துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் காரன் “எல்டோ டமேர் ” என்பவரின் உதவியாளர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா, புத்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய பெண்ணும் 44 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான 94 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சேனல் தொடங்கி தோல்வி அடைந்ததால் பெண் ஒருவர் அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார்.
தற்போதைய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில், வெற்றி பெறுபவர்களும் உண்டு.
அந்தவகையில், நளினி உன்னாகர் என்ற பெண் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி சமையல் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார்.
அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதுவரை மொத்தம் 250 வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். மேலும், கமரா, மைக், சமையலறை சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்காக சுமார் 8 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு அங்கீகாரமும், வருமானமும் கிடைக்கவில்லை என்று அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார்.
அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “யூடியூப் தளத்தில் கடந்த 3 வருடங்களாக 250க்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கினேன். இருப்பினும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
எனவே வீடியோக்களை உருவாக்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். மேலும், அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிட்டேன் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது.
எனவே அவற்றை முதன்மையான வருமான ஆதாரமாக நம்பாமல் இருப்பது புத்திசாலித்தனம்” என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி சம்பவம் தொடர்பில் இருவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 வயது மற்றும் 21 வயதுடைய ஏத்தகம மற்றும் மங்கோன ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தந்தை மற்றும் இரண்டு மூத்த சகோதரிகளுடன் பயாகல பிரதேசத்தில் வசித்து வந்த மாணவனுக்கு தனது தந்தையினால் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொலைத்துவிட்டது.
இந்த நிலையில் அயல் வீட்டில் வசிக்கும் அதே வயதுடைய நண்பரின் மூத்த சகோதரனிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கோரியுள்ளார். அதற்காக கொஞ்சம் பணம் அல்லது தங்கப் பொருட்களை தருமாறு இந்த மாணவனிடம் கூறினார்.
இதன்படி குறித்த மாணவன் அலமாரியில் இருந்த சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மோதிரம், காதணிகள், வளையல்கள், போன்றவற்றை சந்தேக நபருக்கு மூன்று தடவைகளில் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க நகைகள்
பிரதான சந்தேக நபர் அவற்றை இரண்டு இடைத்தரகர்கள் மூலம் மூன்று முறை அடமானம் வைத்து, சுமார் 17 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். மேலும் மாணவருக்கு ட்ரோன் கேமராக்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.
தங்கப் பொருட்களை வைத்திருந்த உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். விற்ற மற்றும் அடகு வைக்கப்பட்ட தங்கப் பொருட்கள் விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் – திரப்பனை பிரதேசத்தில் இரவில் கழிப்பறைக்கு சென்ற பெண் ஒருவரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திரப்பனை, தம்மென்னாகல பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 35 வயதுடையவர்கள் ஆவர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த பெண் இரவு நேரத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறைக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது,
சந்தேக நபர்கள் இருவர் இந்த பெண்ணின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு பெண்ணின் கழுத்திலிருந்த 03 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் திரப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை திரப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் 30ம் தேதி தான் வருடக்கணக்கில் காதலித்து வந்த அனுவும் நிகிலும் அந்த தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். அதே தேவாலயத்தில் இன்று காலை இருவரும் சடலமாக கிடத்தப்பட்டிருந்த சம்பவம் தேவலாயத்தில் கண்ணீரை வரவழைத்தது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் முறிஞ்சாக்கல் என்ற இடத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் தேனிலவு முடித்து விட்டு ஊர் திரும்பி வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இவர்களது திருமணம் நடந்த அதே தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இன்று காலை இவர்களது இறுதிசடங்குகள் நடைபெற்றது.
தம்பதிகள் அனு (28), நிகில் (29) ஆகிய இருவரும் மலேசியாவில் தேனிலவு முடிந்து வீடு திரும்பும் போது புனலூர்-மூவாட்டுபுழா மாநில நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
அன்று விமான நிலையத்திற்கு தம்பதிகளை அழைத்து வர சென்றிருந்த இருவரது தந்தைகளும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே திருச்சபையைச் சேர்ந்த நால்வரின் பூதவுடலும் அவர்களின் இல்லங்களிலும் பூங்காவு செயின்ட் மேரிஸ் மலங்கரை சிரியாக் கத்தோலிக்க தேவாலயத்திலும் பொதுமக்கள் அஞ்சலியைத் தொடர்ந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை அவர்களது இல்லங்களில் இறுதிச் சடங்குகள் தொடங்கியது. முதலில் அனு, நிகில், பிஜு ஆகியோரின் உடல்கள் அனுவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிகிலின் வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
தேவாலயத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு இறுதிச் சடங்கு தொடங்கியது. இரு வீட்டாரும் சேர்ந்து சடங்குகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கும் அவர்களது இல்லங்கள் மற்றும் தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நிகில் மற்றும் அனு இருவரும் கடந்த நவம்பர் 30ம் தேதி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு 8 வருடங்களாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இச்சம்பவத்தில் 47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற இலங்கையருக்கே விக்டோரியா மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி அமண்டா ஃபொக்ஸ் இன்றையதினம் (19) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்த கொடூர கொலையின் விபரங்கள் விக்டோரியா மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்றையதினம் விவரிக்கப்பட்டன. 30 ஆண்டுகளுக்குப் பிறகே தினுஷ் குரேராவுக்கான மன்னிப்பு தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி அன்று மெல்போர்ன் வீட்டில் தனது மனைவி நெலோமி பெரேராவை கோடரியால் மற்றும் கத்தியால் பலமுறை குத்தி சந்தேக நபரான தினுஷ் குரேரா கொலை செய்துள்ளார்.
தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி , தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தொடருந்து வரும் நேரம் தண்டவாளத்தை நோக்கி மகள் ஓடியதை கண்ட தாயார் அலறியடித்து ஓடிய போதிலும் யுவதில் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின்னர் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு(Teaching Hospital Jaffna) மதுபோதையில் நுழைந்த நபரொருவர் அங்கிருந்த காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று(19) இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இவ்வாறு குறித்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள பொதுமக்களை முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தவைருமான கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தவைருமான கு.திலீபனின் பிரத்தியேக செயலாளரை காசோலை மோசடி தொடர்பில் நேற்று (19.12) மாலை மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இன்று (20.12) காலை கைது செய்யப்பட்டார்.
குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று வியாழக்கிழமை (19.12) கரையொதுங்கியுள்ளது.
குறித்த படகு மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கினர். அதேவெளை படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயீனமுற்ற நிலையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்,
கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
படகிலிருந்து மீட்கப்பட்டவர்களை, திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில்( Australia – Melbourne) வசித்த இலங்கையர் ஒருவருக்கு 37 ஆண்டுகால சிறைதண்டனையை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாயொருவரை தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான நெலோமி பெரேரா என்பரே சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டடார்.
இந்நிலையில், 45 வயதான தினுஷ் குரேரா என்ற அவரது கணவர் குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வீட்டுக்கு வந்து கொலையை செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
பிள்ளைகளின் முன்னிலையில் கொலை
குறித்த இலங்கைப் பெண் தனது பிள்ளைகளின் முன்னிலையில் கொல்லப்பட்டபோது, உதவிக்காக அவர் அலறுவது அவரது கைக்கடிகாரத்தில் பதிவாகியுள்ளது.
அந்த குரல் பதிவு நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டது. தினுஷ் குரேரா தனது 43 வயது மனைவியைக் கொன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்ற தனது மகனையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், சந்தேக நபர் இலங்கையிலிருந்து மெல்பேர்ன் திரும்பியதாக கூறப்படுகிறது.
மோசடி நடவடிக்கை
இவரின் மோசடி நடவடிக்கைகளினால் குறித்த பெண் தமது திருமண உறவை முடித்துக் கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொலையின் பின்னர் தம்பதியினரின் 17 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் சந்தேக நபரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பொலிஸாரை அழைத்தால் அல்லது வெளியேற முயன்றால், வீட்டிற்கு தீ வைத்து அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அத்தோடு குற்றவாளி தனது மனைவியைத் தாக்கியதில் அவரது உடல் உறுப்புகளில் 35 காயங்கள் ஏற்பட்டுள்ளளதாகவும் நீதிமன்றத்திற்னு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
15 வயது சிறுமியை அவளுடைய காதலன் மற்றும் அவளுடைய சித்தப்பா ஆகியோர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனமல்வில போதாகம பிரதெசத்தில் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுமி, தாய், சித்தப்பா, தங்கை மற்றும் தம்பி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி காதலிக்கும் இளைஞனுடன், டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதியன்று சித்தப்பா முரண் பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், தன்னுடைய சிறிய தந்தை, தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை இரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய உள்ளார் என சிறுமி கூறிவிட்டார்.
அப்போது, சிறுமியை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய், முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணையின் போது, தாய், தம்பி மற்றும் தங்கை மேலதிக வகுப்புக்குச் சென்றிருந்த வேளையில், காதலனை வீட்டிற்கு அழைத்த சிறுமி, கணவன் மனைவி போல் வாழ்ந்தமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 16 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட சித்தப்பா,
யாழ்ப்பாணத்தில் கராஜ் ஒன்றில் வேலை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று (19) இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. அந்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
பலர் மயக்கம்
அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான வேகப்படகு (Speedboat), பயணிகள் கப்பலுடன் மோதியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் கடற்படை வீரரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது சுற்றுலாப் பயணிகள் எலிபெண்ட் தீவை (Elephanta Island) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இந்தியாவின் மும்பை கடற்கரையில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பயணிகள் கப்பலில் 110 பேரும், கடற்படை கப்பலில் 5 பேரும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படகில் இருந்த எஞ்சியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதோடு, இயந்திர சோதனையின் போது வேகப் படகு கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.