சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை!!

முட்டை விலை நாட்டின் சில பகுதிகளில் வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் சில பொருட்களின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த நிலை : கணவன் பலி!!

காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(20.12.2024) இரவு இடம்பெற்றுள்ள அதேவேளை, உயிரிழந்தவர், 38 வயதான பெத்தும் என்ற “லொக்கா” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வேளை, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, கணவன் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்!!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது தாயை சென்று பார்த்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் தாயார், சுகயீனம் காரணமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டு, தாயாரின் கையைப் பிடித்த வண்ணம் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவானோரால் பகிரப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் குடும்பத்தாருக்கு, உறவினர் உள்ளிட்டவர்களுக்கு சுகயீனம் என்றாலும் கூட தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதியைச் சார்ந்தவர்கள் அரச வைத்தியசாலைகளில் சேவையைப் பெற்றுக் கொள்வது குறித்து பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எளிமையாக செயற்படுவது தொடர்பில் பாராட்டப்பட்டாலும் கூட அதே சமயம் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு(Robin Uthappa) எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

உத்தப்பா பெங்களூரைச் சேர்ந்த சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இந்நிலையில், அந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் வசூலித்த சுமார் ரூ.24 லட்சம் ரூபாயை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து உத்தப்பாவின் நிறுவனம் ரூ.24 லட்சத்தை பிடித்துள்ளது.

எனினும், அந்த தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான முறைப்பாட்டில் தான் தற்போது உத்தப்பாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தப்பா துபாயில் உள்ள நிலையில், அவர் 27ஆம் திகதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செலுத்தாத பட்சத்தில் உத்தப்பா கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!!

புத்தளம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (19) தனது வீட்டில் அரைக்கும் சாதனத்தில் (பிளண்டர்) தேங்காய்த் துண்டுகளை அரைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நவகட்டகம் ஹல்மில்லவெவ பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான நடரஞ்சன் நிமல்ஷா திலுனி என்ற சிறுமியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்

இந்த சிறுமி கலேவெவ விஜய வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவர்கள் வசித்த சிறிய வீட்டில் சரியாக உறங்க இடமின்றி தவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயும் தந்தையும் கூலி வேலை செய்பவர்கள், பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் சிறுமி தேங்காயின் ஒரு பகுதியை எடுத்து கறி செய்வதற்காக அரைக்க முயன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், கடையொன்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காயை சில நாட்கள் பாதுகாப்பதற்காக அரைக்கும் இயந்திரத்தில் வைத்து பொடியாக்கியது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், சிறுமி தேங்காய் துண்டுகளை பொடியாக்க பயன்படுத்திய அரைக்கும் இயந்திரம் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.

அரைக்கும் இயந்திரத்தில் மேலும் இரண்டு கம்பிகள் பொருத்தப்பட்டு அதனை மின் செருகியில் பொருத்த சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அக்கா மின்சாரம் பாய்ந்து சிரமப்படுவதைக் கண்டு அவளது தம்பி ஓடிவந்து பிரதான மின்சுற்றை அணைத்தான், ஆனால் இரவு நேரமாகியதால் இருளுக்கு பயந்து மீண்டும் பிரதான மின்சுற்றை ஒன் செய்தான்.

அதில் சிறுமி பலத்த மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கூலி வேலைக்குச் சென்ற தந்தையும் தாயும் இதுவரை வீட்டுக்கு வராததால் அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்துள்ளதாக அயல் வீட்டார் குறிப்பிட்டுள்ளார்.

அயலவர்கள் வந்து மின்சார கம்பியில் இருந்து சிறுமியை அப்புறப்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன், ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செள்வதற்குள் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானநிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இரு பெண்கள்.!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 76 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராமை மற்றும் எத்கந்துர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 40 வயதுடைய பெண்கள் ஆவார்.

பெண்கள் இருவரும் அபுதாபியிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 51,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 255 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

நாட்டில் தற்போது நத்தார் விழா ஆரம்பித்துள்ள நிலையில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது.

பாரை மீன் கிலோ 1,800 ரூபாயாகவும், சாலை 560 ரூபாயாகவும், மத்தி 1020 ரூபாயாகவும், லின்னா 980 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தையின் மொத்த விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மீனின் மொத்த விலை கெலவல்ல 1,500 ரூபாவாகவும், தலபாட் 1,900 ரூபாவாகவும், பலயா 800 ரூபாவாகவும் உள்ளது.

மேலும் பாரை மீனின் விலை 1,500 ரூபாய், சாலயா 450 ரூபாய், லின்னா 900 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

சித்தப்பாவின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!!

கம்பஹா, ஹாபிட்டிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பல்லேவெல, ஹாபிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண் தனது தந்தையின் சகோதரனுடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சித்தப்பாவின் தாக்குதலில் காயமடைந்த பெண் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து : மூவர் பலி 27 பேர் படுகாயம்!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கண்டி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அட்டனிலிருந்து பயணித்த குறித்த பஸ் அட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுதுள்ளது.

பஸ்ஸின் சாரதி , நடத்துனர் உட்பட பயணிகள் பலர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளர். மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உயர்தர மாணவி விபரீத முடிவெடுத்து உயிரிழப்பு!!

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் மாணவியின் இழப்பு அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் தொடர் மழையால் 84 ஹெக்டேயர் பப்பாசி செய்கை அழிவு!!

தொடர் கன மழையால் வவுனியா மாவட்டத்தில் 84 ஹெக்டேயர் பப்பாசி செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், தமது நிலமைகளை யாரும் கண்டு கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளினுடைய பப்பாசிப் பயிற்செய்கைகள் கன மழை காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகு பிரிவிற்குட்பட்ட, பப்பாசி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுள் 100 வீத அழிவாக 21 ஹெக்டேயரும், 75 வீத அழிவாக 17 ஹெக்டேயரும், 50 வீத அழிவாக 21 ஹெக்டேயரும், 25 வீத அழிவாக 25 ஹெக்டேயரும் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைகளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பப்பாசி செய்கையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளின் பாரிய நிதிச் செலவில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசிப் பயிற்செய்கைகள் அண்மையில் பெய்த கன மழையினால், சில தோட்டங்கள் முழுமையாகவும், சில தோட்டங்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

பப்பாசிச் செய்கைகள் அறுவடைக்குத் தயாரான நிலையிலேயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் கிராம சேவையாளருக்கு முறையிட்டதற்கு அமைவாக அவர், கிராமங்களில் பாதிக்கப்பட்ட பப்பாசிப் பயிற் செய்கைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட சில விவசாயிகள் பப்பாசித் தோட்டங்களை படம் எடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இது தொடர்பில், உரிய தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ள பப்பாசிச் செய்கையாளர்களுக்குரிய நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேன்டும் எனக் கோரியுள்ளனர்.

யாழ் வீதி விபத்தில் இளைஞன் மரணம்!!

யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் வீதியில் இன்றைய தினம் (20) இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(20) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 761,647 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) 26,870 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 214,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 24,640 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 197,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 23,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 208,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 191,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயது பெண்ணும் 44 வயது ஆணும் கைது!!

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் காரன் “எல்டோ டமேர் ” என்பவரின் உதவியாளர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா, புத்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 36 வயதுடைய பெண்ணும் 44 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான 94 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மொத்தமாக 250 யூடியூப் வீடியோக்கள் நீக்கம் : 8 லட்சம் முதலீடு செய்து தோல்வியடைந்த பெண் வேதனை!!

யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சேனல் தொடங்கி தோல்வி அடைந்ததால் பெண் ஒருவர் அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார்.

தற்போதைய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில், வெற்றி பெறுபவர்களும் உண்டு.

அந்தவகையில், நளினி உன்னாகர் என்ற பெண் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி சமையல் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார்.

அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதுவரை மொத்தம் 250 வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். மேலும், கமரா, மைக், சமையலறை சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்காக சுமார் 8 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு அங்கீகாரமும், வருமானமும் கிடைக்கவில்லை என்று அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார்.

அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “யூடியூப் தளத்தில் கடந்த 3 வருடங்களாக 250க்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கினேன். இருப்பினும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

எனவே வீடியோக்களை உருவாக்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். மேலும், அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிட்டேன் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது.

எனவே அவற்றை முதன்மையான வருமான ஆதாரமாக நம்பாமல் இருப்பது புத்திசாலித்தனம்” என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

கையடக்க தொலைபேசி பெற்று தருவதாக 30 லட்சம் மோசடி செய்த கும்பல்!!

களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி சம்பவம் தொடர்பில் இருவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 வயது மற்றும் 21 வயதுடைய ஏத்தகம மற்றும் மங்கோன ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தந்தை மற்றும் இரண்டு மூத்த சகோதரிகளுடன் பயாகல பிரதேசத்தில் வசித்து வந்த மாணவனுக்கு தனது தந்தையினால் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொலைத்துவிட்டது.

இந்த நிலையில் அயல் வீட்டில் வசிக்கும் அதே வயதுடைய நண்பரின் மூத்த சகோதரனிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கோரியுள்ளார். அதற்காக கொஞ்சம் பணம் அல்லது தங்கப் பொருட்களை தருமாறு இந்த மாணவனிடம் கூறினார்.

இதன்படி குறித்த மாணவன் அலமாரியில் இருந்த சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மோதிரம், காதணிகள், வளையல்கள், போன்றவற்றை சந்தேக நபருக்கு மூன்று தடவைகளில் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகள்

பிரதான சந்தேக நபர் அவற்றை இரண்டு இடைத்தரகர்கள் மூலம் மூன்று முறை அடமானம் வைத்து, சுமார் 17 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். மேலும் மாணவருக்கு ட்ரோன் கேமராக்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.

தங்கப் பொருட்களை வைத்திருந்த உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். விற்ற மற்றும் அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்கள் விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.