வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் 38ஆவது விளையாட்டு விழா நிகழ்வுகள் நேற்று முன்தினம் மாலை 2.30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலய மைதானத்தில் பாலர் பாடசாலையின் இயக்குநர் அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, சிறப்பு விருந்தினராக வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா, மற்றும் வவுனியா தனியார் வங்கியின் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் 38ஆவது விளையாட்டு நிகழ்வுகளாக முன்பள்ளியின் கீழ்ப்பிரிவு மாணவர்கள் பழம் பொறுக்குதல், பூப்பறித்தல், நிறம் தீட்டுதல், மாலைமாற்றுதல், மீன்பிடித்தல், போன்ற நிகழ்வகளும், முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு பந்து உருட்டுதல், கோபுரம் உடைத்தல், சாக்கு ஓட்டம், சங்கீதக் கதிரை, வினோத உடை போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அல்-மதார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு கலாசாரத்தை கட்டியெழுப்புதலும் மதநல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விளையாட்டு கழகத்தின் தலைவரும் முன்னால் நகரசபை உறுப்பினருமாகிய அப்துல் பாரி தலைமையில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (25.06.2016) நோன்பு திறக்கும் வைபவம்(இப்தார்) சிறப்புற நடைபெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கல்விமான்கள், உலமாக்கள் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஒருமுறை போட்டியிடவேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விடுத்தவேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளார். கடந்த வாரம் கட்சியின் கூட்டம் இடம்பெற்றபோது இந்த விருப்பமின்மையை ஜனாதிபதி வெளியிட்டதாக கட்சியின் பேச்சாளர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தாம் 2020 ஆம் ஆண்டுடன் ஜனாதிபதி பதவியை தொடர்வதில்லை என்று முன்னர் தாம் எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். எனினும் சிறிசேன, அடுத்த பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவே கருதப்படுகிறது .தேசிய அரசாங்கம் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில் இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வலி வடக்கு பிரதேசத்தில் விடுவிக்கப்படட பிரதேசத்திற்கு செல்லும் பாதையின் தடை நீக்கப்பட்டுள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று பாதுகாப்பு அமைச்சரினால் விடுவிக்கப்பட்டது.
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியினூடாக காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரை பேருந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள். இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது குறித்த பேருந்துகள் காங்கேசன்துறை வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் விரைவில் காங்கேசன்துறை புகையிரத நிலையமும் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படுமென மக்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
சம்பூரில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி நிலைய அமைப்பு தொடர்பில் சர்வதேச ஏல முறைக்கு செல்ல அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதன்படி கேள்விப்பத்திரம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியன்று விளம்பரப்படுத்தப்படவுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் பி எம் எஸ் பட்டகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் இந்த திட்டத்துக்கு கொள்கை ரீதியான ஆதரவை வழங்க இந்தியா இணங்கியுள்ளது. எனினும் ஜப்பானிய அரசாங்கம் இன்னும் தமது பதிலை வெளியிடவில்லை. இதேவேளை சர்வதேச ஏலத்துக்கு செல்லும் முன்னர் அரசாங்கம் சுற்றாடல் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தவேண்டும் என்று எரிசக்தி தொடர்பான நிபுணர் திலக் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த 23.06.2016 அன்று பாவற்குளம் மஸ்ஜித் புனித ரமழான் இப்தார் நிகழ்வானது மாகொல அனாதைகள் இல்லத்தின் நிதி பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கே.காதர் மஸ்தான் (பா.உ, வன்னி அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்) கலந்து கொண்டிருந்தார்.
மேலும் நிகழ்வுக்குரிய ஏற்பாட்டினை பா உ மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பா உ அவர்களின் பிரத்தியேக செயலாளர், ஊடக செயலாளர், அலுவலக அதிகாரி மற்றும் நிறுவன பிரதிநிதிகளும் பெருமளவிலான ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
ரயில் நிலையத்தில் இப்படி ஒரு கொலை சம்பவம் இதுவரை நடந்தது இல்லை என்றும், சுவாதியை கொலை செய்த குற்றவாளியை நிச்சயம் பிடித்துவிடுவோம் என்றும் ரயில்வே பொலிஸ் டி.ஐ.ஜி. தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்தை தமிழ்நாடு ரயில்வே பொலிஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன் நேற்று பார்வையிட்டு இந்த கொலை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
சுவாதி கொலை ஏதோ 4 பேரோ அல்லது நிறைய பேர் சேர்ந்தோ செய்தது இல்லை. ஒரே ஒருவன் தான் இந்த கொலையை செய்திருக்கிறான்.
அவன் இந்த பெண்ணிடம் வந்து பேசுகிறான். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து வெட்டுகிறான்.
வாள் வீச தெரிந்தவன் போல வெட்டி இருக்கிறான்.இது திட்டமிட்ட கொலை தான்.
வெட்ட வந்தவன் கூலிக்காக கொலை செய்தானா? அல்லது சுவாதியை ஒருத்தலையாக காதலித்தானா? என்பது தெரியவில்லை. அவனுடைய புகைப்படம் கிடைத்து இருக்கிறது. நிச்சயமாக அவனை பிடித்துவிடுவோம்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் எப்போதும் தீவிரமாக செய்து வருகிறோம்.
பயணிகள் அதிகம் கூடும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய ரயில் நிலையங்களில் எப்போதும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள்.
இந்த ரயில் நிலையம் பயணிகள் அவ்வப்போது வந்து போகும் இடம் தான். இப்படி ஒரு கொலை சம்பவம் இங்கு நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பொதுவாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தாண்டி தான் இதுபோல் கொலைகள் நடக்கும்.மற்றபடி, ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் நடக்கும்.
2014-ல் ரயில் நிலையத்தில் ஒரு கொலை நடந்தது. அந்த குற்றவாளியை 2 நாட்களில் கண்டுபிடித்துவிட்டோம்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் அதிகப்படியாக வாக்களித்தனர். 48.1 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலே என்பவர் ஒரு மனுவை பதிவேற்றினார்.
அந்த மனுவில் வாக்குப்பதிவானது 75 சதவீதத்திற்கு குறைவாகவும், விலகுவது அல்லது இணைந்திருப்பது என்பதற்கான வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறியுள்ள வட்ஸ்-அப் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட்ஸ்-அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள encryption தொழிநுட்பம் மூலம் அனுப்பியவர்கள் மற்றும் பெறுபவர்கள் மட்டுமே குறித்த தகவல்களை பார்க்க முடியும்.
இந்நிலையில் இந்த தொழிநுட்ப வசதி நாட்டிற்கே பெரிய ஆபத்தாக இருப்பதாகவும், இதனால் வட்ஸ்-அப்பை தடை செய்ய வேண்டும் என்றும் சுதீர் யாதவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இரு பயனாளிகளுக்கு இடையே பரிமாறப்படும் இந்த தகவல்களை வட்ஸ்-அப் நிறுவனமோ மற்ற யாருமோ பெறவோ, படிக்கவோ முடியாது.
இதனால் வட்ஸ்-அப் வழியாக செய்யப்படும் அழைப்புகள், வீடியோ, படங்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு உளவு நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியாது.
தற்போது வட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள ‘256 பிட் என்கிரிப்ட்’எனப்படும் ஒரு ரகசிய குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.
சூப்பர் கணனி எனப்படும் அதிநவீன கணனிகளாலும் கூட இந்த உரையாடல்களையோ, ஆவணங்களையோ இடைமறித்து கண்டுபிடிக்க முடியாது.
இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே வட்ஸ் அப்க்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வைபர், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற அப்களையும் தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையூன் 29ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.
குற்றம் செய்வது மட்டுமல்ல, குற்றத்தை தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதும் குற்றம் தான் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி கூலாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளான்.
இதை தடுக்க எவரும் முன்வரவில்லை என்பது தான் சோகம். இந்த கோர சம்பவத்திற்கு பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பு இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், ஒரு குற்றத்திற்கு சாட்சியாக இருந்து கொண்டு அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் குற்றச் செயலுக்கு சமமானதே. அங்கு யாராவது ஒருவர் முன் வந்து அந்த கொலைகாரனைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால் பொலிஸ் தரப்பு தடுமாறி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் கொலையாளி அவர்தானா என்பதை உறுதியாக பொலிசாரால் கூற முடியவில்லை என தெரிய வந்துள்ளது.
சுவாதியின் உடலின் அருகே இருந்து மீட்டெடுத்த கைப்பையில் பணம் உள்ளிட்ட அனைத்தும் அதேபடி உள்ளதாகவும், ஆனால் அவரது கைப்பேசி மாயமாகியுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
அந்த கைப்பேசியை கொலை செய்த நபர் எடுத்துச் சென்றாரா அல்லது என்னவானது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சில தினங்களுக்கு முன்னர் சுவாதி டக்சியில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கார் டிரைவர் கூடுதல் கட்டணம் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், உடனடியாக சுவாதி அந்த நிறுவனத்தில் புகார் செய்யவே ஓட்டுநரை வேலையை விட்டு நீக்கியதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் அந்த டிரைவரையும் பிடித்து ரயில்வே பொலிசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர் தான் கொலை செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.
சுவாதியை தாக்க பயன்படுத்திய கத்தியை ரயில்பாதையில் இருந்து பொலிசார் கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்வே பொலிசின் ஜாக் என்ற மோப்ப நாயும், மாநகர காவல்துறையின் அலெக்ஸ் என்ற மோப்ப நாயும், ரயில்நிலையத்தில் இருந்து புஷ்பா நகர் நெல்சன் மாணிக்கம் சாலை வரை ஓடி நின்றுவிட்டன.
கொலை நடந்த நடைமேடையில் மட்டுமல்ல, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் முழுவதும் கண்காணிப்பு கமரா பொருத்தப்படவில்லை. அதனால் கொலைச் சம்பவம் குறித்தும், கொலையாளி குறித்தும் உடனடியாக தெரிந்துகொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் அங்கு 23.06.2016 அன்று தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த சிறுவனின் உறுவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுவன் சிறுவயதிலிருந்து டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளான். இவனின் பெற்றோர்களான தந்தை பத்மநாதன், தாயான செல்வசுந்தரி ஆகியோர் தொழில் நிமிர்த்தம் கொழும்பில் வேலை செய்கின்றனர்.
பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்த சிறுவனை மேற்படி தோட்டத்தில் உள்ள நபர் ஒருவரினால் பாட்டியின் விருப்பத்துடன் தொழிலுக்காக கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த நபர் பாட்டியிடம் அதிகபடியான சம்பளம் வழங்கப்படும் எனவும், இச்சிறுவனுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என கூறியதன் காரணமாக பாட்டியும் இதனை நம்பி தனது அரவணைப்பில் வாழ்ந்த இச்சிறுவனை அனுப்பி வைத்துள்ளார்.
இச்சிறுவன் தொழிலுக்கு சென்ற சம்பவம் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுவன் தொழில் செய்த இடத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு 3000 ரூபா மாத்திரமே தனக்கு கிடைத்ததாக பாட்டி தெரிவிக்கின்றார்.
இவ் வேளையில் கடந்த 22ம் திகதி சிறுவன் வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பாட்டிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மேற்படி சிறுவனுக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக கொழும்புக்கு வருமாறு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் பாட்டி கொழும்புக்கு சென்றுள்ளார்.
சிறுவனை வேலைக்கு அழைத்து சென்ற நபரின் ஊடாக உயிரிழந்த சிறுவனின் சித்தப்பாவிற்கு 23ம் திகதி தொலைபேசி மூலம் சிறுவன் அஜித்குமார் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகவும், இவரின் சடலம் புஞ்சி பொரலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இவரின் சித்தப்பா சிறுவனின் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் கொழும்பு சென்ற போது அங்கு எவ்வித விசாரணகளும் மேற்கொள்ளாமல் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தாலும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு உறவினர்களுக்கும் தெளிவுபடுத்தவில்லை எனவும், அனைத்து விடயங்களையும் குறித்த பாட்டியிடம் கூறியுள்ளதாகவும், உறவினர்களிடம் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸார் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.
இருந்தபோதிலும் சிறுவன் உயிரிழந்ததத்திற்கான காரணம் சரியாக தெரியாத காரணத்தினால் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கும் உறவினர்கள் இது தொடர்பாக நாரான்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது இவர்களின் புகாரை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் இன்று (25.06.2016) டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இச்சிறுவனின் மரணம் குறித்து தோட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதோடு சிறுவனின் மரணம் தொடர்பான உரிய காரணங்களை விசாரணைகள் நடத்தி தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் கோருகின்றனர்.
வவுனியா ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியானது நகரசபை மைதானத்தில் இன்று (25.06.2016) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கே.காதர் மஸ்தான் (பா.உ மற்றும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் -வன்னி மாவட்டம்) கலந்து சிறப்பித்ததுடன் தனது உரையில் விளையாட்டுப்போட்டி என்பது உடல் உள ஆரோக்கியத்தை வளப்படுத்துகின்றது.
அத்துடன் குரோதங்களை மறந்துவாழ வழியமைக்கின்றது எனவும், முஸ்லிம்களின் நோன்பு காலம் என்பதால் தாங்கள் பின்பற்றும் சமயங்களை மதித்து நடப்பதன் மூலமும் பிற சமயங்களைக் கௌரவப்படுத்தும் வகையிலும் நடந்துகொள்வது இன்றியமையாதது எனக் குறிப்பிட்டதுடன் இரு அணியினருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த அரிதான சத்திரசிகிச்சை ஒன்று மருத்துவ உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதிநுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம் 4 வயதுக் குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மன்னாரை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது, வலது கையின்மீது வீட்டு கூரைக்கு போடப்பட்டிருந்த தகரம் விழுந்துள்ளது. இதனால் குழந்தையின் வலது கரம் முழங்கையின் கீழ் துண்டாடப்படட நிலையில் பதறிப்போன பெற்றோர் துண்டாடப்பட்ட கையுடன் சிறுவனை மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
உடனடியாக துண்டாடப்பட்ட கையினை ஐஸ் கட்டியில் வைத்து மன்னார் வைத்தியசாலையிலிருந்து சிறுவன் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
12மணித்தியாலங்கள் தொடர்ந்து செய்யப்பட்ட மிகவும் நுட்பங்கள் நிறைந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார் சத்திரசிகிச்சை நிபுணர் விபுல பெரேரா. வெற்றிகரமாக முறிந்த எலும்புகளை எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் சிறிகிறிஸ்ணா பொருத்திக்கொடுக்க தனது நிபுணத்துவ சிகிச்சையை தொடர்ந்துள்ளார் வைத்தியர் விபுல.
நரம்புகள், நாளங்கள், தசைகள் என்பவற்றை மிகவும் சிறப்பாக பொருத்துவதில் சிறப்பு தேர்ச்சிபெற்றவர் வைத்தியர் விபுல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினியின் முன்விடுதலை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது.
இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரினார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.