வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பண்ணைத்திட்டம் நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகத்தின் (பிரித்தானியா) அனுசரணையுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஆபுத்ரன் என்னும் பெயரில் பசு வளர்க்கும் பண்ணை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில்ஆபுத்ரன் பண்ணை 25.06.2016 சனிக்கிழமை புதுக்குடியிருப்பில்தி றந்து வைக்கப்பட்டுள்ளது,
இவர்களை போன்று ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு மாற்றுதிறனாளிகள் இருப்பார்கள். அவர்களிற்கு உதவ முன் வர வேண்டும் என்பதினை இக் கழகம் சுட்டிகாட்டி நிற்கின்றது.
உதவுங்கள் பிறர் எம்மால் வாழும் அந்த மகிழ்வான உணர்வை பெறுவோம்.
இலங்கையின் 9 வீர, வீராங்கனைகள் இதுவரை ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மரதனோட்ட வீரரான அனுராத இந்த்ரஜித் குரே, ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்க, மரதன் வீராங்கனையான நிலுகா ராஜசேகர ஆகியோர் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் போட்டியிடுவதற்கான அடைவு மட்டத்தை எட்டியுள்ளனர்.
அதனைத் தவிர, ஒலிம்பிக் விழாவில் பங்குபற்ற வழங்கப்படும் மேலதிக வாய்ப்பின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட 6 வீர, வீராங்கனைகள் அதனைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதற்கமைய, பட்மிண்டன் வீரரான நிலுக்க கருணாரத்ன, குறிபார்த்து சுடும் வீரரான மங்கள சமரக்கோன், ஜூடோ வீரரான சாமர நுவன் தரம்ரத்ன ஆகியோரும் ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றவுள்ளனர்.
அவர்களைத் தவிர, பளுதூக்கல் விளையாட்டில் ஒரு வீரருக்கும், நீச்சல் விளையாட்டில் தலா ஒரு வீர, வீராங்கனைக்கும் வாய்ப்புள்ள போதிலும் அதற்கான போட்டியாளர்களின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரேஸிலில் நடைபெறவுள்ளது.
வெளியேறும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்தை ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இதன்காரணமாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது முடிவாகி விட்டது.
உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த முடிவை உடனடியாக செயல்படுத்தி விட முடியாது. இதற்கான நடவடிக்கைகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும்.
பொது வாக்கெடுப்பு முடிவால் அதிர்ச்சியில் உறைந்துபோன பிரதமர் டேவிட் கேமரூன், அக்டோபர் மாதம் பதவி விலகுகிறார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதால் ஏற்படுகிற பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசுவதை புதிய பிரதமரிடம் விட்டுச்செல்வதாக அவர் அறிவித்துள்ளார்.
எனவே புதிய பிரதமர் பதவி ஏற்ற பின்னர்தான் இது தொடர்பான நடவடிக்கைகள் சூடு பிடிக்கும்.ஆனால் ஐரோப்பிய யூனியனுக்கு அதுவரை காத்திருக்க பொறுமை இல்லை.
இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் மார்ட்டின் சூல்ட்ஸ், ஜெர்மன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் டேவிட் கேமரூன் இந்த வாரம் தொடங்கி விட வேண்டும்.
வெளியேற வேண்டும் என்று முடிவு எடுத்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் தொங்கலில் விடுவது இன்னும் அதிகளவில் பாதுகாப்பற்ற சூழலையும், வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடும்.
கன்சர்வேடிவ் கட்சியின் தந்திர உபாயங்களை செயல்படுத்துவதற்கு தயங்கினால், அது எல்லோரையும் வேதனையில் ஆழ்த்தும். ஆகவேதான், அந்த முடிவை உடனே இங்கிலாந்து அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறோம் என்று அவர் கூறினார்.
ஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட 6 நிறுவன நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை பெர்லின் நகரில் கூடி விவாதித்தபோது, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை இங்கிலாந்து துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கிடையே இங்கிலாந்து வெளியேறும் விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் நாளையும், நாளை மறுதினமும் விவாதிக்கவுள்ளது.
இலங்கையின், மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைத்தல் பழக்கமுடையவர்களாக இருப்பதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.
2020ல் புகையிலையில்லா இலங்கை என்ற தொனிப்பொருளில் சுகாதார கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், 20ஆம் நுற்றாண்டின் இறுதி வரை புகையிலையினால் உலகில் 100 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
வெண்சுருட்டில், 700 வகையான இரசாயன பதார்த்தங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 69 வகையான இரசாயன பதார்த்தங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
மேலும் 250 இரசாயனங்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. சுமார் 55 தொடக்கம் 60 வரையான புற்றுநோயாளிகள், புகைப்பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 23.4 வீதமானோர் இலங்கையில் புகைப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
இதேவேளை, மாணவர்களில் 3 வீதமானோருக்கு புகைத்தல் பழக்கம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற மனுவுக்கு 30 லட்சம் பிரிட்டன் வாசிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலே என்பவர் ஒரு மனுவை பதிவேற்றினார். அந்த மனுவில் ’வாக்குபதிவானது 75 சதவீதத்திற்கு குறைவாகவும், விலகுவது அல்லது இணைந்திருப்பது என்பதற்கான வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பொதுவாக்கெடுப்பில் 72.2 சதவீதம் வாக்கு பதிவானது, விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு பதிவேற்றப்பட்டு 48 மணிநேரத்திற்குள்ளாக 3,048,000 லட்சம் பேர், இந்த மனுவிற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.
பிரிட்டன் பாராளுமன்ற சட்டப்படி ஒரு மனுவிற்கு ஆதரவாக ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டால், அந்த மனு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்யவேண்டும்.
மறுவாக்கு பதிவு கோரும் இந்த மனுவிற்கு 30 லட்சத்திற்கு அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் இந்த மனு குறித்து விவாதிக்கப்படும் என்று கன்சர்வேடிவ் எம்.பி., பென் ஹவ்லெட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகம் மதுபானம் விற்கப்படுவது யாழ்ப்பாணத்திலேயே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நுவரெலியாவில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சுதந்திர நாட்டுக்கு தேசிய வேலைத்திட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மது விற்பனையில் அதிகமான வருமானத்தை பெற்று தருவதில் முதலிடத்தில் யாழ்ப்பாணமும், இரண்டாவது இடத்தை நுவரெலியாவும் வகிப்பதாகவும், மூன்றாவது இடத்தை மட்டக்களப்பும் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் இந்த தகவல்களானது நாட்டில் சட்டரீதியான மது விற்பனையை பற்றி எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மதுபானம்,சிகரெட்டுக்காக நுவரெலிய மாவட்ட மக்கள் வருடத்திற்கு 106 கோடி நிதியனை செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டவிரோத, சட்டரீதியான மதுபாவனை இரண்டுமே மக்களை அழிப்பதாகவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
எனது மகளின் புகைப்படங்களை உலாவவிட்டு தேவையில்லாத கட்டுக்கதைகளை எதற்காக வெளியிட்டு வருகிறீர்கள் என சுவாதியின் தந்தை K.சந்தான கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது தலைநகரையே உலுக்கியுள்ளது.
இந்த கொலைக்கு ஒருதலைக்காதல் காரணமாக இருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுவாதியின் தந்தை K.சந்தான கோபாலகிருஷ்ணன் பேசியதாவது, எனது மகளின் உயிர் பிரிந்த பின்னர், அவளது புகைப்படங்களை வெளியிட்டு, வதந்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அவள் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவளது அடையாள அட்டையும், கைகடிகாரமும் கிடைத்துள்ளது, எனது மகளின் மரணத்தால் எங்கள் குடும்பம் மிகவும் வருத்தத்தில் உள்ளது,
ஆனால் இந்த கொலை குறித்து தகவல்கள் தெரிவிப்பதற்கு யாரும் முன்வரவில்லை, தேவையில்லாமல் எனது மகளின் புகைப்படத்தினை வெளியிட்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மூன்று குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை, அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகா குண்டாக காட்சி அளிக்கிறார். இவருடைய எடை 56 கிலோ. யோகிதா(5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர்.
கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்பதற்கு உள்ளாகவே 12 கிலோ எடையை சர்வசாதாரணமாக கடந்து விட்டனர். தற்போது உலகிலேயே அதிக குண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் என்ற சாதனைக்கும் உரியவர்களாகி விட்டனர்.
ஒவ்வொரு மாதமும் இவர்களின் உணவுத் தேவைக்காக மட்டுமே 10 ஆயிரத்துக்கும் அதிகமாக தேவைப்படுவதால் நந்த்வனாவின் குடும்பம் வறுமையில் தள்ளாடத் தொடங்கியது. இவர்களின் பசிப்பிணியை போக்கிட அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற தகவல் கடந்த ஆண்டு ஊடகங்களில் பரவியது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில் மூவருக்கும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது.
சிகிச்சை முடிந்து சில மாதங்கள் வரை இவர்களின் உடல் கட்டுக் கோப்பாக இருந்தது. கடந்த சில மாதங்களாக மூவரும் மீண்டும் குண்டாகித் தொடங்கி விட்டனர். இதனால் நந்த்வனாவின் நிலைமை மறுபடியும் படுசிக்கலாகி விட்டது. குழந்தைகளின் உடல் எடையை குறைக்க சிறப்பு அறுவைசிகிச்சை மருத்துவர்களை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
குண்டு குழந்தைகள் குறித்து அவர் கூறும்போது, ‘‘இவர்களால் ஒரு நிமிடம் கூட பசியைத் தாங்கிக் கொள்ள முடியாது. குண்டாகிவிட்டதால் இவர்களால் நகரக் கூட முடியவில்லை. எனது மனைவிக்கு சமையல் அறையே வசிப்பறையாகிப் போய்விட்டது. இவர்கள் எடை அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. என் கண் முன்பே இவர்கள் சாவதை விரும்பவில்லை. எனவே, எனது சிறுநீரகத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் இவர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்’’ என்கிறார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியியலாளர் சுவாதி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியின் புதிய வீடியோ ஒன்று சிக்கியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம்ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இன்போசிஸ் நிறுவத்தில் பணி புரிந்து வந்த சுவாதி என்ற இளம் பெண் பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அனைவரின் முன்னிலையில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை நடந்து 2 தினங்கள் ஆகிவிட்ட நிலையில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.
சென்னையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொறுத்தப்படாமலேயே உள்ளன. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திலும் கமரா இல்லை.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும் கொலையாளியை அடையாளம் காண்பதில் பொலிசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை கேமரா இருந்திருந்தால் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அது பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கும்.
இதனையடுத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பது பற்றி பொலிசார் ஆய்வு செய்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர் டிராவல் பேக்குடன் வேகமாக நடந்து செல்லும்காட்சி பதிவாகி உள்ளது. இவன் தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்கிற சந்தேகத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதிய வீடியோ ஒன்று பொலிசாரின் கையில் சிக்கியுள்ளது.
அதில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் இளைஞர் அதே பகுதியில் உள்ள 7வது வீதி வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சீனி உற்பத்தி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொற்றா நோய்கள் மக்களுக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனிக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என தான் முன்னதாக தெரிவித்திருந்த போதும், அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து போன்ற நாடுகளில் சீனிக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மென்பாணங்களில் சீனியின் அளவைக் குறிக்கும் வர்ண குறியீடுகளை அறிமுகப்படுத்தும் சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி பாடசாலையொன்றில், 10ம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டிலுள்ள 50 மற்றும் 55 வயதுடைய இருவரையே கந்தளாய் தலைமைய பொலிஸின் சிறு குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.06) இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிறுமி வயிற்றுவலியெனத் தெரிவித்து பெற்றோருடன் கந்தளாய் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
அவரை, சோதனைக்குட்படுத்திய போது இரண்டு மாத கர்ப்பம் என தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் நேற்று Bristolலில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை சார்பில் சந்திமால் 62 ஓட்டங்களையும் மத்தியூஸ் 56 ஓட்டங்களையும் விளாசினர்.
50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி, 248 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில், 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமடைந்தது.
பின்னர் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து 4 ஓவர்களுக்கு முகம்கொடுத்து ஒரு விக்கெட்டை இழந்து 16 ஓட்டங்களைப் பெற்ற போது, மீண்டும் ஏற்பட்ட மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் 38ஆவது விளையாட்டு விழா நிகழ்வுகள் நேற்று முன்தினம் மாலை 2.30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலய மைதானத்தில் பாலர் பாடசாலையின் இயக்குநர் அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, சிறப்பு விருந்தினராக வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா, மற்றும் வவுனியா தனியார் வங்கியின் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் 38ஆவது விளையாட்டு நிகழ்வுகளாக முன்பள்ளியின் கீழ்ப்பிரிவு மாணவர்கள் பழம் பொறுக்குதல், பூப்பறித்தல், நிறம் தீட்டுதல், மாலைமாற்றுதல், மீன்பிடித்தல், போன்ற நிகழ்வகளும், முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு பந்து உருட்டுதல், கோபுரம் உடைத்தல், சாக்கு ஓட்டம், சங்கீதக் கதிரை, வினோத உடை போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அல்-மதார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு கலாசாரத்தை கட்டியெழுப்புதலும் மதநல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விளையாட்டு கழகத்தின் தலைவரும் முன்னால் நகரசபை உறுப்பினருமாகிய அப்துல் பாரி தலைமையில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (25.06.2016) நோன்பு திறக்கும் வைபவம்(இப்தார்) சிறப்புற நடைபெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கல்விமான்கள், உலமாக்கள் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஒருமுறை போட்டியிடவேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விடுத்தவேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளார். கடந்த வாரம் கட்சியின் கூட்டம் இடம்பெற்றபோது இந்த விருப்பமின்மையை ஜனாதிபதி வெளியிட்டதாக கட்சியின் பேச்சாளர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தாம் 2020 ஆம் ஆண்டுடன் ஜனாதிபதி பதவியை தொடர்வதில்லை என்று முன்னர் தாம் எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். எனினும் சிறிசேன, அடுத்த பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவே கருதப்படுகிறது .தேசிய அரசாங்கம் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில் இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.