அளுத்கம தர்கா நகரம், குருந்துவத்த சமகி மாவத்தை பகுதியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இன்று மதியம் தனது மனைவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். குடும்ப தகராறு காரணமாக சந்தேக நபரானகணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையம் சென்று கணவர் சரணடைந்ததாக அளுத்கம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை குளியாப்பிட்டி, ஹக்கமுவ பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை அவரது காதலன் பெல்ட்டால் (belt) கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்தவர் குளியாப்பிட்டியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குள், குளியாப்பிட்டி காவல்துறையினர், கனுகல, கஜுவத்த, வெத்தேவ பகுதியைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரை கைது செய்தனர். அவர் இறந்தவருடன் தொடர்பு வைத்திருந்து வாடகை அறையில் வசித்து வந்தார்.
சந்தேக நபர் இறந்த பெண்ணை அவரது சொந்த கிராமமான தம்பதெனியாவில் சந்தித்து, அவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். இறந்த பெண்ணும் சந்தேக நபரும் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இருப்பினும், இறந்தவரின் கணவரும் சந்தேக நபரின் மனைவியும் விவாகரத்து வழங்காததால் சந்தேக நபரும் இறந்தவரும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும், குளியாப்பிட்டியில் வாடகை அறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
தனது காதலி பணிபுரியும் உணவத்தில் பணியாற்றும் மற்றொரு இளைஞனுடன் காதல் உறவை ஆரம்பித்துள்ளார் என்ற சந்தேகம், அவரது காதலருக்கு ஏற்பட்டது. இதனடிப்படையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு சந்தேக நபருடன் ஹக்கமுவ கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதியினர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், சந்தேக நபர் முன்னர் செய்த திருமணத்தின் மூலம் சந்தேக நபருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் குளியாப்பிட்டி பதில் நீதவான் பந்துல விஜேசிங்க மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வுக் குழுக்களால் நேரில் விசாரணை நடத்தப்பட்டது, மேலும் இறந்தவரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் சமாஸ்திபூரில் வசித்து வருபவர் முகேஷ் சிங். இவரது மகள் 25 வயதான சாக்ஷியையே இவ்வாறு கொலை செய்துள்ளார்.
வீட்டருகே வசித்து வந்த வேறு சாதியை சேர்ந்த வாலிபரும், சாக்ஷியும் ஒன்றாக கல்லூரியில் படித்துள்ளனர். அப்போதில் இருந்து இருவரும் பழகி வந்ததாக தெரிகிறது.
கடந்த மாதம் 4ஆம் திகதி சாக்ஷி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது மகள் டெல்லியில் இருப்பதை அறிந்த முகேஷ் சிங், அங்கு சென்று, தனது மகள் மனம் மாறும் வகையில் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்ததும் கோபப்பட்டு பெற்ற மகள் என்று கூட பாராமல் கடந்த 7ஆம் திகதி கொலை செய்து மகள் உடலை குளியலறையில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.
பின்னர் ஏதும் தெரியாதது போல் இருந்துள்ளார். அவரது மனைவி மகள் எங்கே? என்று கேட்க, மீண்டும் அந்த பையனுடன் ஓடியதாக கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு சந்தேகம் வர, பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
பொலிஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில் குளியலறையில் இருந்து துர்நாற்றம் வீச திறந்து பார்க்கும்போது சாக்ஷி உடல் இருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் விசாரணை நடத்தியபோது, முகேஷ் சிங் தனது மகளை கொலை செய்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், தன் மகளை கொலை செய்தபின், அந்த வாலிபர் கொலை செய்ய சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கே இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்பியுள்ளார். இல்லையென்றால் அந்த வாலிபரையும் கொலை செய்திருப்பார் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்கந்த சந்திக்கு அருகில் திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும், அவரது இரட்டை மகன்களும் பாட்டியும் படுகாயமடைந்து மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மினுவாங்கொடை, வேகொவ்வ பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் ஆவார். காயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும்,
மற்றைய மகனும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மினுவாங்கொடை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு ராஜகிரியா பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் வேலை செய்து வந்த 22 இந்திய பிரஜைகள் விசாக்கள் காலாவதியான நிலையில் இலங்கை குடிவரவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவியல் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் விசாரணை பிரிவினர், ராஜகிரியா பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் சோதனை நடத்திதில், இந்தியபிரஜைகள் சிக்கியுள்ளனர்.
கைதானவர்களில் 17 பேர் சுற்றுலா விசாவில் மூன்று மாதங்களுக்கு முன் இலங்கைக்கு வந்தவர்கள் என்றும், 4 பேர் குடியிருப்புக் விசாவில் வந்திருந்ததுடன், ஒருவர் வணிக விசாவில் வந்திருந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதானவர்கள் தற்காலிகமாக அவர்கள் வெலிசராவிலுள்ள அடைப்புக் கூடத்தில் வைத்திருக்கப்படுவதாகவும், அவர்களை விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குடிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் விமானத்தைத் தரையிறக்கிய சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 9) மாலை நிகழ்ந்தது.
உயிரிழந்த 28 வயதான விமானிக்கு அண்மையில்தான் திருமணமானது என்றும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
விமானம் தரையிறங்கியதும் அவர் அதனுள்ளேயே வாந்தி எடுத்ததாகவும் பின்னர் விமான நிலையத்திலுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் விமானி மயங்கிச் சரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீநகரிலிருந்து புதுடெல்லிக்கு விமானத்தில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. விமானியை உடனையாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பயணிகளை பத்திரமாக இறக்கிய இளம் விமானியின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப, நாட்டிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 31200 அமெரிக்க டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
முதலீட்டாளர்கள் தங்க இருப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறுவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
கொழும்பு தங்கச் சந்தை இன்று (11) அறிவித்த தங்க விலை விபரங்களின்படி, 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 235,500 ரூபாயாகும்.
மேலும், 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 256,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று (10) இரவு மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறக்கொட்டாஞ்சேனை சேமன் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையின் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது குறித்த நபர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் ஆஜராகுமாறு அவரை பிணையில் விடுவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்துவதற்கு பணத் தேவை ஏற்பட்டதையடுத்து மகளிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை கோரியுள்ள நிலையில் அவரிடம் அந்தளவுக்கு பணம் இல்லாததை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடி வந்துள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாசிவன்தீவு ஆற்றில் சடலம் ஒன்று நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை சம்பவதினமான நேற்று இரவு 10 மணிக்கு மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்குமாக இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரசின் பரவலில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய நாட்களில், சிக்குன்குனியா நோய்ப்பரவல் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் சிக்குன்குனியாவாக இருக்கலாம் என சந்தேகத்திற்கிடமான 190 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அவற்றில் 65 பேருக்கு நோயுறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக மருத்து நிபுணர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.
2 – 3 நாட்கள் நீடிக்கும் காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கக்கூடிய மூட்டு வலி மற்றும் அன்றாட செயற்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாகும்.
நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கட்டுப்படுத்துவது டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்ப்பரவலை குறைக்க உதவும் என்று அவர் விளக்கினார்.
சிக்குன்குனியா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், அது சார்ந்த ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சுவிஸ்லாந்தில் நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 30ஆம் திகதி சூரிச்சின் Dietikon பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இதன்போது ஏற்பட்ட வன்முறை மோதலில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நபர் கொலை குற்றச்சாட்டில் இலங்கை, சுவிட்சர்லாந்து, துனிசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்னர். வன்முறை மோதலில் 44 வயது நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் மிகவும் நெருக்கமான நண்பரும் அதே மேல் மாடியில் வசிப்பவருமான 30 வயதுடைய சந்தேக நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, கடந்த வாரம் இலங்கையைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் குழுவினர் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சென்ற அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்,
யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத் உள்ளிட்ட குழுவினரே மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அந்த காணியின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அங்கு மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது குறித்தும் இதன்போது பேசப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய மைதானத்தின் கட்டுமானத்துக்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளை சனத் ஜயசூரிய, இது தொடர்பாக இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியும் பங்கேற்றிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில்வேயில் வேலை பார்த்துவரும் தீபக் குமார் (29) என்பவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் ஒன்றரையாண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.
மத்திய ரிசர்வ் பொலிசில் பணியாற்றிவந்த தீபக், காதலித்து திருமணம் செய்த மனைவியுடன் அமைதியான ஒரு வாழ்வைத் துவங்கலாம் என முடிவு செய்து பொலிஸ் வேலையை விட்டுவிட்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், சென்ற மாதம் 4ஆம் திகதி தீபக்கின் சகோதரரான பியுஷை மொபைலில் அழைத்த ஷிவானி, தீபக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பியுஷ் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய, தன் சகோதரர் மருத்துவமனைக்கு வரும்போதே அவரது உடலில் உயிர் இல்லை என மருத்துவர்கள் கூறியதுடன், தன் கணவருக்கு உடற்கூறு ஆய்வு செய்யவேண்டாம் என ஷிவானி கூறியதாலும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி உடற்கூறு ஆய்வு வெளியாக, பியுஷின் சந்தேகம் உறுதியாகியுள்ளது. ஆம், தீபக் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை, அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
ஷிவானி தனது கணவரின் ரயில்வே வேலை தனக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன், ஷிவானி இந்தக் கொலையை தனியாக செய்யவில்லை, அவருக்கு வேறு யாரோ உதவியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர், வியட்நாம் நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பாக, வியட்நாம் நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவருடன் பணியாற்றிய வியட்நாம் பெண் நுகின் லீ தய் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார்.
நாளடைவில் இவர்களது நட்பு காதலாகி மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்த நிலையில், தங்கள் காதல் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற மகேஷின் தங்கையின் திருமணத்திற்கு நுகின் லீ தய் வந்துள்ளார். தமிழ் பாரம்பரிய திருமண முறை அவருக்கு பிடித்துப்போக, ஒரே வாரத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.
இன்று திருநெல்வேலியில் இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி சிறப்பாக நடந்து முடிந்தது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மணமகள் தரப்பில் அவரது தயார் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மீபிட்டிய பிரதேசத்தில் பாரஊர்தி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பாரஊர்தியை செலுத்திச் சென்ற சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 6 முச்சக்கரவண்டிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் தரையிறங்கும் சமயத்தில் இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். ஏர் இந்தியா இதுகுறித்து புகாரளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனே விமான பணிப்பெண்ணிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விமான பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு மாற்று துணிகள் வழங்கியுள்ளதுடன் , பாதிக்கப்பட்ட நபரை வேறு ஒரு இருக்கையில் அமருமாறு கூறிய விமான பணியாளர்கள் விமான கேப்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தன் தவறுக்காக சிறுநீர் கழித்த நபர் அந்த பயணியிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் விமானம் தரையிறங்கிய பிறகு அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை.
புகார் இல்லாமலேயே, சிறுநீர் கழித்த நபருக்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.