நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (24) வெப்பமான வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘எச்சரிக்கை’ வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்பகுதியில் தொடர்ந்து செயல்பாடுகளில் ஈடுபாடுவதால் வெப்பப் பிடிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை அடிக்கடி வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மஹியாங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 4 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதியில் வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணல்களை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வந்தனர்.
விபத்து சம்பவித்த போது லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் , லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் வீதியில் குடைசாய்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லொறியில் இருந்த 3 கியூப் மணலில் 1 கியூப் மணல் வீதியில் கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபரின் மற்றுமொரு புகைப்படத் தொகுப்பு ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என பொலிஸாருக்கு தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரான மத்துகம பிரதேசம் உட்பட பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
போதைபொருள் கடத்தலின் கும்பல் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ, கடந்த 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கமாண்டோ சமிந்து உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைச் சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், கொலைக்கு மூளையாகக் கருதப்படும் 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எவ்வாறாயினும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை, மேலும் சந்தேகத்திற்கிடமான பெண் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் தெஹிவளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
மேலும், அவர் மத்துகம பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(24) இரவு விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறியமைக்கான ஆதாரங்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குருணாகல் – கொழும்பு வீதியில் நால்ல பிரதேசத்தில் இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (24.02) காலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் கடந்த 2 மாத காலமாக காணாமல்போன பாடசாலை மாணவி ஒருவரை கண்டுபிடிக்க கந்தேநுவர பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கந்தேநுவர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள பாடசாலை மாணவி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கந்தேநுவர பொலிஸ் நிலையத்தின் 071 – 8592943 அல்லது 066 – 3060954 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (24.02.2025) வவுனியா – பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதனை அடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு குழுமிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
எனினும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த ம.பாலகிருஷ்ணன் (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதை அவதானித்த அவரது உறவுகள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது வேனின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22.02.2025) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றவாளிகள் தொடர்பில் 1997 என்ற இலக்கம் ஊடாக தகவல்களை வழங்க முடியும். டி 56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 லட்சம் ரூபா வரை பணப் பரிசில் வழங்கப்படும். தகவல் வழங்குபவர்களின் இரகசியம் பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேவியாவில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிகளவான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 12,500 பேர் குடியுரிமை பெற உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இது வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு வாக்குகளைப் பெறும் நோக்கில் திட்டமிடப்பட்ட திட்டம் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் டோனி பர்க், இது நிறுவப்பட்ட நடைமுறையின்படி முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். அவுஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, இந்த விண்ணப்பங்கள் குறித்து கவனம் செலுத்தி, விரைவில் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே சமகால அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அவுஸ்திரேலியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பிராந்தியங்களில் உள்ள தொடர்புடைய குழுக்களுக்கு, கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர், உள்துறை அமைச்சர் டோனி பர்க், அவுஸ்திரேலிய குடியுரிமைச் சான்றிதழ்களை நேரில் வழங்க உள்ளார்.
இதில் இலங்கையர்கள் உட்பட பெருமளவு வெளிநாட்டவர்கள் குடியுரிமையை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமரெட்டி நகரில் உள்ள தனியார் பள்ளியில் வியாழக்கிழமை காலை சோகமான சம்பவம் நிகழ்ந்தது.
16 வயது மாணவி ஸ்ரீநிதி(Sri Nidhi) பள்ளி வாயிலுக்கு வெளியே மயங்கி விழுந்து திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மாணவிக்கு பள்ளிக்குச் சற்று முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், பின்னர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக செயல்பட்ட ஆசிரியர் ஒருவர் ஸ்ரீநிதியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சையும், சிபிஆர் (Cardiopulmonary Resuscitation) எனப்படும் இதயப் பரிசோதனை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்துள்ளனர், இருப்பினும் சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை.
மருத்துவர்கள் அவரை மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதனால் மற்றொரு மருத்துவமனையில் ஸ்ரீநிதி கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு மாணவியான ஸ்ரீநிதி(Sri Nidhi), ராமாரெட்டி மண்டலத்தில் உள்ள சிங்கராயப்பள்ளி கிராமத்திலிருந்து வந்து காமரெட்டியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.
ஸ்ரீநிதியின் இழப்பால் பள்ளி சமூகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியையும், துயரத்தையும் வெளிப்படுத்தினர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம். ரப்பானி, கடந்த இரண்டு தசாப்தங்களில் திடீர் இதய இறப்புகளில் 22% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.
மூச்சுத் திணறல் அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளை குழந்தைகள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் புத்தோலியா. இவர் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். 2019 ஆம் ஆண்டு சோனாலி என்ற பெண்ணை மணந்தார்.
திருமணத்தின் போது சந்தீப் சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதியிடமிருந்து ரூ.20 லட்சம் வரதட்சணையாகப் பெற்றார். ஆனால் அதன் பிறகு, சந்தீப் சோனாலியின் தந்தையிடம் கார் வேண்டும் என்று கேட்டார்.
இது குடும்பத்திற்குள் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியது, பின்னர் போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். இதற்கிடையில், சோனாலிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் சந்தீப்பின் குடும்பத்தினர் ஆண் குழந்தை எதிர்பார்த்து, பெண் குழந்தை பிறந்த பிறகு சோனாலியை மருத்துவமனையில் தனியாக விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், ஒரு மாதத்திற்குப் பிறகு, சந்தீப் சோனாலியையும் பெண் குழந்தையையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதைத் தொடர்ந்து, சந்தீப்பின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மீண்டும் துன்புறுத்தினர், எனவே சோனாலியை அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். சோனாலியும் சந்தீப்பும் சுமார் 2 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சந்தீப் சமீபத்தில் சோனாலியை தன்னுடன் வாழ அழைத்தார். இதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் பேசி இருவரையும் ஒன்றாக இணைத்தனர்.
இந்த நிலையில், நேற்று, சந்தீப்பின் குடும்பத்தினர் சோனாலியின் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து, அவரது மகள் தாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சோனாலியின் பெற்றோர் சந்தீப்பின் வீட்டிற்குச் சென்று, தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்குவாதம் செய்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சோனாலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையில், சோனாலியின் 5 வயது குழந்தை தர்ஷிகா, தனது தந்தை தனது தாயைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அழுது கொண்டே கூறினார். இது குறித்து போலீசார் விசாரித்தபோது, சந்தீப் சோனாலியைத் தாக்குவது போன்ற படத்தை தர்ஷிகா வரைந்தார்.
இதன் அடிப்படையில், சந்தீப் புடோலியாவை கைது செய்த போலீசார், அவரது தாய் வினிதா, சகோதரர் கிருஷ்ண குமார் புடோலியா, உறவினர் மனிஷா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பைகானர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பளுதூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், யாஷ்டிகா இன்று வழக்கம் போல் ஜிம்மில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருடன் அவரது பயிற்சியாளரும் இருந்தார். யாஷ்டிகா சுமார் 270 கிலோ எடையைத் தூக்க பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, எடை அவரது கழுத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில், யாஷ்டிகாவின் கழுத்து எலும்பு முறிந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக யாஷ்டிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இறந்த யாஷ்டிகாவின் குடும்பத்தினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு யாஷ்டிகாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வைத்தியர், நாட்டில் ஆண்களிடையே பரவும் புற்றுநோய்களில் வாய்ப்புற்று முதலிடத்தில் உள்ளதாகவும், ஆண்டுக்கு 2000 முதல் 3000 பேருக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அவருடைய விளக்கத்தின்படி, வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் அதன் ஆரம்ப அறிகுறிகள் தென்படும். எனவே ஆரம்ப நிலையில் நோயை கண்டறிந்தால், 90% வரை கட்டுப்படுத்த முடியும்.
இதன் முக்கிய காரணிகளாக புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாடு, மதுபானம், பாக்கு மற்றும் வைரஸ் தொற்றுகள் உள்ளன.
இன்றைய சூழலில், பாடசாலை மாணவர்களிடையே புகைப்பழக்கம் அதிகரித்து வருவதால், அவர்களுக்குள் வாய்ப்புற்றுநோய்க்குரிய ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன என்று வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.