அதிகாலையில் ஆறு வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து : 6 பேர் படுகாயம்!!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி, இரண்டு பெண்கள் மற்றும் மூன்று சிறுமிகள் எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மீதமுள்ளவர்கள் எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமி 6 வயதுடையவர் என்றும், அவர் குருந்துவத்த, பிடிகல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் எல்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்!!

அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் – திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்றின் மீது, அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்று பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், பின்னர் பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்தவராவார். விபத்து குறித்து அக்போபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலை பிண அறையின் குளிரூட்டி பழுது : அலட்சியமாக இருந்த வைத்தியசாலை நிர்வாகம்?

வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இருவாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டுவருகின்றது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

அதனை திருத்துவதற்கான முயற்சிகள் வைத்தியசாலை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் வவுனியாவில் நீச்சல்குளம் ஒன்றில் வீழ்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார்.

அவரது சடலத்தை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் நாளையதினம் காலை மீண்டும் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சட்டவைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் வைத்தியசாலை நிர்வாகத்தால் இறந்தவரின் உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதற்கான செலவினை உயிரிழந்தவரின் உறவினர்களே பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வறுமை நிலையில் உள்ள குறித்த குடும்பத்தினர் இது தொடர்பாக கவலை தெரிவித்திருந்தனர்.

அரசியல் தலையீட்டால் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலை நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞன் பலி : புத்தாண்டு தினத்தில் சோகம்!!

வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14.04.2025) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல்தடாகத்திற்கு தனது குடும்பத்துடன் வருகைதந்திருந்த இளைஞர் ஒருவர் நீச்சல்குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.

இதன்போது அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த 18 வயதான இளைஞரே சாவடைந்துள்ளார். அவரது சடலம் செட்டிகுளம் பிரதேசவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் திருக்கோவிலின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான நேற்று (14.04) தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குரு தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆதிவிநாயகர் பெருமானுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகங்கள் இடம்பெற்று உள்வீதி வலம் வந்த ஆதிவிநாயகப் பெருமான், வெளி வீதியில் பிரவேசித்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியாவர்களுக்கு அருள்பாலித்துடன்,

பக்த அடியார்கள் சிதறு தேங்காய் அடித்தும், அங்க பிரதிஸ்டை செய்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும், ஆதிவிநாயகப் பெருமானை அரோகரோ கோசத்துடன் வழிபட ஆதிவிநாயகர் பெருமான் தேரில் வலம் வந்து அடியார்களுக்கு புத்தாண்டு தினத்தில் அருள்பாலித்தார்.

புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

கோர விபத்தில் பலர் காயம் : மதிலை உடைத்துச் சென்ற பேருந்து!!

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12.04) காலை இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரம் மற்றும் வீடொன்றின் மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதியின் கனவக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இளைஞனின் கழுத்தை பிடித்து இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார்!!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (12.04) காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து பலவந்தமாக முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலமை காணப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமன்காட்டு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன் போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எனினும் வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதனால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன சாவியினை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இதன் போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை எனவே தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி – போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும் மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் எனக் கூறி வாகன சாரதி முச்சக்கரவண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து முச்சக்கரவண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்சென்றனர்.

வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

மரண அறிவித்தல் : அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா)!!

யாழ் மாவிட்டபுரம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா) BA, PGDE வ/ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியர் அவர்கள் 09.04.2025 அன்று இயற்கை எய்தினார்

அன்னார் காலஞ்சென்றவர்களான வரராசசிங்கம் நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகனும், கெளரிமலர், சிறிசெல்வநாதன் (ஜேர்மனி) அமரர் அருணகிரிநாதன், அமரர் மிருணாளினி, கிருபாகரன், அமரர் வசுதராணி ,ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அமரர் திசைநாதன், குணேஸ்வரி(ஜேர்மனி), சறோஜினிதேவி, பாலச்சந்திரன், பத்மாவதி ஆகியோரின் மைத்துனனும்
மோகன்ராஜ் , தர்மினி (வ/பாவற்குளம் படிவம் 3, இல 09 கனிஸ்ட உயர்தர வித்தியாலயம்) ,வசுதா, சஜித், கிருஷாந், நிறோஜினி ஆகியோரின் மாமனாரும், கல்பனா, காஞ்சனா, பிரவீனா, சிந்துஜன்,

பிரவீனன், அஜயன், டிலக்சன், அமரர் லக்சிதா, பவிந்தன், ரதுசா, ரதீசன், துளசி ஆகியோரின் சித்தப்பாவும், பவிஸ்னா, சாருஜன், கவிஸ்னா, தக்சகன், சஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 13.04.2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னாரது அண்ணன் இல்லத்தில் நடைபெற்று 11 மணியளவில் அஞ்சலிக்காக ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு அதனைத் தொடரந்து 1.30 மணியளவில் தகனக்கிரியைக்காக தோணிக்கல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்.
+94 (75) 692 8300
+94 (75) 954 7519

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் படுகாயம்!!

கம்பஹாவில் கிரிந்திவிட்ட – உடுகம்பொல வீதியில் அஸ்கிரி வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று வீதியின் வலது பக்கமாக திரும்ப முயன்ற போது முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்த மாடு மீது மோதிய கார்!!

பசறை – பதுளை வீதியில் பெல்கஹதென்ன பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (10.04) இடம்பெற்ற விபத்தில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று வீதியில் பயணித்த மாடு மீது மோதியதில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான காரின் சாரதி பலத்த காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீம் பார்க் சென்ற ஜோடி : உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி!!

இந்தியாவின் டெல்லியில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒரு ஜோடி தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த தீம் பார்க்கில் அந்தப் பெண் மேற்கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி அவரது உயிரை பலிவாங்கிவிட்டது.

டெல்லியைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு, நிகில் என்பவருடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. இந்நிலையில், இம்மாதம் 3ஆம் திகதி, இருவரும் தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.

ரோலர் கோஸ்டர் ஒன்றில் பிரியங்கா ஏற, உயரத்துக்குச் சென்றதும் அந்த ரோலர் கோஸ்டரில் ஏதோ பிரச்சினை ஏற்பட, உயரத்திலிருந்து தலைகீழாக கீழே விழுந்துள்ளார் பிரியங்கா.

படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் பிரியங்கா.

கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

அனைவரும் திருமணத்துக்காக மகிழ்ச்சியாக தயாராகிக்கொண்டிருந்த நிலையில், மணப்பெண்ணாக வேண்டிய பெண் கோர முடிவை சந்தித்ததைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளன.

சகோதரன் கைது : காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து சகோதரி உயிரிழப்பு!!

தஞ்சை அருகே தனது சகோதரனை கைது செய்த போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு 2 சகோதரிகள் விஷம் குடித்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே வழக்கின் விசாரணைக்காக இளைஞர் ஒருவரை ஓர் நடுகாவிரி காவல் நிலையத்தி்ற்கு போலீசார் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அவரின் சகோதரிகள் கீர்த்திகா (29), மேனகா (31) காவல் நிலையத்திற்கு தனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை கண்டித்து சகோதரிகள் இருவரும் காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதனை பார்த்த போலீசார் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சகோதரி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி மேனகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

சிறுவர்களுக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு மெட்டா (Meta) நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பேஸ்புக், மெசேஜர் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தநிலையில், பெற்றோர்கள் தமது குழந்தைகளின் கணக்குகளை நேரடியாக மேற்பார்வையிடக் கூடிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெற்றோர் அனுமதி இல்லாமல் சிறுவர்கள் பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலையில் தோன்றுவதற்கும் , மெசேஜரில் புகைப்படங்கள் பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்களுடைய கணக்குகளுடன் பிள்ளைகளின் கணக்குகளை இணைத்து அதன் மூலம் செயற்படும் வகையில் இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கட்டுப்பாட்டை முதலில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா!!

திருகோணமலை கடற்கரையில் முதன்முறையாக, நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் மாலிமா விருந்தோம்பல் சேவைகள் (MHS) மலிமா சுழியோடி கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், இலங்கையின் அழகிய நீர்நிலைகள் ஒரு முதன்மையான இடமாக இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், கடல் அலைகளுக்கு அடியில் பாரம்பரிய கலாசார சடங்குகளை நிகழ்த்தியும், நாட்டுப்புற விளையாட்டுகளில் ஈடுபட்டும், ஒரு மயக்கும் காட்சியை உருவாக்கியதாக இலங்கை கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன – அமெரிக்க மோதல் நிலை தங்க விலையில் வரலாறு காணாத உயர்வு!!

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 3,200 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பானது வரலாற்றில் முதன்முறையாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் முறுகல் நிலை காரணமாக இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வடைந்து வருவதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : சிறுவன் பலி – தாய் உட்பட மூவர் காயம்!!

மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கந்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண், அவரது மற்றுமொரு குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர் அடங்குவர்.

காயமடைந்தவர்கள் மினுவாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மினுவங்கொடை, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த ரஷான் நிம்ஹாஸ் என்ற பாலர் பாடசாலை மாணவன் என தெரியவந்துள்ளது.