யாழில் சிறுமியை துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை துர்நடத்தைக்கு உற்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் யாழில் இவ்வாறான சிறுவர் துஸ் பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நிலாவெளி பகுதியில் நேற்று (10) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், 45 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நான்கு வலம்புரிகளுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது
வனவிலங்கு பாதுகாப்புத்திணைக்கள இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை உதவி இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில்,
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தென்னகோன் தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (11.02) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது. ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது.
கனடாவில் நிலவும் பணவீக்கம் மற்றும் பொருளாதாரப் போக்குகளுக்கு ஏற்ப ஊழியர் சம்பளத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்ராறியோவில் உள்ள மதுபானசாலை ஊழியர்களின் சம்பளம் வேறுப்பட்டதாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒன்ராறியோவில் உள்ள தொழில் புரியும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச ஒரு மணிநேர ஊதியம் 16.20 கனேடிய டொலர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டீப்சீக் (Deepseek) AI வெளியாகி பேசுபொருளாக உள்ள நிலையில் தற்போது AI மாதிரியொன்றை சீனா(China) வெளியிட்டுள்ளது. OmniHuman- என்ற மேம்பட்ட AIயை டிக் டொக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்டேன்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த AI டீப் போலி காணொளிகளை ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து உருவாக்க கூடிய திறனை கொண்டுள்ளது. AI தொழில் நுட்பத்தில் புதிய திருப்பத்தை இந்த AI ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
எனினும், டீப்ஃபேக் தொழிநுட்பத்தை வைத்து தவறாக பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.
ஏனெனில், இந்த OmniHuman 1 AI ஒரே ஒரு படத்தை கொண்டு ஒருவரின் முழு உருவத்தை அப்படியே உருவாக்கும் திறன் கொண்டது என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முந்தைய AI மாதிரிகள் டீப்ஃபேக் காணொளிகளை உருவாக்க ஆயிரக்கணக்கான படங்கள் தேவைப்பட்டன. ஆனால் பைட்டேன்ஸ் நிறுவனத்தின் AI மாதிரி ஒரே ஒரு புகைப்படத்தை வைத்தே நம்ப முடியாத அளவுக்கு பெறுபேறு கொடுப்பதால் இது தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தொழில் நுட்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் காரணமாக இலங்கைப் பெண் ஒருவருக்கு நியூசிலாந்து புகலிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்ள அவரது முன்னாள் காதலி ஒரு இராணுவ சேவை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஓரின சேர்க்கையாளரான இருவரும் 2011ஆம் ஆண்டு முதல் இரகசியமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில், அந்தப் பெண்ணின் தாய் அதைப் பற்றி அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவருடைய பெற்றோர் இந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மூன்று இராணுவ அதிகாரிகளுடன் தனது வீட்டிற்கு சென்ற காதலி, குறித்த பெண்ணின் தாயாரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார்.
மேலும், சம்பவத்தை எதிர்கொண்ட பெண் தனது முன்னாள் காதலியிடமிருந்து தப்பிக்க நியூசிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இதன் காரணமாக கல்வி நோக்கங்களுக்காக புகலிடம் கோரியுள்ளார். எனினும் முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் காரணமாக அவருக்கு நியூசிலாந்து புகலிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (10.02) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீதியில் பலர் பயணித்துக் கொண்டிருந்த போது கூட்டமாக பறந்து வந்த குளவிகள் அவர்கள் மீது கொட்டியுள்ளன.
இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 6.00 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்து அங்கு பதுங்கியிருந்த நிலையில், நாடு திரும்பும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட டேன் பிரசாத், அரகல போராட்டத்தின் போது பாரிய வன்முறையில் ஈடுபட்டவர்களின் முதன்மையானவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்பட உள்ளன, மேலும் அதற்கான கடன் தொகை அரசு வங்கிகளால் வழங்கப்பட உள்ளது. கடன் தொகையை திருப்பிச் செலுத்தக் கூடியவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்றையதினமும் ஒன்றரை மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாலை, 03.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, A, B, C, D வலயங்களில் பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.
E, F, G, H, U, மற்றும் V ஆகிய வலயங்களில் மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
I, J, K, L, P, மற்றும் Q ஆகிய வலயங்களில் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.
R, S,T, W ஆகிய வலயங்களில் இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஒன்றரை மணி நேரம் மின் தடை ஏற்படும்.
மின்சாரம் துண்டிக்கப்படும் நேரமும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நேரமும் திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து 30 நிமிடங்களுக்குள் மாற வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (11.02.2025) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…
பசார் வீதியில் அமைந்துள்ள நகைப்பட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றயதினம் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது. சம்பவத்தில் சாந்தசோலை பகுதியைசேர்ந்த சுப்பையா ஆனந்தன் வயது 40 குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.
அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கடத்தி, 8 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த இளைஞன் வேலைக்காக ஐரோப்பா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பெண் ஒருவர் இளைஞரை அணுகி, ரூ.8 மில்லியன் கொடுத்தால் இரண்டு வாரங்களுக்குள் அவனை அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண், மேலும் மூன்று பேருடன் சேர்ந்து, ஒரு வாகனத்தில் அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்து, அவரைக் கடத்திச் சென்று, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை கோப்பாயில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் கைவிட்டுச் சென்றனர். சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஜகிரிய – ஆயுர்வேத வைத்தியசாலையில் மின்னுயர்த்திக்குள் சிக்கிய நபரை பணியாளர் குழு பத்திரமாக மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (09.02) பகல் 11 மணியளவில் தடைப்பட்ட மின்சாரம் 3 மணிநேரத்துக்குப் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வழமைக்குத் திரும்பியது.
எனினும் 2.10 மணியளவில் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டது. இந்த குறுகிய நேரத்துக்குள் பொது கட்டிடங்களில் மின் விசிறி, மின்னுயர்த்தி உள்ளிட்டவை செயற்பட்டன.
இந்நிலையில், ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் மூன்று மாடிகளைக்கொண்ட கட்டிடத்தின் மின்னுயர்த்திக்குள் பணியாளர் ஒருவர் 2.10க்குள் சிக்கிக்கொண்டார். விடயமறிந்து விரைந்து செயற்பட்ட பணியாளர் குழு கடுமையான முயற்சியின் பின்னர் அவரை பத்திரமாக மீட்டெடுத்தது.
யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் பாலூட்டி போக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மொனராகலை, கரடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீல்கல ஹெகொலொந்தெனிய பகுதியில், தனது மருமகனை துடைப்பத்தால் அடித்து பலத்த காயப்படுத்தி, அவரது மூன்று பற்களை உடைத்த மாமியார் சனிக்கிழமை (08.02) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிதிமாலியத்த, ஹேவன் வத்த பிரதேசத்தை சேர்ந்த கே.எம். சரத் குமார என்பவர் மூன்று வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி கணவனை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனது தாயின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
கணவன் இது தொடர்பில் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் மாதத்திற்கு ஒரு முறை தனது மாமியார் வீட்டிற்கு சென்று இரண்டு குழந்தைகளையும் பார்க்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த நபர் 2024.11.31 ஆம் திகதி தனது மாமியார் வீட்டிற்கு சென்ற போது, “ஏன் இங்கே வந்தாய்? உனக்கு இங்கே மனைவியோ குழந்தைகளோ இல்லை” என்று திட்டி அவர் முகத்திலும் துடைப்பத்தால் அடித்துள்ளார்.
இந்தத் தாக்குதலின் விளைவாக மருமகனின் மூன்று பற்கள் உடைந்து, பலத்த காயமடைந்து பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவ அறிக்கைகளின் பின்னர், சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான கரடுகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கம்பஹா, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹமுல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (09.02) காலை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண், சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மினுவாங்கொடை , நில்பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குரங்கினால் இலங்கையில் ஏற்பட்ட மின்தடை என்ற பொருளில் பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு குரங்கு ஒன்று காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.பீ நியூஸ், டிம்சும்டெய்லி ஹொங்கொங், தி பிரசல்ஸ் டைம்ஸ், நியூஸ் 18, தி பெனிசுலா கட்டார், சீ.என்.பி.சீ, ஜீயோ இங்கிலிஷ், தி பிஸ்னஸ் ஸ்டார்டர்ட், வெக்கார்ட் நியூஸ்பேப்பர், பெஸ்ட்போஸ்ட், வியோன், தி ஸ்டெரிட் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் குரங்கினால் இலங்கை முழுவதிலும் மின்தடை என்ற அடிப்படையில் செய்தி தலைப்பிடப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.