரசியல் நிலை தொடர்பான டெலோவின் தலைமைக்குழு கூட்டமொன்று வவுனியாவில் நடைபெற்று வருகிறது.

குறித்த கூட்டம் வவுனியாவிலுள்ள டெலோ அலுவலகத்தில், டெலோவின் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெலோவின் தலைமைக்குழு கூட்டத்தை நீண்ட காலமாக புறக்கணித்து வந்த வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இன்று நடைபெற்று வருகின்ற கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

இது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில், இந்த அமைச்சு பதவியை மன்னார் அல்லது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

இதை விட சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த அமைச்சு பதவியை ஏற்க வேண்டுமென 3 தினங்களுக்கு முன்பு வட மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த கூட்டத்தில் டெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறந்த குழந்தையை பார்சல் செய்து கொரியர் மூலம் அனாதை இல்லத்திற்கு அனுப்பிய தாய்!!

சீனாவில் பெண் ஒருவர், தனக்கு பிறந்த பிஞ்சுக் குழந்தையை பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து அனாதை இல்லத்திற்கு கொரியர் சேவை மூலம் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கொரியர் சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நபர், பார்சல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

தன்னிடமிருந்த பொதியினைப் பிரித்துப் பார்த்ததில், அதனுள் பிஞ்சுக்குழந்தையொன்று இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, குழந்தையை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது, பொதியினுள் இருந்த பெண் குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையின் தாயைக் கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 24 வயதான லுவோ எனும் பெண் தனது குழந்தையை பார்சலில் அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று, வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஓவியாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!!

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010ம் ஆண்டு களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. சீனி என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வந்தார்.

மலையாள பட உலகமும் அவரை ஒதுக்கி வைத்தது. இதனாலேயே 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பித்தார்.

ஆரவ்விடம் தனது காதலை ஓவியா வெளிப்படுத்தினார். ஆனால் அவருடைய காதலை ஆரவ் ஏற்கவில்லை. நட்பாக பழகியதாக சொல்லி விலகினார். காதல் தோல்வியால் ஓவியா மன அழுத்தத்துக்கு ஆளாகி கண்ணீர் விட்டு அழுதார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.

மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பொலிசார் விசாரணை நடத்தவும் நேர்ந்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் ஓவியாவை மணக்க நடிகர் சிம்பு விருப்பம் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை சிம்பு மறுத்தார்.

காதல் சர்ச்சையில் சிக்கிய ஓவியாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிகின்றன. இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி தங்கள் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் அவரிடம் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா தலை முடியை வித்தியாசமாக வெட்டி புதிய தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.

வவுனியாவில் வாளுடன்ஒருவர் கைது : ஆவா குழுவுடன் தொடர்பா?

வவுனியா தேக்கவத்தை பகுதியில் வாளுடன் நின்ற ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவுடன் தொடர்பா என்ற அடிப்படையில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது குடும்பஸ்தரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 21.5 அங்குளமுடைய வாளொன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வந்து தொழில் புரிந்து வந்த நிலையில் ஆவா குழுவுடன் தொடர்பா என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்ற நிலையில் ஒரு மாணவனுக்கு சிறிய ரக கத்தியால் மற்றைய மாணவன் வெட்டியதில் காயமடைந்த மாணவன் ஒருவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீன எல்லையில் படைகளை குவிக்கும் இந்தியா : போர் மூளும் அபாயம்!!

இந்திய – சீன எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை இந்தியா உயர்த்தியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதனை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது.

டோக்லாம் பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் எனச் சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீனா விடுக்கும் சவாலை சந்திக்க போதுமான வலிமை இந்தியாவிற்கு உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி உறுதியாகத் தெரிவித்தார்.

டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற சீனா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டோக்லாம் அருகே உள்ள கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற இந்திய ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, சீனா இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் எல்லையில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், எவ்வளவு வீரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

நடுவீதியில் பற்றி எரிந்த பேரூந்து : சிதறி ஓடிய பயணிகள்!!

சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக மாநிலத்துக்கு சொந்தமான அரசு சொகுசுப் பேருந்து ஒன்று நடு வீதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த போது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை என்ற இடத்தில் பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

பேருந்தின் பின்புறம் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது. உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த தீயணைப்புப் படை வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எப்போதும் பரபரப்பாக, வாகனங்கள் நிறைந்த சாலையில் பேருந்து தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு!!

 
எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. ஒரு ரெயில் தலைநகர் கெய்ரோவில் இருந்து வந்துள்ளது. மற்றொரு ரெயில் கோர்சித் பகுதியில் உள்ள போர்ட் செய்ட்டில் இருந்து வந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 29 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. தற்போதையை நிலவரப்படி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்’ என எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்கு அதிபர் எல்-சிசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னல் மாற்றி போடப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் எகிப்தில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்து இது தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு கிஸாவில் நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

சுவிஸ்லாந்தில் யாழ் இளைஞன் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

சுவிஸ்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரயிலில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் முருகன் ஆலயத்தில் நடந்த விபரீதம் : தீக்குள் வீழ்ந்த பெண்!!

நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.

காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கையிலும், முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

முன்னணி இலங்கை கிரிக்கெட் வீரரின் இன்றைய நிலை!!

இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் முன்னணி வீரராக திகழ்ந்த உப்புல் சந்தனவின் தற்போதைய நிலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ஆம் ஆண்டு முதல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த, உப்புல் சந்தன சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

தற்போது 45 வயதான உப்புல் சந்தன, தற்போது சிறிய வர்த்தகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். Nondescripts விளையாட்டு கழகம் அருகே விளையாட்டு உபகரண கடை ஒன்றை அவர் நடத்தி செல்கின்றார்.

அங்கு கிரிக்கெட் வீரர்களுக்கு அவசியமான உபகரணங்களுக்கு மேலதிகமாக டெனிஸ் விளையாட்டு உபகரணங்களையும் விற்பனை செய்கின்றார்.

காலியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முகம் கொடுத்த அனுபவங்களின் போது இவ்வாறான கடை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக உப்புல் சந்தன தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் நான் கிரிக்கெட் விளையாடும் போது ஒரு பந்தை மாதம் முழுவதும் பயன்படுத்துவேன். எங்களிடம் பெரிய அளவில் பணம் இல்லை. அதேபோன்று பந்தொன்றை கொள்வனவு செய்யக்கூடிய கடையொன்றும் இல்லை.

ஒரு முறை பந்தை கையில் எடுக்கும் போது அது இரண்டாக உடைந்து விட்டது. இவ்வாறு கடை ஒன்றை அமைக்க வேண்டும் என அன்று நான் நினைத்தேன் என சந்தன மேலும் தெரிவித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது. இந்தப் போட்டியில் விளையாடிய உப்புல் சந்தன வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுகாதார தொண்டர்களின் போராட்டம் 100 நாட்களை கடந்து தொடர்கின்றது!!

 
வவுனியாவில் கடந்த 04.05.2017ம் திகதி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த சுகாதார தொண்டர்களின் போராட்டம் இன்றுடன் (11.08.2017) நூறாவது நாளை எட்டியுள்ளது. அதனை முன்னிட்டு அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏ9 வீதியுடாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன் சுகாதாரத் தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கை மகஜரினை (வவுனியா மாவட்ட செயலாளரின் மகஜரை ) பிரதம கணக்காளர் அ.பாலகுமார் பெற்றுக்கொண்டார்.

அங்கிருந்து ஆரம்பித்த சுகாதார தொண்டர்களின் போராட்டம் மன்னார் வீதியூடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சென்றடைந்து பணிப்பாளரின் மகஜரை பிரதிப்பணிப்பாளர் மகேந்திரன் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் அங்கிருந்து போராட்ட இடத்திற்கு சென்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்ட இடத்தில் கறுப்புக்கொடியினை கட்டி இன்று தூக்க தினமாக அனுஸ்டித்து வருகின்றனர். வவுனியாவில் 101 சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனமற்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா அரசாங்க அதிபர் சாந்தசோலைப்பகுதிக்கு விஜயம்!!

 
கடந்த மாதம் 31ஆம் திகதி சாந்தசோலைப்பகுதி மக்கள் வவுனியா மாவட்ட செயகத்திற்கு சென்று தமது கிராமத்திலுள்ள அடிப்படைத் தேவைகள், குறிப்பாக வீட்டுத்திட்டம், வீதி, மின்சாரம் போன்ற தேவைகளை நிறைவேற்றித்தருமாறு கோரியிருந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு 11ஆம் திகதி சாந்தசோலை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு தேவைகளைப்பார்வையிடுவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று (11.08) மதியம் சாந்தசோலை பொதுநோக்கு மண்டபத்தில் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய அரசாங்க அதிபர் தலைமையில் சென்ற குழுவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, நொச்சிமோட்டை கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் சென்று அப்பகு மக்களின் தேவைகளைக் கேட்டறிந்ததுடன், சாந்தசோலையில் 40 குடும்பங்களுக்கு வீடு பெற்றுத்தருமாறு பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர்.

இதயைடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதேச செயலாளர் உடனடியாக அப்பகுதி மக்களிடம் 40 குடும்பங்களுக்கும் பொருத்து வீடு பெற்றுக்கொடுப்பதற்கு சிபாரிசினை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

வீதி, மின்விளக்கு, வாழ்வாதாரம், பெண் தலைமைக் குடும்பங்கள், முன்ளாள் போராளிகள், போன்றவற்றின் விபரங்களையும் கேட்டறிந்த அரசாங்க அதிபர் தேவையான உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தருவதாகவும் அதைக்கட்டம் கட்டமாகவே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (11.08.2017) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாகயிருந்து வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட துவிச்சக்கரவண்டி மீது வவுனியா மணிக்கூட்டு சந்தியிலிருந்து கந்தசுவாமி ஆலய வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் பொலிசார் முன்னிலையில் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!!(CCTV காணொளி)

 
வவுனியாவில் இன்று (11.08.2017) பிற்பகல் 3 மணியளவில் குருமன்காட்டு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்ட பொலிசாரின் மோட்டார் சைக்கிலை இனந்தெரியாத நபர் திருடி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் மோட்டார் சைக்கிலை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிலை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்று மீண்டும் திரும்பிய சமயத்தில் மோட்டார் சைக்கில் களவாடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போழுதும் இவ்வாறு மோட்டார் சைக்கில் களவாடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையத்திற்கு அருகேயிருந்த நபரிடம் விசாரித்த சமயத்தில் மோட்டார் சைக்கிலை திருடிச் சென்ற நபர் தலைக்கவசம் அணியாது சென்றதாகவும் இவ்விடயம் தொடர்பில் அருகே கடமையிலிருந்து போக்குவரத்து பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

வவுனியாவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு!!

 
​வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (11.08.2017) மதியம் 12 மணியளவில் வீட்டிலிருந்து சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா தேக்கவத்தை பகுதியில் வீட்டில் இறந்த நிலையில் சடலத்தினை அவதானித்த பொதுமக்கள் உடனே வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவம் தொடர்பாக அவரின் நண்பரிடம் வினவியது போது,

நேற்று காலை அவரை நான் சந்தித்தேன் அப்போது அவர் என்னிடம் நன்றாக கதைத்தார். அவருக்கு வருத்தங்கள் இருக்கின்றன. வருத்தத்தின் காரணமாக தான் இறந்தாரா எனத் தெரியவில்லை. இவரின் மனைவி மகளுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும்  தெரிவித்தார்.

எஸ்.கணேசலிங்கம் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.​

குவைத்தில் தீ விபத்து : இலங்கைப் பெண் பலி!!

குவைத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தின் அடான் பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அரப் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் இலங்கைப் பெண்ணும், பிலிப்பைன்ஸ் பெண்ணும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களையும் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.