யுத்தத்தில் உயிர், உடமைகளை இழந்தாலும் எமது கலைஞர்கள் மனவுறுதியை இழக்கவில்லை : பா.உ சிவமோகன்!!

 
புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பும், வேணாவில் கலைமகள் கலாமன்றத்தின் ஆண்டுவிழாவும் சிவராத்திரி தினமான நேற்றைய நாள் வேனாவில் அம்மன் கோவில் முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.அன்ரனி ஜெகநாதன், பிரதேச சபையின் கலாச்சார உத்தியோகத்தர் திரு.பிரதீபன் மற்றும் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவையாளர் திருமதி.தேவகி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரைகளை கலாச்சார உத்தியோகத்தரும், வடமாகாண சபை உறுப்பினரும் நிகழ்த்தினர். சிறப்புரையினை வன்னி மாவட்ட பாராளுமனற உறுப்பினரும் வன்னிக் குறோஸ் கலாச்சாரப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆற்றினார். அவர் தனதுரையில்..

இந்துக்கள் புனிதமாகப் போற்றும் சிவராத்திரி தினமான இன்று, பின்தங்கிய இக்கிராமத்தில் நடைபெறும் இந் நிகழ்வில் கலந்து கொள்வதனையிட்டு மனமகிழ்கிறேன். கடந்த யுத்தத்தில் உயிர், உடமைகளை எமது மக்கள் இழந்தாலும் கூட தங்களுடைய கலை கலாச்சாரத்தின் மேல் தங்கள் மனஉறுதியை இழக்கவில்லை.

இதன் எடுத்துக்காட்டாக இப்பிரதேச சிறுவர்கள், கலைஞர்கள் நிகழ்த்துகின்ற கலை நிகழ்வுகள் எடுத்து இயம்புகின்றன. வளங்கள் பற்றாக்குறையாக இருந்தும் கூட இருக்கின்ற வளங்களை வைத்து சிறந்த கலை நிகழ்வுகளை நடாத்துகின்றனர்.

எமது பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை கட்டிக் காக்கவேண்டும் என்பதற்காக எனது சிந்தனையில் வன்னி குறோஸ் கலாச்சாரப் பேரவை உதயமாகி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த கலைஞர்களின் வளர்ச்சியில் புத்திஜீவிகள், கல்விமான்கள், கலையார்வம் கொண்டவர்கள் போன்றவர்கள் ஊக்கமளித்து, எங்கள் கலை கலாச்சாரங்களை கட்டிக்காக்க வேண்டும். இதற்காக என்னுடைய பணி தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வில்லிசை, நடனம், காத்தவராயன் சிந்து நடன கூத்து என்பன இடம்பெற்று பரிசளிப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

DSC_1774 DSC_1776 DSC_1783 DSC_1788 DSC_1799 DSC_1802 DSC_1810 DSC_1812 DSC_1822 DSC_1825

வவுனியாவில் வனிதா வாசன சேமிப்பு திட்டத்தின் அறிமுகமும் மகளிர் தினக் கொண்டாட்டமும்!!

 
மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் அறிமுகம் செய்யப்படும் வனிதா வாசன சேமிப்பு திட்டத்தின் அறிமுகமும் மகளிர் தின கொண்டாட்டமும் இன்று (08.03.2016) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது

இந் நிகழ்வில் செல்வி கந்தையா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) திருமதி மைதிலி (பிரதம பொறியிலாளர் மின்சார சபை ) திருமதி கமலேஸ்வரி (அதிபர் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) திருமதி சத்தியபாமா (பிரதி அதிபர்) திருமதி வேந்தினி (Austriya புகைப்பட நிறுவனர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து தங்கள் பண வைப்புக்களையும் மேற்கொண்டனர்.

news bank (1) news bank (2) news bank (3) news bank (4) news bank (5) news bank (6) news bank (7)

வவுனியாவில் மகளிர் தினத்தில் மூத்த பிரஜை கௌரவிப்பு!!

 
வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியா குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் திருமதி. திருநாவுக்கரசு சரஸ்வதி என்ற 83 வயதுடைய மூத்த பிரஜை, வவுனியா தமிழ் விருட்சம், குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம், தேசபந்து கௌதமன் அகியோரால் இன்று 08.03.2016 காலை அவரது இல்லத்தில் வைத்து கௌரவிப்பு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

DSC02134 DSC02139 DSC02140 DSC02145 DSC02149 DSC02156

வவுனியா இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்துவைப்பு!!

Kattunayaka

வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

தேவராஜா சின்ன கனோஜி என்ற 27 வயதான இளைஞரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

குவைத்தில் இருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பட்ட நிலையில் தாம் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிலேயே தாம் நாட்டிற்கு திரும்பி அனுப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-ஐ.பி.சி தமிழ்-

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கு வகுப்புத்தடை!!

Pera

அனுமதியின்றி மேடை நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியமை தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் 12 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மேடை நாடகத்திற்கான பணம் வசூலிப்பு மற்றும் இந்த மேடை நாடகத்தை நடாத்துவதற்கான இடம் போன்றவை அனுமதியின்றி இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மேடை நாடகத்தில் பங்கு பற்றுவதற்காக வந்த நடிகர்,நடிகைகளின் வருகை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த குறித்த 12 மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முகமாக இவர்களுக்கான வகுப்புத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

அசாத் சாலி பதவிகளை இராஜினாமா செய்தார்!!

Asath Sali

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக அசாத் சாலி கூறியுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக மத்தியூஸ் :அணியில் சில மாற்றங்கள்!!

Team Srilanka

20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெந்தசே ஆகியோருக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் லகிரு திருமானே ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

பதினாறு அணிகள் பங்கேற்கும் 6-வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக இருந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே மெத்யூஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விபரம்

அஞ்ஜலோ மத்தியூஸ் (தலைவர்)
தினேஷ் சந்திமால் (உப தலைவர்)
டில்ஷான்
லஹிரு திரிமன்ன
ஷேகான் ஜயசூரிய
மிலிந்த ஸ்ரீவர்த்தன
சாமர கப்புகெதர
தசுன் ஷானக்க
திசார பெரேரா
நுவன் குலசேகர
துஷ்மந்த சமீர
ரங்கன ஹேரத்
சுரங்க லக்மால்
சஜித்ர சேனாநாயக்க
லசித் மலிங்க

பேஸ்புக் தொடர்பில் 400 முறைப்பாடுகள் பதிவு!!

FB

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை கணனி அவசர முறைப்பாட்டு நிலையத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இதில் அதிகமான முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பானவை என்று இலங்கை கணனி அவசர முறைப்பாட்டு நிலையத்தின் பாதுகாப்பு பொறியியலாளரான ரொஷான் சந்ரகுப்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நூறில் 80 வீதமானவை போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாகவும், அனுமதியின்றி சட்டவிரோதமாக மற்றவர்களின் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தல் உள்ளிட்ட முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெறுவது தொடரபிலும் கடந்த இரண்டு மாதத்திற்குள் நான்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் சந்ர குப்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்!!

Sri-Lanka-cricket

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமார் சங்ககார, ரொமேஷ் களுவிதாரண, லலித் களுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கிட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வாவின் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சுவையூட்டிகளை தடைசெய்ய நடவடிக்கை!!

Suvayootti

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த விரைவாக வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வது அவசியம் என்பதால், நாட்டில் சிறுநீரக நோய் தொடர்பில் அறிக்கையை பெற்றுத் தருமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் முன்னேற்றம் குறித்த கூட்டம் நாரஹேன்பிட்டவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது ஒரு வருடத்தில் 5000 சிறுநீரக நோயாளர்கள் வரை பதிவாவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், விவசாய உற்பத்திகளுக்காக விஷ இரசாயனங்களைப் பயன்படுத்துதல், நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றன சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தற்போது மக்களின் உணவுகளில் விஷ இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை பிரதான பல நோய்களுக்கு காரணம் எனவும், இது குறித்து மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து, சுகாதார அமைச்சின் முன்னேற்றம் குறித்த கூட்டத்தில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவில் பயன்படுத்தப்படும் சில சுவையூட்டிகளையும் எதிர்காலத்தில் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு இதன்போது கூறியுள்ளது.

அத்துடன் மருந்து உற்பத்தி மற்றும் டெங்கு நோய் குறித்தும் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி : அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

151014170542_tamilprisonersthirddayfast_512x288_bbc_nocredit

தொடர் இழப்புகள், வலிகள், ஏமாற்றங்களுக்கு பின்னரும் கூட, தமது உணர்வுகள் மீண்டும் சுயமாகவே சிறைச்சாலைகளுக்குள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாகவும், சிறுநீருடன் குருதியும் கலந்து வெளியேறிக்கொண்டிருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றமை தமது சப்த நாடிநாளங்களை ஒடுங்கச்செய்வதாகவும் தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும்,

எமது உணர்வுகளான அவர்களில் யாராவது ஒருவரையேனும் இழக்க நேருமாயின், அது தமிழ் சமுகத்துக்கு பெருத்த அவமானமாகவும், தமிழ் சமுகத்தின் வாக்களிப்பில் நிகழ்ந்த மாபெரும் குறைபாடாகவும், தமிழ் அரசியல் தலைமைகளின் மற்றுமொரு நம்பிக்கைத்துரோகமாகவும், அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 2016 மார்ச் 08 சர்வதேச பெண்கள் தினமாகிய இன்று, வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூபி முற்றத்தில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ள அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் உணர்வுபூர்வமாக கலந்துகொள்ளுமாறு அவர்கள் விடுத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையின் முழு விவரமும் இணைக்கப்பட்டுள்ளது.

Untitled-1 Untitled-2

மல்லாவியில் மல்லாவிக் கஜன் எழுதிய ‘ஒருபிடி மண்’ சிறுகதை வெளியீடு!!

1

மல்லாவியில் மல்லாவிக் கஜன் எழுதிய ‘ஒருபிடி மண்’ சிறுகதை நாளை (08.02.2016) மதியம் 1.30 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஈழத்து இலக்கிய தடத்தில் முல்லைத்தீவின் பங்களிப்பு குறைவாகவே இருந்திருக்கிறது. இருக்கிறது. அதிலும் துணுக்காய் பிரதேசத்திலிருந்து இலக்கியங்கள் படைக்கப்படுவது அரிதிலும் அரிதே.

அந்த வகையில் எதிர்வரும் 8ம் திகதி மகளிர் தினத்தன்று மல்லாவிக்கஜன் எழுதிய ‘ஒரு பிடி மண்’ சிறுகதைத் தொகுப்பு துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.

துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் வே.முல்லைத்தீபன் தலைமையில் இந்நூல் வெளியிடப்படும். நூல் ஆராய்வுரையினை வைத்தியக் கலாநிதி செ.மதுரகன் (வவுனியா தமிழ் மாமன்ற மேல்சபை உறுப்பினர்) வழங்க.. வாழ்த்துக் கவியினை மல்லாவிக் கண்ணன் நிகழ்த்துவார்.

வாழ்த்துரைகளை துணுக்காய் பிரதேச செயலர் திரு குணபாலன், துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் மற்றும் எழுத்தாளரும் திறனாய்வாளருமாகிய கவிஞர் மேழிக்குமரன் ஆகியோர் நிகழ்த்துவார்.

சிறப்புரையினை முல்லைத்தீவு கல்விவலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு ஞா ஆதவன் அவர்கள் வழங்குவார்

2 3

வவுனியா பாவற்குளத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய வன்னிப் பட்டறை!!

 
பாவற்குளம் படிவம் 1இல் வசிக்கும் 46 வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி சமூக சேவகி கமலாதேவி தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வன்னி பட்டறை அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் நேற்று (06.03.2016) அன்று பாவற்குளம் படிவம் 1 ஆதி நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது.
இந்த நிகழ்வில் கிராமசேவையாளர் பரராஜசிங்கம் ,பொலிஸ் பொறுப்பதிகாரி தென்னகோன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், பொருளாளரும் சமூக சேவகியுமான கமலாதேவி, ஆலய பூசாரியும் கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான பிரபாகரன், வன்னிப் பட்டறை அமைப்பின் உபதலைவர் டிலோஜன், உறுப்பினர்கள் யதுகுலன், லதுஜன், பிரதாபன், கஜீபன், விதுஜன், ரிசிகுலன், பிரகாசன் ஆகியோருடன் மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

DSCN1278 DSCN1284 DSCN1286 DSCN1288 DSCN1291 DSCN1295 DSCN1300 DSCN1301 DSCN1304 DSCN1309 DSCN1310 DSCN1314 DSCN1315 DSCN1317 DSCN1320 DSCN1323 DSCN1325 DSCN1328 DSCN1333 DSCN1335 DSCN1335_1 DSCN1340 DSCN1341

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மகளிர்தினத்தை அரச விடுமுறையாக அறிவிக்க வேண்டும்!!

uthayarasa

சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கிகரிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாகக் கொண்டாடப்படுகின்றது.

இவ் மகளிர் தினமானது பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளைக் கொண்டாடும் வகையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். காலம் காலமாகக் கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம் காத்து வரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது என்பதையும் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் முன்னேற்றமே, ஒட்டு மொத்த உயர்வுக்கு வழி வகுக்கும் என்பதனையும் அனைத்து தரப்பினரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எமது நாட்டைப் பொறுத்த வகையில் சர்வதேச மட்டத்திலான பல முன்னுதாரணங்களை பெண்கள் நடைமுறைப்படுத்தி காண்பித்துள்ளனர். உலகின் முதலாவது பெண் பிரதமர் உள்ளிட்ட உதாரணங்களையும் யுத்த காலத்தில் தமிழ் பெண்கள் அகிம்சை முதல் ஆயுதப் போராட்டம்வரை பிரமிக்கத்தக்க சாதனைகளை படைத்து கான்பித்துள்ளனர்.

இதற்கு அன்னை பூபதி முதல் அங்கயற்கண்ணி வரை பல பெண்களை உதாரணமாக குறிப்பிட முடியும்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.”

என்ற பாரதியின் வரிகள் ஓரளவிற்கு மெய்ப்பிக்க பட்டபோதிலும் இன்றும் சில அடிப்படைவாதிகளினாலும் சமூக விரோதிகளாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றமை வேதனையளிக்கின்று. அன்மைக்காலமாக எமது நாட்டில் இடம்பெறுகின்ற பாலியல் வன்கொடுமைகளும் படுகொலைகளும் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் ஒருபானை பாலில் ஒருதுளி விசம் கலந்தால் அனைத்து பாலும் நஞ்சாவது போன்று இவ்வாறான ஒருசில சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்குமே ஒரு இழிவாகவே பார்க்கப்படும்.

யாழ் புங்குடுதீவு வித்தியாவின் கொடூர சம்பவம் தொடக்கம் கரிஷ்ணவியின் படுகொலை வரையிலும் பல கொடூர சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியுள்ளமை ஆரோக்கியமான பெண்விடுதலையினை கடுமையாக பாதித்துள்ளது இதன்மூம் பெண்களின் சுதந்திரமான நடமாட்டம் மட்டுமன்றி வீடுகளில் தனிமையில் இருப்பதும் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு இராட்சியம் , ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களுக்காக பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படுவதைப் போன்று கடுமையான தண்டனைகளை வழங்கி கட்டுப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்ற பல நாடுகள் விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது போன்று நமது நாட்டிலும் இந்நாளை அரச விடுமுறையாக அறிவித்து மகளிர் தினத்தினை முக்கியத்துவமான நாளாக மாற்றியமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அத்துடன் இந்த உயர்ந்த நாளில் பெண்ணுரிமைக்காகப் போராடிய போராளிகளைப் பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் நன்றியுடன் நினைத்துச் சிறப்புச் செய்யவதுடன் கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளைத் திறந்த மனதோடு இரு பாலாரும் கற்று ஆய்ந்து தீர்வைக் காண வேண்டும், எனவும் கேட்டுநிற்கின்றேன்.

நன்றி
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி ரெலோ

வவுனியா பொது வைத்தியசாலையில் குளுக்கோமா பரிசோதனை!!

iStock_000023383541Medium

குளுக்கோமா தினத்தை முன்னிட்டு வவனியா பொது வைத்தியசாலையில் குளுக்கோமா பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா வைத்திசாலையில் மருத்துவத்துடன் தொடர்புடைய சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் குளுக்கோமா தினமும் எதிர்வரும் புதன் கிழமை (09.03.2016) அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் குளுக்கோமா பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு, உயர்குருதி அழுத்தம்உள்ளவர்களும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்த்தாக்கம் இலகுவில் தாக்க கூடிவர்கள் இப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்பதுடன் பரம்பரைகளாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் என்பன உள்ளவர்களும் சிரமம் பாராது பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய கலாநிதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை குளுக்கோமா தாக்கத்தை தடுத்து கண் பார்வை இழப்பை தடுக்க 40 வயதை கடந்த அனைவரும் பரிசோதனைகைள மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதி ஊர்வலத்தை விரும்பாத சடலம்!!

3bdf07713db61d09e65e418bd0c9ee7f_M

யாரேனும் உயிரிழந்து விட்டால் அவரது கடைசி ஊர்வலத்தின் போது, அவரது சடலம் தாங்கிய சவப்பெட்டியை ஆடாமல் அசையாமல் கொண்டு செல்வதுண்டு. இதனை அநேகமாக நீங்களும் பார்த்திருக்கலாம்.ஆனால், அவ்வாறான இறுதி ஊர்வலமொன்றின் போது, சவப்பெட்டி உடைந்து சடலம் கீழே விழுந்தது கூட தெரியாமல் பெட்டியை மட்டும் தூக்கிச் சென்ற கேளிக்கையான சம்பவம் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கிரமமொன்றில் நபரொருவர் இறந்துள்ளார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது சுமார் 7 பேர் சடலத்தை சவப்பெட்டியில் இட்டு தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். பாதி தூரம் போகும் போது சவப்பெட்டியின் கீழ்பகுதி உடைந்துள்ளதுடன் சடலம் வெளியே விழுந்துள்ளது.
இதை கவனிக்காத அந்த 7 பேரும் சவப்பெட்டியை மட்டும் தூக்கிக்கொண்டு பாதித்தூரத்துக்கு சென்றுவிட்டனர். இதனை கவனித்த இறுதி ஊர்வலத்தின் பின்னால் வந்தவர்கள் கூச்சலிட்டு பெட்டியை தூக்கிச்சென்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் மீண்டும்; திரும்பி சென்று சடலத்தை எடுத்துக்கொண்டு சென்று நல்லடக்கம் செய்துள்ளனர்.