இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி : குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது இளைஞன்!!

பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பறிப்போன 9 வயது சிறுமியின் உயிர்

கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின் பெக்ஸ்லீஹீத்தில்(Bexleyheath) நிகழ்ந்த பேருந்து விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடா பிகாக்கி(Ada Bicakci) என்ற 9 வயது சிறுமி, வாட்லிங்(Watling) தெருவில் நடந்த இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 5 ஆம் திகதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது நபர்

இந்த சம்பவத்தில் 23 வயது மார்டின் அசோலோ-அகோகுவா(Martin Asolo-Agogua) என்ற நபர்,

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் மது அல்லது போதை மருந்தின் செல்வாக்கின் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

மெட்ரோபொலிட்டன் பொலிஸின் கூற்றுப்படி, அவர் சட்டப்பூர்வ வரம்பை மீறி போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே அசோலோ-அகோகுவா கைது செய்யப்பட்டார், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மார்ச் 24 ஆம் திகதி ப்ரோம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அடாவின் ஐந்து வயது சகோதரனும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது குழந்தைகள் குடும்ப உறுப்பினருடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடாவின் மரணத்திற்குப் பிறகு, ஆறு குழந்தைகளுக்கு உதவும் வகையில் அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக வரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையை தெரிவித்துள்ளனர்.

 

பேய் பயத்தால் 36 ஆண்டுகளாகப் பெண்ணாக வாழும் ஆண் : பின்னணியில் இருக்கும் காரணம்!!

பேய் பயத்தால் ஒரு ஆண் கடந்த 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழ்ந்து வரும் சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்பூரைச் சேர்ந்தவர் சிந்தா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் போல சேலை அணிந்து வாழ்ந்து வருகிறார்.

பேய்களால் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்ததால் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆவி தன்னைத் துன்புறுத்தியது என்றும், தான் ஒரு ஆணாக வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் அவர் நம்பியதாக தெரிகிறது.

இதனை அறிந்த கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் சிலர், இவருக்கு மனநலம் தொடர்பான பிரச்சனை என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இவருக்கு முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சை தேவை என்று கூறுகின்றனர்.

இவருக்கு மூன்று திருமணங்கள் நடந்ததாகவும், அதில் 2-வது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, தனக்கு இந்தக் கனவு வந்ததாக சிந்தா கூறியுள்ளார்.

2-வது மனைவியின் ஆன்மா தொந்தரவு செய்ததாக கூறி, தான் ஒரு பெண்ணை போல வாழ வேண்டும் கட்டாயப்படுத்தியதாகவும் கூறுகிறார். மேலும், இவரது 9 மகன்களில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

யாழில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி!!

14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இன்று(14.02.2025) இடம்பெற்றுள்ளது. இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து விபத்து!!

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, அதிகாலையில் கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

கடவத்தை கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நேற்று (14.02) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த நபர் எரிந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரனால் உயிரிழந்த தாத்தா : உறவினர்கள் சோகம்!!

எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நபர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (14) அதிகாலை எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரகடுவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் ஆவார். உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகளின் கணவருக்கு முதல் திருமணத்தில் ஒரு பிள்ளை இருந்ததாகவும், அவரும் அவர்களுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமை தொடர்பில் அவர் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதன்போது உயிரிழந்த நபர் தகராறில் குறுக்கிட்ட போது அவரது பேரனால் தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது தரையில் விழுந்து காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளுக்கு செல்ல ஆசைப்படும் வடக்கு இளையோருக்கு எச்சரிக்கை!!

தற்போது இலங்கையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி , ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய் , கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி ,

வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தினை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும்.

இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஆள் ஒரு விமானத்தில் பொதிகள் ஒரு விமானத்தில் : சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய வர்த்தகர்!!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஆவார். குறித்த வர்த்தகர் முதலாம் திகதி மாலை 4:30 மணிக்கு கியூஆர்-654 கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

அன்று அந்த விமானத்தில் அவரின் பைகள் வரவில்லை. இந்நிலையில் மற்றுமொரு விமானத்தில் அவரின் பைகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து பைகளை எடுப்பதற்காக வர்த்தகர் நேற்று (13) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 நவீன கைத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் விமான நிலையத்திலுள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுங்க அதிகாரிகள் கைதான வர்த்தகரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதக் கடவையில் விபத்து : புகையிரதத்துடன் மோதிய வேன்!!

இன்று (14.02) காலை வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்ததோடு, சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான சேவையில் ஈடுபட்டுவரும் வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனினும், விபத்து நடந்த நேரத்தில் வேனில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். விபத்து நடந்த நேரத்தில் ரயில் கடவையில் நிறுவப்பட்ட எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை அமைப்பு செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமகால அரசிலும் தொடரும் நெருக்கடி : கடும் ஆதங்கத்தில் நாட்டு மக்கள்!!

அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை குறைத்திருந்தாலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததால், தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மின்சாரக் கட்டணங்கள் கணிசமாக குறைக்கப்பட்ட போதிலும், பல நுகர்வோர் பொருட்களின் விலைகள் இன்னும் அப்படியே இருப்பதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு ஈடாக, நுகர்வோர் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமையினால் வாழ்க்கைச் செலவு இன்னும் கடுமையாகிவிட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணம் 20 சதவீதமும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 30 சதவீதமும் குறைக்கப்பட்டது. பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்!!

யாழ்ப்பாணம் வல்லை கடற்கரை பகுதியில் அணி வகுக்கும் வெளிநாட்டு பறவைகள் மக்களை ஈர்த்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாண்டி குறித்த பறவைகள் யாழ். பகுதிக்கு வருகை தந்துள்ளன.

‘பிளமிங்கோ’ என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் யாழ் வல்லை கடற்கரை கடற்கரைப் பகுதிகளுக்கு தற்போது படையெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த காலங்களில் மட்டக்களப்பில் வெளிநாட்டு பறவைகள் பெருமளவில் வருகை தந்திருந்த நிலையில், தற்போது அவை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்!!

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கூறியுள்ளதாவது, தற்போது நாட்டில் அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடும்.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும்.

அதேசமயம் மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

கடந்த 19 நாட்களாக காணாமல்போயுள்ள பெண் ஒருவரை கண்டுபிடிக்க பெலியத்தை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

48 வயதுடைய பெண் ஒருவர் ஜனவரி மாதம் 26 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பெண்ணின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பெலியத்தை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591497 அல்லது 047 – 2243222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குரங்குகளை பிடித்து தனித்தீவில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்!!

இலங்கையில் குரங்குகளை பிடித்து ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கே.டி.லால் காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பிடிபட்ட குரங்குகளைக் கொண்டு சென்று விடுவிப்பதற்கு ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த ஆராய்ச்சித் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரணவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த பல வருடங்களாக குரங்குகளால் விவசாய நடவடிக்கை பெருமளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், பயிர்ச் செய்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற காதலன் : பொலிஸாரிடம் நாடகமாடிய காதலி கைது!!

டுபாய்க்கு ரி-56 ரக துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியான நடன ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஒரு இரவு விடுதியில் நடனமாடும் போது பொலிஸ் கான்ஸ்டபிளை சந்தித்ததாகவும், அவருடன் காதல் உறவு கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய கான்ஸ்டபிளை பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருப்பதாக பாசாங்கு செய்த நடன ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனை அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் கடமைக்கு செல்லவில்லை, மாறாக நடன ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பின்னர் வாடகைக்கு எடுக்கப்பட்ட வேனில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றதாக தெரியவந்துள்ளது.

அவர் டுபாயிக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.