இலங்கையில் 300 ரூபாவைக் கடந்த டொலரின் பெறுமதி!!

இன்று (10) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.02 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.13 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை 2024 செப்டம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர், டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபாவைக் கடக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது ஆகும்.  அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 391.0050 ரூபா மற்றும் கொள்வனவு விலை 376.5390 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 334.6344 ரூபா எனவும் கொள்வனவு விலை 320.7875 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (10.4.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.

கொலம்பியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி!!

கொலம்பியாவில் பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

றோயல் சொசைட்டி ஒப் பயோலஜியின்(RSB) முன்னாள் விஞ்ஞானியான அலெசாண்ட்ரோ கோட்டி(Alessandro Coatti) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கொலம்பியாவின் வடக்கு கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ள சாண்டா மார்டா நகரில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கருப்பு நிற சூட்கேஸ் ஒன்றில் அவரது உடல் பாகங்கள் இருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த அலெசாண்ட்ரோ கோட்டி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதோடு அவர் றோயல் சொசைட்டி ஒப் பயோலஜியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொலம்பிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் குடும்பஸ்தர் கொடூரமாக கொலை : சிதறிக் கிடந்த உடற்பாகங்களால் அதிர்ச்சி!!

தகாத உறவு காரணமாக 35 வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.

குளிக்கடை – மெதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிஷான் புத்திக என்ற நபரின் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தக் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

புதர் ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் டயர்கள் வைத்து எரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள், அனுராதபுரத்தின் லோலுகஸ்வெவ பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது, ​​புத்தளம் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டதுடன் உடல் பாகங்கள் அந்த இடம் முழுவதும் சிதறிக்கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் : நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி!!

22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றையதினம் (10.04) மாத்திரம் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை 7000 ரூபாவினாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினாலும் மற்றும் 18 கரட் தங்கத்தின் விலை 4500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் 24 கரட் தங்கம் 253,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 232,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 190,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 31,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 23,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் 15 பொது விடுமுறை குறித்து வெளியான தகவல்!!

ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையும் புனித வெள்ளி வருவதால், குறிப்பிட்ட வாரத்தில் வேலை நாட்களாக மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.

எனவே அந்த திகதியில் விடுமுறை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ​மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை நிலையம் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரித்துள்ளது.

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

மேலும், குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக (மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில்) பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும், கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அவதானம் செலுத்துமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடல்சார் சமூகத்திடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை (09.04) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் இளைஞரின் சடலத்தை முழுமையாகப் பிரேத பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (09) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

யாழில் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்டம்!!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் , சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பனின் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பன் ஆலயத்தில் இன்று திருத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.

திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனின் அருளை பெற்றனர்.

 

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்காக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று(09) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் பொலிசார் விரட்டியதால் வீட்டின் மதிலை உடைத்து டிப்பர் வாகனம் விபத்து!!

யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல் வேகமாக சென்றதல் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

வாகனம் நல்லூர் பின் வீதி வழியூடாக சென்று வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீடொன்றின் மதிலை உடைத்து, வீதியில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு உள்ளான வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாது சேர்ந்து வாழ்ந்த இளம் பெண் கொலை : கொழும்பில் பயங்கரம்!!

கொழும்பு – குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் புனித மெத்தீவ் மாவத்தை, ஏகலவில் வசித்த 33 வயதான பெண் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் சுமார் 4 மாதங்களாக ஒரு வீட்டில் சந்தேக நபருடன் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

35 வயதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, தென், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (09ஆம் திகதி) நண்பகல் 12.12 அளவில் உயங்கல்ல, அரங்கல, கோங்கஹவெல, மொரகஹகந்த மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மேலும் சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தமிழ் இளைஞன் ஒருவருக்கு மரண தண்டனை!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அஜ்மான்(Ajman) மாநிலத்தில் கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இளைஞன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், இறந்தவரின் வயிற்றில் இருந்த கத்தியை அகற்றி அவரை வைத்தியசாலையில் அனுமதித்திருந்ததாகவும் அவரது வழங்கறிஞர் சகாப்தீன் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கண்டியை சேர்ந்த தெய்வேந்திரன் நிக்லஸ் என்ற இளைஞனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் எட்டு வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது என்றும், அஜ்மான் பணத்தில் இரண்டு இலட்சம் டிர்ஹாம் (Dirham) பணம் செலுத்தினால் மாத்திரமே மரண தண்டனையில் இருந்து குறித்த இளைஞனைக் காப்பாற்ற முடியும் என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் இருந்த மூன்று சிங்கள இளைஞர்கள் சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களில் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர் என்றும், அவர்கள் கொலை நடந்தமை தொடர்பான பிரதான சாட்சியாளர்கள் எனவும் விபரித்த சட்டத்தரணி சகாப்தீன், இந்த இளைஞன்,

கொலை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாமையினால் அஜ்மான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததாகவும் விளக்கமளித்தார்.

அதாவது, கத்தியால் குத்தப்பட்டு குற்றுயிராக இருந்தவரை காப்பாற்றும் நோக்கில் கத்தியை வயிற்றில் இருந்து அகற்றிவிட்டு இரத்தம் வழிந்தோடாமல், துணிகளால் கட்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.

இதனால் நடந்த உண்மையை தமிழ் இளைஞன் வைத்தியர்களுக்கும் பொலிஸாருக்கும் விளக்கியிருக்கிறார்.

ஆனால், கத்தியில் இளைஞனின் கைரேகை இருந்த காரணத்தை ஆதாரமாக எடுத்து அஜ்மான் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறிய சட்டத்தரணி, குறித்த சம்பவ இடத்தில் இருந்த பாகிஸ்தானியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அந்த பாகிஸ்தானியர் தான் கொலை செய்தவர் என்றும், இருந்தாலும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியிலும் கொல்லப்பட்டவரின் உடலிலும் தமிழ் இளைஞனின் கைரேகை இருந்த காரணத்தால், அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக சட்டத்தரணி கூறினார்.

எட்டு வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் தான் கொலை செய்யவில்லை என்று குறித்த பாகிஸ்தானியர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆனாலும், கொலையை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாகவும் சட்டத்தரணி கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த சட்டத்தரணி சகாப்தீன், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞன் 2018ஆம் ஆண்டு அஜ்மான் மாநிலத்துக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார்.

மரண தண்டனைக்கு உள்ளான இளைஞன் தங்கியிருந்த இடத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவரும் நான்கு சிங்கள இளைஞர்களும் மற்றும் சில பாகிஸ்தானியர்களும் தங்கியிருக்கின்றனர்.

கொலையுண்ட மாத்தளையைச் சேர்ந்த அந்த முஸ்லிம் இளைஞனை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியரே கத்தியால் குத்தியிருக்கிறார். அவர்களுக்கிடையில் தகராறுகள் இருந்திருக்கின்றன.

ஆனால், கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட தெய்வேந்திரன் நிக்லஸ், அந்த முஸ்லிம் இளைஞனின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியை ஒரு கையால் அகற்றி மறு கையால் துணியைப் பிடித்துச் சுற்றிப் பின்னர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

சம்பவத்தை அறிந்து கொண்ட அங்கு தங்கியிருந்த மூன்று சிங்கள இளைஞர்களும் கொலை நடைபெற்று நான்கு நாட்களில் தங்கள் விசாக்களை இரத்துச் செய்து விட்டு இலங்கைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆனால், இவர்கள் சாட்சியமளிப்பார்கள் என்ற அச்சத்தினால் குறித்த மூன்று இளைஞர்களுக்கும் பெருமளவு பணத்தைக் கொடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியர் முன்கூட்டியே அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

தப்பிச் சென்ற இளைஞர்களில் ஒருவரின் முகநூலைக் கண்டு பிடித்து அதில் இருந்த தொலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, அந்த முகநூல் முடக்கப்பட்டு தொலைபேசியும் செயலிழக்கப்பட்டிருந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் ஓமானில் பணிபுரிகிறார். அவருடைய சகோதரி தனது சகோதரனை பார்வையிட தற்போது அஜ்மான் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

இவர்கள் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தான் உழைத்த இரண்டு இலட்சம் டிர்ஹாம் பணத்தை தருவதாக தாயார் கூறியுள்ளார். ஆனால், அவ்வளவு பெரும் பணத்தை அவரால் செலுத்த முடியாது என்று சட்டத்தரணி விபரித்தார்.

அதேநேரம், சுற்றுலா விசாவில் எவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டாம் எனவும் அவர் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார்.

இந்த நாடுகளின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்றும் உரிய ஆதாரங்கள் இல்லையானால் நிரபராதியாக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, இயலுமானவர்கள் இந்த இளைஞனை விடுவிக்க உரிய பணத்தை வழங்கி உதவுமாறு சட்டத்தரணி சகாப்தீன் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு இலட்சம் டிர்ஹாம் பணத்தை செலுத்த நீதிமன்றத்தில் நான்கு மாத கால அவகாசம் கேட்டதாகவும், ஆனாலும் மூன்று மாதங்கள் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி,

மூன்று மாதங்களில் குறித்த நிதியை வழங்கத் தவறினால் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றும் கவலையுடன் தெரிவித்தார்.

 

தாய் வெளிநாட்டில் : பேஸ்புக் காதலனால் மாணவிக்கு நேர்ந்த கதி!!

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவியின் தாய் வெளிநாடு சென்ற நிலையில், தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் மாணவி இருந்துள்ளார்.

தாய் இல்லாதது குறித்த தனது கவலையைப் போக்க பேஸ்புக்கில் நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த நிலையில் பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவருடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அறிமுகம் காதலாக மாறியது, ஒரு மாதத்திற்குள், இளைஞன் மாணவியின் வீட்டிற்கு வந்து அவரை தகாத உறவுக்கு உட்படுத்திய நிலையில் நகைகளை எடுத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்ததும், தந்தையும் பாட்டியும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞனின் இருப்பிடம் தெரியாமையால், பேஸ்புக் காதலரை மீண்டும் அழைத்து வர பொலிஸார் ஒரு திட்டத்தை வகுத்தனர்.

அந்த மாணவி அவரை அழைத்து, மீதமுள்ள நகைகளை நான் கொண்டு வருகிறேன்… எங்காவது சென்றுவிடலாம் என இளைஞனிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு சம்மதித்து கம்பளை நகரத்திற்கு இளைஞன் வந்த போது மறைந்திருந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்த இளைஞன், திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக பொலிஸாரிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன் மாணவியிடம் பெற்ற நகைகளையும் மீளவும் ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபர்!!

குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் ஏகல பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழ்ந்தவர் சந்தேக நபருடன் சுமார் 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், வாக்குவாதம் அதிகரித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.