சர்வதேச போர்க்குற்றவாளி டெர்மினேட்டர் இலங்கைக்குள் ஊடுருவல்!!

பாலஸ்தீன பிரஜையை கொலை செய்து, அவரது உடலை தவறான செய்கைக்கு உட்படுத்தியதாக தெரிவித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய சிப்பாய் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெல் பெரன்புக் என அழைக்கப்படும் குறித்த நபர் இலங்கைக்கு வந்து கொழும்பில் தங்கியிருப்பதாக பெல்ஜியத்தை சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

டெர்மினேட்டர் எனப்படும் பெரன்புக்கை கைது செய்யுமாறு இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,

அதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக “The Hind Rajab Foundation” எனும் அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக The Hind Rajab Foundation தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ பெரன்புக் எப்படி ஒரு கொடூரமான நபர், அவர் பாலஸ்தீனிய பிரஜையை கொன்று அதைப் பற்றி சிரித்து தற்பெருமை காட்டுவதாகவும் அமைப்பு குறிப்பிடடுள்ளது.

உயிரிழந்தவரின் கண்ணியத்தை புறக்கணித்து சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பெரன்புக் மீறியதாகக் கூறும் The Hind Rajab Foundation, இலங்கையில் பெரன்புக் இருப்பது அவருக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் நீதியை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச பொலிசார் விரைந்து செயற்பட வேண்டுமெனவும்,

இவ்வாறான அட்டூழியங்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹிந்த் ரஜப் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

The Hind Rajab Foundation வெளிப்படுத்திய இந்த உண்மை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் வினவிய போது, வெளிவிவகார அமைச்சிலிருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

வேறொரு நாட்டில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் எமது நாட்டிற்குள் பிரவேசித்திருந்தால் அவரை கைது செய்ய வெளிவிவகார அமைச்சு ஊடக பொலிஸாருக்கு அறிவித்தல் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதை மாறி வந்தவருக்கு நேர்ந்த சோகம்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு நோக்கி பயணித்த போது, காரின் சாரதி கழிவறைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது குறித்த நபர், காரை எடுத்துக்கொண்டு இவ்வாறு தவறான பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நெடுஞ்சாலையில் பயணித்த மற்றொரு காரின் பாதுகாப்பு கெமராவிலும் பதிவாகியுள்ளது.

புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு : பொலிஸாரின் சந்தேகம்!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கொட்டகலை கங்கைபுரத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது புகையிரதத்தில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2024 G.C.E O/ L பரீட்சை திகதி அறிவிப்பு!!

கல்விப்பொது சாதாரண தர 2024 (2025) பரீட்சையை மார்ச் 17, 2025 இல் ஆரம்பிக்க இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 17 முதல் 26 வரை நடைபெற உள்ளது.

தேர்வு குறித்து மேலதிக தகவல்களை 011-2784208, 011-2784537, 011-2786616, 011-2786200 அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!!

அடுத்த 2 நாட்களில் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் முன்னெடுப்பு!!

வவுனியாவில் மழையின் தாக்கம் காரணமாக டெங்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் விசேட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து நகரசபையின் பங்களிப்புடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி, வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், ராணிமில் வீதி, வெளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குழுவாக சென்ற இவர்கள் வீதியேரங்கள், வாய்கல்களில் காணப்பட்ட பொலித்தீன்கள், வெற்று போத்தல்கள், சிரட்டைகள், மட்பாண்டத் துண்டங்கள், ரயர்கள் மற்றும் நீர் தேங்கி நிற்க கூடிய பொருட்களை அகற்றி அப் பகுதியை சுத்தம் செய்தனர்.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு!!

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில் வாகனநெரிசலும் ஏற்ப்பட்டுள்ளது.

இதனை கருத்தில்கொண்ட வவுனியா நகரசபை அந்தவீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை நேற்றயதினம் அங்கு மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் பொலிசாரால் அகற்றப்பட்டிருந்தனர்.

கலகலப்பு நடிகர் கோதண்டராமன் மரணம்!!

கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

சுந்தர்.சி-யின் `கலகலப்பு’ திரைப்படத்தில் `பேய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த கோதண்டராமன் அடுத்தடுத்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் 10 மாதத்தில் 45 பேர் மாரடைப்பால் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒருவரும், 40 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 பேரும், 60 வயது தொடக்கம் 100 வயதுக்கு உட்பட்டவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர்.

அதேவேளை வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் குறைந்த விலையில் அழகிய வீடு விற்பனைக்கு!!


வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புதிதாக அமைப்பட்ட TILESகளுடன் 4 அறைகள் , 2 வரவேற்பறை , சமயலறை , வாகன தரிப்பிடம் , வீட்டுடன் கூடிய attach bathroom , வெளிப்புற bathroom , கிணறு , அழகிய வெளிப்பற அமைப்புக்களுடன் மேலும் நான்கு பக்கங்களும் மதில் கட்டப்பட்ட வீடு விற்பனைக்குள்ளது.

2பரப்பு அமைவிடம் கொண்ட  குறித்த வீட்டிலிருந்து வைத்தியசாலை , பாடசாலை , நகரம் , பொலிஸ் நிலையம் , மாவட்ட செயலகம் என அனைத்து அரச நிறுவனங்களும் அண்மையிலேயே அமைந்துள்ளது சிறப்பம்சமாகும் என்பதுடன் 100மீற்றர் தூரத்திலிலேயே வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அமைந்துள்ளது.

விலை பேசி தீர்மாணிக்கப்படும் என்பதுடன் தொடர்புகளுக்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும் வாட்சப் இணைப்பும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. வீட்டின் புகைப்படங்கள் கீழேயுள்ளது.

தொடர்புகளுக்கு
0772104550

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

முகநூல் காதல் : நண்பி வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நடந்த அவலம்!!

முகநூல் ஊடாக அறிமுகமான 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் புத்தல பொலிஸாரால் நேற்றையதினம் (17.12) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் படல்கும்புரை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முகநூல் ஊடாக அறிந்துக்கொண்டு அவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 16ம் திகதி தனது நண்பியின் வீட்டிற்கு சென்ற நிலையில் காதலனையும் சந்தித்துள்ளார்.

அதன் பின்னர், காதலனான இளைஞன், சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி முச்சக்கர வண்டியில் அழைத்துச்சென்று , ​​புத்தல வீதியில் உள்ள தேக்குமரக்காட்டுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்தி வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாய், தந்தையிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!!

வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (18.12) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால சூழல் இனியொருபோதும் தோற்றம் பெறாது என்றும் 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேசமயம் சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

அதேவேளை அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2028 ஆம் ஆண்டு தமது அரசாங்கமே அமையும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, நேற்றிரவு (17) நாடு திரும்பிய சில மணித்தியாலங்களின் பின்னர், ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைய வங்கி செயலியை பயன்படுத்தும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை!!

இலங்கையில் பிரபலமான தனியார் வங்கியாக காட்டிக்கொண்டு, ஒன்லைன் வங்கி செயலி அல்லது ஒன்லைன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்தை புதுப்பிப்பதாக மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்தை மாலை 04 மணிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் 3,800 ரூபா தொகையை செலுத்த நேரிடும் எனவும் மோசடியாளர்கள் அறிவுறுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செயலியின் பயனர்களின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை புதுப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களிடம் மோசடி செய்பவர்கள் கேட்டுள்ளனர்.

இணைய வங்கி சேவைகளை பயன்படுத்துவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவதால், மோசடிகள் பற்றிய செய்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

மேலும், கடந்த சில நாட்களில் ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணைய வங்கிப் பாவனையாளர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் OTP குறியீட்டை வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரியுள்ளது.

அதேபோன்று இவ்வாறான மோசடி செயலில் சிக்கினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிசயம் : கைத்துப்பாக்கி வடிவத்தில் இரத்தினக்கல்!!

இரத்தினபுரி எலபாத்த பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கைத்துப்பாக்கி போன்ற வடிவிலான இரத்தினகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான தனியார் அருங்காட்சியகத்தில் குறித்த கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கைத்துப்பாக்கி வடிவ இரத்தினக்கல் சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி எலபாத்த பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளஞ்சிவப்பு நீலக்கல் மாணிக்கக்கல் கைத்துப்பாக்கி வடிவில் உள்ளது. இரத்தினபுரி மாணிக்க அருங்காட்சியகத்தின் உரிமையாளரான நந்தன இந்த கல்லை கொள்வனவு செய்துள்ளார். இது 10.20 கரட் எடை கொண்டதாகும்.

உலகின் மாணிக்க கல் நகரமாக இரத்தினபுரி இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரத்தினபுரிக்கு வரவழைத்து அவர்களுக்கு இரத்தினக்கற்களை விற்பனை செய்வதற்காக இவ்வாறான தனித்துவமான மாணிக்க கற்களை சேகரித்து அருங்காட்சியகம் நடத்தப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இப்போதும் இரத்தினபுரி பகுதியில் இரத்தினக்கல் வியாபாரிகளால் பல தனியார் இரத்தினக்கற்கள் அருங்காட்சியகங்கள் நடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம் : விளையாடிக் கொண்டிருந்தவர் உயிரிழப்பு!!

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபத்வெவ பிரதேசத்தில் முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  ஹொரவபொத்தானையை சேர்ந்த 5 வயதான நெஸது துலாஷ் பெரேரா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி முன்பள்ளியில் கற்கும் சிறுவன் பாடசாலை முடிந்து விளையாடிக் கொண்டிருந்த போது மரத்தின் கிளை முறிந்து விழுந்துதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா உட்பட 39 நாட்டு மக்களுக்கான இலவச விசா : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!!

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது என்று அவர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான அடிகளைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020-21 இல் கோவிட் தொற்றுநோய்,

மற்றும் 2022 இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை என்பன அவையாகும் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2024 டிசம்பர் 31ஆம் திகதியுடன், அனைத்து நாடுகளின் ஆராய்ச்சி பயணங்களுக்குமான,

ஒரு வருட தடைக்காலம் முடிவடைந்த பிறகும், இலங்கை, வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களை, குறிப்பாக சீனக் கப்பல்களை, இலங்கை துறைமுகங்களில் தரித்து நிற்க அனுமதிக்குமா?

என்ற கேள்விக்கு ஹேரத் தெளிவான குறிப்பை தெரிவிக்கவில்லை என்று இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை தமது அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

1980களில் வன்முறையால் தப்பி ஓடிய அகதிகளில் பலர், இந்தியாவில் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள், மேலும் இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாக உள்ளனர்.

அத்துடன் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தீவுக்குத் திரும்ப விரும்பவில்லை என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.

தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறியுள்ளனர்.