இறந்தும் உயிர் வாழப்போகும் மாணவன்!!

பொலன்னறுவையில் உள்ள தோபாவெவ வித்தியாலயத்தில் மாணவர் ஒருவன் மீது கால்பந்து கோல் வலையிலிருந்து இரும்புக் குழாய் ஒன்று தலையில் வீழ்ந்தமையால் அவர் உயிரிழந்துள்ளார்.

தனது மூத்த சகோதரி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியைக் காண சென்றிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  சம்பவத்தில், ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் தேனுவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான புலமைப்பரிசில் தேர்வில் அதிக மதிப்பெண்களை குறித்த மாணவன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், மரணமான குறித்த மாணவனின் உடல், உறுப்புகளை தேவைப்படும் மற்றொரு பிள்ளைக்கு தானம் செய்ய அவரது பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்துக்குள் பதுங்கியிருந்த பூனை : இரண்டு நாட்கள் தாமதமான பயணிகள்!!

ரோமில் இருந்து ஜேர்மனிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ரயானேர் விமானத்தின் இயந்திர பகுதியில் பூனை ஒன்று பதுங்கியிருந்தமை காரணமாக, அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டது.

கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதுங்கியிருந்த இந்தப் பூனையை அடையாளம் காண, குறித்த போயிங் 737 விமானத்தின் பல பகுதிகள் அகற்றப்பட்டன.

இதன்போது, மின்சார பரிமாற்றப் பகுதிக்குள் குறித்த பூனை மறைந்திருப்பதை பணியாளர்கள் கண்டறிந்தனர். பின்னர், அந்த பூனை, விமானத்தின் இயந்திர உட்பகுதிக்குள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தது.

இறுதியில், இரண்டு நாட்களுக்கு பின்னர் திறந்திருந்த கதவின் ஊடாக, பூனை விமானத்திலிருந்து வெளியேறி படிக்கட்டுகளில் இறங்கியது.

இந்தநிலையில், குறித்த பூனை கண்டறியப்படாவிட்டால், 30,000 அடி உயரத்தில் இந்த விமானம் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விமானத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை!!

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளர். நாட்டின் குடியேற்ற அமைப்பிற்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குடும்ப உறுப்பினர்கள் மாணவர் வீசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், புலம்பெயர்ந்த சமூகத்தால் அவுஸ்திரேலியர்கள் தங்கள் பல சலுகைகளை இழக்கும் சூழ்நிலை தற்போது இருப்பதாக One Nation கட்சித் தலைவர் பவுலின் ஹான்சன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாலத்தை உடைத்து விபத்துக்குள்ளான கார் : மூவர் வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பு (Batticaloa) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று (13.02.2025) பிற்பகல் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்த பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது.

இதன்போது காரில் பயணித்தவர்கள் 03 பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14.02) காலை ஆரம்பித்துள்ளார்.

ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி அழகரெத்தினம் வனகுலராசா இன்றைய தினம் காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

  • தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.
  • மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
  • தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.
  • உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  • பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
  • தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாகக் கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சக போராளிகளை காரணம் காட்டி, பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம், பண்ணை அமைத்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு 200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
  • முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும்.
  • இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்.

மின்தடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை, தலா 4 மணி நேரம் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 20 மண்டலங்களாக இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.

அவை விரைவாக சீர்செய்யப்பட்டு அவற்றின் மின் உற்பத்தி தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மின்விநியோகம் வழமைக்கு திரும்புவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் : ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா?

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாளைத் தொடங்கும்போது கார்கள், பேருந்துகள், டாக்சிகள் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் வேலைக்குச் சென்று, சரியான நேரத்தில் வீட்டிற்கும் வருவார்கள்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், விமான நிலையங்கள், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் விரிவான விமானப் பயணம் உள்ளிட்ட சாதாரணமில்லாத பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்தப் பெண்ணின் பயணம் மிகவும் கடினமானதாகும். பல்வேறு மாநிலங்களைச் சுற்றி, அவர் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

AirAsia-இன் நிதி செயல்பாட்டுத் துறையின் உதவி மேலாளரான ரேச்சல் கவுர், ஒரு நேர்காணலில் ஒவ்வொரு வாரமும் விமானத்தில் வேலைக்குச் செல்வதாக கூறியுள்ளார்.

விமானங்கள் மிகவும் மலிவு விலையில் இருப்பதாகவும், தனது குழந்தைகளுடன் வீட்டில் கூடுதல் நேரத்தை செலவிட முடிகிறது எனவும் கூறியுள்ளார்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இருவரும் வளர்ந்து வருகின்றனர்… அவர்கள் வளர்ந்து வருவதால், தாய் அடிக்கடி அருகில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறேன். மேலும், இந்த ஏற்பாட்டின் மூலம் நான் ஒவ்வொரு நாளும் வீட்டிற்குச் சென்று இரவில் அவர்களைப் பார்க்க முடிகிறது, ” என்று அவர் கூறியுள்ளார்.

அந்தப் பெண் தனது நாளை அதிகாலை 4.00 மணிக்குத் தொடங்கி, 5.55 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்காக 5.00 மணிக்கு விமான நிலையத்திற்குப் புறப்படுகிறார். காலை 7.45 மணியளவில் தனது அலுவலகத்திற்கு சென்று இரவு 8.00 மணிக்கு வீடு திரும்புகிறார்.

உணவு மற்றும் பிற செலவுகள் உட்பட தனது பயண வழக்கம், தனது பணியிடத்திற்கு அருகில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதை விட கணிசமாக மலிவானது என்று கவுர் குறிப்பிட்டார்.

கவுர் முன்பு கோலாலம்பூரில் தனது அலுவலகத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பினாங்குக்குத் திரும்பினார், அங்கு அவர் வசித்து வந்தார்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தினமும் விமானப் பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார், இது அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையில் சரியான சமநிலையை உருவாக்க அனுமதித்ததாக அவர் கூறினார்.

அவரது புதிய பயண வழக்கத்தால் பணத்தை மிச்சப்படுத்தவும் முடிந்தது எனவும் கூறியுள்ளார். முன்னதாக தனது மாதச் செலவுகள் மொத்தம் $474 (தோராயமாக ரூ.42,000) ஆக இருந்ததாகவும், இப்போது $316 (சுமார் ரூ.28,000) ஆகக் குறைந்துள்ளதாகவும் கவுர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடுரோட்டில் பற்றி எரிந்த கார் : காப்பாற்ற முயற்சித்தும் பொதுமக்கள் கண் எதிரே துடிதுடித்து உடல் கருகி பலியான இளைஞர்!!

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் உடனடியாக அன்பழகன் காரை விட்டு கீழே இறங்க முயற்சித்தும் அவரால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சக வாகன ஓட்டிகள் கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்து அன்பழகனை மீட்க முயற்சிதும் முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

திடீரென கார் முழுவதும் தீ மளமளவென பரவிய நிலையில், பொதுமக்கள் கண் முன்னாலேயே அன்பழகன் பற்றி எரிந்த காருக்குள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து அன்பழகனின் சடலத்தை மீட்டனர். சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தன் மகளின் ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா!!

மறைந்த சினிமா பின்னனி பாடகி பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.

தந்தையின் இசையில் பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடல் பவதாரிணிக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி இலங்கையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக இளையராஜா கூறுகையில்,

“பவதாரணி என்னிடம் பெண்கள் மட்டுமே அடங்கிய இசைக்குழுவை தொடங்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியிருந்தார். அவர் கடைசியாக விருப்பப்பட்ட விஷயம் அதுதான்.

நான் இரண்டு நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்தபோது, மாணவிகள் பலர் குழுக்களாக வந்து பாடல்களை பாடிக் காட்டினார்கள்.

அதைப் பார்த்த பின்னர் எனக்கு பவதாரணி சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் ஆசைப்பட்டது போல், 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே அடங்கிய ஒரு இசைக்குழுவை தொடங்கப் போகிறேன்.

உலகம் முழுவதும் இருந்து ஆட்களை தேர்வு செய்து இந்த இசைக்குழுவை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இதில் இணைய விரும்பும் மாணவிகள் தங்கள் பெயர், விவரங்களை கொடுத்த பின்னர், ஆடிஷன் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

பவதாரணியின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இந்த இசைக்குழு தொடங்கப்படும் என்றும் இசைஞானி தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பியின் மோசமான செயல் : பொலிஸார் சட்ட நடவடிக்கை!!

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna)எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது, இராமநாதன் அர்ச்சுனாவுக்குஎந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது.

அவர் மிக உயர்ந்த சபையின் நபர், அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்.

பொலிஸார் தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறே பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும். எனவே அந்தவகையில் செயல்படுவது அவரது கடமை.

இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம். எதிர்காலத்தில் நாம் பார்ப்பது போல, அந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸார் தற்போதுள்ள சட்டத்தின்படி செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.

முன்னர், இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், யாழில் நேற்று முன்தினம் இரவு, தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்குள் வைத்து அர்ச்சுனா எம்.பி காணொளி எடுக்க முற்பட்ட போது, அங்கு நின்ற நபருக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர், குறித்த நபரை விடுதிக்குள் வைத்து துரத்தி துரத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காணொளி நேற்று வெளியாகியிருந்தது.

எனினும், குறித்த நபர் தன்னைத் தாக்கியதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து பொலிஸார், அர்ச்சுனாவின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸார் முக்கிய தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நாளைய தினம் காதலர் தினம் கொண்டாட தயாராகும் நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை பற்றி இருமுறை சிந்தியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காதலர் தினத்திற்கு முன்பு நீங்கள் ஒரு பெண் பிள்ளையாக இருந்தால், காதலர் தினத்தைக் கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்பு உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையை பற்றி இருமுறை சிந்தியுங்கள்” என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால் 109 என்ற அவசர எண்ணை அழைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றி 68 கோடி ரூபாவை மோசடி செய்த கும்பல்!!

இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றின் வர்த்தக இலட்சினையை பயன்படுத்தி அதனூடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரமிட் திட்டம் ஒன்றை இயக்கி சமூக ஊடகங்கள் வாயிலாக 68 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை கண்டி குற்றப்புலனாய்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

சமூக ஊடக கணக்குகள் வாயிலாக பல்வேறு போட்டிகளை நடத்தி, மக்களை ஏமாற்றிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 26 வயது. இவர் கம்பஹா வத்துமுல்லை பிரசேத்தை சேர்ந்தவர் மற்றைய சந்தேக நபர் 27 வயதுடையவர் இவர் ராகம பட்டுவத்தையை சேர்ந்தவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் எகிறும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை இன்று (13) மீண்டும் உயர்வடைந்துள்ளது. அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 213,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,625 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது .

 

அடிதடியால் அருச்சுனா எம்.பிக்கு சிக்கல் : பொலிஸார் விசாரணை!!

யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை பீங்கானால் தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இளைஞன் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சத்திர சிகிற்சை செய்யப்படவுள்ளதாக யாழ். போதானா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இராமநாதன் அர்ச்சுனா தனது சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தார். இதன்போது, ஒரு காணொளி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த கெமராவிலும் இந்த பதிவாகி இருந்தது.

சம்பவம் தொடர்பில் காணொளி அடிப்படையாக வைத்து அர்ச்சுனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் இளைஞன் உயிர்மாய்ப்பு!!

காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பலமுறை கேட்டதாகவும், எனினும் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த நாளில், அந்த இளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் பாரிய தாங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாங்கி இன்று (12.02) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய தாங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து கரை சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த தாங்கியை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக இவ்வாறான தாங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.