வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தினை செலுத்திய சாரதி கைது!!

புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமையுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில் தனியார் பேரூந்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்தமையுடன் பேருந்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் காயம்!!

வவுனியா, மாமடுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.

புத்தாண்டு தினமான நேற்று (14.04.2024) மாலை வவுனியா, மாமடு – கள்ளிக்குளம் வீதியில் நபர் ஒருவர் பயணித்த போது வீதியில் நின்ற யானை குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

பின்னர் அவ் வீதியால் சென்றோர் தாக்குதலுக்குள்ளான நபரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாமடு – கள்ளிக்குளம் வீதியில் உள்ள பல காணிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ள போதும், அவ் வீடுகளில் பலரும் குடியிருக்காமையால் அப் பகுதி பற்றை காடுகளாக மாறியுள்ளதுடன்,

காட்டில் இருந்து வரும் யானைகள் அப் பற்றைகாடுகளின் ஊடாக வீதிக்கு வருவதாகவும், தினமும் அப் பகுதியில் நடமாடித் திரிவதுடன் வீதியில் செல்வோரை தாக்க முயற்சிப்பதாகவும் அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சோகம் : பாரிய வெட்டுக்காயத்துடன் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

புத்தாண்டு தினமான நேற்றையதினம் பாரிய வெட்டுக்காயத்துடன் இளைஞன் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலிக்குளம் பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் காலில் பாரிய வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த இளைஞர் மீது யாரேனும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது

வவுனியா ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா!!

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் ஒன்றாகிய வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று (14.04.2024) தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ திவாகரக்குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆதிவிநாயகர் பெருமானுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று உள்வீதி வலம் வந்த ஆதிவிநாயகப் பெருமான், வெளி வீதியில் பிரவேசித்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியாவர்களுக்கு அருள்பாலித்துடன்,

பக்த அடியார்கள் சிதறு தேங்காய் அடித்தும், அங்க பிரதிஸ்டை செய்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும், ஆதிவிநாயகப் பெருமானை அரோகரோ கோசத்துடன் வழிபட ஆதிவிநாயகர் பெருமான் தேரில் வலம் வந்து அடியார்களுக்கு புத்தாண்டு தினத்தில் அருள்பாலித்தார்.

குரோதி புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக்கைதிகள் விடுதலை!!

வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13.04.2024) 10 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக்கைதிகள் இன்று(13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,

சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன , பிரதான சிறைச்சாலை பிரதாணி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரம்.. தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்!!

கண்டி கலஹா, நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றையதினம் (12.04.2024) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாக்குதல் நடத்திய அண்ணன் சில நாட்களுக்கு முன்னரே சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார். அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த நிலையில் நேற்றுமுன்தினம் (11.04.2024) மதியம் திடீரென ஊருக்கு வந்துள்ளார்.

அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் காணி பிரச்சினை இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் நேற்றும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இரவு அது சண்மையாக மாறியுள்ளது.

இதன்போது கத்தி மற்றும் போத்தலால் தம்பியின் தலைபகுதியில் தாக்கி அண்ணன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தலைப் பகுதியில் பலத்த காயம் காணப்படுகின்றது.

சம்பவத்தின் பின்னர் அண்ணன் தப்பிச்செல்ல முற்பட்டபோது நில்லம்பை பேருந்து நிலையத்தில் வைத்து அண்ணனை ஊர் மக்கள் மடக்கிபிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கலஹஹா பொலிஸார் மற்றும் கம்பளை இரசாயன தடயவியல் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஏ9 வீதியில் கோர விபத்து : ஸ்தலத்தில் ஆசிரியர் பலி : குழந்தை படுகாயம்!!

அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின் ரம்பேவ பகுதியில் கார் ஒன்று கவனக்குறைவாக வீதியில் திரும்பியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் மதியம் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஆசிரியர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் அதில் பயணித்த 3 வயது குழந்தை படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் விபத்து : சாரதி உட்பட இருவரின் நிலமை கவலைக்கிடம்!!

வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவை அண்மித்த இடமான ஏ9 வீதி ரம்பாவ பகுதியில் நேற்று (12.04) மதியம் அதிசொகுசு பேரூந்து எதிரே வந்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன்,

இவர்களில் காரின் சாரதியின் நிலமை கவலைக்கிடமான முறையில் காணப்படுவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை அணியில் இடம்பிடித்த 15 வயது மாணவி!!

இலங்கையின் 15 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஷஷினி கிம்ஹானி (Shashini Gimhani), ஐசிசி (ICC) மகளிர் 20 -20 உலகக் கோப்பை உலகளாவிய தகுதிச் சுற்றில் அறிமுகமாக உள்ளார்.

குறித்த அறிவிப்பானது, இலங்கை கிரிக்கெட்டின் (SLC) அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண கிரிக்கெட் தொடரிலட ஷஷினி சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

அதேவேளை, இந்த தொடரில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி : சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குழப்பம்!!

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் ஹோட்டல் அறையில் 23 வயது யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 20 வயது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி அறையில் தன்னுடன் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் சிறுமி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக நேற்று (10) மாலை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நுவரெலியா – கந்தப்பளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் பின்னர் இருவரும் நித்திரைக்கு சென்று சிறிது நேரம் கழித்து பார்த்த போது யுவதி தனது ஆடையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் நிலவியுள்ளதுடன், யுவதியின் மரணம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சிவசேனை : எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வெளியேற்றம்!!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தை தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று (12.04) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆலய பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், ஆலய பக்தர்கள், வேலன் சுவாமிகள், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்தோர் என பலரும் கலந்து கொண்டு கூட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, ஆலய நிர்வாகத்தின் அழைப்பின்றி சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், விபுலானந்த சுவாமிகள் உள்ளிட்ட ஒரு குழுவினர் அங்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினர் குருந்தூர் மலை விகாராதிபதியை இரகசியமாக சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி, மக்கள் குறித்த குழுவினரை வெறியேறி நிர்வாகத் தெரிவுக்கு ஒத்துழைக்குமாறு கோரினர்.

அத்துடன் சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு இடம்பெறமாட்டாது எனவும், வெடுக்குநாறி மலையில் பல பிரச்சனைகள் நடந்தும் சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும் மக்கள் தெரிவித்ததுடன், அவர்களை வெளியேறுமாறு கோரினர்.

எனினும், சிவசேனை அமைப்பினர் வெளியேறாமையால் ஆத்திரமடைந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பக்தர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன், ஒரு வருடத்திற்கு தற்போதைய நிர்வாக சபையே தொடர்ந்து இயங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

மக்கள் சென்ற பின்னும் சிவசேனை அமைப்பினர் பொது நோக்கு மண்டபத்தில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : அரச அதிகாரி பரிதாப உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.04.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவு!!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற வோட் தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது கோவிட் தொற்றுநோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டபோது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர்உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 அகவையுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கணுக்கேணி கிழக்கினை சேர்ந்த 41 அகவையுடைய கனகராசா நிமலன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் 11.04.2024 நேற்று உடலம் பூதன்வயல் கற்பூரப்புல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது

இதற்கமைய இந்தவிபத்தில் காயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றைய குடும்பஸ்தரான கனகராசா நிமலன் நேற்று (11.04.2024) உயிரிழந்துள்ளார்.

கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் : பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்!!

காலியில் கடையொன்றில் வைத்து பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உரகஸ்மன்ஹந்திய (Uragasmanhandiya) பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்டிக்கர் கடையொன்றில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊராகொட விதானகே யமுனா நிரோஷனி விதான என்ற வயது 43 பெண்ணே கடையில் உள்ள அறையொன்றில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை எல்பிட்டிய பதில் நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

நேற்று அதிகாலை 5.45 மணியளவில் மனைவி கணனியில் வேலை செய்து கொண்டிருந்த போது இருவர் வந்து கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் எல்பிட்டியைச் சேர்ந்த லால் நிஷாந்த என்ற 25 வயதுடைய இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கொலையாளிகள் இருவரும் மனைவியிடம் பணம் கேட்டதாகவும், பணத்தை கொடுக்காததால், கூரிய ஆயுதத்தால் அவரது கழுத்தில் தாக்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் கணவரின் வாக்குமூலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொலையாளிகள் எந்த திசையில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட நபரின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு ஏற்றுமதி துறையில் தமிழ் இளைஞனின் புது முயற்சி!!

மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் ஒருவர் மென்பந்து கிரிக்கட் விளையாட்டிற்கான துடுப்பாட்ட மட்டையை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றார். உதயகுமார் நிதர்சன் என்ற 30 வயதுடைய இளைஞனே இதனை செய்து வருகின்றார்.

மட்டக்களப்பு செங்கலடி – கொம்மாதுறை பகுதியில் சேர்ந்த உதயகுமார் நிதர்சன் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ளர் என்பதோடு இவர் சுமார் 07 வருடங்களாக விளையாட்டு துறை சார்ந்து, துடுப்பாட்ட மட்டை, விக்கட் மற்றும் மரத்தினால் ஆன நினைவுச் சின்னங்கள், உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை செய்து வருகின்றார்.

காலப்போக்கில் அந்த முயற்சியால் இன்று தான் தயாரிக்கும் துடுப்பாட்ட மட்டை நாடு கடந்து சர்வதேசம் வரை செல்வதாக தெரிவிக்கின்றார்.

ஓரிரு துடுப்பாட்ட மட்டைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது விரிவடைந்து ஆயிரக்கணக்கில் தயாரித்து பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மாறியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தற்போதும் பாக்கிஸ்தான் நாட்டில் இருந்த வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள், சுமார் 6ஆயிரம் கிரிக்கெட் மட்டையை குறித்த இளைஞரிடம் செய்து தருமாறு தெரிவித்து அதை எடுத்துச் செல்ல அங்கேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி பாகிஸ்தான், ஜேர்மனி , இந்தியா, கனடா ஆகிய பல நாடுகளுக்கு இவரது உற்பத்திகள் செல்கின்றதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த வேலைத்திட்டத்தில் தனது சகோதரர்கள் இருவர் உற்பட ஏழு பேர் வேலை செய்வதாகவும், மட்டக்களப்பில் இவ்வாறு தயாரிப்பது முதல் தடவை என்பதுடன், போதிய வளம் இருப்பின் இதனை மேலும் மேம்படுத்தி பலருக்கு வேலைவாய்ப்பை தன்னால் வழங்க முடியும் என்பதுடன், ஏற்றுமதியையும் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.