முருங்கை பூ சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

பொதுவாக நாம் முருங்கைக்காய், முருங்கை இலை (முருங்கைக்கீரை) போன்ற முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவோம் சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் முருங்கைப் பூக்களையும் சாப்பிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

முருங்கைப் பூக்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பொதுவாக குளிர்காலம் முடியும் போதும், வசந்த காலத்தின் வருகையின் போதும் காலநிலை மாற்றத்தால் பல நோய்கள் ஏற்படலாம்.

எனவே தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் ஒரு கப் முருங்கைப் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த பானம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கணிசமாக உதவும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

அதே போல உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் தற்போது ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தப்பட்சம் ஒருவராவது பாதிக்கப்பட்டிருக்கும் சூழல் உள்ளது.

எனவே இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்க, ஊட்டச்சத்து நிபுணர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள பரிந்துரைக்கின்றனர். முருங்கை பூக்களில் சிறந்த அளவு பொட்டாசியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே முருங்கை பூ தேநீரை தினமும் குடிப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், மேலும் இதனால் இதய நோய் அபாயமும் குறையும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் முருங்கை பூக்கள் உதவுகின்றன.

முருங்கை பூக்களை காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த பூ உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.

 

யாழில் தொலைக்காட்சி பார்க்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், சம்பவம் இடம்பெற்ற போது எவரும் வீட்டில் இல்லை. குறிப்பாக நேற்று மாலை குறித்த சிறுவனின் தாய் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் சிறுவன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

இதன்போது தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த சிறுவன் முற்பட்ட வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

வீட்டுக்கு உறவினர்கள் வந்த போது சம்பவத்தை அவதனித்து சிறுவனை சிகிச்சைக்காக வேலணை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

இதே நேரம் சிறுவனின் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி வாகனங்கள் இல்லை : ஜனாதிபதி உறுதி!!

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் தற்போது முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படாது என்றும், அரசுக்குச் சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏலத்திற்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் : பொலிஸார் எச்சரிக்கை!!

டுபாயில் இருந்து இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து தகவல்களை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த மோசடியின் முக்கிய சந்தேக நபர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்ற 32 வயதுடைய நபர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

டுபாயை தளமாகக் கொண்ட இந்த கடத்தல்காரர்கள், கப்பம் பெறும் நோக்குடன் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் பயன்படுத்தி வரும், தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களின் ஊடாகவே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் ஊடாக அவர்களது தொலைபேசி நிறுவனம் மூலமாக அழைப்பு வந்தது என்பதை நம்ப வைப்பதே இதன் நோக்கமாகும்.

அழைப்பாளர் ஒரு லொட்டரியில் பரிசு வென்றதாகக் கூறி, அதைப் பெறுவதற்காக தொலைபேசி எண்ணுக்கு SMS மூலம் பெறப்பட்ட OTP எண்ணை வழங்குமாறு கேட்பது தெரியவந்துள்ளது.

பின்னர் மோசடி செய்பவர்கள் OTP எண்ணைப் பயன்படுத்தி தொலைபேசியின் அனைத்து விவரங்களையும் பெற்று, அந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய e-SIM கார்டைப் பெற்று, அதைப் பயன்படுத்தி பணம் பறிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதுபோன்ற கடத்தலுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட 4 தொலைபேசி எண்களை பொலிஸர் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.

076 944 91 26, 071 564 97 53 ,076 413 26 85, 074 149 75 54 மேற்படி , பின்வரும் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறு விசாரணை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற கோர விபத்து : 12 பேர் காயம்!!

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் காதலர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடு!!

யாழ். வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதி காதலர் தினத்தை இளைஞர்கள் கொண்டாடியுள்ளனர். கடந்த 14ஆம் திகதி காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாடியிருந்தனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் வீதிகளில் நிறப்பூச்சுக்களால் தங்களது பெயர்களையும், காதல் வசனங்களையும் பெரிதாக எழுதி கொண்டாடியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதியுள்ளமை பல்வேறு தரப்பினரிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வீதிகளை இவ்வாறு அசுத்தப்படுத்தியுள்ள செயற்பாடு முகம் சுழிக்க வைக்கின்றது.

 

சுவிற்சர்லாந்தின் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழர்கள்!!

சுவிற்சர்லாந்தின் Solothurn மாகாணசபைத்தேர்தலில் சோசலிச ஜனநாயககட்சி (SP) சார்பில் நான்கு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். சொலத்தூண் மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் மாகணசபைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதன்படி 4 உள்ளூர் ஆட்சி பிரதேசங்களிலேயே குறித்த தமிழர்களும் போட்டி இடுகின்றனர்.

இதற்கமைய Sathiyaseelan Otten Gösgen, Suntharalingam Domeck-Thierstein, Rasamanickam Olten Göngen, Gana Bucheggberg-Wasseramt ஆகியோரே இவ்வாறு போட்டியிடுகின்றனர்.

 

இந்நிலையில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவிற்சர்லாந்து பிராஜா உரிமைபெற்ற அனைத்து தமிழர்களிற்கு வாக்களர் அட்டை வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து உங்கள் வாக்குகளை பயன்படுத்தவும். Bucheggberg/Wasseramt பிரிவில் போட்டி இடும் Gana Sutha List 2.09 வேட்பாளரிற்கு இரண்டு வாக்குகளை வழங்களாம். இரண்டாம் இலக்க பட்டியலில் ஒரு வேற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தில் இன்னும் ஒரு தடவை எழுதவும்.

அதே போல் Olten/Gösgen i Sri Rasamanickam List 6:19 2 Illadsika Sathiyaseelan List 6:20 இடுகின்றனர். Dorneck/Thierstein பிரிவில் Shulojan Suntharalingam List-5.06 போட்டி இடுகின்றனர்.

இவர்களிற்கும் முறையே இரண்டு வாக்குகளை அளித்து வெற்றி வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவும். ஒவ்வொரு உள்ளூராச்சி பிரிவில் சராசரி 500 தமிழ் வாக்குகள் இருப்பின் இரண்டு வாக்குகள் வழங்குவதால் 1000ஆக இரட்டிப்பாகும்.

50000 அதிகமான தமிழர்கள் வாழும் இந்நாட்டில் இந்த சிறுபாண்மையினரின் பிரதிநிதித்துவம் அத்தியாவசியமானது, ஒவ்வோரு வாக்களரும் தமது தொழில்துறை நண்பர்கள் நண்பர்களிடமும் வாக்களிக்க ஊக்குவிப்பதனால் ஒரு தமிழ்பிரதநிதித்துவத்தினை பெற்று கொள்ள முடியும்.

வாக்களிப்பதில் சந்தேகம் இருப்பின் தயவு செய்து சிரமம் பாராது வேட்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் சமூக வளைத்தளங்களில் வேட்பாளர்களை பற்றிய தகவல்களை பகிரச்செய்யுங்கள். உங்கள் வாக்கு வலிமையானது உங்கள் ஆதரவு முக்கியமானது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி – நாம் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அவுஸ்திரேலியாவில்(Australia) வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி ஆரம்பித்து 2027 மார்ச் 31ஆம் திகதி வரை வெளிநாட்டவர் வாங்க முடியாது என்று அவுஸ்திரேலிய நிதியமைச்சர் ஜிம் சாம்மர்ஸ் (Jim Chalmers) அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு ஆண்டு தடை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது பின்னர் மறுஆய்வு செய்யப்படும் என்று சாம்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

வீடு வாங்க தடை

அவுஸ்திரேலியாவில் வீட்டுடைமை என்பது ஒரு பெரிய பிரச்சினையாகக் கடந்த ஆண்டு(2024) உருவெடுத்துள்ளது.

எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் அது ஒரு முக்கிய விவகாரமாகத் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே போதுமான வீடுகள் இல்லை என்ற நெருக்கடியைச் சமாளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

தடையின் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 1,800 வீடுகள் உள்நாட்டு மக்களுக்காக ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி!

இந்திய புதுடில்லியில் உள்ள மத்திய மண்டோலி சிறையில், மோசடி குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், சுகேஷ் சந்திரசேகர், தனது முன்னாள் நண்பி எனக் கூறும், இலங்கையில் பிறந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தினத்தன்று ஒரு தனியார் ஜெட் விமானத்தை பரிசாக அளித்துள்ளார்.

இது தொடர்பில், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ள அவர், அந்த தனியார் ஜெட் விமானத்தில் அவரது பெயரின் முதலெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதன் பதிவு எண் அவரது பிறந்த திகதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“ நீங்கள் எப்போதும் படப்பிடிப்புக்காக உலகம் முழுவதும் பறக்கிறீர்கள், இப்போது இந்த ஜெட் விமானம் மூலம், உங்கள் பயணம் உங்கள் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்,” என்று சுகேஷ் சந்திரசேகர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தமது கடிதத்தில், குறித்த விமானத்துக்கு வரி செலுத்துவதாகவும், எனவே அதனை யாரும் சட்டவிரோதமானது என்று கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

200 கோடி ரூபாய்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் தற்போது மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மேலும் பல குற்றங்கள் தொடர்பில், சுகேஷ் சந்திரசேகர் 2017 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவர் மொத்தம் 23 வழக்குகளில் தொடர்புடையவராக பெயரிடப்பட்டுள்ளார்.

கொழும்பில் அதிகாலையில் ஏற்பட்ட விபத்து : தீக்கிரையான கார்!!

கொழும்பில் பாமன்கடை பகுதியில் வைத்து காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த போதே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை விபத்து ஏற்பட்ட பின்னர் கார் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16.02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்தே அவர் மரணமடைந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

26 வயதுடைய தனுசன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியை பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

பண்டாரகம – கம்மன்பில குளத்திற்கு அருகில் மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய அகில சந்தீப என்ற இளைஞன் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வெவிட்ட பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மோட்டார் வாகனம் சாலையை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதி சுமார் 15 அடி சரிவில் கவிழ்ந்துள்ள நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அப்பகுதியினரால் இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் விபத்து ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் நாளை (17.02) தனது வேலை தொடர்பாக தனியார் பல்கலைக்கழம் ஒன்றில் இறுதித் தேர்வை எழுதவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயில் எரிந்த உதவி பிரதேச செயலாளர் பலி : யாழ். நீர்வேலியில் துயரம்!!

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது.

இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கை அறையில் மெழுகுதிரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார்.

சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு : திங்கட்கிழமை முடிவு!!

அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், மேலும், சந்தையில் தற்போது பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. அத்துடன் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது.

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு இந்த அரசாங்கம் நிவாரணத்தினை வழங்க வேண்டும். உயர்ந்துள்ள வாழ்க்கைச் சுமைக்கமைய, அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளம் அவர்களுக்கு முழு மாதத்திற்குமான தேவைகளுக்கு போதாது.

அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளத்தைக் கொண்டு மாதத்தில் இரண்டு வாரங்களை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எனவே அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் திங்கட் கிழமை ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்படவிருக்கின்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தங்களது சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற பாரிய எதிர்பார்ப்பு அரச ஊழியர்களிடத்தில் உண்டு.

இவ்வாறான நிலையில், அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை கருத்திற்கொண்டு குறைந்தபட்சம் அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக குழந்தைகளின் உடலின் உட்புறத்திற்கும், சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்வாறான காலப்பகுதியில் அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து வெளியேறுவதால், மஞ்சள் காமாலை, தொழுநோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்களிலிருந்து பாதுகாக்க தினமும் குளிக்க வேண்டும் என வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளை காலையில் 20 நிமிடங்களும், மாலையில் 20 நிமிடங்களும் தண்ணீரில் வைத்திருக்கலாம்.

வெப்பமான பருவத்தில் வயிற்றுப்போக்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம். மற்றும் காய்ச்சல், வாந்தி, வாய்வு போன்ற அறிகுறிகள் காணப்படும்.

வெப்பமான வானிலை சிறு குழந்தைகளுக்கு கடினமாக இருக்கும், மேலும் அவர்களிடம் தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, அதிகப்படியான தூக்கம், வாந்தி, வழக்கத்தை விட அதிக சோர்வாக உணர்தல், நீரிழப்பு போன்றவற்றைக் காணலாம்.

எனவே வழக்கத்தை விட சுத்தமான தண்ணீரைக் குடிக்குமாறும், தினமும் குளிக்குமாறும், எளிய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

காதலர் தினத்தில் வினோத ஒப்பந்தம் செய்த தம்பதி : 3 ஆண்டுகள் கழிவறையை சுத்தம் செய்யவேண்டும்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுபம் மற்றும் அனையா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று காதல் தினத்தில் பத்திரத்தில் வினோத ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அந்த ஒப்பந்தத்தில் மனைவி, கணவர் பின்பற்ற வேண்டியவை குறித்து தெரிவித்துள்ளதாவது, துணி துவைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது சாப்பிடும் போது குடும்ப விஷயங்களை மட்டும் விவாதிக்க வேண்டும். வர்த்தகம் பற்றி பேசக்கூடாது.

இனி என்னை பியூட்டி காயின், கிரிப்டோ பை என அழைப்பதை நிறுத்த வேண்டும். படுக்கை அறையில் பங்குச்சந்தை லாபம் நஷ்டம் பற்றி பேசக்கூடாது. இரவு 9 மணிக்கு பிறகு வர்த்தகம் தொடர்பான செயலி மற்றும் வீடியோக்களை பார்க்க கூடாது என மனைவி கூறி இருந்தார்.

அதேபோல் கணவரும் மனைவிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தார். அதில், தனது தாயிடம் தனது நடத்தை குறித்து புகார் செய்வதை நிறுத்த வேண்டும். வாக்குவாதத்தின் போது முன்னாள் காதலி குறித்து பேசக்கூடாது.

விலை உயர்ந்த தோல் மற்றும் பராமரிப்பு பொருட்களை வாங்கக்கூடாது. இரவு நேரங்களில் ஆப் மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்ய கூடாது இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த ஒப்பந்தங்களை மீறினால் 3 மாதங்களுக்கு துணி துவைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் வேடிக்கையான ஒப்பந்தம் போட்ட பத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.