கல்விச் சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் : தாக்குதலில் உயிரிழந்த ஓய்வு பெற்ற அதிபர்!!

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீபன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழந்துள்ள நிலையில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது தனங்கிளப்புக்கு அண்மித்த பகுதியில் நிறைபோதையில் வந்த குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற அதிபர் விசுவாசம் இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ள செய்தி கல்விப்புலத்துக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் வாகனங்கள் சில ஏற்கனவே இந்த பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தற்போது அறிய முடிகின்றது.

அவ்வாறாயின் இத்தகைய குற்றச் செயல்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறையற்று செயற்பட்டு வந்துள்ளமை நன்கு புலனாகின்றது. இந்நிலைமை இன்று ஒரு கல்வியலாளரின் உயிர் பறிக்கப்படுமளவிற்கு சென்றுள்ளது.

இது இலங்கையில், குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் சாதாரண மக்கள் கூட பாதுகாப்பாக பயணிக்கமுடியாது என்ற நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது.

தமது கடைமைகளின் நிமித்தம் கூட சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சென்று வர முடியாத அளவுக்கு குற்ற கும்பலின் ஆதிக்கம் தலைதூக்கியிருக்கும் நிலையில், இத்தகைய சம்பவங்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. வடமாகாணத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா? அல்லது காட்டாட்சி நடைபெறுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதன் போது அவ்வாகனத்தில் பயணித்திருந்த ஆசிரியர்கள் தெய்வாதீனமாக தப்பித்திருந்தனர்.

குறித்த ஆசிரியர்களின் வாகனப் போக்குவரத்து தொடர்பாக, ஆக்கபூர்மான செயற்பாடுகள் எதனையும் செய்யாமல், வரட்டு வியாக்கியானங்கள் கூறிவரும் வடமாகாண ஆளுநர் செயலகம்,

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது சட்டவிரோதமாக தாக்குல் நடத்தியோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் பின்னணியில் வடமாகாண ஆளுநரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் உள்ளதா? என்ற பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கும் துப்பாக்கிச் சூடுகள் : தந்தை மகளைத் தொடர்ந்து 9 வயது சிறுவனும் பலி!!

மித்தெனிய பகுதியில் நேற்றுமுன்தினம்(18) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவனும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

09 வயதான குறித்த சிறுவன், காலி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மித்தேனிய கடேவத்த சந்திப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாதோர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த சிறுவன் படுகாயமடைந்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டையடுத்து இலக்கு வைக்கப்பட்ட நபர்(சிறுவனின் தந்தை) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது மகனும் மகளும் படுகாயமடைந்தனர்.

பின்னர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மகளும் உயிரிழந்த நிலையில், தற்போது மகனும் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளடதுடன் அவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீரென அதிகரிக்கப்பட்ட உணவுகளின் விலைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விலை அதிகரிப்பானது நேற்று (18.02.2025) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி மேலும் கூறுகையில், உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத்தன்மை தொடர்பில் ஆராயப்படும் என எச்சரித்துள்ளார்.

அத்துடன் தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது. திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!!

அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் 8250 ரூபா மாத்திரமே என தொழிலாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் தொடர்பில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்த போதும் 8250 ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் , 7500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றது. எனவே சம்பளத் தொகையில் 8250 ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

அது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுடன் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கு அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்படும்”என ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 5975 அதிகரிக்கப்படும் அதேவேளை, 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 2275 ரூபாவை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிகர சம்பள உயர்வான 8250 ரூபாய், 2027ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு முழுமையாக கிடைக்கும். இதனால், அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு ரூ. 8250 மாத்திரமே என்பதை பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாம் இடத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன!!

ஐ.சி.சி வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த அவஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மகேஷ் தீக்ஷன சிறப்பாக பந்து வீச்சை மேற்கொண்டதன் காரணமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியதன் காரணமாக தரவரிசையில் முன்னிலை வகித்த ஆப்கானிஸ்தானின் வீரர் ரஷீத்கான் இரண்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

அதேவேளை மகேஷ் தீக்ஷன ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவது இதுவே முதன் முறையாகும்.

நெடுநேரம் வரிசையில் காத்துநின்ற அமைச்சர் சந்திரசேகர்!!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக இன்று (19.02) சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்தார்.

அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேவேளை ஜனாதிபதி அனுரகுமார மற்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் போல வீண் விரயமோ, ஆடம்பரங்களோ இன்றி மக்கள் மத்தியில் வலம் வருகின்றார்.

இந்த நிலையில், அவரது அமைச்சில் உள்ள அமைச்சர்களும் ஆடம்பரங்களின் சாதராண மக்கள் போல மக்களோடு மக்களேக நின்று தமத்8உ தேவைகளி நிறைவேற்றி கொள்கின்றமை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையில் தங்கம் வாங்க உள்ளோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (19) பாரியளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 870,431 ரூபாவாக அதிகரித்துள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 30,710 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 245,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 28,160 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 225,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 26,880 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 215,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை பதிவாகக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பணியிடங்களில் இருக்கும் போது அதிக நீரை பருகுமாறும், வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதிகளில் மற்றும் வெளியிடங்களில் வேலை செய்வோர் வெப்பம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், அதிகளவு நீரை பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனங்களுக்குள் சிறுவர்களை விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் வரை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த வெப்பநிலையால் அதிகரிக்கும் உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு குளிர் நீர், தோடம்பழம், இளநீர் உள்ளிட்டவற்றை சீனி சேர்க்காது எடுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.

பெரியோர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லீற்றர் நீரை அருந்த வேண்டும் என்றும், அதிக உடல் பருமனுடையவர்கள் 3 லீற்றர் நீரையும், 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லீற்றர் நீரையும் பருக வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாறாக உடலுக்கு தேவையானளவு நீர் பருகுவதை தவிர்த்தால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஞாபக மறதி போன்ற நோய்கள் ஏற்படும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

முடிந்தளவு பகல் வேளைகளில் வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது இலகு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையை இன்று உலுக்கிய படுகொலையின் பின்னணியில் பெண் : வெளியான புதிய தகவல்!!

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான பெண் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன், பின்னர் அந்த பெண் துப்பாக்கியை சந்தேக நபரிடம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தை வெட்டி மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன, நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, வெளியேற முயன்ற போது, ​​அவருக்கு அருகில் அருகில் சென்று அவரது மார்பில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மனைவியுடன் சென்ற இளைஞன் கடத்தப்பட்டு படுகொலை!!

 

கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளூமெண்டல் ரயில் மார்க்க பகுதியில் மனைவியுடன் சென்ற நபர் கடத்தி செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

சம்பவத்தில் கொழும்பு மட்டக்குளி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே படுகொலை செய்யப்பட்டுளளார். தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து , தனது மனைவியுடன் புளூமெண்டல் புகையிரத நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு வந்த நபர்கள் சிலர் அவரை அங்கிருந்து கடத்தி சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

கொலை சம்பவத்திற்கான காரணம் மற்றும் கொலையாளிகள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்ஃபியால் பறிபோன பெண்ணின் உயிர்!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் கதவின் வெளிப்புறம் சென்ற வேளை தலையில் கல் மோதி உயிரிழந்துள்ளார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்த ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமுனுவெல்பிட்டிய பகுதியில் இன்று (19) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 53 வயதுடைய ரஷ்ய பெணணொருவரே உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய பெண் தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றுக்குச் சொந்தமான சொகுசு பஸ்ஸில் பதுளைக்குச் சென்றுள்ள நிலையில் எல்ல பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக ரயிலில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போது, ரஷ்ய பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்றத்தில் துடிதுடித்து உயிரிழந்த குற்றவாளி : துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம்!!

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, ​​செப்டம்பர் 13, 2023 அன்று, கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, சந்தேக நபர் இன்று (19) காலை பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அளுத்கடே நீதிமன்ற வளாகத்திற்கு நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதேவேளை உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Whatsapp ஊடாக பெண்களுக்கு தொல்லை கொடுத்த நபர் கைது!!

 

இலங்கையில் Whatsapp வழியாக தகாத புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பல பெண்களுக்கு தொல்லை கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் வடமத்திய மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்கும் நிலையத்திற்கு சென்றபோது, ​​உரிமையாளர் அவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று இவ்வாறு நடந்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அனுராதபுரம், பந்துலகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று இரவு முதல் பத்தரமுல்ல பகுதிக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேவையான பணியாளர்கள் சுழற்ச்சியில் முறையில் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயிற்றப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!!

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு சமாகமதல பகுதியில் நேற்று உழவு இயந்திரம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் சாரதி உயிழந்துடன், மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்பாடு சமாகமதல பகுதியில் நேற்று முன்தினம் (17.02) கரை வலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற உழவு இயந்திரம் அங்கிருந்த படகு ஒன்றினை இழுத்தெடுப்பதற்கு முற்பட்டதாகவும்,

இதன்போது குறித்த உழவு இயந்திரம் திடீரென தலை கீழாக கவிழ்ந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன் போது உழவு இயந்திரத்திற்குள் சாரதியும், மற்றுமொரு நபரும் நசுங்கி காயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவ்விருவரையும் உடனடியாக கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

எனினும், உழவு இயந்திரத்தின் சாரதி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிழந்தவரின் சடலம் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பள்ளிவாசல்பாடு கிராமத்தைச் சேர்ந்த 40 வயதடைய 03 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்தள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் மாமனாரை கொலை செய்த மருமகன்!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார். குறி்த்த சம்பவமானது நேற்று (18.02) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து மருமகன் மகளை தாக்கியதை கண்ட தந்தை அதை தட்டிக்கேட்டுள்ளார்

இதனையடுத்து மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிஸார் தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.